search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105717"

    • பஸ்சில் பயணித்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

    அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, முயற்சித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து முகப்பு மற்றும் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து பேருந்தில் பயணித்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் அன்பரசன் உட்பட பயணியான தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் கால் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்துகிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது41) உள்பட 15 பேர் ஒரு வேனில் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். வேனை அதே பகுதியை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று வேன்டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52) இலஞ்சியம்(50), கனக வள்ளி((50), கலைசெல்வி(40)வேன் டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    டெல்லியில் சிகிச்சை பெறுவதற்காக உடல்நலம் குன்றிய அன்ஷூ என்ற பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார்.
    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை (சோனியா காந்தியின் தொகுதி) சேர்ந்த அன்ஷூ என்ற பெண் பிரயாக்ராஜில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுபற்றி பிரியங்கா காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் உடனே அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார். அந்த விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் பட்டேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், ராஜீவ் சுக்லா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி செல்ல இருந்தனர். அன்ஷூ அவரது பெற்றோர், ஹர்திக் பட்டேல், அசாருதீன் ஆகியோர் விமானத்தில் டெல்லி சென்று அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜீவ் சுக்லாவுக்கு விமானத்தில் இடம் இல்லாததால் பின்னர் அவர் ரெயில் மூலம் டெல்லி சென்றார்.
    தருமபுரி தனியார் கல்லூரி விடுதியில் நள்ளிரவில் புட்டு சாப்பிட 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கு விடுதி அருகே உள்ளது. இந்த விடுதியில் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நண்பர்கள் ஆவர்.

    இவர்களது தோழி ஒருவர் நேற்று விடுதிக்கு புட்டு சாப்பிட கொண்டு வந்துள்ளார். அதனை இந்த 5 மாணவிகளும் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டு மாணவிகள் அனைவரும் இரவு படுத்து தூங்கினர். இதையடுத்து நள்ளிரவு புட்டு சாப்பிட 5 மாணவிகளுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்களை சிகிச்சைக்காக 5 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் மற்றும் பெண் மந்திரி எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. #KeralaHealthMinister
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வட எல்லையில் உள்ள நகரம் காசர்கோடு.

    காசர்கோட்டை சேர்ந்த தம்பதி சானியா-மித்தா. இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காசர்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    நேற்று குழந்தையின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபற்றி டாக்டர்கள், குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தையை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர்.

    மேலும் இந்த தகவல் கேரள அரசின் குழந்தைகள் நல அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர்கள் இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்த மந்திரி, குழந்தையை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் குழந்தையை உடனடியாக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரவும் ஏற்பாடு செய்தார்.

    மந்திரி சைலஜா.

    காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மின்னல் வேகத்தில் வந்தாலும் கூட 10 முதல் 12 மணி நேரம் ஆகும். அதுவரை குழந்தையின் உயிரை பாதுகாப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து கொச்சியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளிக்க மந்திரி சைலஜா ஏற்பாடு செய்தார். குழந்தைக்கு கேரள அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

    காசர்கோட்டில் இருந்து கொச்சி 400 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த சாலை. இதில் ஆம்புலன்சில் வந்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

    குழந்தையை காப்பாற்றவும், குழந்தையை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சிற்கு வழி விடவும் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் நல அதிகாரிகளும், மந்திரி சைலஜாவும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த செய்தி சமூக ஊடகங்கள் வழியாக வைரலாக பரவியது. காசர்கோட்டில் குழந்தையுடன் புறப்பட்ட ஆம்புலன்சிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கூட மக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் மந்திரியின் ஏற்பாட்டால் காசர்கோட்டில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்சு 400 கி.மீ. தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து கொச்சி அமிர்தா ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.

    அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, குழந்தையின் உடல்நிலை குறித்து 24 மணி முதல் 48 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும். நாங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம் என்றனர்.

    கேரள மந்திரியின் ஏற்பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே கேரள மக்களின் விருப்பம். கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.  #KeralaHealthMinister
    மதுக்கூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார்.

    வி‌ஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள்.

    இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் அடைந்தனர். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியின் காதில் வி‌ஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது55). மீனவர் இவருடைய முதல் மனைவி மல்லிகா 2004- ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஆறுமுகம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக செல்வி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ஆறுமுகத்துக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நோயால் அவதிப்படும் உனக்கு என்னால் அடிக்கடி மருத்துவச் செலவு செய்ய முடியாது என கூறி செல்வியின் காதில் வி‌ஷத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதில் உயிருக்கு போராடிய செல்வியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மனைவியின் காதில் வி‌ஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி வார்டில் ராஞ்சி சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து சோதனை நடத்தினர். #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.

    இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது உடல்நல குறைவால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ் டிடிட் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனிவார்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 நபர்கள் மட்டும் லல்லு பிரசாத் யாதவை ஆஸ்பத்திரி வார்டில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.

    இதில் குடும்ப உறுப்பினர்கள், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள்.

    ஆனால் லல்லு பிரசாத் யாதவின் உடல்நிலை பற்றி விசாரிக்க சென்றதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி வார்டில் ராஞ்சி சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து திடீரென்று சோதனை நடத்தினர். இச்சோதனை 30 நிமிட நேரம் நடந்தது.

    இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறும்போது, “லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெறும் வார்டில் நடந்த சோதனையில் குற்றத்துக்கான எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை” என்றனர். #LaluPrasadYadav
    வேதாரண்யம் பகுதியில் 3 நாட்களாக வாந்தி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வந்த 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன் பள்ளி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக வாந்தி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 113 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் வந்த வண்ணம் உள்ளனர்.

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சுகாதாரதுறை முதன்மை செயலாளர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் விசாரித்தார். பின்பு சுகாதாரதுறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் கூறும்போது, வேதாரண்யத்தில் வாந்தி வயிற்றுப்போக்கால் 113 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை பார்வையிட வந்தேன். நிலைமை தற்போது சீராக உள்ளது. போதுமான மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. தண்ணீரால் இந்த பிரச்சனை வந்துள்ளது என்று கருதுகிறேன். அதனைசரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். #tamilnews

    வேதாரண்யத்தில் கலங்கலாக வந்த தண்ணீரை குடித்த 200 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கரியாப்பட்டினம், சேட்டாக்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- எங்கள் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அசுத்தமாக கலங்கலாக வரும் தண்ணீரை குடித்தவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் 9 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே பிராதிகாரன்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது33). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 9 மாத குழந்தை தர்‌ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளான். இதில் வாயில் காயம் ஏற்பட்டதால் குழந்தையை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

    ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. இதுகுறித்து உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் எடுத்து கூறி உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உதயகுமார் குடும்பத்தினரை வெளியேற்றி உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், நீண்ட நேரமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து புகார் அளித்தபோது டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்காமல் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றி விட்டனர் என்றனர்.

    இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews

    ஈரோட்டில் கோவில் முன்பு தீக்குளித்த ஜவுளி வியாபாரி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் அம்பிகை நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது56). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    முரளிதரன் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். முரளிதரன் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் முரளிதரன் சூரம்பட்டி வலசு மாரியம்மன் முன்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தீவிர சிகிச்சைப்பிரிவில் முரளிதரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் கிடைத்ததும் முரளிதரன் மனைவி மற்றும் மகன்கள் வந்து அவரை பார்த்து கதறி அழுதனர்.

    முரளிதரன் எதற்காக தீக்குளித்தார்? என்று உடனடியாக தெரியவில்லை. நோய் காரணமாக அவர் தீக்குளித்தாரா? அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தீக்குளித்தாரா? என்று தெரியவில்லை.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×