search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 120086"

    பெருமாநல்லூர் அருகே ஊழியரை அரிவாளால் மிரட்டி வாலிபர்கள் பெட்ரோல் நிரப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    திருப்பூர்:

    கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு இந்த பெட்ரோல் பங்கில் 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் அங்கிருந்த ஊழியரிடம் ரூ. 600-க்கு பெட்ரோல் நிரப்பும் படி கூறினார்கள். அதன்படி ஊழியர் பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அதற்கான பணத்தை கேட்டார்.அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்த வாலிபர் திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் பெட்ரோல் பங்க் ஊழியரை எங்களிடமே பணம் கேட்கிறாயா? என மிரட்டினார். மேலும் அரிவாளால் வெட்டவும் ஓங்கினார். இதனால் பயந்து போன பெட்ரோல் பங்க் ஊழியர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இரு வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த காட்சி பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இது குறித்து பெருமாநல்லூர் போலீசாரிடம் கேட்ட போது, பெட்ரோல் பங்கில் நடைபெற்ற சம்பவம் சமூக வலை தளங்களில் தான் பரவி வருகிறது.

    இது குறித்து எங்களிடம் புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #tamilnews
    கேரளாவில் நடந்த விபத்து வழக்கில் ஒருவருக்கு ரூ.2.63 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த வேளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார், தனியார் நிறுவன ஊழியர்.

    ஹரிகுமார் கடந்த 2014-ம் ஆண்டு திருவனந்தபுரம் கவடியார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகுமார் படுகாயம் அடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஹரிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவரது உடலில் ஒரு பகுதி செயல் இழந்தது. இதனால் அவர், படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

    விபத்தில் படுகாயம் அடைந்து உடல் செயல் இழந்த ஹரிகுமாருக்கு இழப்பீடு கேட்டு திருவனந்தபுரம் மோட்டார் வாகன கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஹரிகுமாருக்கு ரூ.1 கோடியே 99 லட்சம் இழப்பீடும், இந்த தொகைக்கு வழக்கு தொடரப்பட்ட 2015-ம் ஆண்டு முதல் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும். அதோடு கோர்ட்டு செலவு உள்ளிட்டவைகளையும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவு மூலம் ஹரிகுமாருக்கு ரூ.2.63 கோடி இழப்பீடு கிடைக்கும். இதனை இன்சூரன்ஸ் நிறுவனம் 1 மாதத்தில் வழங்க வேண்டு மென்று கோர்ட்டு கூறி உள்ளது. #tamilnews
    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் இருந்து ஊழியர் ரெயில் மீது குதித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 39). இவர் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் போக்குவரத்து பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பணிக்கு வந்த லட்சுமணன் பகல் 2 மணி அளவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது திடீரென பாலத்தின் மேல் இருந்து கீழே தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் பெட்டியின் மீது குதித்தார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர் விழுந்து கிடந்த ரெயில் பெட்டி அருகே ஏணியை வைத்து அவரை மெதுவாக கீழே இறக்கினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லட்சுமணன் குடும்ப பிரச்சினை காரணமாக நடைமேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 
    சேதராப்பட்டு வேலை தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் ஊழியரை தாக்கிய ஆரோவில் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியில் சர்வதேச நகரமான ஆரோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிமாநில சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்து விட்டு செல்வார்கள்.

