search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106312"

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo

    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை.

    பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. சில இடங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

    அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கலெக்டர் அலுவலகம், தாசில்தார், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    சென்னையிலும் எழிலகம், பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின.

    அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் முடங்கின. பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் மறியலில் ஈடுபட்டனர்.

    சென்னையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு மறியலில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குவிந்தனர்.

    சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர், கோயம்பேடு போன்ற பகுதிகளின் மையமாக திகழும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

    மறியல் போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் சிறிது சிறிதாக கூடத் தொடங்கிய கூட்டம் பின்னர் அதிகரித்தது. கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள் குவிந்தனர்.

    போலீசார் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் மாநகராட்சியின் பக்கவாட்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து கைதானார்கள்.

    நேற்றை விட இன்று போராட்டம் தீவிரமானது. சென்னையில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். இன்றைய போராட்டத்தில் அரசு பணிகள் மேலும் பாதிக்கப்பட்டன.

    தலைமை செயலகம் தவிர பிற அலுவகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வேலைக்கு செல்லவில்லை.

    சென்னையில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குறைந்த அளவில் வந்திருந்தனர். இதனால் வழக்கமான பணிகள் முடங்கின.

    போராட்டம் குவித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 300 இடங்களில் இன்று மறியல் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது ஆவார்கள். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைப்பது பற்றி கவலைப்படவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை முடிப்பது இல்லை.

    நாளை மீண்டும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் முன்பாக மறியல் நடைபெறும். நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடக்கும்.

    26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம். எங்களை அழைத்து அரசு பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர். #JactoGeo #Edappadipalaniswami

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஒன்று திரண்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அப்போது ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணி, வெங்கடேசன், அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளில் நியாயம் உள்ளது. இதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண முன் வர வேண்டும்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஒரு மிரட்டல் கடிதத்தை தமிழகம் முழுவதும் தலைமை செயலாளர் அனுப்பி உள்ளார். (17)பி பிரிவை பயன்படுத்துவோம் என்று சொல்லி உள்ளார்.

    இந்த போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். அரசு மிரட்டலுக்கு பணிய மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். எஸ்மா, டெஸ்மா எந்த சட்டம் பாய்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்களை கைது செய்தாலும் சம்பள பிடித்தம் செய்தாலும் கவலைப்பட போவதில்லை.


    எங்களது கோரிக்கைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும், 35 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, நூலகர், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தும், மதிப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடுகிறோம்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால் தலைமை செயலாளரின் அறிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தலைமை செயலாளர் 21 மாத நிலுவைத் தொகையை பெற்று விட்டார். தலைமைச் செயலாளருக்கு பென்சன் உண்டு. ஆனால் 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு இல்லை. அதைத்தான் கேட்கிறோம்.

    தமிழக அரசு எங்களை தொடர்ந்த ஏமாற்றியதால் நீதிமன்றமும் எங்களது வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை.

    எங்களது போராட்டத்தால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனென்றால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்துள்ளோம். அப்படியே போராட்டம் நீடித்தாலும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #JactoGeo #Edappadipalaniswami

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. #JactoGeo

    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ எனும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    2 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தினார்கள்.

    இதை ஏற்று அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.

    அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு அரசிடம் இருந்து வரும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரையில் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் போராட்டத்தை முன் எடுத்து செல்ல முடிவு செய்தனர்.

    திட்டமிட்டப்படி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்ததோடு போராட்டத்தில் குதித்தனர்.

    பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


    யார்-யார்? பணிக்கு வந்துள்ளார்கள் என்ற விவரங்களை பள்ளிகளும், அரசு அலுவலக துறை அதிகாரிகளும் கணக்கெடுக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் “பணியில்லை ஊதியமும் இல்லை” என்ற கொள்கையின்படி சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை மீறி இன்று முதல் அவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    25-ந்தேதி வரை 4 நாட்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். முதல் நாளான இன்று அனைத்து தாலுகா அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    பணிக்கு செல்லாத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசு அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    நாளை 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களும் தாலுகா தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.

    ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    இதனால் அரசு துறையின் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்கள் வருகை தந்தனர்.

    தற்போது தேர்வு காலம் தொடங்க இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் பள்ளிகள் மூடப்படாமல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு அலுவலகங்கள் நிறைந்த எழிலகம், குறளகம், பனகல் மாளிகை போன்றவற்றில் அரசு ஊழியர்கள் குறைந்த அளவில் பணிக்கு வந்திருந்தனர்.

    ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் தலைமையில் எழிலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ஜாக்டோ-ஜியோவின் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடைப்பெற்றாலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் ஒரு பிரிவினர் பணிக்கு சென்றனர். என்.ஜி.ஓ. சங்கம், தலைமை செயலக சங்கம், அலுவலக உதவியாளர் சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.

