search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததானம்"

    திண்டுக்கல்லில் தாலி கட்டும் முன் மணமக்கள் ரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #BloodDonation
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கும் அனுமோனிஷா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மணமகன் ஹரிஹரனும், மணமகள் அனுமோனி ஷாவும் மேடைக்கு அருகிலேயே ரத்ததானம் செய்தனர்.

    இதனை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

    இது குறித்து ஹரிஹரன் கூறுகையில், அனுமோனி ஷாவின் தந்தை பாஸ்கரன் 110 முறை ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவரது தாயாரும் செவிலியருமான ரமாதேவி 70 முறை ரத்ததானம் செய்துள்ளார்.

    வாழ்க்கை முழுவதும் ரத்ததானம் செய்வதையே தங்கள் லட்சியமாக வைத்துள்ள குடும்பத்தில் பெண் எடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

    நானும் பலமுறை ரத்ததானம் செய்துள்ளேன். பல திருமண விழாக்களில் இயற்கையை போற்றவும், மழைநீரை சேமிக்கவும் வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்குவதை பார்த்துள்ளோம்.

    அதுபோல ரத்த தானமும் சமூகத்திற்கு தேவையான மிகச்சிறந்த சேவையாகும். ரத்தத்தில் ஜாதி இல்லை, மதம் இல்லை, வகைகள்தான் உள்ளது. எனவே என்னைப் போல மற்ற திருமண விழாக்களிலும் மணமக்கள் ரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

    மணமக்களின் இந்த செயலை பார்த்து திருமண விழாவிற்கு வந்த 35-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். விழாவில் காஷ்மீர் மாநிலத்தில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மணமக்கள் உள்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்ததானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வினோதமான முறையில் நடந்த இந்த திருமண விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்  திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.  

    அதன்பின்னர் அக்கட்சியின் ஊடகப்பிரிவு சுந்தர் தலைமையில் உள்நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என 100 நபர்களுக்கு  இலவசமாக பிரட், மற்றும் வேட்டி, சேலைகள், வழங்கினர்.  

    அதனை தொடர்ந்து திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் காமராஜ் லோகநாதன், சிவா சக்கராயுதம், சின்னராசா, குமாரவேல், ராஜா, கருணா, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவமனை டாக்டர் ரவிசங்கர் தலைமையில், டாக்டர் மோகன் அரியலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தினை கொண்டு சென்றனர். 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

    மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கோகுல் கிருபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தி.மு.க.வினர் 95 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஸ்பாபு, துணை அமைப்பாளர்கள் மதிவேந்தன், பார்த்திபன், சுதா மற்றும் சிவக்குமார், நகர பொறுப்பாளர் மணிமாறன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
    ரத்ததானம் செய்யும் குத்துச்சண்டை வீரர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானதாக அவரது உறவினர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.#SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி புஷ்பாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 22) துப்பாக்கி சூட்டில் பலியானார். ரஞ்சித்குமார் பற்றி இவருடைய சித்தப்பா ஆறுமுகம் கூறியதாவது:-

    ரஞ்சித்குமார் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் குத்துச்சண்டை வீரரும் ஆவார். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.

    மேலும் ரத்ததானம் செய்வதில் ஆர்வமாக உள்ளவர். பலமுறை ரத்ததானம் செய்துள்ளார். இதற்காக தனியார் அமைப்பு ஒன்று அடுத்த மாதம் (ஜூன்) ரஞ்சித்குமாருக்கு விருது வழங்குவதற்காக அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூட்டில் துரதிஷ்டவசமாக ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

    துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ரஞ்சித்குமார் உடலை பெற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த கந்தையா (55) என்பவரின் மனைவி செல்வமணி கூறியதாவது:-

    எனது கணவர் கட்டிட தொழிலாளி. அவருக்கு கிடைக்கும் குறைந்த அளவிலான வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் அவர் இந்த சம்பவத்தில் பலியாகி விட்டார். எனது கணவரோட ஆசை ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்.

    இந்த மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது உயிரை கொடுத்து உள்ளார்.

    எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும். எனது கணவரை சுட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ளான். அவனை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் சிலர் கூறுகையில், “துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை தடியடியில் காயம் அடைந்ததாக சொல்லும்படி போலீசார் வற்புறுத்துகின்றனர்.

    தடியடியில் காயம் அடைந்தவர்களை கலவரத்தின்போது கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறுமாறும் சொல்கிறார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் உங்கள் மீது வேறு வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்றனர். #SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
    ×