    இந்த தியான மண்டபத்துக்கு முக்கிய விருந்தினர்கள் வரும் போது அவர்களை வரவேற்று உபசரிக்கும் அதிகாரியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எரிக் (38) என்பவர் இருந்து வருகிறார். மேலும் இவர் ஆரோவில் நிர்வாக குழுவில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

    இவருக்கும், அங்கு பணி புரியும் வடமாநிலத்தை சேர்ந்த சுனித் என்பவருக்கும் வேலை தொடர்பாக கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சுனித்தை எரிக் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் எரிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவர்- ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேன்களாக ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நேற்று காலை என்ஜின் டிரைவர் பிரணவ் காலி பெட்டிகளுடன் கூடிய ரெயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாயிண்ட்ஸ் மேன்கள் காட்டிய சிக்னல் சரிவர தெரியவில்லை என என்ஜின் டிரைவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது என்ஜின் டிரைவர் பிரணவுக்கும் பாயிண்ட்ஸ்மேன்கள் ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த பிரணவ், நந்தகோபால், தினேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ரெயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஊழியரின் கைகளை துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RailwayGate #Gateman #CrossingGate
    புதுடெல்லி:

    டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள நரேலா என்கிற இடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கேட் கீப்பராக குந்தன் பதாக் (வயது 28) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த குந்தன் பதாக், எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதையொட்டி வழக்கம் போல் கேட்டை அடைத்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரெயில்வே கேட்டை உடனடியாக திறக்கும்படி குந்தன் பதாக்கிடம் கூறினர்.

    அதற்கு அவர் ‘ரெயில் மிக அருகாமையில் வந்துவிட்டது, எனவே கேட்டை திறக்க முடியாது’ என அவர்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து குந்தன் பதாக்கின் 2 கைகளையும் வெட்டினர். இதில் அவருடைய 2 கைகளும் துண்டாகின. மேலும் அவருடைய கழுத்து, கால் ஆகிய பகுதிகளிலும் பலமாக தாக்கிவிட்டு அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் குந்தன் பதாக்கை மீட்டு அருகில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    வெட்டப்பட்ட அவருடைய கைகளை இணைப்பதற்காக தீவிர அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RailwayGate #Gateman #CrossingGate
    அமெரிக்காவில் விமான ஊழியர் ஒருவர் பயணிகள் விமானத்தை திருடி ஓட்டிச் சென்று, விபத்தில் சிக்கி பலி ஆனார். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Stolenplanecrashes #SeattleAirport
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் நகர சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பங்குதாரராக உள்ள ஹாரிஸன் பயணிகள் விமானம் (ஹாரிஸன் ஏர் கியூ-400) நின்று கொண்டு இருந்தது.

    அந்த விமானத்தின் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.

    ஆனால் திடீரென அந்த விமானத்தை அவர் திருடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓட்டிச் சென்றார். ஊழியர், விமானத்தை ஓட்டிச் சென்றது அந்த விமான நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை இரண்டு ‘எப்-15’ போர் விமானங்கள் பின்னாலே துரத்திச் சென்றன. ஆனால் அந்த விமானம், கெட்ரான் தீவில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ஊழியர் பலி ஆனார்.

    அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து சியாட்டில் விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த விமான நிலையம் வழக்கம் போல இயங்க தொடங்கி விட்டது.


    திருடிய விமானத்தை ஊழியர் வானில் ஓட்டிச் சென்றதையும், விமான நிலையத்தை மூடியதால் பயணிகள் முனைய ஓய்வறையில் காத்திருந்ததையும் படத்தில் காணலாம்


    இதுபற்றி விமான நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஒரு ஊழியர், பயணிகள் யாரும் இல்லாத விமானத்தை உரிய அங்கீகாரம் இன்றி எடுத்துச் சென்று விட்டார். அந்த விமானம், விபத்துக்கு உள்ளாகி விட்டது. தற்போது சியாட்டில் விமான நிலையத்தில் விமான சேவைகள் வழக்கம் போல நடைபெறுகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் பற்றி பியர்ஸ் கவுண்டி ஷெரீப் பால் பாஸ்டர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் பயங்கரவாத சம்பவம் அல்ல. விமானத்தை ஓட்டிச் சென்றவர் 29 வயதான உள்ளூர் நபர் ஆவார். அவர் முட்டாள்தனமாக அந்த விமானத்தை ஓட்டிச்சென்று பயங்கரமான முடிவை சந்தித்து உள்ளார். அந்த விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் முயற்சி எடுத்தனர்” என கூறினார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை அந்த நபர் ஓட்டிச் சென்றதையும், அதை போர் விமானங்கள் துரத்திச் சென்றதையும் பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அது வைரலானது.

