search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123089"

    கோவில்பட்டி மகேசுவரர் சமேத மாலையம்மன் கோவிலில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சதுஷ்டி மகா பைரவ சம்மேளன மகாயஞ்ய பெருவிழா நடைபெற்றது.
    கோவில்பட்டி மகேசுவரர் சமேத மாலையம்மன் கோவிலில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சதுஷ்டி மகா பைரவ சம்மேளன மகாயஞ்ய பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், 64 பைரவர் கலச பூஜை ஆகியவை நடந்தது.தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு ஏகாதச ருத்ரஜெபம், மகா ஹோமம், அபிஷேகம், பூர்ணாகுதி, வாஸோதாரா ஹோமம் ஆகியவை நடந்தது.

    பின்னர் அலங்காரம் புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. பூஜைகளை பால சுப்பிரமணியன், நாராயண சர்மா மற்றும் குழுவினர் நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி விழா குழுவினர் சங்கர், வெங்கட்ஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிகுமார், முன்னாள் தலைவர் காளியப்பன், பள்ளி செயலாளர் வெங்கடேஷ், சங்க துணை செயலாளர்கள் மணிமாறன், வேல்முருகன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், தங்கமாரியப்பன், முத்துராஜ், குன்னிமலைராஜா, பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜை யுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், யாகசாலை பூஜையில் கணபதி, திருஷ்டி துர்கா சூலினி, துர்கா ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

    நிகழ்ச்சியில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, செயலாளர் சுப்பையா, தலைமை ஆசிரியை கல்பனஸ்ரீனிவாசன், மகேந்திரா, தொழிலாதிபர் அமுதா ஜெய்சங்கர், கோமதி பாலமுருகன், பிரேமா முருகன் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை தேவகி ரவி நாராயணன், சீதா எட்டப்பன், லதா மூனிஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
    தை அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    ராமேசுவரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவது வழக்கம். தைஅமாவாசையொட்டி நேற்று கார், வேன், பஸ் போன்றவற்றின் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தை அமாவாசையையொட்டி ராமர் தங்க கருட வாகனத்திலும், சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அதன் பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலின் உட்புறத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து சாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நாள் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.

    சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் குமரேசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
    பூஜை அறை நல்ல சரியான இடத்தில் அமைய வேண்டியது மிக அவசியம். எவ்வளவு நேரம் பூஜை செய்கிறோம் என்பதை விட எங்கு பூஜை செய்கிறோம் என்பதும் அவசியம்.
    நம் முன்னோர்கள் காலத்தில் மலை, கடல் ஆகிய பகுதிகளில் கோவில்கள் ஏன் அமைந்தன என்று ஆராய்ச்சி செய்தபோது அப்பகுதிகள் சிறப்பான வீர்யம் மிக்க ஆற்றல் மிகுந்தவை என்பது புலப்பட்டது. அதனாலேயே முன்னோர்கள் அப்பகுதிகளில் தங்கி ஆன்மிக மையங்களை அமைத்துள்ளனர்.

    பூஜை அறை என்பது கடவுளிடம் ஆசீர்வாதம் வாங்கும் இடம் என்பதால் நல்ல இடத்தில் இருப்பதால் மட்டுமே இது சாத்தியம். கோயில்களில் யாக கூடம் கும்பாபிஷேக சமயத்தில் ஈசான்யத்தில் மட்டுமே அமைப்பார்கள். ஏனெனில் பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக தான் சாய்ந்துள்ளது. எனவே வெளியிலிருந்து, அண்டவெளியிலிருந்து வரும் சக்தி பிரவாகம் சாய்மானமாக உள்ள ஈசான்யம் என்றும் வடகிழக்கிலிருந்து தான் பூமியின் அல்லது அறையின் ஒரு பகுதியின் உள்ளே நுழைய முடியும். எனவேதான் ஈசான்யம் இறைவனின் உறைவிடம் ஆகும்.