    தலைமை செயலகத்தில் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். #JactoGeo

    நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

    கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

    இவர்களது போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

    அதன் பின்னரும் அரசு கோரிக்கைகள் பற்றி இதுவரை எந்தவிதமான முடிவையும் தெரிவிக்காததால் கோர்ட்டில் கொடுத்த உத்தரவை ஜாக்டோ- ஜியோவினர் திரும்ப பெற்றதோடு மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் 22-ந்தேதி முதல் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    திருச்சியில் நடந்த உயர்மட்ட குழுவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டனர்.

    அதன்படி நாளை 22-ந்தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ந்தேதி மறியல் போராட்டமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நாளை முதல் தொடங்குவதால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் ஒரு பிரிவினர் கலந்து கொள்ளவில்லை.


    என்.ஜி.ஒ. சங்கம், தலைமை செயலக சங்கம், ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் பங்கேற்காததால் ஜாக்டோ- ஜியோவின் வேலை நிறுத்தம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியும்.

    ஆனால் அரசுக்கு எதிராக நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் முதல் நாளில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறும் மறியல் போராட்டங்களில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்தார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்துத்துறை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 22-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

    வேலை நிறுத்தம் செய்வது அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, போராட்டங்களில் கலந்து கொள்வது மற்றும் அரசு அலுவலகங்களில் தினசரி பணிகள் பாதிக்கும் வகையில் செயல்படுவது ஆகியவை தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973 பிரிவுகள் 20, 22, 22ஏ ஆகியவற்றின் கீழ் சட்ட விதி மீறலாகும்.

    தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதியின்கீழ் வேலை நிறுத்தம் செய்வதற்கு எந்தவித தார்மீக உரிமையோ சட்டபூர்வ உரிமையோ கிடையாது. சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பில் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் அன்றைய சம்பளம் கேட்பதற்கு உரிமை இல்லை என்று கூறி உள்ளது.

    எனவே உங்களது துறையில் உள்ள அரசு ஊழியர்களிடம் நடத்தை விதிகளை மீறக்கூடாது என்று உத்தரவிட கேட்டுக் கொள்கிறேன். நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

    நாளை தொடங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் யாராவது கலந்து கொண்டு அலுவலக பணிகளை புறக்கணித்தால், அவர்கள் வராதது அங்கீகாரம் இல்லாத ஒன்றாக கருதப்படும்.

    இதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் “நோ ஒர்க் நோ போ” என்ற கொள்கை அடிப்படையில் அவர்களுக்கு எந்த சம்பளமும் வழங்கப்படமாட்டாது. போராட்ட நாட்களில் அவர்களுக்கு உரிய படிகளும் வழங்கப்படமாட்டாது.

    ஆகையால் அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பட்சத்தில் பணியாளர்கள் சட்டப்பிரிவு 17(பி)கீழ் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மருத்துவ விடுப்பை தவிர அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் வேறு எந்த விடுப்பும் கிடையாது. தினக் கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நிறுத்தப்படுவார்கள்.

    மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள் அதற்குரிய சரியான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவத்துறையின் உரிய சான்றிதழ் இல்லாமல் விடுப்பு எடுப்பதை அனுமதிக்க இயலாது.

    போலி மருத்துவ சான்றிதழ்கள் கொடுத்து நாளை விடுப்பு எடுப்பது தெரிந்தால் அவர்கள் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதியின் கீழ் மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது சம்பளமும் ரத்து செய்யப்படும்.

    வேலை நிறுத்தத்தை கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் அமைப்புகளில் இயல்பு நிலை நிலவ துறை தலைவர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் உரிய மாற்று ஏற்பாடுகளையும் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

    நாளை காலை 10.15 மணிக்குள்ளாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகவல்களை கிராமம், தாலுகா, மாவட்ட அளவில் சேகரித்து தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    நாளை தொடங்கி வேலை நிறுத்தம் முடியும் வரை இந்த தகவல்கள் தினமும் தரப்பட வேண்டும். தலைமை செயலகம் துறைகளில் பணிக்கு வருபவர்கள் பற்றிய வருகை பதிவேடு தகவல்களை அந்தந்த துறை தலைவர்கள் 10.30 மணிக்குள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அளிக்க வேண்டும்.

    இந்த வருகை பதிவேடு தகவல்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களின் தகவல்களை தனியாக தினமும் மதியம் 12 மணிக்குள் தர வேண்டும். அதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். #JactoGeo
    ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை (22-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #JactoGeo

    திருச்சி:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சியில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டப்படி நாளை 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்துக்கு பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை 22-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டமும், 23, 24-ந்தேதிகளில் தாலுகா தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டமும் 25-ந்தேதி மாவட்ட தலை நகரங்களில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும்.