    இந்த சம்பவம் நடந்ததின் பின்னணி என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற நபர், “என்னை கவனித்து பார்த்துக் கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் செய்த இந்த காரியம், அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்” என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விமானத்தை ஓட்டிச் சென்ற நபர் விமான ஊழியர் என்றும், விமானி என்றும் மெக்கானிக் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Stolenplanecrashes #SeattleAirport 
    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையில் தகராறு செய்து, ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இதில் புகாருக்கு ஆளான தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். #DMK #ChennaiHotel #Attack
    பூந்தமல்லி:

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.

    அவரோ, “நேரம் ஆகிவிட்டதால் உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் “நான் லோக்கல் ஆளு எனக்கே பிரியாணி இல்லையா?” என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார்.



    அப்போது கடை ஊழியர்கள் 2 பேர், “ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் புடை சூழ தனக்கே உரிய ‘பாக்சிங்’ (குத்துச்சண்டை) பாணியில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.

    இதில் பிரகாசின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை தடுக்க வந்த ஊழியர்களையும் அவரது ஆதரவாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களில் ஒருவரை கடைக்கு வெளியே இழுத்து சென்றும், மற்றொரு ஊழியரை கடைக்குள்ளும் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறி கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம், கடையில் பொருத்தப்பட்டு உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) பதிவாகி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ், கருணாநிதி (33), நாகராஜ் (55) ஆகிய 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் பாக்சர் யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பாக்சர் யுவராஜ் தாக்குதல் நடத்திய பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்று, விழாக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறபோது, தான் உள்ளூர்காரர் என்பதால் கேட்கிற விலைக்கு பிரியாணி தர வேண்டும் என்றும், நண்பர்களுடன் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிடுவார் என்றும், கடைக்கு முன்னால் தனது காரை நிறுத்தி இடையூறு செய்து வந்து உள்ளார் என்றும், இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகரன் ஆகியோர் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையுடன் தி.மு.க. தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    அரியானா மாநிலம் குர்கானில் வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    குர்கான்:

    அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் தயாசந்த். இவர் வேலைக்கு சரிவர வராமலும், வேலையிலும் அலட்சியமாக நடந்து கொண்டதால் இவர் மீது புகார் வந்தது.

    அந்த கார் நிறுவனத்தின் மேலதிகாரியாக எச்.ஆர். எனப்படும் மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் தினேஷ் சர்மா. இதையடுத்து, தயாசந்த்தை பணியில் இருந்து நீக்கினார் தினேஷ் சர்மா. இதனால் அவர்மீது ஆத்திரம் கொண்டார்.

    இந்நிலையில், தினேஷ் சர்மா நேற்று காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது கூட்டாளிகள் சிலருடன் தயாசந்த் பைக்கில் பின்தொடந்து வந்தார்.

    ஆளில்லா இடத்தில் காரை தடுத்து நிறுத்திய தயாசந்த் துப்பாக்கியால் தினேஷ் சர்மாவை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தினேஷ் சர்மாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ஸ்ரீவைகுண்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (வயது 38). மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பேச்சிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஸ்ரீவைகுண்டம்–நெல்லை மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய அலுவலகத்தில் பேச்சிமுத்து துப்புரவு வேலை செய்து வந்ததாகவும், அவரை அவ்வப்போது ஒயர்மேன் வேலைக்கும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதால் தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும், எனவே அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி தமிழர் பேரவை அருந்ததியர் அரசு மாநில அமைப்பு செயலாளர் முருகேசன், தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் பேச்சிமுத்துவின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் கமலம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மாலையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு, ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பலவேசம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் பேச்சிமுத்துவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    ×