    எனவே வடகிழக்கு மட்டுமே இறையருள் மிளிரும் பகுதி என்பதை உணர வேண்டும். எனினும் ஈசான்யத்தை வடக்கு கிழக்கில் முழுமையாக அடைபடாமல் இருக்குமாறும் அமைப்பதே சிறந்தது. பூஜை அறையின் மேற்கூரை, மற்ற அறைகளை விட சற்று தாழ்வாக இருப்பது சிறந்தது.

    வட கிழக்கின் வடக்கு பகுதி செல்வ குவியலின் ஆதாரம். இதே இடத்தில் கிழக்கு பகுதி அறிவு களஞ்சியமாகும். பூஜை அறை மீது சூரியக் கிரணங்கள் தாராளமாக படுமானால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இப்படி அமைந்த பகுதியில் மேற்கு/தெற்கு சுவரை ஒட்டி கடவுள் படங்களை/சிலைகளை அமைக்க வேண்டும்.

    பூஜை அறைக்கு அருகில் குளியலறை அமைக்க கூடாது. பூஜை அறையில் குல தெய்வத்தை பிரதானமாக மையமாக அமைக்கலாம். தற்போது படங்கள் விற்பனையில் கடவுள்கள் இடம் மாற்றி வைத்துள்ளனர். எனவே கிழக்கு நோக்கியவாறு உள்ள கடவுளின் இருப்பிடம் கீழ்க்கண்டவாறு அமைக்கவேண்டும்.

    அதாவது, தென் மேற்கில் விநாயகர், அதையடுத்து கல்விக்கடவுள் சரஸ்வதி அல்லது ஹயக்ரீவர், அதையடுத்து குல தெய்வம், அதையடுத்து லக்ஷ்மி, ஒட்டியவாறு பாலாஜி, கடைசியாக முருகன் இடம் பெற வேண்டும். இப்படித்தான் கோயில்களில் கடவுள் சந்நதிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

    ஒரு அறையில் ஒரே கடவுள் பல உருவங்களில் இடம் பெறுவதுண்டு. இது சரியல்ல. ஆனாலும் பலர் வீடுகளில் விநாயகர் மையத்திலும் அதற்கு வலபுறம் லக்ஷ்மியும் இடம் பெற்றிருக்கும். இது தவறு. ஒரு கடவுளை மறைத்து மற்றொரு கடவுளை வைப்பதால் அதன் அருள் தடைபட்டு, ஆக்ரோஷமே மிஞ்சும். ஒன்றை ஒன்று மறைக்காத வண்ணமே அமைக்க வேண்டும்.

    தினசரி நாம் உணவு உண்ணுவது போலவே கடவுளுக்கும் உணவு படைப்பது அவசியம். சமைத்த உணவு இயலாத நிலையில், பால், கடலை, தேங்காய், அவல், வெல்லம், அரிசி போன்றவற்றைப் படைக்கலாம். ஆனால், மறுவேளைக்கு அல்லது மறு நாளைக்கு இவற்றை எடுத்து நம் உணவுடன் சேர்ப்பது நைவேத்தியமாகவும் அமையும்.

    தீபம் ஏற்றும் போது ஒற்றையாக ஏற்றாமல் (துயர நேரத்தில் மட்டுமே ஏக தீபம் சரி), இரண்டு அல்லது அதற்கு மேலாக ஏற்றுவது நல்லது. இரட்டை தீபங்கள் சூரிய சந்திரனை குறிப்பதால் அவை நம் வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கி வாழ்வை பிரகாசிக்க செய்யும்.

    கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணன் செய்த அற்புதத்தை பார்க்கலாம்.
    பாண்டவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். அப்போது அவர்களில் பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

    அதை அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்கவும் செய்தனர். ‘பரந்தாமா! இன்னும் சில காலத்தில் துவார யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளது. அந்த கலியுகம் எப்படி இருக்கும்?’ என்று கேட்டனர்.

    அதற்கு கிருஷ்ணர், ‘கலியுகம் பற்றி சொல்வது என்ன? அது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு நேரடியாகவே காட்டுகிறேன்’ என்றார்.

    பின்னர் நான்கு அம்புகளை எடுத்து, நான்கு திசைகளில் எய்தார். இப்போது நால்வரிடமும் திரும்பி, நீங்கள் நான்கு திசைக்கு ஒருவராக சென்று, அங்குள்ள அம்புகளைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார். அதன்படியே நால்வரும் திசைக்கு ஒருவராகச் சென்றனர்.

