search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • வாலிபர் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.
    • மாணவியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வேலையாபாளைத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23).

    இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரதீப் அந்த மாணவியை தனியாக சந்தித்து தனது காதலை ஏற்குமாறு கூறி உள்ளார். ஆனால் மாணவி ஏற்க மறுத்து விட்டார்.

    இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று சிறுமியும், அவரது தாயும் அரசு ஆஸ்பத்திரி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியின் தாயிடம் உன்னால் தான் அவள் என்னுடன் பேச மறுக்கிறாள் என கூறி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது பிரதீப் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிரதீப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • அவரிடமிருந்து ரூ.1500 பணம் மற்றும் செல்போனை எடுத்து தப்பிச் சென்றனர்.
    • சரவணம்பட்டி போலீசார் 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, கம்பெனி வளாகத்தில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம்.

    இதையடுத்து அவர் சின்னவேடம்பட்டி டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அப்போது அவரிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளனர். இந்நிலையில் விமல் என்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இதயைடுத்து அந்த கும்பல் அவரது சட்டைப் பையில் இருந்து செல்போன் மற்றும் பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் ஆகியவற்றை எடுத்தனர்.

    இதனை விமல் தடுக்க முயன்ற போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் வைத்து இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி தரையில் தள்ளி விட்டனர். இதில் அவருக்கு தலை மற்றும் உதடுகளில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் அவரிடம் இருந்து, ரூ.1500 பணம் மற்றும் செல்போனை எடுத்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து விமல் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • 50 வருடங்களுக்கு மேலாக சுங்கம் ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • சுங்கம் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். தியாகி சிவராம் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதையடுத்து எங்கள் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக சுங்கம் ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் சுங்கம் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது.

    இந்த சர்வீஸ் சாலை அமைக்கும் பொழுது கோவிலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தடாகம் சாலையில் கடந்த ஓராண்டு காலமாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 20 தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், தொழிற்சாலை செல்லும் தொழிலாளர்களுக்கும் இந்த சாலையில் சென்று வருவது பெரிய சவாலாகவே உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அவ்வப்போது விபத்துகள் நடக்கிறது. மேலும் கோவில்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த சாலை பணியை பள்ளி விடுமுறை காலம் முடிந்து தொடங்குவதற்கு முன் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • கோவை மாவட்டத்தில் போதிய ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.
    • அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கோவை:

    கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வந்தால் அணுக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணி ப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளி ட்டவை தற்காலிகமாக அமைக்க ப்பட்டது.

    திடீரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்தும், வழிகாட்டுதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, ஆக்ஸிஜன் அளவு அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். இதில், மாவட்ட சுகாதாரத்து றை துணை இயக்குநர் அருணா, ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, டாக்டர்கள், நர்சுகள் ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர்.

    இந்த ஒத்திகை கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 92 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 183 மருத்துவ மனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கலெக்டர் கிராந்திகு மார்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த ஒத்திகை பயிற்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதை பார்வையிட்டு நான் ஆய்வு செய்தேன்.

    கோவை மாவட்டத்தில் தற்போது வரை 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவையில் தேவை யான மருத்துவ உள்கட்ட மைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இங்கு பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்து வமனைக்கு செல்வோர் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    மாவட்டத்தில் கொரோனா அறிகுறிக ளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளது.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி யில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் 16 ஆக்சிஜன் பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை. கோவையை பொறுத்தவரை மருத்துவ கட்டமைப்புகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது.
    • பொது இடங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் இணை நோய் பாதிப்பு உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து சுகாதா ரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருப்பினும் முன்னெச்சரி க்கையாக தயார் நிலையில் இருக்கிறோம். கொரோனா பரவல் இருப்பதால், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, எச்ஐவி, கேன்சர், ரேடியோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது, தடுப்பூசி செலுத்தியவ ர்களையும் கொரோனா பாதித்து வருகிறது.

    எனவே, வயதானவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிகம் கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்லும் போதும், பொதுஇட ங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பு மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு திணறல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி துடியலூரில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சரவணம்ப ட்டி போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனை யில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர்கள் புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33), திருப்பூர் மங்கலத்தை சேர்ந்த முகமது ஆசிப் (24), திண்டுக்கல் முத்து நகரை சேர்ந்த மதன்தாஸ் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த ராஞ்சியை சேர்ந்த 25 வயது அழகி, பெங்களூரை சேர்ந்த 33 வயது அழகி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 21 வயது அழகி, குஜராத்தை சேர்ந்த 27 வயது அழகி, டெல்லியை சேர்ந்த 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.

