என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 125417"
தஞ்சாவூர்
தஞ்சையை அடுத்துள்ள ரவுசாபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புயல் நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் குண்டு குழியுமாக உள்ள மோசமான தார் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரவுசாபட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் இன்று காலை 10 மணியளவில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ரேசன், ஆதார் கார்டுகளை கைகளில் ஏந்தியப்படி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
கிராம மக்களின் மறியல் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியல் செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பெண்கள் கூறும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை.மேலும் தார் சாலையும் மோசமான நிலையில் உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேசன், ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு அகதிகளாக வெளியேறுவோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
இதை கேட்ட போலீசார் பொதுமக்களிடம் விரைவில் புயல் நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராம மக்களின் போராட்டத்தால் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #gajacyclone #relief
தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் மழைக்கு 63 பேர் பலியானார்கள். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை, பலா, வாழை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்து விழுந்தன.
ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் சேத விவரங்களை தெரிவித்தார். அப்போது தற்காலிக நிவாரண பணிக்கு ரூ.1,431 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.14 ஆயிரத்து 910 கோடியும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அன்று மாலையே மத்திய குழு சென்னை வந்து, புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடியும், 2-ம் கட்டமாக ரூ.353 கோடியும் வழங்கியது.
மத்திய குழுவினர் தாக்கல் செய்யும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.1,146 கோடியே 12 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
இது தமிழக அரசு கேட்டுக்கொண்ட நிதியில் வெறும் 7.64 சதவீதம் என்பதால் மத்திய அரசு மீது தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
ஏனென்றால் இந்த தொகையை வைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியாது என்று தமிழக அரசு கருதுகிறது.
ஏற்கனவே சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சீரமைக்கவே ரூ. 800 கோடிக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.
இடிந்து தரைமட்டமான வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான போதிய நிதி இல்லை. சாய்ந்து விழுந்த 8 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அதற்கும் நிதி இல்லை.
வாழை, பலா, முந்திரி நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நிதி கிடையாது. மத்திய அரசு தரும் நிதியை வைத்து ஓரளவு சமாளிக்கலாம் என அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு பதில் ரூ.1146 கோடியை ஒதுக்கியது தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புயல் சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர் சேத மதிப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்த நிலையிலும் மத்திய அரசு வெறும் ரூ.1,146 கோடியைதான் ஒதுக்கி உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கி விட்டது. இதில் இருந்து அரசு எப்படி மீளப் போகிறது என்று தெரியவில்லை என்று அந்த அதிகாரி ஆதங்கத்துடன் தெரிவித்தார். #GajaStorm #TNGovernment
பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘கஜா’ புயலால் ஒட்டுமொத்தமாக ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மிகவும் குறைவாக ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் தான் இழப்பீடு கோரியது. ஆனால் அதைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.1,146 கோடி மட்டும் வழங்கியது போதாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இது யானை பசிக்கு சோளப்பொரி போடுவதைப் போல உள்ளது.
‘கஜா’ புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 7.64 சதவீதம் மட்டும் தான். இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவி என்பது மிகக்குறைவாகவே உள்ளது. 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.13 ஆயிரத்து 731 கோடி நிதி கோரியது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1,940 கோடி மட்டுமே வழங்கியது. இது கேட்டதில் 15 சதவீதம் மட்டும் தான்.
2016-ம் ஆண்டு ‘வார்தா’ புயலுக்காக தமிழக அரசு ரூ.22 ஆயிரத்து 573 கோடி கோரியது. ஆனால் கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட 1 சதவீதம் மட்டுமே. 2017-ம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39 ஆயிரத்து 565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1,748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4 சதவீதம் மட்டும் தான். 2017-ம் ஆண்டு ‘ஒகி’ புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9 ஆயிரத்து 300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5 சதவீத நிவாரண உதவி மட்டுமே.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அவ்வாறு இருக்கும்போது அவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்தனர்? பரிந்துரை செய்த தொகையில் எத்தனை சதவீதத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது? என்பது தெரியவில்லை. ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம். எனவே மத்திய அரசு, தமிழக அரசு கோரியதைப் போன்று ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaStorm #AnbuManiRamadoss
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ., மெய்யநாதன் தலைமை தாங்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாரபட்சமாக நிவாரணம் வழங்கப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 7 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டு 40 நாட்களை கடந்தும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு நிவாரணம் வழங்கவில்லை.
இந்த நிலையில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாடி வீடு உட்பட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. 17,18-வது வார்டுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது மாடிவீடுகள், காலனி வீடுகளுக்கு பொருட்கள் கிடையாது என்று மக்களை வருவாய்த்துறையினர் திருப்பி அனுப்பினர்.
இதனால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 5மணிவரை நீடித்தது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. #gajacyclone #relief
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று விருதுநகர் வந்தார். அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #HIVBlood #PregnantWoman
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு இடம் கூட கிடைக்காத தமிழகத்திலிருந்து மோடி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை. பாதிப்புக்கு ஏற்ப நிவாரண உதவி வழங்க வில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு வருகிறார்.
இது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற மோடி செய்யும் தந்திரம் . ஆனால் அவரது தந்திரம் பலிக்க போவதில்லை. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு உதாரணம்.
பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் என்று தி.மு.க. முன் மொழிந்ததை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை.
ஆனால் தக்க தருணத்தில் எல்லா கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள். ஜி.எஸ்.டி வரி 100 பொருட்களுக்கு குறைக்கப்படும் என்று அருண்ஜெட்லி கூறினார். ஆனால் 23 பொருட்களுக்கு மட்டுமே குறைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதுவும் தேர்தலுக்கான ஏமாற்று வேலைதான்.
கம்ப்யூட்டர்களை கண்காணிக்கப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகத்தில் கொள்ளைபோன சிலைகளை மீட்பதற்காக கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல் மீது சட்டத்துறை அமைச்சர் சட்டத்துக்கு புறம்பாக புகார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
அந்த அதிகாரி வேண்டாம், அவர் சரியில்லை என்று கருதினால் அதுபற்றி அவர் கோர்ட்டில் தான் முறையிட்டு இருக்க வேண்டும். அமைச்சர் இவ்வாறு கூறியதன் மூலம், யாரோ அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்றே தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விசுவநாதன், கு.செல்வப் பெருந்தகை. மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன், சிவராஜ சேகர் மற்றும் பி.வி.தமிழ் செல்வன், இமயாகக்கன், கராத்தே ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #pmmodi
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.
தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது.
தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும்.
மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு தினகரன் கூறி உள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). விவசாயியான இவர் 200 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலின் போது 125-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.
இதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டும், தினந்தோறும் ஆடுகள் உயிரிழந்து வந்தன. தற்போது சுமார் 50 ஆடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
எஞ்சிய ஆடுகளுக்கும் ரத்த சோகை மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தினமும் கால்நடை மருத்துவர் மூலம் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கும், சத்தான தீவனம் வாங்கி கொடுக்கவும், தினமும் அதிகமான தொகை செலவிடப்பட்டதால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிரமப்பட்டு வந்தார்.
மேலும் இறந்த ஆடுகளுக்கான நிவாரண தொகையை அரசு உடனே வழங்க வேண்டுமென வருவாய்த் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை ராஜேந்திரன் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஆடுகளுக்கான நிவாரணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆடுகள் உயிரிழந்ததால் மிகவும் சோகத்துடன் இருந்து வந்த ராஜேந்திரன் நேற்று திடீரென மாரடைப்பால் மரண மடைந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, செம்மறி ஆடுகள் மீது அளவற்ற பாசம் கொண்டவர் ராஜேந்திரன்.
அவரது குரலுக்கும் சைகைக்கும் கட்டுப்பட்டு ஆடுகள் நடந்து கொள்ளும். புயலால் ஒரே நேரத்தில் 125 ஆடுகள் இறந்தன. அதன் பிறகு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 ஆடுகள் இறந்து விட்டன.
அரசு நிவாரணம் அளித்தாலாவது எஞ்சிய ஆடுகளை காப்பாற்றி விடலாம் என தினமும் புலம்பி வந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை இழந்த சோகத்தோடும், தினமும் இறக்கும் ஆடுகளை அடக்கம் செய்து வந்த தாலும் மனமுடைந்திருந்த ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்றனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர் சேக்தாவுத் கூறும்போது, இறந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து தேவையான சான்றுகளுடன் நிவாரண தொகைக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். #gajacyclone
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பியது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘தமிழக அரசு கூடுதல் விவரங்கள் அளித்ததும் மத்திய குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின்னர் 2 வாரத்தில் கஜா புயல் நிவாரணம் பற்றி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பு வக்கீல், மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். உடனே நீதிபதிகள், தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பற்றி 19-ந் தேதி (நாளை) பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #GajaCyclone
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்