search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினியோகம்"

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு முன்பு பணமாக வழங்கப்பட்டது. இதில் கருப்பு பணம் புழங்குவதாக புகார் எழுந்ததால் இதனை தடுக்க தேர்தல் பத்திரங்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பதிவு பெற்ற அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகளும் இந்த தேர்தல் பத்திரங்களை பெறமுடியும்.

    இந்தியாவை சேர்ந்த தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தேர்தல் பத்திரத்தை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கு மூலம் அந்த பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே வழங்கும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர், இதுவரை எத்தனை தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு? வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர் என்ன? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார்.

    இதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் நரேஷ்குமார் ரஹேஜா பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மே 4-ந் தேதி வரை மொத்தம் ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் 9 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்கள் பெயரை வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதனை தெரிவிக்க முடியாது. வெளியிட்ட 10,494 தேர்தல் பத்திரங்களில் 10,388 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.5,011 கோடி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தகவல் பற்றி கருத்து தெரிவித்த மனுதாரர் மனோரஞ்சன் ராய் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரங்கள் அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தூய்மையற்ற தொடர்பை சட்டபூர்வமாக்கியது தானே தவிர வேறு ஒன்றுமில்லை. இது நாட்டில் பெரிய அளவிலான ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் இந்த அழிவு சற்று குறையும்.

    பெரு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை சமுதாய பொறுப்புள்ள திட்டங்களுக்கோ, ஏழைகள் மற்றும் தேவையுள்ள பயனாளிகளுக்கோ செலவழித்து இருக்கலாம். மற்றபடி இந்த நன்கொடை அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு தான் பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வனுவாட்டு தீவில் குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. #Vanuatu #Drones #Vaccines #Island
    போர்ட்விலா:

    பசிபிக் தீவு நாடு வனுவாட்டு. அந்த தீவு நாட்டில் 20 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் அங்கு ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் ஏற்பாட்டில் அந்த தீவில் உள்ள குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.



    40 கி.மீ. மலைப்பகுதியை தாண்டி வந்து ஆளில்லா விமானம் இந்த தடுப்பூசி மருந்துகளை வழங்கி உள்ளது. சிறிய அளவிலான பெட்டியில் ஐஸ் கட்டிகள் வைத்து அதன் மத்தியில் தடுப்பூசி மருந்து பாட்டில்கள் வைத்து அந்த ஆளில்லா விமானம் எடுத்துச்சென்று இருக்கிறது. எதிர்காலத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு கூட ஆளில்லா விமானங்கள் மூலம் இப்படி மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களை வழங்குவதற்கு வழிபிறக்கும்.

    இதுபற்றி ‘யுனிசெப்’ அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போர் கூறும்போது, “இன்றைக்கு ஆளில்லா விமானம் ஒரு சிறிய தொலைவுக்கு மருந்து கொண்டு சென்றிருப்பது உலகளாவிய சுகாதாரத்தில் பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு மிகப்பெரிய அளவில் போராட வேண்டியதிருக்கிறது. இந்த ஆளில்லா விமான தொழில் நுட்பம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டார். #Vanuatu #Drones #Vaccines #Island 
    கடவூர் ஒன்றியத்தில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.
    தரகம்பட்டி:

    கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, கடவூர், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.

    கடவூர் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, குடம் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் வெங்கட் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். #Swineflu
    நெல்லை:

    நெல்லையில் நேற்று பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தொடங்கி வைத்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநிலம் முழுவதும் இதுவரை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் இறந்துள்ளனர். 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    பன்றி காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளை தவிர, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதை போல், பன்றி காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் ஹோமியோபதி கழகம் அறிவுறுத்தலின் படி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    15 வகையான மூலிகை அடங்கிய இந்த குடிநீர் அரசு சித்த மருத்துவ ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சண்முகம், அண்ணாதுரை தலைமையில் போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது.