    முதலில் பீமன், தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்துக் கொண்டு திரும்பும் போது ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

    அடுத்து அர்ச்சுனன் தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்தான். அப்போது ஒரு குயிலின் அற்புதமான இசைக் குரலைக் கேட்டான். அந்த ஒலி வந்த திசையில் பார்த்தபோது திடுக்கிட்டான். அங்கு இனிய குரல் கொண்ட குயில், ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. ‘மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய குணமா?’ என்ற குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

    அடுத்தது சகாதேவன். அவனும் கிருஷ்ணர் எய்த ஒரு அம்பை எடுத்தபடி திரும்புகையில் ஒரு காட்சியைக் கண்டான். பசு ஒன்று அழகிய கன்றை ஈன்றெடுத்தது. தன் நாவால் கன்றை வருடி சுத்தம் செய்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் நாவால் வருடுவதை, தாய் பசு நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அப்போது கன்றின் உடலில் காயங்கள் உண்டாகியிருந்தது. ‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?’ என்ற குழப்பத்தோடு சகாதேவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

    இறுதியாக நகுலன் தனக்கான அம்பை எடுப்பதற்காகச் சென்றான். அந்த அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் கிடந்ததைக் கண்டான். அதை எடுக்க முன்னேறியபோது, மலையின் மீது இருந்து ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு கீழே வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து உடைத்து தள்ளி விட்டு அது வேகம் பிடித்து வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய செடியில் மோதி அந்தப் பாறை நின்று விட்டது. நகுலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ‘சிறிய செடி எப்படி இந்த பாறையைத் தாங்கி நிறுத்தியது?’ என்ற குழப்பத்தோடு கிருஷ்ணரிடம் வந்தான்.

    இப்போது பாண்டவர்களில் நான்கு பேரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சிகளையும், அவற்றால் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கூறினார்கள். அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.

    அனைத்தும் அறிந்த கிருஷ்ண பகவான், மெல்லிய சிரிப்போடு அவர்கள் நான்கு பேரும் கண்ட காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.

    முதலில் பீமனிடம் இருந்து தொடங்கினார். ‘பீமா! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் உள்ள செல்வம் அபரிமிதமாக இருந்தாலும் கூட, அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். நீ கண்ட கிணறுகளைப் போல. ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாக மாறிக் கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.’

    அடுத்தது அர்ச்சுனன் கண்ட காட்சிக்கான விளக்கத்தைக் கூறினார். ‘அர்ச்சுனா! கலியுகத்தில் போலி மத குருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் நீ கண்ட குயிலைப் போல, இவர்கள் மக்களை ஏமாற்றி, சுரண்டி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.’

    இப்போது சகாதேவனுக்கான விளக்கத்தை கூறினார் கிருஷ்ணர், ‘சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால், அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். நீ கண்ட பசு- கன்றைப் போல, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்.’

    இறுதியாக நகுலனுக்கான விளக்கம். ‘நகுலா! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தில் இருந்தும், நற்குணத்தில் இருந்தும் விலகுவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை, பாறையை நிறுத்திய சிறிய செடியைப் போல, இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.’

    கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணனை, நான்கு பேரும் வணங்கி நின்றனர்.
    ராமேசுவரம் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கிணறுகள் பூஜைகளுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வந்தன. பக்தர்கள் புனித நீராடினர்.
    அகில இந்திய புண்ணியதலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலுக்குள் அமைந்துள்ள 1-வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தம் முதல் 6 தீர்த்தம் வரை மிகவும் குறுகலான பாதையில் அமைந்திருந்தன.

    இதையடுத்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். குறுகலான இடத்தில் அமைந்துள்ள 1 முதல் 6 தீர்த்தக்கிணறுகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோவிலின் 2-ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக 6 தீர்த்தக் கிணறுகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்தன.

    இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது தீர்த்தக் கிணறுகளை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடமாற்றம் செய்வது ஆகம விதிக்கு எதிரானது எனவே இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோவில் இணை ஆணையரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி அவர்களை சமரசம் செய்தார். இதையடுத்து இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்துசென்றனர்.

    அதனை தொடர்ந்து நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிச்சை குருக்கள் தலைமையில் கோவில் குருக்கள் 5 பேர் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு வந்து அதில் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவில் தக்கார் குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார், கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் அண்ணாதுரை, செல்லம், கண்ணன், கலைச்செல்வன், கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்த புதிய தீர்த்தக்கிணறுகளில் பக்தர்கள் நீராடலாம் எனவும், யாத்திரை பணியாளர்கள் இவற்றில் இருந்து நீர் இரைத்து பக்தர்கள் மீது ஊற்றலாம் என்றும் இணை ஆணையர் மங்கையற்கரசி தெரிவித்தார். மேலும் பழைய தீர்த்தக்கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன. ஆனால் இணை ஆணையர் தெரிவித்தும் யாத்திரை பணியாளர்கள் புதிய தீர்த்தக் கிணறுகளில் நின்று தண்ணீர் ஊற்றமாட்டோம் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் இணை ஆணையர் தலைமையில் யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சங்க தலைவர் பாஸ்கரன், கோவிலில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் எழுத்துபூர்வமாக எங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு யாத்திரை பணியாளர்கள் சங்கத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதில்லை. புதிய தீர்த்தக் கிணறுகள் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கும் எங்களை அழைக்கவில்லை.

    புதிய தீர்த்தக் கிணறுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், அதில் யாத்திரை பணியாளர்கள் தீர்த்தம் எடுத்து பக்தர்களுக்கு ஊற்ற வேண்டும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் தான் யாத்திரை பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு இணை ஆணையர் இது ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இடநெருக்கடியை சமாளிக்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனால் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை புதிய தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராட வந்தும் யாத்திரை பணியாளர்கள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து இணை ஆணையர் யாத்திரை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து அந்த தீர்த்தக் கிணறுகளில் யாத்திரை பணியாளர்கள் நின்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். தற்போது மகாலட்சுமி தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தங்கள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    மிகவும் பழமையான ஆலயங்களில் சோடச உபசார பூஜைகள் மிகவும் விரிவாக, அழகாக நடத்தப்படுகிறது. அந்த பதினாறு வகை பூஜைகள் பின்வருமாறு.
    கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆகம விதிகளின்படி சோடச உபசார பூஜைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் இந்த பூஜை முறைகளை எளிமைப்படுத்தினார்.

    சில ஆலயங்களில் ஆவாகனம் முதல் புஷ்பதானம் வரை பத்து வித பூஜை மட்டும் செய்வார்கள். இதற்கு தச உபசாரம் என்று பெயர். சில இடங்களில் நீர்சாரம், ஜலீயோ உபசாரம், தைஜசோ உபகாரம், வாயவீயோ உபசாரம், நாதசோ உபசாரம், பஞ்ச உபசாரம் என்றெல்லாம் பூஜைகள் நடத்தப்படுவதுண்டு.  ஆனால் சோடச உபகார பூஜையே மிகவும் சிறப்புடையது. முழுமையானதும் கூட.

    இந்த பூஜைகளை தொடங்கும் முன்பு பூஜை செய்பவர் தன் உடம்பை சுத்தப்படுத்தும் ஆத்ம சுத்தி, கருவறையை சுத்தப்படுத்தும் ஸ்தான சுத்தி, பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தும் திரவிய சுத்தி, அந்தந்த மூர்த்திக்குரிய மூல மந்திரத்தை ஜெபிக்கும் மந்திர சுத்தி, விக்கிரகத்தை சுத்தப்படும் லிங்க சுத்தி ஆகியவற்றை செய்ய வேண்டும். அதன்பிறகே சோடச உபகார பூஜையைத் தொடங்க வேண்டும்.

    மிகவும் பழமையான ஆலயங்களில் சோடச உபசார பூஜைகள் மிகவும் விரிவாக, அழகாக நடத்தப்படுகிறது. அந்த பதினாறு வகை பூஜைகள் வருமாறு:-

    1. ஆவாகனம்: இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்ய வேண்டும்.

    2. ஸ்தாபனம்: இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திப்பது ஸ்தாபனம் ஆகும்.

    3. சன்னிதானம்: நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜைக்கு சன்னிதானம் என்று பெயர். இந்த பூஜையால் சிவத்தின் அருள் சுரந்து நம்மிடம் நிறைந்து நிற்கும்.

    4. சன்னி ரோதனம்: இறைவா என்னிடம் என்றும் கருணையோடு இருக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதற்கு சன்னிரோதனம் என்று பெயர்.

    5. அவகுண்டனம்: கருவறை மூலவர் விக்கிரகத்தை சுற்றி கவச மந்திரத்தால் மூன்று கவசம் உண்டாக்க வேண்டும். மூலவர் பூஜைக்கு தடைகள் வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரை ஆகிய முத்திரைகளை பூஜை செய்பவர்கள் செய்தல் வேண்டும்.

    6. அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, நெல்லி முள்ளி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தேனு முத்திரை காட்டப்படுதல் வேண்டும். கை விரல்களால் பசுவின் மடி நான்கு காம்போடு இருப்பது போல காட்டுவது தேனு முத்திரையாகும். அப்போது இறைவன் இவ்விடத்தில் அமர்ந்து எங்கள் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    7. பாத்தியம்: சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த 4 பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இட வேண்டும். ஆன்மாக்களாகிய நாம் சிவபதம் அடையவே இந்த பாத்தியம் கொடுக்கப்படுகிறது. அப்போது, நம என்பதோடு கூடிய இருதய மந்திரம் சொல்ல வேண்டும்.

    8. ஆச மனீயம்: ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைக்க வேண்டும். அப்போது சம்கிதா மந்திரம் சொல்ல வேண்டும். ஆன்மாக்கள் பரமாத்மாவின் முகத்தில் சேர்த்தல் என்ற பாவத்தில் இந்த பூஜை செய்யப்படுதல் வேண்டும்.

    9. அர்க்கியம்: எள், நெல், தர்ப்பை, நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, யவை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுக்க வேண்டும் மூல மந்திரத்துடன் ஸ்வாகா என்ற மந்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அபிஷேகம் ஆரம்பம் - முடிவு, நைவேத்தியம் ஆரம்பம் - முடிவு, தூபம் தீபம் ஆரம்பம் - முடிவு, பூஜைகள் ஆரம்பம் - முடிவு ஆகிய சமயங்களில் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

    10. புஷ்பதானம்: அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரிக்க வேண்டும். மலர் அலங்காரத்தில் கடவுளை ரசித்துப் பார்க்க வேண்டும். செண்பகம், அருகு, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிரகதி, அரளி, தும்பை ஆகிய 8 வகை பூக்களுடன் அட்சதை சேர்த்து மூல மந்திரத்துடன் வெளவுட் என்ற மந்திரம் உச்சரித்து மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். இது பேரின்ப வீட்டை அடைய செய்யும். சுவாமிக்கு பத்மாசனத்தில் ஆவாகனமும், ஆனந்த சயனத்தில் அபிஷேகமும், விமலாசனத்தில் அர்ச்சனையும், யோகாசனத்தில் நைவேத்தியமும், சிம்மாசனத்தில் வஸ்திர சமர்ப்பணமும் செய்ய வேண்டும்.
     
