search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவர்கள்"

    புதுவை வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். #villianurmadhachurch

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பாதிரியார்கள் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது. அதன் பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் சிறிய தேர்பவனி நிகழ்ச்சிகள் 9 நாட்கள் நடைபெற உள்ளன.

    அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் சனிக்கிழமை கோவை மாதாவின் மணிகள் நடத்தும் ஜெபமாலை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெபமாலைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

    5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.

    மாதா சொரூபத்துக்கு வைர கிரிடம் சூட்டப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறது. அப்போது ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை தேரில் தூவி வழிபடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மறுநாள் காலை 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் உதவி பங்குத்தந்தை, விழா குழுவினர், பங்கு பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் மற்றும் திருத்தல பக்தர்கள் செய்து வருகின்றனர்.  #villianurmadhachurch

    புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். #goodfriday

    புதுச்சேரி:

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து புனித வெள்ளி இன்று நடைபெற்றது. இதையொட்டி புதுவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

    புதுவை தூய ஜென்ம ராக்கினி அன்னை பேராலயத்தில் புதுவை கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவை பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிலுவை பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

    இதே போல் புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை குயவர்பாளையம் எம்.பி.ஏ. சபை சார்பில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நவீனா கார்டனில் நடைபெற்றது. சபை போதகர் நித்திய ஜீவதாஸ் தேவ செய்தி அளித்தார்.

    நிகழ்ச்சியில் ஜார்ஜ், மோசே தலைமையில் ஆண்கள், பெண்கள் குழுவினரின் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சபை ஊழியர்கள் செய்து இருந்தனர். #goodfriday

    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து 40 நாட்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, ஆலயத்தில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.

    இதேபோல் அரியலூரில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்திக்கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும். புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா பேராலய ஆண்டு திருவிழாவாக ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பேராலய ஆண்டு திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது. இதை முன்னிட்டு மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் பேராலய முகப்பில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்பு ரோஸ் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்கு தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.

    விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், கொங்கனி, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மேலும் தினமும் மாலையில் தேர்பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங் கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அரசு மானியம் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய கல்வி மனைகளின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்ட கண்காணிப்பாளர் திபு முன்னிலை வகித்தார். விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் ஜெயதாஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. அரசு மானியத்துடன் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அனுமதி அளித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்கள் வேளாங்கன்னி செல்வதற்கு தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்தை திருச்செந்தூரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு விடுதியில் தங்கி பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு சார்பில் 300 பேருக்கு ஆயிரம் கிலோவிற்கு மேல் அரிசி மற்றும் கோதுமை உணவு பொருளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வழங்கிவிட்டு இந்த ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள இங்கு வந்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கேரள வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீள, நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    கேரள மாநிலத்தில் நீடித்து வரும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகள், உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்களில் கமல் ரூ. 25 லட்சமும், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சமும் நிவாரண நிதி அளித்தனர். இதைபோல் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வ அமைப்புகள் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இயற்கைச் சிற்றங்கள் நீங்கி, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீளவும், வெள்ளத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் நடந்த இந்த பிரார்த்தனையை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ.பிரபாகர் அடிகளார் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் முன்னின்று நடத்தி வைத்தனர். இதில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடந்து, அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோபால் ஷெட்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக பேசி வருகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய சேவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, அவரது கருத்துக்கு கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவர்கள் புனித பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன் பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலீயோ சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

    இப்புனித பயணம் ஜுலை-2018 முதல் டிசம்பர் -2018 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

    இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் ww.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன் படுத்தலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807 (5-வது தளம்) அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு 6.7.2018 மாலை 5.45 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×