search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வீச்சு"

    ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம ஆசாமிகள் சிலர் கற்களை வீசி எறிந்ததால் ரெயிலின் முகப்பு பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. #VandeBharatExpress
    புதுடெல்லி:

    சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்த நாட்டின் முதல் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை, கடந்த 15-ந்தேதி டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி-வாரணாசி இடையே தனது முதல் வர்த்தக பயணத்தை கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் அந்த ரெயிலின் மீது கற்களை வீசி எறிந்தனர். இதில் ரெயிலின் முகப்பு பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.

    அதேபோல் பயணிகள் பெட்டிகள் சிலவற்றின் ஜன்னல் கண்ணாடியும் சேதம் அடைந்தது. இந்த கல்வீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இப்படி கல் வீசப்படுவது இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    புதுவையில் தமிழக அரசு பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. #Bharatbandh
    புதுச்சேரி:

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

    புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Bharatbandh

    உத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர்.

    பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



    தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது.

    நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல், காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் பத்வால் கிராமத்தில் 8 பசுக்கள் மற்றும் எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற ஒரு சரக்கு லாரியை ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்தியது.

    லாரியில் இருந்த கால்நடைகளை கீழே இறக்கியது. பின்னர், அந்த லாரிக்கு அக்கும்பல் தீவைத்தது. லாரி டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர், அந்த கும்பல், பசு கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

    இதற்கிடையே, பக்கத்து மாவட்டமான சம்பாவில், பசு கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 16 கால்நடைகளை மீட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாகனத்தில் இருந்து 3 கால்நடைகளை போலீசார் மீட்டனர். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots 
    நெல்லை அருகே கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 அரசு பஸ்கள் மீது நள்ளிரவில் கற்கள் வீசப்பட்டதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    களக்காடு:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் பேசிய போது, முதலமைச்சர் மற்றும் போலீசாரை தாக்கி பேசினார். மேலும் சாதி மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதால் அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கொலை முயற்சி, 2 சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்குநேரி, சீவலப்பேரி, தாழையூத்து, பனவடலி சத்திரம், கடையநல்லூர், நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமம், சுத்தமல்லி பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றியும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை அருகே நேற்று நள்ளிரவு 3 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் 2 பெண் பயணிகள் காயம் அடைந்தனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்து கொண்டி \ருந்தது. நள்ளிரவு 11 மணிக்கு அந்த பஸ் நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பகுதியில் வந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அந்த பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த பாளை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த சொர்ணக்கிளி என்பவரின் மனைவி பாலம்மாள் (வயது65) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதே போல் திசையன்விளையில் இருந்து நெல்லை நோக்கி நேற்றிரவு வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். நாங்குநேரி அருகே தட்டான் குளம் பகுதியில் பஸ் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்ததில், அதில் பயணம் செய்து வந்த நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி விஜயலட்சுமி (37) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து பஸ் டிரைவர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்வீச்சில் காயமடைந்த விஜயலட்சுமி, பாலம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற அரசு பஸ் மீது வள்ளியூர் அருகே கோவநேரி பகுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கிய போதும், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த 3 கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தம் சம்பவம் நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் என முன்னாள் ராணுவ வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான வாட்ஸ் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #StonePelters #BJPMPVats
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற மாநிலத்தை ஆளும் பிடிபி-பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்தது. சமீபத்தில்  உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் இதனை உறுதி செய்தார். குழந்தைகள் தவறுகள் செய்கிறார்கள், ஆனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வழக்குகளை வாபஸ் பெற உள்ளதாக ராஜ்நாத் கூறியிருந்தார்.

    அரசாங்கத்தின் இந்த முடிவினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரியும் பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான வாட்ஸ் கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ‘கல்வீச்சாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பான செய்தியை படித்தேன். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும்’ என வாட்ஸ் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. #StonePelters #BJPMPVats
    தூத்துகுடி மாவட்டத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் இன்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததை அடுத்து, இரவு பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது. இதன் காரணமாக குமரி கடலோர கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச் சாவடிகளிலும் இரவு-பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீசாரின் கண்காணிப்பையும் மீறி நேற்று இரவு நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கரியமாணிக்கபுரத்தை கடந்து ஆனைப்பாலம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதுபற்றி பஸ் டிரைவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்றுப்பஸ்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல நள்ளிரவு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கரியமாணிக்கபுரம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பஸ்கள் மீது கல்வீசப்பட்டதன் எதிரொலியாக கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    மேலும் நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
    ஜம்மு காஷ்மீரில் ராணுவம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 சிறுமிகள் காயம் அடைந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மீது காவல்துறையும் ராணுவமும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சிலும் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர்.

    இந்நிலையில், ரம்ஜான் மாதம் பிறந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் இப்தார் விருந்து நடத்தப்படுகிறது. அவ்வகையில் சோபியான் மாவட்டம் தார்தி காலி போரா கிராமத்தில் உள்ள மசூதியின் அருகில் நேற்று இரவு  ராணுவம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசூதியில் தொழுகை முடிந்து திரும்பியவர்கள், ராணுவத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், ராணுவத்தின் இப்தார் விருந்திற்கு எதிராக  போராட்டம் நடத்த அனைவரும் திரண்டு வரும்படி மசூதியில் இருந்து அழைப்பு விடுத்தனர்.

    இதனையடுத்து அங்கு ஏராளமான மக்கள் அங்கு ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்களில் சிலர் ராணுவத்தினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இப்தார் விருந்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    எனவே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
     
    ×