    தொடர்ந்து 26-ந்தேதி சென்னையில் ஜாக்டோ -ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்த கட்ட பேராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். இதற்கிடையே போராட்டத்தை தடுக்க எந்த வித இடையூறு வந்தாலும் கே.ஜி. வகுப்புகளுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாற்றம் தொடர்பான ஆணைகளை பெறவோ? பணியில் சேரவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ந் தேதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். #JactoGeo
    சென்னை:

    பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஜாக்டோ ஜியோ இந்த போராட்டங்களில் பங்கேற்று வேலைநிறுத்த போராட்டமும் நடந்தது.

    ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். தங்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அரசு புது பென்‌ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய சம்பள கமி‌ஷன் அமைக்கப்பட்டதன் அடிப்படையில் அரசு வழங்க வேண்டிய 21 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை தீர்வு காண முயலவில்லை.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துகிறோம். வருகிற 22-ந் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்.

    மாறுபட்ட 57 சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறது. அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

    ‘போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வேறுவழி இல்லாததால் வேலைநிறுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறி உள்ளனர். #JactoGeo

    தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெ.ஜெ.நகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, தானியங்கி வருகை பதிவேடு துவக்க விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வகம் திறப்புவிழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

    வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


    9 முதல் 12-ம்வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு இண்டெர் நெட் வசதி செய்து தரப்படும்.

    8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    வரும் காலங்களில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில் ‘ஸ்கில் டிரெய்னிங்’ எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது.

    இன்று ஜி.எஸ்.டி.எனும் வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 135 மக்களில் 25 சதவிதம் பேர் வரி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு ஆடிட்டர் எனும் பட்டயகணக்கர் 10 லட்சம் பேர் தேவை. ஆனால் 2.85 லட்சம் பேர்தான் ஆடிட்டர் என்னும் பட்டயகணக்கர் உள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சார்ட்டட் அக்கவுண்ட் எனும் சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாபா.க.பாண்டியராஜன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான வி. அலெக்சாண்டர், மாவட்ட கல்வி அதிகாரி முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் மாவட்ட அவை தலைவர் காசு ஜனார்தனம், பகுதி செயலாளர் என்.அய்யனார், டன்லப் வேலன், கிருஷ்ணன், கே.பி.முகுந்தன், எம்.டி.மைக்கேல்ராஜ், எல்.என்.சரவணன், இ.ஆர்.கே.உமாபதி, கேபிள் ராஜசேகர், முகப்பேர் இளஞ்செழியன், சிமியோன் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Sengottaiyan #Laptops
    இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Vaiko #TeachersProtest

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், “சமவேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இதுவரை 200 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் மனைவி, கணவன், குழந்தைகள் என குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல், “ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்தால்தான் முடிவு எடுக்க முடியும்” என்று பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் மிக அலட்சியமாகக் கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    2009-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 6-வது ஊதியக்குழுவில், 31.5.2009-க்கு முன்னர் நியமனம் ஆன இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், ஒரு நாள் கழித்து அதாவது 1.6.2009-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. இது புதிதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட ரூ.3170 குறைவான அடிப்படை ஊதியம் ஆகும்.

    ‘ஒரே கல்வித் தகுதி ஒரே பணி’ ஆனால் இருவேறு ஊதிய விகிதங்கள். இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    2016 பிப்ரவரி மாதம் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களில் பலரின் உடல்நிலை மோசமானபோது, முதல்வர் ஜெயலலிதா, “ஊதிய முரண்பாடுகள் களையப்படும்” என்று உறுதி அளித்தார்.

    ஆனால் இந்த நிலை தொடர்ந்து, 7-வது ஊதியக் குழு நடைமுறையிலும் வஞ்சிப்பதைக் களைய வேண்டும் என்று கோரி 2018, ஏப்ரல் மாதம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டனர். அப்போதும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கிய நிலையில், கவலைக்கு இடமாக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

    இடைநிலை ஆசிரியர்களின் இடையறாத அறபோராட்டத்தின் விளைவாக, ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக அரசு ஒரு நபர் ஊதியக் குழுவை அமைத்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக அந்தக் குழு தனது அறிக்கையைத் தரவில்லை. தமிழக அரசும் அது குறித்து கவனத்தில் கொள்ளாமல் இடைநிலை ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி வருகிறது.

    இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும். சிறப்பான முறையில் இயங்கி வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இடைநிலை ஆசிரியர்களை கைவிட்டுவிடக் கூடாது. ஆசிரியர்களை அறப்போராட்டக் களத்தில் நீடிக்க விடுவது பள்ளிக் கல்வித்துறைக்கு கரும்புள்ளி ஆகிவிடும்.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார். #Vaiko #TeachersProtest

    சம வேலை, சம ஊதியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #TeachersProtest

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நிலவுவதை கண்டித்து சென்னையில் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2009-ம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு குறைவான சம்பளமும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான சம்பளமும் வழங்கப்படுகிறது.

    இந்த ஊதிய முரண்பாடை களைய வேண்டும் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ‘‘சமவேலைக்கு சம ஊதியம்’’ என்ற கோ‌ஷத்தை முன் வைத்து போராடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக கடந்த 24-ந்தேதி ஆசிரியர்- ஆசிரியைகள் குவிந்து இருந்தனர்.

    அவர்கள் சட்ட விரோதமாக கூடியதாக கூறி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இங்கு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்டேடியத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அங்கு தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

     


    சிலர் குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெட்ட வெளியில் மரத்தடியிலும் ஆங்காங்கேயும் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இரவில் கொட்டும் பனியிலும், விடிய விடிய போராட்டம் நீடிக்கிறது.

    உண்ணாவிரதம் இருப்பதால் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு களைப்படைந்து மயக்கம் ஏற்படுகிறது. அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து வருகிறார்கள். இரவு வரை மொத்தம் 210 ஆசிரியர்- ஆசிரியைகள் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 210 பேரில் 111 பேர் ஆசிரியை ஆவார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் தினகரன், தே.மு.தி.க. சார்பில் விஜய பிரபாகரன் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் துரைபாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே அரசு பேச்சு நடத்தி கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயார் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோர் எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும். கோரிக்கையை ஏற்பதாக உறுதி அளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

    இங்கே மரங்கள், செடி- கொடிகளுக்கு இடையே போராட்டம் நடத்துகிறோம். இரவில் பூச்சிகளுக்கு அஞ்சாமலும், கடும் பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெறுகிறது.

    உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்த பின்னரும் போலீசார் வாங்கி கொடுத்த உணவை சாப்பிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் 1,800 இடைநிலை ஆசிரியர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

    இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.

    ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கை விடவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

    கைது செய்யப்பட்ட 1,800 ஆசிரியர்களில் 1,000 பேர் ஆசிரியைகள் இதில் பலர் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மத்திய குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் செந்தில் குமார், விமான நிலைய உதவி கமி‌ஷனர் விஜய குமார், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் கைதான ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். ஆனால் அதை சாப்பிட ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் சோர்வுடன் காணப்படுகின்றனர்.

    இதுபற்றி போராட்டக் குழுவினர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட பிறகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    மாணவர்களை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வற்புறுத்துவது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #Sengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதியில் இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னை அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டுடியோ அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு தினம் ஒரு பாடம் என ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் எதுவும் வெளியாகவில்லை. 2 மாணவர்கள் அறையின் பூட்டை உடைத்து உள்ளனர்.

    வினாத்தாளை எடுக்கும் முன் வெளியாகும் முன்பே அவர்கள் பிடிக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரசு பள்ளி மாணவர்களை பிரம்பால் அடிக்காமல் பள்ளி வளாகத்தை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் கூறப்படுவது உண்மை கிடையாது. பள்ளி வளாகத்தை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வற்புறுத்தியது கிடையாது.

    அப்படி பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. நமது வீட்டை நாம் சுத்தம் செய்வது போலத் தானே அதுவும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan

    சேப்பாக்கத்தில் அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். #teachers #teachersarrest

    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் இன்று நடந்தது.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னை சேப்பாக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் தலைமையில் நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசு வெளியிட்ட 1988-ம் ஆண்டு அரசாணை மற்றும் 2009-ம் ஆண்டு அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

     


    இதுகுறித்து பொதுச் செயலாளர் மயில் கூறியதாவது:-

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம், 1988-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தி இணையாக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்து விட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500 இழப்பு ஏற்பட்டது.

    இந்த இழப்பை சரி செய்ய வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த நிலையில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்தி வெளியிட்ட அரசாணை, 303 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க சிபாரிசு செய்யவில்லை.

    இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.14,800 இழப்பு ஏற்பட்டது. ஒரே கல்வி, ஒரே பணியினை செய்து வரும் ஆசிரியர்களுக்கு 3 விதமான ஊதியம் வழங்கப்படும் நிலை உள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊதிய இழப்பை சரி செய்ய வேண்டும் என இதுவரையில் 54 போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால் சரி செய்யப்பட வில்லை. இதனால் அரசாணை எரிப்பு போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஊதிய முரண்பாட்டை சரி செய்யும்வரை சிறை நிரப்ப தயாராக உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #teachers #teachersarrest

    ×