    அவர்கள் 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படை த்தனர். கைது செய்யப்பட்ட 3 புரோக்கர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதேபோல காட்டூர் அலமு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புதுச்சேரியை சேர்ந்த புரோக்கர் சூர்ய பிரகாஷ் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் வீட்டில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த குஜராத்தை சேர்ந்த 20 வயது அழகியை போலீசார் மீட்டனர்.

    அவரை ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் சூர்ய பிரகாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் விபரீத முடிவை எடுத்தார்.
    • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பா ளையம் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் செல்லபாண்டி (வயது 27). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று செல்ல பாண்டி தனது பெற்றோ ரிடம் தான் காதலிக்கும் இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். ஆனால் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செல்லபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலை மேம்படுத்த போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
    • பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் தென்னை நார் பைகள் பயன்படுத்தப்படும்

    உடுமலை :

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவு உள்ளதால் தென்னை நார் சார்பு பொருட்கள் உற்பத்தி தொழில் நடக்கிறது.இந்த தொழிலை மேம்படுத்த போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என நார் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில் தென்னை நார் பரிசோதனைக்கூடம் அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளதால் நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:- தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில், கோவையில், 4 கோடி ரூபாய் மதிப்பில் தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைப்பது மகிழ்ச்சி யளிக்கிறது.பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் தென்னை நார் பைகள் பயன்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறுகையில், எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க, முதலீடுகளுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.நார் தொழிலில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 12 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, 1.55 கோடி ரூபாய் செலவில் தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இதுபோன்ற அறிவிப்பால் வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் ஏற்றுமதி வாய்ப்பு மேம்பட வாய்ப்புள்ளது என்றார். 

    • எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து முதியவரின் தலையில் விழுந்தது.
    • ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் தியாகராய புது வீதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நேற்று மதியம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை.இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரூ. 19 லட்சம் மதிப்பிலான 295 கிராம் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • ேபாலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை காந்திபுரத்தில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    இங்கு வாரம் ஒரு முறை வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் நகைக்கடையில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ. 19 லட்சம் மதிப்பிலான 295 கிராம் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நகைக்கடை மேலாளர், உதவி மேலாளர் சசிக்குமார் என்பவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நகைகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ததாகவும், அதற்குண்டான பணம் ரூ.19 லட்சத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார்.

    மேலும் அவர் ரூ. 19 லட்சத்துக்கு காசோலையையும் கொடுத்தார். அந்த காசோலையை காந்திபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்திய போது கையொப்பம் பொருந்தாமல் திரும்பியது.

    உதவி மேலாளர் சசிக்குமார் விற்பனை செய்த நகைக்கான பணத்தை கொடுக்காமல் ரூ. 19 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு சசிக்குமாருக்கு அவருடன் வேலை பார்க்கும் விஜயன், ரமேஷ் ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர்.

    இது குறித்து நகைக்கடை மேலாளர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நகைக்கடை உதவி மேலாளர் சசிக்குமார், விஜயன், ரமேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.
    • காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டு யானை,மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன் ஒருபகுதியாக கடந்த சில தினங்களாகவே மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் ஒற்றைக்காட்டு யானை பாகுபலி சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் உலா வருவதும், பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவதுமாக இருந்து வருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது பாகுபலி யானையுடன் மேலும் இரண்டு யானைகள் கூட்டு சேர்ந்து அதே பகுதியில் முகாமிடத் தொடங்கியுள்ளன. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சமயபுரம் பகுதி பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- ஆஜானுபாகுமான உடலமைப்பு மற்றும் பெரிய தந்தங்களுடன் கூடிய யானை என்பதால் அதற்கு பாகுபலி என பெயரிட்டு வந்து அழைத்து வருவதாகவும்,கடந்த சில தினங்களாகவே ஒற்றைக்காட்டு யானை பாகுபலி தங்கள் பகுதியில் முகாமிட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 2 யானைகளும் அதனுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் வசிக்கும் தாங்கள் மிகுந்த அச்சத்துடன் உடனேயே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன.
    • தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த கோரி அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் இறங்கியதால் பதற்றம் நிலவியது.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வெளியூர், உள்ளூர் பஸ் நிலையம், வங்கிகள், குடியிருப்புகள், உருளைக்கிழங்கு மண்டிகள், பழைய இரும்பு குடோன்கள். காய்கறி சந்தைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் குறைந்தது 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன. இந்த குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நேஷனல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து குப்பை கழிவுகள் தரம் பிரித்து அதனை உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருதவால் குப்பை மேடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக சுற்று வட்டார கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அதனை அணைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்பட்டது. இதனிடையே மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு சென்று அதனை அணைக்க வேண்டும் என புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் வினோத், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் வந்து குப்பை மேட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுபோல் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ×