search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இரண்டு நபர்களின் சடலத்தை மீட்டு வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக அவருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் குடியரசு தினத்தன்று பூதலூர் வட்டம், அக்கரப்பேட்டை சரகம், அலமேலுபுரம் பூண்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 4 நபர்களில் இரண்டு நபர்களை உயிருடன், இரண்டு நபர்களின் சடலத்தையும் மீட்டு வீர தீர செயல்கள் புரிந்தமைக்காக அவருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.

    அந்த விருதை அவர் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரத்தை ஒரு பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர்

    நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா விற்பதாக கூறி மிரட்டுகின்றனர்
    • வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    வீர மார்த்தாண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் சிறு, குறு தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் எங்கள் பகுதிக்கு கடந்த 28-ந்தேதி மாலை மது விலக்கு பிரிவு போலீசார் என கூறி 2 பேர் வந்தனர். அவர்கள் எங்களிடம் கஞ்சா மற்றும் மது வியாபாரம் செய்வதாக கூறி எங்களை மிரட்டினர். ஆதலால் திருநங்கைகளுக்கு அவப்பெயர் ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
    • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் வாயில் கருப்பு துணியை கட்டி வந்து கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம், வெங்கடாபுரம், சிவாஜி காலனி, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், புறம்போக்கு இடத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பல மதங்களாகியும் அவர்களுக்கு இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யவில்லை.

    இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சுமார் 60 பேர் கலெக்டரிடம் மனு அளித்திருந்தோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து தராமல் இருந்து வருகின்றனர். இன்னும் சிலருக்கு பட்டா வழங்கவில்லை.

    எனவே கலெக்டர் இதில் தலையிட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
    • தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம் நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, பான் மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.

    இப்போது அடிப்படை பணிகளை தொடங்கினாலும் கட்டுமான பணிகளை தொடங்க 6 மாதம் ஆகும்.

    மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தொடங்கப்பட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

    மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி என்ற கொள்கை முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கல்லூரி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் கோரிக்கை மனு
    • 3 மாதங்களாக ஆக்கிரமிப்பு என பொதுமக்கள் குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வடுகர்பாளையம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமித்துள்ள பொது இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வடுகர்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை 8 நபர்கள் சில ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையடுத்து 7 நபர்கள் ஆக்கிரமிப்பை கைவிட்டனர். அதில் ஒருவர் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் 3 மாதங்களாகியும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இது குறித்து ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் வியாபாரிகள் சங்க பேரவையினர் மனு அளித்தனர்.
    • டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் தலைவர் மைக்கேல் ராஜ், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது:-

    உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும். சுங்க கட்டணத்தை குறைப்பதுடன் அதை 2 மாதத்திற்குள் அகற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது, வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்.

    மின்கட்டணம், பெட்ரோல், டீசல், கியாஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதில் சங்க நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், ஜெயக்குமார், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், தேனப்பன், கண்ணன், மரிய சுவீட் ராஜன், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், கணேசன், வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 9 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு குறைகள் ஏதுமிருப்பின் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் மாவட்டத்தில் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.

    எனவே, பொது மக்களுக்கு குறைகள் ஏதுமிருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்ணச்சநல்லூரில் நந்தவனத்தை மீட்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்
    • ஊர் பொதுமக்கள் நந்தவனத்தை பார்வையிடவதற்கும் அனுமதி இல்லை என்று துரத்தப்படுகிறார்கள்

    மண்ணச்சநல்லூர்:

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான முக்கியத்துவம் வாய்ந்த திருவள்ளறை புண்டரீகாச பெருமாள் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேர் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் கோவிலுக்கு சொந்தமாக நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த நந்தவனத்தை நகராட்சி மற்றும் நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அந்த நந்தவனத்திற்கு உபயதாரர் என்ற பெயரில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி ஜெயபால் என்பவர் அந்த இடத்தை தன் வசப்படுத்திக் கொண்டு விளம்பரம் பலகை யாருடைய அனுமதியும் இல்லாமல் வைத்து, ஊராட்சியில் அனுமதி இல்லாமலும், மனை ரசீது இல்லாமலும் தனது பண பலத்தை பயன்படுத்தி மின் இணைப்பு கல்பனா ஜெயபால் என்ற பெயரில் இணைப்பு பெற்றுள்ளார்.