    11. தூபம்: கருவறை மூலவருக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபடுவதே தூபம் எனப்படும். இது நமது அஞ்ஞானத்தை கிரியா சக்தியால் அகற்றலாம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் ஆகியவை சிறந்த தூபப்பொருட்களாகும். தூபம் போட்டு இறைவனை வழிபட்டால் பாபம் விலகும் என்பது ஐதீகமாகும். தூபம் காட்டும் போது, ஹிருதய மந்திரத்துடன் ஸ்வாகா என்பதை கடைசியில் கொண்டதாக உச்சரிக்க வேண்டும். மூலவருக்கு தூபம் காட்டும் போது, அவர் மூக்குக்கு நேராக காட்ட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    12 தீபம்: சோடச உபசாரங்களில் தீபம் காட்டுவது என்பது மிக, மிக முக்கியமானது. சுமாமிக்கு தீபம் காட்டப்படும் போது வழிபட்டால் நம்மிடம் உள்ள ஆணவம் நீங்கி, ஞானம் பெற முடியும். தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. துணி, பஞ்சு இவைகளில் திரி செய்து தீபம் ஏற்றலாம். தீப வழிபாடு ஞான சக்தியை அதிகரிக்க செய்யும். மூலவருக்கு தீபம் காட்டும் போது கண்ணுக்கு நேரில் காட்ட வேண்டும். தீப முத்திரை காட்டிய பிறகு மணி அடித்து, மந்திரங்கள் சொல்லியபடி மூலவரின் கிரீடம் முதல் பாதம் வரை தீபம் காட்டப்படுதல் வேண்டும்.

    13. நைவேத்தியம்: சுத்த அன்னம், பாயசம், பொங்கல் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்க ஏற்றவையாகும். மனிதர்களின் சராசரி குணமாகிய ஆசை, கோபம், மோகம் போன்றவைகளை நாம் அன்னமாக வேக வைத்து இறைவனுக்கு சமர்ப்பிதையே இது காட்டுகிறது. இறைவனின் 5 முகங்களில் சத்யோஜாதம் முகத்துக்கு எள் அன்னம், வாமதேவத்துக்கு சர்க்கரை அன்னம், அகோரத்துக்கு பாயாசம், தத்புருஷத்துக்கு சுத்த அன்னம், ஈசானத்துக்கு பொங்கல் படைப்பது மிகவும் விசேஷமாகும். இது தவிர ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனுக்கு பிடித்த நைவேத்தியம் மாறுபடும். காய்கறி உணவு வகைகள், பாயாசம், வடை, இனிப்புகள் படைப்பது பொதுவானதாக உள்ளது. இறைவனுக்கு நாம் நைவேத்தியம் படைப்பதால் உலகில் சுபீட்சம் ஏற்படும்.

    14. பானீயம்: இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அது பானீயம் எனப்படும். இதனால் நமது மனதில் உள்ள இவ்வுலக பற்று நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    15. ஜெப சமர்ப்பணம்: இறைவனின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி, அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் செய்வதே ஜெப சமர்ப்பணம் என்றழைக்கப்படுகிறது. ஜெபம், பூஜை ஹோமம் ஆகிய எல்லா புண்ணியைச் செயல்களையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இறைவன் அதை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தருவார். பூஜை முறைகளில் நம்மையும் அறியாமல் ஏற்படும் குற்றம், குறைகளை நிவர்த்தி செய்ய இந்த ஜெப சமர்ப்பணம் உதவுகிறது. ருத்ராட்ச மணி கொண்டு மூல மந்திரம் சொல்லி சம்கிதா மந்திரத்தால் முறைப்படி கவசம் செய்து அர்க்கிய தண்ணீரை ஈசனின் வலக்கையில் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

    16. ஆரத்தி: மேள, தாளம் முழங்க, மணி அடித்து ஆரத்தி காட்டப்பட வேண்டும். ஆரத்திக்கான தீபத்தில் பூ போட்டு பார்த்தல், தண்ணீர் தெளித்தல், தட்டுதல், மந்திரம் சொல்லி சுற்றுதல் என்ற 4 வகைகளை செய்தல் வேண்டும். இறைவனுக்கு தீபம் காட்டும் போது முகம், கண், மூக்கு, கழுத்து, மார்பு, கால்கள் என வரிசையாக 3 தடவை சுற்றி காட்டுதல் வேண்டும். தீபத்தில் 16 வகை உள்ளது. பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் காக்கவே மூன்று தடவை தீபாரதனை காட்டப்படுகிறது.

    இப்படி 16 வகை உபசாரங்கள் ஆகமங்களில் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆலயங்களிலும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் என்ற அடிப்படையில் 6 வகையான உபச்சாரங்களே செய்யப்படுகின்றன. 
    ராமேசுவரம் கோவில் புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை பூஜைகள் நடந்தன. நாளை முதல் இந்த தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது நம் பிக்கை.

    இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் 22 புனித தீர்த்த கிணறுகள் உள்ளன. இங்கு நீராடினால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து திரளான பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த புனித தீர்த்தங்களில் 6 தீர்த்த கிணறுகள் மிகவும் குறுகலான பாதையில் இருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலருக்கு காயமும் ஏற் பட்டது.

    இதையடுத்து நெருக்கடியான இடத்தில் உள்ள 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சவுகரியமான இடத்தில் 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்ற உத்தரவிட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலின் வடக்கு பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கிணறு தோண்டும் பணி நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

    புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த கிணறுகளுக்கு மகாலட்சுமி, சரஸ்வதி, கங்கா, யமுனா, சங்கு, சக்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

    புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை கோவிலில் கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்பாள்-சுவாமி புனித தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை (28-ந்தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் பக்தர்கள் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலை மீது சுனையில் மூழ்கியிருந்த சிவலிங்கத்திற்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு பூஜையும், வழிபாடும் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் இரு வேறு மலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குகை ஓவியம், சமணர் படுக்கைகள் உள்ளன. இவ்விரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள மலையில் சுனை ஒன்று உள்ளது. இது நாவல்சுனை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கிய நிலையிலேயே இருக்கும்.

    மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும்.

    இந்த நிலையில் சித்தன்ன வாசல் கிராமத்தினர் சார்பில் சுனையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி முற்றிலுமாக சுத்தம் செய்யப்பட்டது.

    நாவல்சுனையில் அமைந்துள்ள குகை போன்ற பகுதியையும், அதனுள் அமைந்துள்ள சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

    பின்னர், நேற்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சிவலிங்கம் மறைந்தது. கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு சிவலிங்கத்தை காண ஏராளமானோர் குவிந்து தரிசித்தனர். அப்போது, சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடினர்.

    இது குறித்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் அமைப்பின் செயலாளர் எடிசன் கூறுகையில், எங்கள் அமைப்பின் சார்பில் மரபு நடைபயணம் மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுனையில் சிவலிங்கம் மூழ்கி இருப்பதை ஊர் மக்களிடம் தெரிவித்தோம். அதன் பிறகு, ஊரார் சார்பில் சுனையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது என்றார்.

    இது குறித்து சித்தன்னவா சலை சேர்ந்த பூஜகர் சின்னத் தம்பி கூறுகையில், கடந்த 1992-க்கு பிறகு தற்போது தான் சுனையில் இருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரு நாட்களாக இந்தப் பணி நடைபெற்றது.

    நேற்று சுமார் 15 நிமிடம் மட்டும் பக்தர்கள் சிவலிங்கத்தை வழிபட்டனர். அதன் பிறகு மழை பெய்து படிப்படியாக சிவலிங்கம் மறைந்து விட்டது. தண்ணீர் மூழ்கியே இருப்பதுதான் இதன் சிறப்பாகும். இதன் பிறகு மழை பொழியும். விவசாயம் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
    ஆனி அமாவாசையையொட்டி காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. ஆனி அமாவாசையையொட்டி நேற்று ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு ஐம்பொன்னால் ஆன 20 சித்தர் சிலைகளுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

    மேலும் 108 லட்சுமி ஸ்தாபிதமும், 5 லட்சுமி சிலைகளை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை ஆசிரமத்தின் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர். 
    நாம் பூஜை செய்யும் நேரம் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். எந்த நேரத்தில் செய்யும் பூஜைக்கு எந்த பூக்களை பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
    நாம் பூஜை செய்யும் நேரம் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

    1. விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள்
    கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப்பூக்கள்.

    2. பகற்கால பூஜைக்குரிய பூக்கள்
    செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப்பூக்கள்.

    3. யாம காலப்பூஜைக்குரிய பூக்கள்
    மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப்பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நிறப்பூக்கள் பூஜைக்கு மிக உத்தமம்.
    அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
    வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம் ஏற்றவேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும்.

    அந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
    ×