search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116343"

    • சிவ லிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.
    • சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

    அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    அன்று இரவு பதினான்கு நாழிகையின் போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.

    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்விதப்பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம். ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும்.

    சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடை பெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.

    நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்ப வரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ சகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகையையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பலாகும். தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார். கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.

    வழிபடும் போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எரிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவ லிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

    வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

    இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனு கிரகமும் உண்டாகும்.

    • சிவராத்திரிவிழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம் போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    அதன் பிறகு மகா சிவராத்திரிவிழாவை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜையும், 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    மீண்டும் அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
    • 12 சிவாலயங்களில் பக்தர்கள் ஓடி தரிசனம்

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் உள்ளது. சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் ஓடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

    சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினம் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். விரத நாள்களில் தீயி னால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருந்து வருகிறார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிட்டு காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி ஈரத்துணியுடன் சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.

    சிவராத்திரி விழா நாளை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிவால யங்களுக்கு ஓடி சென்று தரிசனம் செய்வார்கள். திருமலை மகாதேவர் கோவி லில் இருந்து சிவாலய ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் 12-வது சிவாலயமான நட்டாலம் மகாதேவர் கோவிலில் தங்களது ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். 112 கிலோமீட்டர் தூரம் ஒடியே சென்று பக்தர் கள் தரிசனம் செய்வார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை இன்று 17-ந்தேதி காலை தொடங்கினார்கள்.காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை திப்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நாளை மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவி லில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை யொட்டி நாளை 18-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    • நாளை இரவு நந்தி வாகன சேவை நடக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை) மகாசிவராத்திரி விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரியையொட்டி நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணி வரை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை தேரோட்டம், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நந்தி வாகன சேவை நடக்கிறது.

    மேலும் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம், புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாணம், இரவு திருச்சி உற்சவம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது.
    • மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது.

    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். மலை மேல் அடிக்கடி காலநிலை மாற்றமும் ஏற்படும். ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெள்ளியங்கிரி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

    இந்த நிலையில் சிவராத்திரி நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய 2 விழாக்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது சிவராத்திரி விழாவுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவதை தடுக்க புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். அதன்படி பக்தர்கள் மலை மீது கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். பக்தர்கள் மலையில் இருந்து இறங்கும் போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் கொடுத்து ரூ.20-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

    இதன் மூலம் வனப்பகுதியில் பாட்டில்கள் வீசுவது தடுக்கப்படும். எனவே மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • 19-ந்தேதி சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது.

    திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.

    திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை

    ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.

    • 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.

    பேரையூர் :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். சதுரகிரி கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு நாளை (18-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

    மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பகலில் 4 கால பூஜைகளும், இரவில் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்ற உள்ளன.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறை மலைஅடிவாரப் பகுதிக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    நாளை மகா சிவராத்திரி என்பதால், தாணிப்பாறை வழியாக, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு எனவும், ஆனால் கோவிலில் பக்தர்கள் நாளை இரவில் தங்கி வழிபட அனுமதி இல்லை என்றும் சாப்டூர் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "சாப்டூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்கி வழிபட அனுமதி இல்லை" என்று கூறினர்.

    • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.
    • சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

    குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 12 சிவாலயங்களுக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதனை இப்பகுதியில் காண்போம்.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவில்:-

    மார்த்தாண்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது மதுரை திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் எனவாய்மெழி கதையாக கூறப்படுகிறது. முன்சிறை கிராமத்துடன் ராமாயணத்தை இணைக்கும் வாய்மொழிச் செய்திகளும் உள்ளது. அதாவது ராவணன், சீதையை சிறைவைத்த முதல் இடம் (முன்சிறை) என்று சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலின் மூலவரை சூலபாணி என்று கூறுவார்கள். பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை, முருகன் சிறைபிடித்து வைத்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே சூலபாணி என்ற ஒரு கதையும் உண்டு.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில்:-

    நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் அமைக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த கோவிலில் நந்தி இல்லை. திக்குறிச்சி ஊருக்கு ஒருமுறை வந்த காளை ஒன்று ஊர் மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது. ஊர் மக்கள் கல்லால் எறிந்து அதை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அது மிரண்டு விரட்டியவர்களை எதிர்த்தது. இதையறிந்த தரணநல்லூர் நம்பூதிரி அந்த காளையை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூழ்கச் செய்தார். அப்போது கோவிலில் இருந்த நந்தியும் மாயமாகி விட்டது என்றும், அதன்பிறகு இந்த கோவிலில் நந்தி வைக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    திற்பரப்பு மகாதேவர் கோவில்:-

    பன்னிரு சிவாலயங்களில் 3-வது கோவில் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலின் மூலவரான சிவன், வீரபத்திரர், ஜடாதரர் என அழைக்கப்படுகிறார். வீரபத்திரரும் காளியும் சேர்ந்து தட்சனை வதம் செய்தபிறகு தியானம் செய்வதற்கு திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தலத்தில் வழிபடுவது வழக்கம். திற்பரப்பு அருவி பாயும் பகுதியில் ஒரு குகை உள்ளது. இங்கு காளி புடைப்பு சிற்பமாக இருக்கிறாள்.

    திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில்:-

    இந்த கோவில் வெயில் அறியாத ஊரில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. நந்தி ஓடையில் (முன்பு நந்தியாறு) கரையில் சோலையாக அடர்ந்து வளர்ந்த மரங்களின் நடுவே உள்ளது. இந்த ஊர்த் தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக் கோவில் சிவலிங்கம் மிதப்பதுபோல் கனவு கண்டார். அடுத்தநாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும், ஊர்மக்கள் கண்டனர். பின்னர் மன்னர் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்படடது.

    நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது. இது தொடர்பாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்த கோவில் உருவான காலத்தில் எல்லா லட்சணமும் பொருந்திய ரிஷபம் ஒன்று இந்த ஊருக்கு வந்தது. அது ஊர் மக்களைப் பயமுறுத்தியது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியை தன் எதிரே சிறிய குழியில் அமர்த்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. கோவில் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.

    பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்:-

    இந்த பகுதி காடாக இருந்தபோது காணிக்காரர் சமூகத்தைச் சேர்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தைக் கண்டார். இது ஊர் மக்களுக்குத் தெரிந்து அங்கே ஒரு கோவில் கட்டினர். அதனால்தான் தீம்பிலான்குடி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.

    திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி கோவில் :-

    இந்த கோவில் தலப்புராணம் மகாபாரதத்துடன் தொடர்புடையதாகும். பாசுபதாஸ்திரம் வேண்டி சிவனை நோக்கிதவம் செய்த அர்ஜுனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையதாகும். குமரி மாவட்ட கோவில்களில் பூஜையின்போது புல்லாங்குழல் இசைக்கும் ஒரே கோவில் இதுதான்.

    பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் :-

    இந்த கோவிலில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. ஆகும். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தைக் கண்டான். அந்த இடத்தில் இந்த கோவிலைக் கட்டினான் என்று தலப்புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தை மதுரைைய ஆண்ட திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழிச் செய்தியாகும். இங்குள்ள அம்மன் கோவில் வாசலின் எதிரே உள்ள தூண்களில் திருமலை நாயக்கரும், அவரது தம்பியின் சிற்பமும் உள்ளது.

    மேலாங்கோடு காலகாலர் கோவில் :-

    இந்த கோவிலின் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனைநோக்கி தவம் இருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள, புத்தியுள்ள ஒரு ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கியபோது சிவன் கோவிலுக்குள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனைக் குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்படுகிறார்.

    திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில் :-

    ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக நடந்து வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தைக் கண்டனர். இந்த அதிசயத்தை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தைப் பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் என அழைக்கப்பட்டார். கி.பி. 16-ம் நூற்றாண்டிலேயே இந்த கோவில் சடையப்பர் கோவில் என அழைக்கப்பட்டிருக்கிறது.

    திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் :-

    இந்த கோவில் மூலவர் லிங்க வடிவம் கொண்டவர். கருவறை வாசலைவிட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று தெரிகிறது. இந்த கோவிலின் கல்வெட்டு ஒன்று மூலவரை ஈசான சிவன், ஆலமரப் பொந்தில் இருப்பவர் என்றும், நம்பூதிரிகள் மூலவரை பரிதிபாணி என்றும் கூறுகின்றனர்.