    மேலும் நந்தவனத்திற்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஊர் பொதுமக்கள் நந்தவனத்தை பார்வையிடவதற்கும் அனுமதி இல்லை என்று துரத்தப்படுகிறார்கள். மின் இணைப்பு வழங்கியதில் அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மின் இணைப்பை ரத்து செய்யக்கோரியும் நந்தவனத்தை மீட்க கோரியும் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பஞ்சாயத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


    • சவுதியில் இறந்த தந்தையின் உடலை மீட்டுத்தரக் கோரி மனு அளித்தார்.
    • எனது தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    செந்துறை அடுத்த சோழன்குடிகாடு , மணபத்தூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கவியரசன். இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், சௌதி அரேபியாவில் வேலைக்கு சென்றிருந்த எனது தந்தை ரவிச்சந்திரன், இறந்து விட்டதாக தொலைப் பேசி மூலம் தகவல் வந்தது. எனவே எனது தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இன்று 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த முகாமில் ஏற்க னவே போலீஸ் நிலை யத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்கள் கலந்துகொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது மக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.

    முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது. அந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

    மேலும் மனு அளிப்ப தற்காக மாற்றுத்திறனாளி களும் வந்திருந்தனர். அவர்களை போலீசார் நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்று லிப்ட் மூலமாக கூட்ட ரங்கிற்கு கொண்டு சென்ற னர். அங்கு மாற்றுத் திறனாளிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனு வாங்கினார். அதோடு அவர்கள் அருகில் அமர்ந்து குறைகளையும் கேட்டறிந்தார்.

    • மாடுபிடி வீரர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

    திருச்சி:

    அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் திருச்சி துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர் பொன்.ரவி என்கிற பெருமாள் ஆகியோர் மாடு மற்றும் மாடுபிடி வீரர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. அந்த ஜல்லிக்கட்டுக்கு டோக்கனுக்கு ரூ.1,000 பெற்றுக் கொண்டனர். நான் 2 ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு ரூ.2,000 கொடுத்து டோக்கன் கேட்டோம். அதற்கு 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்கள்.பின்னர் திடீரென தேதி மாற்றப்பட்டு கடந்த 8-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கு டோக்கன் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளும்படி புதுக்கோட்டை கலெக்டர் அறிவித்தார். அதன்படி விண்ணப்பித்து அரசின் முத்திரையுடன் 200-வது டோக்கன் எங்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால் போட்டி நடைபெற்ற அன்று தங்கள் விருப்பம் போல மாடுகளை வாடிவாசலில் அவிழ்த்து விட்டனர். இதனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆன்லைன் டோக்கன் முறையால் ஏழை விவசாயிகளுக்கு தங்களது காளைகளை களமிறக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.ஆகவே இனிமேல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் விண்ணப்பத்தை ரத்து செய்து பழைய முறையிலேயே டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் வழங்குவதில் வி.ஐ.பி.க்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் சாதாரண மாட்டு உரிமையாளர்களுக்கு டோக்கன் போய் சேர்வதில்லை.ஆகையால் ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவரை நியமித்து ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்க வேண்டும். ஜாதிய அடையாளங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    • ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வண்ணாரப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து கழிவுநீர் பிள்ளையார்பட்டி எல்லைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை விரிவாக்கபணி செய்து வண்ணாரபேட்டை ஊராட்சி எல்லைவரை கொண்டு வந்துள்ளனர். இதனால் இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.

    கழிவுநீர் வருவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் உங்கள் கோரிக்கை குறித்து மனு அளியுங்கள் என்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு மனு அளித்தனர்.

    ×