search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • கோவில் திருவிழாவில் பூத்தட்டை பெண்கள் எடுத்து வந்தனர்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூத்தட்டு எடுத்து பெண்கள் வழிபாடு செய்தனர். முதல் நாளான நேற்று சித்தர் முத்துவடுகநாத சுவாமி கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர்.

    காளியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருகிற 25-ந் தேதி பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி வீதிஉலா.
    • கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா விக்னே ஸ்வர பூஜையுடன் தொடங்க ப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி வீதிஉலா நடை பெற்றது.

    வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின், கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • வரும் 22 ஆம் தேதி பச்சை மயில் வாகனத்தில் முருகப் பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில், இன்று காலை ஆறு மணி முதல் 7:30 மணிக்குள் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகனின் அருள் வேண்டி அரோகரா கோஷமிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    மேலும் 22 ஆம் தேதி காலை முதல் மாலை வரை பச்சை மயில் வாகனத்தில் முருகப் பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    • சாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பியை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நடுசூரங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஊர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. இதில் முத்துகுமார், அவரது அண்ணன் அஜித்குமார், தம்பி அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சந்திரகுமார் அவரது மகன் சூர்யா, பார்த்திபன், பாலமுருகன், தாஸ்குட்டி ஆகிய 5 பேரும் காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் அஜித்குமார், அரவிந்த்குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் காயமடைந்த 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி முத்துகுமார் புகார் செய்ததின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கத்தியால் குத்திய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    • 39 கிராமங்களில் நடைபெற்றது
    • வேட்டையாடப்பட்ட முயல்கள் அம்மனுக்கு படையலிடப்பட்டது

    பெரம்பலூர்,

    நாவலூர், லாடபுரம், பாளையம், குரும்பலூர், களரம்பட்டி, கீழக்கணவாய், தம்பிரான்பட்டி, செல்லியம்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், எசனை, புதுநடுவலூர், அரணாரை, சத்திரமனை, செஞ்சேரி, சிறுவாச்சூர், அம்மாபாளையம், வேலூர், மேலப்புலியூர், கோனேரிபாளையம் ஆகிய 20 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.பாடாலூர் பகுதியில் கண்ணப்பாடி, நத்தக்காடு, நக்கசேலம், குரூர், சிறுவயலூர், பாடாலூர், டி.களத்தூர், பொம்மனபாடி, செட்டிகுளம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், அடைக்கம்பட்டி, விஜயகோபாலபுரம், தெரணி, தேனூர் ஆகிய 15 கிராமங்களிலும், மருவத்தூர்பகுதியில் அய்யலூர், கல்பாடி எறையூர், கல்பாடி ஆகிய 3 கிராமங்களிலும், அரும்பாவூர் பகுதியில் விசுவக்குடி கிராமத்திலும் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் மாலை கூடினர். அப்போது அங்கு வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு வருகை புரிந்தனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, பின்னர் அங்கிருந்து முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஊர்வலத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, ஊர்வலமாக அழைத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு முயல்களை பலி கொடுத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் முயல் இறைச்சி சமமாக பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலேயே அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து, உண்டு மகிழ்ந்தனர்.

    • 2 சிறிய தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.
    • பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

    அதில் நேற்று முன்தினம் மாலையில் இரண்டு சிறிய தேர்கள் பக்தர்கள் தோளில் சுமந்துக் கொண்டு மணக்குடி கிராமம் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தது.

    பக்தர்கள் வீடுகள் தோறும் வாசலில் குத்து விளக்குகள் ஏற்றி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீனம் நிர்வாகிகள், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, துணைத் தலைவர், வார்டு உறுப்பி னர்கள், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்கட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குலதெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருவிழா காலங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது.
    • தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் கண்காணிக்க வலியுறுத்தல்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்களில் உள்ள கோவில்களில் திரு விழாக்கள் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின்போது இருதரப்பினரிடையே ஏதேனும் ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக வெடித்து மோதல் ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின்போது ஏற்படும் தகராறுகளை தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற்போல் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோவில் திருவிழாக்களில் மோதல் ஏற்படும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தில் கோவில் திருவிழா வின்போது மோதல் ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் ராஜ பாளையத்திலும் திருவிழா ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தனிப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கு உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அப்போது தான் விருதுநகர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் மோதல்கள் தடுக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • புனித ஜெர்மேனம்மாள் திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான புனிதஜெர்மேனம்மாள் ஆலய 111-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து திருப்பலி மறையுரை நடந்தது.

    விழா நடைபெறும் நாட்களில் தினசரி கொடி பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். வருகிற 22-ந் தேதி இரவு திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

    மறுநாள் 23-ந் தேதி புது நன்மை விழா, தேர் பவனி, 24-ந் தேதி காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 10 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கொண்டு வரப்பட்டு பல்வேறு சமூகத்தினரும் விழாவை கொண்டாடினர்.

    11-வது நாள் பூக்குழி திருவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் தீக்குண்டத்தில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபாடு செய்தனர். மாலையில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜுனர் சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி தீ மிதிக்கும் பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் முன்பு உள்ள தீ குண்டத்தை வந்தடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது
    • கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டுத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார். தொடர்ந்து, கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடை ந்தவுடன், பெங்களுரு புனித பேதுரு பாப்பிறை குருமடம் பேராசிரியர் அலெக்சாண்டர் தலை மையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  விழா முடியும் வரை, தினசரி மாலை சிறிய தேர்பவனியும், திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்சியாக, ஏப்ரல் 21-ந் தேதி இரவு, காரைக்கால் குரும்பகரம் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் 3 பெரிய தேர்பவனியும், ஏப்ரல் 22-ந் தேதி இரவு, நீலகிரியைச்சேர்ந்த பங்குகுரு செபஸ்தியான் தலைமையில், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 5 தேர்பவனியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    • தொண்டி அருகே பாஸ்கு திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா திருத்தலம் உள்ளது. இங்கு 128-ம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடந்தது. கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை பாதை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    முதல் நாள் பங்குத் தந்தை அருள் ஜீவா, 2-ம் நாள் சம்பை இணைப்பங்குப் பணியாளர் அருட்தந்தை லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் ஆர். எஸ். மங்கலம் வட்டார அதிபர் அருட் தந்தை கிளமெண்ட், செங்குடி பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ், முத்துப்பட்டினம் பங்குத் தந்தை அற்புத அரசு. இணைப்பணியாளர் அருட்தந்தை ரீகன், நகரிகாத்தான் பங்குப் பணியாளர்கள் சூசை மிக்கேல் ராஜ், பிரிட்டோ, தங்கச்சிமடம், ஒலைக்குடா பங்குப் பணியாளர்கள் அருட்தந்தை சாமிநாதன், அருட்தந்தை ஜான்சன், இணைப் பணியாளர்கள் முன்னிலையில் பாஸ்கு திருவிழா நடந்தது.

    இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்

    கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பாண்டிபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9-ந்தேதி பூச்சூட்டுதல், வடி சோறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 10-ந்தேதி திரளான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களில் புனிதநீர் எடுத்து கொண்டு மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவிலில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.அதன் பின்னர் கிடா வெட்டு பூஜையும், மதியம் மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×