    பைக் ரேசிங் போன்றவை சாலையில் தவிர்க்க வேண்டும், மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும். அதிகபாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவ-மாணவிகளிடமும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர். 
    பெருமாநல்லூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே லட்சுமி கார்டன், ரங்கா கார்டன் பகுதியில் சுமார் 60 குடியிருப்புகளும், புது காலனியில் 25 குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலிக் குடங்களுடன் திரண்டு வந்து பெருமாநல்லூர்- மலையபாளையம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலர் தனபால் மற்றும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, எங்கள் பகுதியில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் உள்ளது. அதை ஆய்வு செய்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரனிடம் போலீசார் போனில் தகவல் கொடுத்தனர். அவர், நாளை (இன்று) ஆழ்குழாய்களை நேரில் ஆய்வு செய்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வெண்ணந்தூர்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் முதல் நிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் தட்டு மற்றும் கப்புகள், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடிய அலுமினியம் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொள்முதல் செய்யவோ, இருப்பு வைக்கவோ, பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ கூடாது என அத்தனூர் பேரூர் செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வாரச்சந்தைக்கு சென்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், சணல் பைகள், காகித கவர்கள், சில்வர் கண்ணாடி டம்ளர்கள், வாழை இலைகள், பாக்கு மட்டைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 
    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    சென்னை:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் முட்டை வினியோகிக்கும் பொறுப்பை காண்டிராக்ட் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப முட்டைகளை வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம், அரசு நிர்ணயித்த முட்டையை விட, ‘புல்லட்’ எனப்படும் எடை மற்றும் தரம் குறைந்த முட்டைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்குவதாக தெரியவந்தது. இதனால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்யும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் சத்து மாவு தயாரிக்கும் நிறுவனத்தை வருமானவரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    போலியான நிறுவனங்கள் மூலம் முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்தது போன்று போலி கணக்குகள் தயாரித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, ‘கிருஷ்டி பிரைடு கிராம்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததால் அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் கிருஷ்டி பிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சென்னையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளன. அங்கு வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் உள்ள அக்னி எஸ்டேட்ஸ் மற்றும் பவுண்டேசன் நிறுவனத்தில் வருமானவரித்துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த நிறுவனங்களின் அறங்காவலர் ஜெயப்பிரகாஷ், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகள் கோட்டூர்புரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ளன. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடந்தது.

    திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மட்டும் இன்றி அதிகாரிகள் குடியிருப்பு, குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள அந்த மாவு நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீடு, திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீடு மற்றும் ராசிபுரம் பகுதியில் உடுப்பத்தான்புதூர் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள சத்துமாவு நிறுவனம் மற்றும் கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல் வேப்பநத்தம் பகுதியில் உள்ள முட்டை குடோன்களிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களிலும் நடந்த சோதனையில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை கடந்த சில ஆண்டுகளாக வினியோகம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது சென்னை, கோவை, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டோம்.

    இந்த சோதனையின் போது ரொக்கப் பணமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆய்வுக்கு பின்னர்தான் ரொக்கம் மற்றும் ஆவணங்களின் துல்லியமான மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையில் இறங்க உள்ளோம். வரிஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கும், முட்டைகள் முறைகேடாக விற்பதற்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #anganwadi #governmentschool
    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டன. 2017- 18-ம் ஆண்டிற்கு ரூ.4.34-க்கு முட்டை வழங்க 3 தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டன.

    அவ்வாறு வழங்கப்படும் முட்டை ஒன்றின் எடை 45 முதல் 52 கிராம் நிகராமல் இருக்க வேண்டும். சராசரி 10 முட்டைகளின் எடை 445 கிராம் முதல் 525 கிராம் வரை இருக்க வேண்டும். அக்மார்க் தரத்தில் ஏ மீடியம் ரக முட்டைகளாகவும், சுத்தமாகவும், பாக்டீரியா மற்றும் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் மாறுபாடு கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தொகை வழங்க வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளில் முறைகேடு நடப்பதாக திடீரென புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில் சுமார் 1 கோடி முட்டைகள் கேரளா மாநிலத்திற்கு சென்று விடுகிறது.



