search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டெருமை"

    கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விலை நிலங்களை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இவற்றை சுற்றி வனப்பகுதியும் உள்ளது. இந்த வனபகுதியில் காட்டுயானை, காட்டெருமைகள், மான் சிறுத்தைபுலி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றிதிரிகின்றன.

    வனப்பகுதியை ஆக்கிரமித்தும் விலை நிலங்களை அழித்தும் சொகுசு விடுதிகள் மற்றும் குடியிருப்புகள், காட்டேஜ்கள், தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றன இதன் காரணமாக வன விலங்குகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

    வனப்பகுதியில் மரம் செடி கொடிகள் கருகி விட்டன. மேலும் நீர் நிலைகளும் வறண்டு வருவதால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுவது அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மனித -வன விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகளில் வீசப்படும் மீதமான உணவுகளை சாப்பிடுவதற்கு காட்டுப் பன்றி, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. இவை அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி - மேட்டுப் பாளையம் சாலையில் கைத்தளா அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். #tamilnews
    தாயை பிரிந்த குட்டியானைக்கு, காட்டெருமை நண்பனாக கிடைத்துள்ளது. அவற்றை பிரிக்க முயன்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் இருக்கின்றன. தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சீசனில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து 5 வயதுடைய குட்டியானை ஒன்று பிரிந்தது.
    இந்த குட்டியானை பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம், காட்டேரி நஞ்சப்ப சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனை குன்னூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நஞ்சப்ப சத்திர வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன், அந்த குட்டியானை நட்புடன் பழகியது. தற்போது காட்டெருமையும், குட்டியானையும் நண்பர்களாக இணைந்தே சுற்றித்திரிகின்றன. இதற்கிடையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அறிவுரையின்பேரில் வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் குட்டியானையையும், காட்டெருமையையும் பிரிக்க போராடி வருகின்றனர். ஆனால் அது நடந்தபாடில்லை. மாறாக பிரிக்க முயற்சிக்கும்போது 2 வனவிலங்குகளும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே காட்டெருமையும், குட்டியானையும் இணைந்து வந்தபோது வனத்துறையினர் அவற்றை பிரிக்க முயற்சித்தனர். ஆனால் அவை வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    தொடர்ந்து அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தாயை பிரிந்த குட்டியானையையும், அதை தாய் போல பாதுகாத்து செல்லும் காட்டெருமையையும் காணும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 வனவிலங்குகளையும் பிரிக்க வனத்துறையினர் போராடி வருவதாக தெரிகிறது. யாருக்கும் ஆபத்து ஏற்படாத பட்சத்தில், அவற்றை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. காலப்போக்கில் அவை பிரிந்து செல்வது நடக்கக்கூடிய ஒன்று தான்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    கொடைக்கானலில் நகரப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெர்ன்ஹில் ரோடு பகுதியில் ஒரு குடியிருப்புக்குள் நுழைந்த காட்டெருமை அங்குள்ள புற்களை மேய்ந்ததோடு மலர்ச்செடிகளையும் மிதித்து நாசம் செய்தது. இந்த ஒரு காட்டெருமை மட்டும் அடிக்கடி இந்த பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் வனத்துறையினர் இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.கொடைக்கானல் வனப்பகுதியில் புல்வெளியை உருவாக்கி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறாமல் செய்வதில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வனப்பகுதியின் பாதுகாப்பை கருதியும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் 115 இடங்களில் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    இதில் பதிவான படங்களை வனத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போதும் தானியங்கி கேமராவில் பதிவான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த செந்நாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த மாமிச உண்ணி ஆகும். அனைத்து பகுதி காடுகளிலும் வாழும் தன்மை கொண்டவை. கூட்டம், கூட்டமாக வாழும் செந்நாய்கள் வேட்டையாடுவதில் வல்லமை கொண்டவைகளாக திகழ்கின்றன. தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட விலங்குகளையும் தனது புத்தி கூர்மையால் எளிதில் வேட்டையாடும் செந்நாய்கள் புள்ளிமான், காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, கோழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளை விரும்பி உண்ணும்.

    இவைகள் 4 முதல் 10 குட்டிகளை ஈனும். இவைகளின் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் 4,500 முதல் 10 ஆயிரம் வரையிலான செந்நாய்கள் வாழ்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கை படி செந்நாய்கள் கூட்டம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் செந்நாய்கள் இருப்பதும், அவைகள் ஆரோக்கியமாக சுற்றி திரிவதும் தானியங்கி கேமரா மூலம் தெரியவருகிறது.

    இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    கோத்தகிரியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை காட்டெருமை தாக்கியதால் படுகாயமடைந்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களையும் காட்டெருமை துரத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகர் பகுதியான மிஷன் காம்பவுண்டு பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், தனியார் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்தவர்களின் ஆலயம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம். இந்த பகுதியின் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு காட்டெருமை குட்டி ஈன்றுள்ளது. இந்நிலையில் அந்த காட்டெருமை சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அந்த சாலையின் ஓரத்தில் காலிபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் முதியவர் ஒருவர் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது காட்டெருமை அவரை பலமாக முட்டி தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.



    இருந்தபோதிலும் அந்த காட்டெருமைக்கு ஆத்திரம் தீரவில்லை. மீண்டும் அவரை காட்டெருமை முட்டியது. இந்த நிலையில்அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காட்டெருமை சாலையில் நின்று கொண்டிருந்தவர்களையும், வீடுகளுக்கு முன் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களையும் துரத்தியதால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர்கள் முருகன், வினோத் உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது காட்டெருமை அங்கும், இங்கும் உலாவிக்கொண்டிருந்தது. அதனை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டுவது குறித்து ஆலோசனை செய்தனர். இதற்கிடையில் காட்டெருமை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் முதியவரை ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:- காட்டெருமை தாக்கி காயமடைந்த முதியவர் கோத்தகிரி, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த கந்தையன் (வயது 82) ஆவார். அவருக்கு வனத்துறை சார்பில் உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் முதியவரை தாக்கிய காட்டெருமை கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் குட்டியை ஈன்றுள்ளதால் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை குடியிருப்பு பகுதி, சாலைக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×