search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிர்ச்சி"

    திருச்சி செந்தில்குமார், கீழவாளாடி செந்தில்குமார் இருவரது பான் கார்டு எண்கள் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். #Pancard
    திருச்சி:

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர். இவரது மகன் செந்தில்குமார் (வயது 45). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, பான் கார்டு எண்ணானது வேறு ஒரு முகவரியில் இருப்பதாக காட்டுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரி, இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.



    அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.  #Pancard

    புவனகிரி அருகே விபத்தில் தம்பி சிக்கியதில் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவரது தம்பி மணிவேல். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கநிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.

    ராஜலட்சுமி சாத்தப்பாடியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்று அவரை பார்த்தார். அதன் பின்பு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் யாரிடமும் பேசாமல் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடலில் தீ பிடித்ததும் கூச்சல்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ராஜலட்சுமி இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கருணாநிதி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை கணபதி பாரதி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). தி.மு.க. தொண்டர். மேலும் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரதி நகரில் சாலை ஓரம் வி‌ஷம் குடித்த நிலையில் முத்துச்சாமி மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முத்துச்சாமி இறந்தார்.

    அவர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது பெயர், அவரது மகன் பெயர், செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் முரண்படுவதால் ‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. #Jayalalithaa #JayaProbe #Apollo
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் மருத்துவர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    கோப்பு படம்

    சசிகலா அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் சாந்தாராமிற்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

    ஜெயலலிதாவுக்கு எந்த ஆண்டு முதல் சிகிச்சை அளித்து வருகிறீர்கள்?, ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்பு இருந்தது?, உங்களது சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார்.



    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தேன். அப்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. என்னை ஏன் அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. எனக்கு பின்னர், ஜெயஸ்ரீகோபால் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றியபோதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    ‘தொடர்ந்து 14 ஆண்டுகள் நீங்கள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்து இருந்ததால் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஏன் உங்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் சேர்க்கவில்லை’ என்று சாந்தாராமிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, அதுபற்றி தனக்கு தெரியாது என்று மருத்துவர் சாந்தாராம் பதில் அளித்துள்ளார்.

    தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஆணையம், அதுபோன்று திடீர் மாரடைப்பு ஏற்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மூளை செயல் இழந்து விடும். மீண்டும் இருதயம் செயல்பட்டால் எல்லா உறுப்புகளும் செயல்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இருதயம் மீண்டும் செயல்படவில்லை’ என்று கூறி உள்ளார்.

    மேலும், ரத்த ஓட்டம் நின்றபின்பு கொடுக்கப்படும் மருந்துகள் செயல்படுமா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். மருத்துவர் சாந்தாராமிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அதேபோன்று சாந்தாராமிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார்.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், ஜெயலலிதாவுக்கு அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதும், மீண்டும் இருதயத்தை செயல்பட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

    இருதய அடைப்பு ஏற்பட்டதும் ரத்த ஓட்டம் நின்று விடும் என்ற சூழ்நிலையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதாக அப்பல்லோ மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பது ஆணையத்துக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்ட பின்பு ‘ரமணா’ பட(நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இறந்தவருக்கு பரபரப்பாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சி இடம்பெறும்) பாணியில் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதை அடுத்தடுத்து ஆஜராகும் மருத்துவர்கள் மூலம் உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayaProbe #Apollo
    ×