    சுமார் 52 லட்சம் முட்டைகள் மதிய உணவு திட்டத்திற்காக அரசு வாங்குகிறது. மீதமுள்ள சுமார் 1½ கோடி முட்டைகள் தமிழக மக்களின் நுகர்வுக்காக செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 40 லட்சம் முட்டைகள் விற்பனையாகிறது.

    பொதுமக்களுக்கு விற்கப்படும் முட்டைகளில் இருந்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் நீல நிறத்தில் சீல் வைத்து வழங்கப்படுகின்றன.

    சமீபகாலமாக அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ள சத்துணவு கூடங்களுக்கான முட்டைகள் வெளிசந்தைகளிலும், சில்லரை விற்பனை கடைகளிலும் தாராளமாக கிடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சத்துணவு மையங்களுக்கு வாங்கப்படும் முட்டைகள் எப்படி கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன என்பது பற்றி கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சத்துணவு மையங்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான முட்டைகளை சப்ளை செய்ய திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதன்படி சராசரியாக 30 முதல் 40 கிராம் எடையுள்ள முட்டைகளை ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிசந்தைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அந்த நிறுவனத்திடம் இருந்து அரசுக்கு ரூ.3.50க்கு முட்டை வாங்கப்படுகிறது. அந்த நிறுவனம் தினமும் ஒப்பந்தப்படி முட்டைகளை விநியோகித்து வருகிறது.

    அதன்பிறகு அந்த முட்டைகள் அங்கன்வாடி மையங்களுக்கும், சத்துணவு கூடங்களுக்கும் சென்ற பிறகு முறைகேடு நடப்பதாக தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட வருவது குறைவாக இருக்கும். ஆனால் வருகை பதிவேட்டில் அதிகம் பேர் சாப்பிடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    அப்படி மிச்சமாகும் முட்டைகள் கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர முட்டைகளை எடுத்துச் செல்லும்போது கணிசமான அளவு முட்டைகள் சேதம் ஆவது உண்டு. அந்த முட்டைகளையும் வெளியில் உள்ள கடைகளுக்கு கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் முட்டைகளில் வைக்கப்பட்டுள்ள அரசு முத்திரையை ரசாயனம் கொண்டு அழித்து விற்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆனால் சென்னை உள்பட சில நகரங்களில் சமீபகாலமாக சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் சீல் அழிக்கப்படாமலேயே கடைகளுக்கு விற்பனைக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    முதல் கட்ட விசாரணையில் அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கும், முட்டைகள் முறைகேடாக விற்பதற்கும் தொடர்பு இருப்பது பற்றி தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. உரிய ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் சத்துணவு முட்டைகளை வெளிசந்தைகளில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த முட்டையை காட்டிலும் புல்லட் எனப்படும் சிறிய அளவில் குறைந்த எடையில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் உடல் நலனுக்கு அரசு வழங்கும் முட்டையில் முறைகேடு செய்வதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எனவே முட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததார்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சின்ராஜ் கூறியது:-

    முட்டைகளை கோழிப் பண்ணையாளர்கள் நேரிடையாக கொடுத்தால் முட்டை சரியாக வழங்க முடியும். ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தினர் முட்டைகளை குடோனில் வாங்கி பிறகு பள்ளிகளுக்கு முட்டை அனுப்புகின்றனர்.

    அப்படி வழங்கப்படும் முட்டைகள் சிறியதாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வெளிமாநிலத்தில் சிறிய முட்டைகளை குறைவாக வாங்கி அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனை தவிர்க்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அரசு நேரிடையாக முட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #anganwadi #governmentschools #MidDayMealScam #MidDayMealEgg

    தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தல், தேர்வில் தோல்வி அடைதல், கனவுகண்ட மேல்நிலை கல்வியை கற்க வாய்ப்பு இல்லாமல் போதல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு மாணவ-மாணவிகள் விபரீத சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தன்னம்பிக்கை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகி மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களோ, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை காணும் மற்றவர்களோ உடனடியாக 104 என்ற இலவச ஆலோசனை தொலைபேசி எண்ணிற்கும், கல்வித்துறையின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் தங்களின் அருகில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உதவிடலாம் என்ற கருத்துகளை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்து விளக்கி கூறினர். 
    ×