    திருவிதாங்கோடு சிவன் கோவிலைப் பிற 11 சிவாலயங்களிலிருந்தும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களில் இருந்தும் பிரித்துக் காட்டும் அம்சம் இங்குள்ள சிற்பங்கள்தான். சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்களிலும் நடக்கிறது.

    திருப்பன்னிபாகம் மகாதேவர் கோவில் :-

    இந்த கோவில் தொடர்பான கதை மகாபாரதம் அர்ஜூனன் தபசுடன் தொடர்புடையது. அர்ஜுனனுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ஜுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ஜுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றான வராக அவதாரக் கதையுடனும் இந்த கோவில் புராணத்தை இணைத்துக் கூறுகிறார்கள்.

    நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:-

    இந்த கோவில் கருவறை மூலவரை அர்த்தநாரீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றனர். கி.பி. 16, 17-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கருதலாம்.

    சிவாலய ஓட்டம் தொடர்பான மகாதேவர் கோவிலின் முன்பு இருக்கும் குளத்தின் முன் சங்கரநாராயணர் கோவில் உள்ளது. இதன் கருவறையில் லிங்க வடிவ சங்கரநாராயணர் இருக்கிறார். இந்த கோவில் மண்டபத் தூண்களிலும், நமஸ்கார மண்டபத் தூண்களிலும் சிற்பங்கள் உள்ளன. இவை அரச குடும்பத்தினரின் சிற்பங்கள். இந்த சிற்பங்களின் அடிப்படையில் வேணாட்டு அரசர்களின் நன்கொடை இந்த கோவில் என கருதப்படுகிறது.

    • சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
    • தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    சிவராத்திரியையொட்டி சனி பிரதோஷ விழாவும் சேர்ந்து வருவதால் அன்று நான்கு கால பூஜையுடன் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்படும். இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மூன்று முறை ஸ்ரீபலி விழா நடக்கிறது. பின்னர் தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு தங்கு அங்கி சார்த்தப்படும். நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறும்.

    அதிகாலை 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீ பலி விழா நடக்கிறது. சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் 12 ஆலயங்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்வார்கள்.
    • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

    என்று சிவனை போற்றுகிறார் மாணிக்கவாசகர். தமிழகத்தில் புகழ்பெற்ற பல்வேறு சிவாலயங்கள் உள்ளன. அதில் குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    சிவாலய ஓட்டம் ஒருபுறம் நடந்தாலும், ஓடமுடியாத பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், கார், வேன் போன்றவற்றில் சென்று சிவத்தலங்களை தரிசிக்கின்றனர். சிவாலய ஓட்டக்காரர்களுக்கு வழிப்பாதையில் மோர், பானகம், சுண்டல் மற்றும் கஞ்சி போன்றவற்றை ஆங்காங்கே மக்கள் வழங்குவார்கள். பொன்மனை கோவிலில் பலாக்காய் எரிசேரி கறியும், தினை அரிசிக் கஞ்சியும், நல்லமிளகு நீரும் கொடுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. தற்போதும் கல்குளம் கோவிலில் பக்தர்களுக்கு சுவையான குழம்புகளுடன் வயிறு நிரம்ப சாப்பாடும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான மகாசிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகும். இதையொட்டி சிவாலய ஓட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் தொடங்குகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். அங்கிருந்து மற்ற 11 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள்.

    பன்னிரு சிவாலயங்களில் நட்டாலம் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. சிவாலய ஓட்டக்காரர்கள் கையில் விசிறியும், கோவில்களில் காணிக்கையிட சிறு துணிப்பையும் வைத்திருப்பார்கள். இந்த ஓட்டத்தின்போது பக்தர்கள் காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டுவது வழக்கம். கருவறை சிவனைப் பார்த்து விசிறியால் வீசுவது இப்போதும் நடைமுறையில் உள்ளது.

    • 18-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது.
    • இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை.

    திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    ஆனால் தனி லிங்கபெருமாளுக்கு பக்தர்கள் நாடகங்கள் நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது விசேஷம். நாடகங்கள் நடத்துவதற்காகவே கோவில் வளாகத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் நேர்த்திக்காக நடத்தக்கூடிய நாடகங்களை வலையங்குளம் கிராம மக்கள் மட்டுமல்லாது சோளங்குருணி, கொம்பாடி உலகாணி நல்லூர், எலியார்பத்தி, பாரப்பத்தி உள்பட பல கிராம மக்கள் கண்டுரசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 30 முதல் 70 நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நேர்த்திக்கான நாடகங்கள் நடத்த கோவிலில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் இந்த ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நாடகங்கள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பினும் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதால் 32 நாடங்கள் நடத்துவது என்று ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கம்போல வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை. கோவில் வாசல் முன்பு நின்று பெண்பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண் பக்தர்கள் வாசலை தவிர்த்து கோவிலுக்குள் செல்லாதது இந்த கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

    • 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பொதுமக்கள் ஜோதிர் லிங்க கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
    • ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சி தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை நடக்கிறது.

    மகாசிவராத்திரியையொட்டி பிரம்மா குமாரி அமைப்பு சார்பில் சென்னையில் அமர்நாத் பனிலிங்கம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பொது மக்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக பார்வையிடலாம்.

    மகாசிவராத்திரியையொட்டி பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்க தரிசன காட்சி அமைந்தகரை லட்சுமி தியேட்டர் வளாகம் அய்யாவு மகாலில் நடைபெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு கண்காட்சி தொடக்கவிழா நடக்கிறது.

    ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழக நிர்வாக இயக்குனர் டி.ஜி.பி. ஏ.கே. விஸ்வநாத், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த், அண்ணாநகர் போலீஸ் இணை கமிஷனர் மனோகரன், ரெயில்வே மூத்த வர்த்தக மேலாளர் அரி கிருஷ்ணன், பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர் பீனா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜோதிமணி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

    நடிகைகள் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நடிகர் செந்தில், 'ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் சத்யா உள்பட திரையுலகத்தினர் மற்றும் டாக்டர்கள். வக்கீல்கள், கல்வியாளர்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்கிறார்கள். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பொதுமக்கள் ஜோதிர் லிங்க கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

    ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சி தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை நடக்கிறது. இந்த தரிசன கண்காட்சி குறித்து தமிழ்நாடு மண்டல பிரம்மா குமாரிகள் ஒருங்கிணைப்பாளர் பீனா கூறியதாவது:-

    மகாசிவராத்திரி விழாவை சிவ ஜெயந்தி விழாவாக பிரம்மா குமாரிகள் அமைப்பு 87 வருடங்களாக நடத்திவருகிறது. சிவன் என்ற சொல்லுக்கு மங்களம் செய்விப்பவர் என்று பொருளாகும். துக்கம் நிறைந்த இந்த உலகில் ஜோதியாக விளங்கும் அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மா திரிமூர்த்தி சிவன் இந்த பூமியில் அவதரிக்கும் புண்ணிய தினமே சிவ ஜெயந்தி (சிவராத்திரி).

    பரமாத்ம தந்தை சிவ பரமாத்மா 1936-ம் ஆண்டு பிரஜாபிதா பிரம்மா பாபாவின் சரீரத்தில் வந்து ஈஸ்வரிய ஞானம் மற்றும் ராஜயோக தியான கல்வியை அளித்து, அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடக்கும் இவ்வுலகை மீண்டும் சொர்க்கமாக மாற்றுகிறார். இறைவனின் நினைவாக பாரதத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தரிசித்து புண்ணியம் பெற வசதியாக அவற்றின் தத்ரூப காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றை தரிசித்து அனைத்து மக்களும் சிவராத்திரியின் ஆன்மிக ரகசியத்தை அறிந்துகொள்ள அழைக்கிறோம். கண்காட்சியையொட்டி ஓட்டுனர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் சிறப்பு வகுப்புகள், தியான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பெண்கள் பங்கேற்கும் விளக்கு தியானமும் நடைபெறுகிறது.

    ஞாபக சக்தியை அதிகரிக்க மாணவர்களுக்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அனைவருக்கும் இலவச ராஜயோக தியான பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×