search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103803"

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    பருவமழை பொய்த்ததன் விளைவாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களான ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தது. தற்போது ஏரிகள் முற்றிலும் வறண்டு போக தொடங்கிவிட்டன. இதனால் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு குழாய்களில் தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகின்றன.

    இதனால் குடிநீருக்காக மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். தற்போதைய சூழலில் தண்ணீர் லாரிகளே மக்களுக்கு கடவுளாக காட்சி தருகின்றன. எப்போது தண்ணீர் லாரிகள் கண்ணில் பட்டாலும் ஓட்டமாக ஓடி போதிய தண்ணீர் பிடித்துவந்தால் போதும், அன்றைய மிகப்பெரிய சாதனையாக அக்கம்பக்கத்தினருடன் பெருமை பேசிக்கொள்கின்றனர்.

    கொஞ்சம் வசதி படைத்தவர்கள் முறையாக குடிநீர் வாரியத்திடம் முன்பதிவு செய்து தங்கள் குடியிருப்புகளுக்கு அவ்வப்போது குடிநீர் பெற்று பணத்துக்கு இணையாக சிக்கனமாக குடிநீரை செலவு செய்து வருகின்றனர்.



    ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தவித்து கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இது மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் கூறியதாவது:-

    நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்த தொடங்கிவிட்டது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். இந்த நடைமுறைக்கு முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் கையேந்தி நிற்கிறோம். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது.

    ‘நீரை கனிம வளத்தில் சேர்த்துவிட்டோம், எனவே அரசு தவிர தனியாருக்கு இந்த உரிமம் தர இயலாது’ என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நீரை கனிம வளத்தில் சேர்க்கமுடியாது. மலைகளை வெட்டினால் வளராது. ஆனால் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தவிர இதுவும் ஒருவகையில் மக்கள் சேவைதான். அதுவும் இந்த சூழ்நிலையில் எங்கள் பணி இன்றியமையாத ஒன்று.

    மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே 27-ந்தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் இயங்காது.

    எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரும் பட்சத்தில் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போதைய சூழலில் தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சந்தர்ப்பம் பார்த்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எங்களை மேலும் சோதிக்கிறார்கள். ஏற்கனவே தண்ணீர் பெற படாதபாடு படுகிறோம். இதில் இந்த பிரச்சினை வேறு... தலைநகருக்கும், தண்ணீர் தட்டுப்பாடுக்கும் இடையேயான சோகமான உறவு என்றைக்கு முடிவு பெற போகிறதோ...” என்று வேதனை தெரிவித்தனர். 
    கடன் சுமையால் நொடிந்து, தள்ளாட்டம் போடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பளம் வழங்காததால் சுமார் 1100 விமானிகள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். #JetAirways #Pilotsstrike #JetAirwayspilotsstrike
    புதுடெல்லி:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில்  பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

    அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

    இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

    போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

    ஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்டாமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.

    இதை நினைவூட்டும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நேற்று அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாளை (15-ம் தேதி) காலை 10 மணி முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் தொடங்கும். சுமார் 1100 விமானிகள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #JetAirways #JetAirwayspilots #NAG #pilotsstrike #JetAirwayspilotsstrike

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. #Jetairways #Jetairwayspilots
    புதுடெல்லி:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

    அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமாங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

    இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. #NationalAviatorsGuild #Jetairways #Jetairwayspilots #pilotsstrike
    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். #BSNL
    சென்னை:

    மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கின்ற வசதிகள் பி.எஸ்.என்.எல்.-ல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.

    நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நிறுவனத்திற்கு இன்னும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படாததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு நெட் ஒர்க்கிற்கு மாறி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் (ஏ.யூ. ஏ.பி.) சார்பாக நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.

    20-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த ஸ்டிரைக்கில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    நலிவடைந்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இதில் 1,800 பேர் அதிகாரிகள் ஆவார்கள்.

    ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டன. ஒருசில இடங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    சென்னையில் பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் செயல்படவில்லை. இண்டர் நெட் இணைப்பு, ப்ரீ பெய்டு, போஸ்ட்பெய்டு புதிய இணைப்பு மற்றும் பில் தொகை வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

    நெட்ஒர்க் பிரச்சனை எதுவும் ஏற்பட தற்போது வாய்ப்பு இல்லை. டெலிபோன் செயல்பாட்டிலும் எந்த இடையூறும் இருக்காது என்றாலும் டெலிபோன் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஊழியர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

    வாடிக்கையாளர்கள் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. மற்றபடி செல்போன், டெலி சேவையில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போராட்டம் குறித்து ஏ.யூ.ஏபி. தொழிற்சங்க தலைவர் சண்முகசுந்தர ராஜன் கூறியதாவது:-

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நலிவடைய செய்து அதனை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதற்காக மறைமுகமான வேலைகளை செய்து வருகிறது. பி.எஸ்.என்.எல். வளர்ச்சியை தடை செய்து அதனை முழுமையாக தனியாருக்கு கொடுப்பதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது. தனியாருக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் போது பி.எஸ்.என்.எல்.-க்கு ஏன் தாமதப்படுத்த வேண்டும்? இதன்மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மாறி செல்ல ஊக்குவிக்கிறார்கள்.

    பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும். இன்று அதிகாலையில் இருந்தே வேலைநிறுத்தம் தொடங்கி விட்டது. அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. சேவை மயங்களும் செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BSNL
    திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீட்டிப்பால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. #jactoGeo
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரசின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர். ஆனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்தவர்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவை தமிழக அரசு அழைத்து பேசாவிட்டால் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் போராட்டத்தை தடுக்க திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 98 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. #jactoGeo
    மதுரையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் 2,200 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். #JactoGeo
    மதுரை:

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களை நியமிக்கக்கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 22-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் பணிக்கு திரும்பாத மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று காலை முதலே கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திரண்டனர். நேரம் செல்லச் செல்ல எண்ணிக்கை அதிகரித்தது.

    போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான ஊழியர்கள் திரண்டதும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    அவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேன் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மொத்தம் 2,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #JactoGeo
    ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    கோவை:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில் 22-ந்தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை விளக்கி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அரசு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

    எனினும் பல இடங்களில் ஆசிரியர்கள் இன்றும் பணிக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரம் குறித்து பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்கவும் ஏராளமான பட்டதாரிகள் இன்று காலை முதலே கோவையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் திரண்ட வண்ணம் இருந்தனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் 2,680 தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். தகுதிஅடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போட்டத்தில் ஈடுபட்டனர். மறியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தை கைவிடுமாறும் கூறினர். கைவிட மறுத்தவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்தநிலையில் இன்று 5 -வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதே போல நீலகிரி மாவட்டத்திலும் இன்று 5-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். #JactoGeo
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மீறி போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. #JactoGeo #GovtStaff #HighCourt
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

    நேற்று தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதானார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இன்றும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

    எனவே நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக இன்று மதியம் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.



    இக்கூட்டம் நிறைவடைந்ததும், செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ், வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்தார். மேலும், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களது 9 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நீதிமன்ற உத்தரவை மீறி, நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff #HighCourt
    ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ந் தேதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். #JactoGeo
    சென்னை:

    பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஜாக்டோ ஜியோ இந்த போராட்டங்களில் பங்கேற்று வேலைநிறுத்த போராட்டமும் நடந்தது.

    ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். தங்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அரசு புது பென்‌ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய சம்பள கமி‌ஷன் அமைக்கப்பட்டதன் அடிப்படையில் அரசு வழங்க வேண்டிய 21 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை தீர்வு காண முயலவில்லை.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துகிறோம். வருகிற 22-ந் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்.

    மாறுபட்ட 57 சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறது. அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

    ‘போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வேறுவழி இல்லாததால் வேலைநிறுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறி உள்ளனர். #JactoGeo

    வரும் 22-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் என ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர். #JactoGeo #Protest
    மதுரை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

    இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ இன்று திரும்பப் பெற்றது.

    இதுதொடர்பாக அந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 22ம் தேதி எங்களது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என தெரிவித்துள்ளது.

    ஜாக்டோ-ஜியோ, அரசுத்தரப்பு வாதத்தை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட் கிளை இந்த வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. #JactoGeo #Protest
    மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ரெயில் மறியல் போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயம் ஆக்க கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்று ஏராளமான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்த ஊழியர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 2-வது நாளாக இன்று இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    பெரம்பூரில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. காலை 11 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பெரம்பூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    போலீசார் தடையை மீறி சில தொண்டர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.

    அவர்களுடன் போலீஸ் இணை கமி‌ஷனர் விஜயகுமாரி பேச்சு வார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து ரெயில் மறியல் நடந்தது.

    பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான மின்சார ரெயில் முன்பு மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    இந்த மறியலில் ஈடுபட்ட மு.சம்பத், சிவகுமார், சுந்தர்ராஜன் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் ஆர்.சவுந்தரராஜன் தலைமையில் கிண்டியில் ரெயில் மறியலில் ஈடுபட ரேஸ்கோர்ஸ் அருகில் திரண்டனர். சுமார் 750 பேர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் தடுக்க போலீசார் தடுப்பு வேலி வைத்து இருந்தனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாரை மீறி மறியல் செய்ய உள்ளே நுழைய முயன்ற போது போலீசாரும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மின்சார ரெயிலில் பயணம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

    கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக சென்ற 4 மின்சார ரெயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவ் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சமூதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    போராட்டம் குறித்து, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

    அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்டமாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தீவிர தொடர் போராட்டத்தை முன் எடுத்து செல்வோம்.

    தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி, எல்.ஐ.சி., தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும் 2 நாட்களாக முடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாசாலையில் தொமு.ச., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.சிடி.யூ, எம்.எல்.எச், ஆகிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. கங்காதரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் மீஞ்சூர் நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி - மீஞ்சூர், மீஞ்சூர் - திருவொற்றியூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். #BharatBandh

    மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகாமல் முடங்கியது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது. #BankStrike #Strike
    சென்னை:

    வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறைகளில் தனியார்மயத்தையும், அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.



    சென்னை அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பெரும்பாலான மக்களை சார்ந்து அரசு செயல்பட வேண்டும். ஆனால் முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே இந்திய வருமானத்தில் 73 சதவீதம் மூலதனம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 50 கோடி தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

    அனைவருக்கும் ஓய்வூதியம், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, பொதுத்துறையை வளர்ப்பது போன்ற செயல்களை விடுத்து, மத்திய அரசு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த கொள்கைகளை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    45 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பண பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், அரசு கருவூல கணக்குகள் செயல்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி கணக்குகள் போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் காசோலைகள் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுசெயலாளர் சி.பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் செயல்பட்டன.
    ×