search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 124470"

    • தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விமானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    கோவை:

    சமீபத்தில் விமான பயணத்தின் போது பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்துகொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விமானிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கோவை வந்தபோது கூறியதாவது:-

    சமீபத்தில் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தது, பணிப்பெண்களை கேலி செய்தது உள்ளிட்ட அநாகரீக செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுயஒழுக்கம், சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை மதித்து நடக்கும் மனிதநேயம் உள்ளிட்ட அடிப்படை நற்பண்புகளை பயணிகள் கடைபிடிப்பது அவசியம்.

    விமானத்துறையில் எனது 19 ஆண்டு அனுபவத்தில், 18 ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கி உள்ளேன். பயணிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. பெரும்பாலும் புகார்கள் அளிக்கப்படுவதில்லை.

    கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் சர்வதேச விமானங்களில் பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அளவுக்கு அதிகமாக மது அருந்தி பயணிப்பது, சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் சண்டை போடுவது உள்ளிட்டவை தொடர் கதையாகி வருகிறது.

    இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்டங்கள் உள்ளபோதும் அதை அமல்படுத்துவது யார் என்பதில் விமான நிறுவனம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் அலட்சியம் காட்டுகின்றனர்.

    விமான பணிப்பெண்கள், பயணிகளின் வீட்டில் வேலை செய்பவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க அரசுதுறைகள் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் பயணிகள் மனநிலை மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான பயணத்தின் போது குடிபோதையில் இருந்த 2 பயணிகள் கைதாகி உள்ளனர்.
    • குடிபோதையில் இருந்த 2 பேரும் விமானத்தில் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபடவில்லை என்று விமானி தெரிவித்தார்.

    பாட்னா:

    ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தின் போது பெண் பயணி மீது மது அருந்திய மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அவர் கைதாகி இருந்தார்.

    இந்த நிலையில் விமான பயணத்தின் போது குடிபோதையில் இருந்த 2 பயணிகள் கைதாகி உள்ளனர். டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு நேற்று இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேர் மது அருந்தி இருந்தனர்.

    விமான பயணத்தின் போது இது தெரியவந்தது. மேலும் அவர்கள் 80 நிமிட விமான பயணத்தின் போது தொடர்ந்து மது அருந்த முயன்றனர்.

    இது தொடர்பாக பாட்னா விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டறைக்கு விமானிகள் முறைப்படி தகவல் தெரிவித்தனர்.

    பாட்னா விமான நிலையம் வந்தடைந்ததும் குடிபோதையில் இருந்த 2 இன்டிகோ பயணிகளையும் போலீசார் கைது செய்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) உதவியுடன் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    குடிபோதையில் இருந்த 2 பேரும் விமானத்தில் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபடவில்லை என்று விமானி தெரிவித்தார். அதே நேரத்தில் மது அருந்தி விட்டு பயணம் செய்ததற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    விமான பயணத்தின் போது அவர்கள் பீர் கேன்களுடன் வந்து இருந்தனர். இதனால் சி.ஐ.எஸ்.எப். பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (வயது 34) என்பவர் குடிபோதையில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை டெல்லி தனிப்படை போலீ சார் கைது செய்தனர். அவரை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    சங்கர் மிஸ்ரா சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர். அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது.

    மதுரை

    மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது.

    மதுரை விமான நிலை யத்தில் 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது.

    இங்கு 3 சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், மதுரை விமான நிலையம் அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது. கோவை, ஷீரடி, விஜய வாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாளுகின்றன.

    அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை விமான நிலையம் மட்டும் இன்னும் சுங்க விமான நிலையமாகவே உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

    மத்திய அரசு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பயணியர் சேவை உதவியாளர்களாக, மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்த உள்ளது. இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் மதுரை-மலேசியா வழித்தடத்தில் நேரடி விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க உள்ளது. இது வியாபாரிகள் மற்றும் விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக மதுரை வருகின்றனர். சர்வதேச அந்தஸ்து கிடைத்தால் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் எளிதில் மதுரைக்கு வர முடியும்.

    வேளாண் விளை பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிட்டும். பிற நாடு களுடனான விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமான நிலையம் ஒரு ''பாயின்ட் ஆப் கால்'' ஆக சேர்க்கப்பட வேண்டும்.

    சர்வதேசவிமான பயணத்தில் தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை விமான நிலையம் திகழ்கிறது. மலேசியா, சிங்கப்பூர், குவைத், இதர ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்த்து, பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன்..?
    • நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார்.

    அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு சம்பவத்தன்று ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் பிசினஸ் வகுப்பில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சங்கர் மிஸ்ரா இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென சிறுநீர் கழித்தார்.

    இதனால் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரின் உடை மற்றும் அவரது பையில் சிறுநீர்பட்டு நனைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.

    ஆனால் அவர்கள் பெண் பயணியை தொட மறுத்தனர். அவரது காலணி மற்றும் பை மீது கிருமி நாசினி தெளித்தனர்.மேலும் பைஜாமா மற்றும் கையுறையும் கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனக்கு இருக்கையை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் வேறு இருக்கை இல்லை எனக்கூறி அவருக்கு மாற்று இருக்கை கொடுக்க விமான பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

    விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் பயணி தன் மீது சிறுநீர் கழித்த தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிறிது நேரம் கழித்ததும் அந்த பெண், தொழில் அதிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார். இதனால் இருவரும் சமாதானமாகி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பவம் நடந்த அன்று சங்கர் மிஸ்ராவிடம் நடந்த விவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அந்த சமயம் அங்கு இருந்த பெண் பயணியை பார்த்த அவருக்கு கண்களில் இருந்து பொலபொல வென கண்ணீர் வடிந்தது. நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடுங்கள் என அவர் அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறினார்.

    நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார். ஆனாலும் என்னை பற்றி கேள்விபட்டால் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

    அதனால் தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். அந்த பெண் அவர் மீது மேலும் குற்றம் சுமத்தினால் கடினமாக இருக்கும் என நினைத்து நடந்ததை கெட்ட கனவாக எண்ணி புகார் கொடுக்காமால் சமாதான மாக சென்று விட்டார். இதனால் தொழில் அதிபர் தண்டணையில் இருந்து தப்பிவிட்டார்.

    • சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.
    • குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.

    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து பயணிகள் விமானம், தினமும் இரவு 11:05 மணிக்கு புறப்பட்டு, காலை 6:55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது சரி செய்யப்பட்டு தாமதமாக, நள்ளிரவு 11:51 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.

    இதனால் குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். குவைத் விமானம் தாமதமாக வரும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் எப்போது வரும் என்ற முறையான தகவல் எதுவும், விமான நிலையத்தில் அறிவிக்கவில்லை என்று பயணிகளை வரவேற்க வந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

    • பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.
    • ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    ஆலந்தூர்:

    சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.

    மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதேபோல் மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், 2 பெங்களூர் விமானங்கள் கொல்கத்தா, கோவை, ஐதராபாத் ஆகிய 7 விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு தாமதமாக தரையிறங்கின.

    அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், செயின் டென்னிஸ், கொல்கத்தா, புனே, பெங்களூர் ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மொத்தம் 14 விமானங்கள் வருவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    • தமாரா கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.
    • தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்டர்டாம் :

    ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தமாரா என்கிற கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.

    இந்தநிலையில் விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரை நெருங்கி கொண்டிருந்தபோது தமாராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியில் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியானோ என்கிற பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார். அதேபோல் விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 டாக்டர்கள் மற்றும் ஒரு நர்சும் உதவிக்கு சென்றனர்.

    தனக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா பரிதவித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமானதையே அறியாமல் குழந்தை பெற்றெடுத்ததை எண்ணி தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

    தமாரா குழந்தை பெற்றெடுத்த விஷயம் அறிந்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே பிரசவத்தின்போது தனக்கு பெரிதும் உதவிய சக பயணியான மாக்சிமிலியானோவின் பெயரை தனது குழந்தைக்கு தமாரா சூட்டினார்.

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • விமான நிலைய ஊழியர்கள் அந்த விமானத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
    • அரண்மனையை போல் அனைத்து சொகுசு வசதிகளும் அந்த விமானத்தில் உள்ளன.

    பெங்களூரு :

    உலகின் மிகப்பெரிய வணிக ரீதியிலான பயணிகள் விமானம் இ.கே.562 வகையை சேர்ந்தது. இது எமிரெட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ380 ஆகும். இது இரண்டு அடுக்கு வசதியை கொண்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. அரண்மனையை போல் அனைத்து சொகுசு வசதிகளும் அந்த விமானத்தில் உள்ளன. அந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெங்களூருவுக்கு வருகிற 30-ந் தேதி முதல் அந்த விமான போக்குவரத்தை தொடங்க முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே, அந்த விமானத்தின் சேவை 14-ந் தேதி (நேற்று) முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி அந்த மிகப்பெரிய விமானம் துபாய்-பெங்களூரு இடையே போக்குவரத்தை தொடங்கியுள்ளது. அந்த விமானம் முதல் முறையாக நேற்று துபாயில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த விமானத்தை கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பென்னா, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாக இயக்குனர் ஹரி மரார் மற்றும் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த விமானத்தில் 224 பயணிகள் பயணம் செய்து பெங்களூரு வந்தனர்.

    விமான நிலைய ஊழியர்கள் அந்த விமானத்தை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விமான போக்குவரத்து மூலம் பெரிய ரக விமானங்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் மீண்டும் மாலை 6.40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு துபாயை சென்றடைந்தது.

    இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 4 விமான நிலையங்களில் மட்டுமே ஏர்பஸ் ஏ380 ரக விமானங்களை கையாளும் திறன் உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் 3-வதாக தென்இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவுக்கு அந்த பெரிய விமானம் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விமானத்தில் எகானமி, பிசினஸ் மற்றும் முதல் வகுப்பு வசதி உள்ளது. எகானமி வகுப்பில் இருக்கைகள் அகலமாகவும், கால்கள் வைக்க விசாலமான வசதியும் உள்ளது.

    பிசினஸ் வகுப்பில் இருக்கைகள் தட்டையாக இருக்கிறது. முதல் வகுப்பில் தனி அறைகள், குளியல் அறைகள் போன்ற வசதிகள் உள்ளன. அந்த விமானம் தினமும் துபாயில் இருந்து 21.25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9.25) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

    மீண்டும் அதே நாள் அதிகாலையில் 4.30 மணிக்கு அந்த விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 7.10 மணிக்கு துபாய் சென்றடையும்.

    • ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.
    • கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.

    கோவை

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது.

    சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும்.மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து. கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும்.

    இதனால் கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.

    இதேபோல் கோவையில் இருந்து துபாய்,கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா செல்வோரும், தொழில்துறையினரும் பயன்பெறுவார்கள் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி செலுத்துவோரின் நலனுக்காக பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    அதன்படி விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. காவல் துறை சாா்பில் பரமக்குடி நகா் மற்றும் சுற்றுப்புறங்களில் 75 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொ ள்ளப்படும்.

    பரமக்குடி நகா் முழு வதும் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் கண்காணிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன் நினைவிடம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×