search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெற்றது.
    • ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை புதிதாக அமைக்கப்பட்ட கமிட்டி வழங்கும்

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடா்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து சமுதாயக் குழுக் கூட்டத்தை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டது. அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது. மொத்தம் 62 பேர் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ளவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

    • மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
    • அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த நிலையில் அவனியாபுரம் முனியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

    அதில் அவனியாபுரத்தில் கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. நடப்பாண்டு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் வைத்து நடத்தும் சூழல் உள்ளது. பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

    கோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசார ணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசு அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு நடத்துகிறது. அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைக்க வேண்டியது அவசியமாகும். கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் அனைத்து சமூக பிரதிநிதிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும்.

    இதில் தீர்வு ஏற்படாவிட்டால் ஒருங்கிணைப்பு குழுவில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை சேர்த்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களில் 16 பேரை தேர்வு செய்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தென்கால் பாசன விவசாய சங்கத்தினருக்கும், அவனியாபுரம் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தல் சலசலப்பு ஏற்பட்டது.

    • அவனியாபுரத்தில் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கு இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    • 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி ஜல்லிக் கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ள ரூ.17 லட்சத்து 61 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டு விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்குமிடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டி யின் முக்கிய அம்சமாக விளங்கும் வாடிவாசல் அமைக்கும் பணியில் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார், இருளன் ஆகிய இருவரது குடும்பத்தினர் 400 வருடங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதைெயாட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத் தலைவர் சுவிதா விமல், ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் முத்துப் பாண்டி, வருவாய் அலுவலர் பிருந்தா, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலா, உதவி பொறியாளர் செல்வ விநாயகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், கல்யாணராமன், கல்யாணசுந்தரம், சிவமணி, முனியசாமி, சுந்தர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அவனியாபுரம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

    தாரமங்கலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கூலமேடு, தம்மம்பட்டி, நிலவாரபட்டி ஆகிய ஊர்களை தொடர்ந்து தற்போது தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குபட்டி ஊராட்சி பவளத்தானுர் பகுதியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தாரமங்கலம் பி ஆர் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் போட்டியை நடத்து

    வதற்கான முதற்கட்ட பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் ராஜசேகரன், செயலாளர் நாராயணன் ஆகியோர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாநில தலைவர் ராஜசேகரன் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை அழியாமல் பார்த்துக்கொள்ளவும், நாட்டு இன காளைகளை வளர்க்கவும் நாங்கள் இந்த வீர விளையாட்டை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறோம் அதன்படி தமிழக அரசின் அனுமதியோடு அரசின் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெற்று விழா நடத்தி வருகிறோம்,

    அதன்படி இந்த ஆண்டு தாரமங்கலம் அருகில் பவளத்தானுர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த இடம் ஜல்லிக்கட்டு நடத்த தகுந்த இடமாக அமைந்துள்ளது, எனவே இந்த இடத்தில் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்,

    அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் தாரமங்கலம் நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம்,குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம்,ரகுபதி, ராஜேந்திரன்,தங்கராஜ், தாரமங்கலம் பிஆர் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது
    • விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடும் செய்யப்பட உள்ளது.

    குளித்தலை:

    குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராட்சாண்டர் திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீ விரையாச்சிலை, ஈஸ்வரர் சமேத ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ கோலமாவயிரம் கொண்ட பிடாரியம்மன், ஸ்ரீ கரையூர் மற்றும் ஸ்ரீ நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து 61-ம் ஆண்டாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வருகின்ற 17ந் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து வாடிவாசல் அமைக்கப்பட்டு விழா நடக்க உள்ள நிலையில் அரசு விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளுக்கான போட்டோ, மருத்துவ சான்றிதழ் மற்றும் பல்வேறு அரசு விதிமுறைகளுக்குட்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் 800 காளைகளுக்கும், 400 மாடு பிடி வீரர்களுக்கும் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடும் செய்யப்பட உள்ளது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். கரூர் மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டு இங்கு மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    • வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா அரசு விதிகளின்படி நடத்தப்படுவதற்கான முழு பொறுப்பும் விழாக்குழுவினரைச் சார்ந்ததாகும்.

    ஜல்லிக்கட்டு விழா அமைப்பாளர்களின் சில முக்கியமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:-

    ஜல்லிக்கட்டு விழா நிகழ்வுகளை நடத்துவதற்கு அமைப்பாள ர்கள் முன்அனுமதியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடமிருந்து பெறுவார்கள்.

    ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான கோரிக்கை முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக நிகழ்வின் நடத்தப்படவுள்ள தேதியைக் குறிப்பிட்டு முறையான ஆவணங்களுடன் குறைந்தது 15 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விழாவின்போது நடைபெறும் அனைத்து நிகழ்விற்கும் தாங்களே பொறுப்பு என்னும் உறுதி மொழியும், முழு நிகழ்வும் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதற்கான

    விழாக்குழுவினரால் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விழாவில் அனுமதிக்கப்பட உள்ள அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை, மற்றும் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளைகளின் உத்தேசப் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இந்திய பிராணிகள் நல வாரியம் வழங்கி உள்ள பல வகைகள் போதுமான எண்ணிக்கையில் நிறுவப்பட வேண்டும்.

    விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வெப் கேம்கள், வாடிவாசல் உள்ளிட்ட அரங்கின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் விருப்பப்படி அனுமதிக்கப்படும் கோவில் காளைகளை வாடிவாசல் அருகில் தனி பாதை வழியாக அனுப்பலாம். அந்த கிராம கோவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் தழுவுதல் கூடாது.

    பாக்கு வைத்து அழைக்கப்படும் காளைகளுக்கு தனியாக காளைகள் தங்குமிடம் அமைக்கப்பட வேண்டும்.

    போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் விவரங்களை thanjavur.tn.nic.in என்ற இணையதளத்தில் விழா நடைபெறும் 3 நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.
    • சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம் 15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.

    அவனியாபுரம் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டில் கோர்ட்டு உத்தரவின்பேரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் ஆதிதிராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இது ஏற்புடையதல்ல. எனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப்போல கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து வருகிற பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர். பலவகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலைமையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில், 2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ஒருங்கிணைப்புக் குழுவில் அதிகாரிகளும், ஆலோசனைக்குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதேபோல் குழு அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மனுதாரர் தரப்பில், ஆலோசனை குழுவில் கிராமத்தின் அனைத்து சமுதாய உறுப்பினர்களும் இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஆலோசனைக்குழு என எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், தங்களது உத்தரவில் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை (13-ந் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.

    சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.

    ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம்.
    • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

    இதையொட்டி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம். கடந்த முறை எங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் எங்களது காளைகள் போட்டியில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வலைதளம் மூலமாக நாங்கள் பதிவு செய்தோம். அதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.

    அந்த குளறுபடிகளை நீக்கி உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகளும் பங்கு பெறுவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகள் பங்கு பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விரைவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் திருநங்கைகள் தாங்கள் வளர்த்து வரும் காளைகளும் போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மேலூர் ஒன்றிய செயலாளர் கருப்பணன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தில் மேலூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறேன்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நான் முதலிடம் பெற்றேன். ஆனால் அரசு விதிமுறைகளை மீறி ஆள் மாறாட்டம் செய்த வேறு ஒரு நபருக்கு முதலாவது பரிசு அறிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த நீதிபதி, அலங்காநல்லூர் விழாக்குழு முடிவு எடுத்து எனக்கு பரிசை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளார். ஆனால் இதுவரை பரிசை வழங்கவில்லை.

    எனவே மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு சேரவேண்டிய முதல் பரிசை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது.

    மதுரை

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. அதற்கான பணிகள் தொடங்கியது.

    தடுப்பு கம்புகள் ஊன்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல் மற்றும் மாடுகள் வெளியே செல்லும் ''கலெக்சன் பாயிண்ட்'' உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும்? என்பது குறித்து இன்று கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வாடிவாசலின் இரு புறமும் தடுப்பு கம்புகள் கட்டும் பணியை, கலெக்சன் பாயிண்ட் வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆய்வில் கலெக்டருடன் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மாநகர போலீஸ் துணை ஆணையாளர் (தெற்கு) சாய் பிரனீத், உதவி ஆணையாளர் செல்வ குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், உதவி பொறியாளர் செல்வ நாயகம், சுகாதார ஆய்வாளர் வனஜா, மண்டத் தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் கருப்புசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அவனியாபுரம்- முத்துப்பட்டி சந்திப்பில் இருந்து வாடிவாசல், வீரர்களுக்கு சோதனை செய்யுமிடம், மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளும் இடம், கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சுமார் 2 கி.மீட்டர் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டி யில் நடைபெற்ற குளறுபடிகள், உயிரிழப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் துணை கமிஷனர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை யொட்டி மதுரை அலங்காநல்லூரை அடுத்த குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற 15-ந் தேதி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக அவர்கள் மதுரை சுற்றுலா அலுவ லகத்தில் இருந்து 15-ந் தேதி காலை தனி பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு கிராம மக்களுடன் இணைந்து சுற்றுலா பயணி கள் பொங்கல் வைக்கும் முறையை நேரடியாக கண்டு மகிழலாம். இதனைத்தொடர்ந்து பரதம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சுற்றுலாப் பயணிகள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். மதுரை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் 15, 17-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.
    • ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இடையில் தடை ஏற்பட்ட நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.

    ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே இல்லை. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன.

    தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேஷ், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் இருந்தனர்.

    • கால்கோல் விழா நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் துவங்கியது.
    • 100 பேர் தங்கள் காளைகளை பதிவு செய்துள்ளதாக தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    திருப்பூர் :

    அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 29ந்தேதி போட்டி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் கால்கோல் விழா நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் துவங்கியது.

    இதற்கு அலகுமலை ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையிலான ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்த சப் கலெக்டர், போட்டிக்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு கூறியதால் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான காளைகள் முன்பதிவு துவங்கியது. காளைகளைப் பதிவு செய்ய பலர் ஆர்வம் காட்டினர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 100 பேர் தங்கள் காளைகளை பதிவு செய்துள்ளதாக தலைவர் பழனிசாமி தெரிவித்தார். 

    ×