search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்டிப்பு"

    • மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
    • ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப

    தாவது:-

    நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையில் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைனில் 14-6-2018 முதல் 13-9-2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட்டால் விதிக்கப்பட்ட தடையை நீக்க மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இதில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், 22-3-2021 முதல் 4-4-2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு அரசால் 24-6-2022 முதல் 31-12-2022 வரை வழங்கப்பட்டது.

    தற்போது இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக 30-6-2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற தஞ்சை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

    இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரின் நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    யாழ்ப்பாணம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 12ம் தேதி 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.



    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, 9 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து (நாளை வரை) நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நீதிமன்றக் காவல் முடிந்து நாளை மீண்டும் ஆஜர்படுத்தப்படும்போது, 9 பேரையும் நீதிமன்றம் விடுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #TNFishermen #SrilankanNavy
    சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மைசூரு வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. #ChennaiBengaluru #ChennaiBengaluruExpress
    மைசூரு:

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவுடன் இணைக்கும் வகையில் தினந்தோறும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயங்கி வருகிறது.

    சென்னையில் இருந்து செல்லும்போது தடம் எண் 12609 ஆக இருக்கும் இந்த ரெயில் எதிர்திசையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பும்போது தடம் எண் 12610 என்று குறிப்பிடப்படுகிறது.

    சென்னையில் இருந்து தினந்தோறும் பிற்பகல் 1.35 புறப்படும் இந்த ரெயில் ஆறரை மணிநேர பயணத்தில் சுமார் 362 கிலோமீட்டர்களை கடந்து இரவு 8.05 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது.

    இந்நிலையில், இந்த ரெயில் சேவையை மைசூரு நகரம் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையேற்று, சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மைசூரு வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படும் 12609 ரெயில் இரவு 11 மணியளவில் மைரூரு வந்தடையும். மைசூருவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் 12610 ரெயில் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூருவை கடந்த பின்னர் கென்கேரி, ராமநகரம், சன்னப்பட்னா, மட்டுர், மன்டியா, பாண்டவபுரா ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து 477 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மைசூரு நகரை சுமார் ஒன்பதரை மணி நேரத்தில் இனி சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ChennaiBengaluru #ChennaiBengaluruExpress
     
    நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. #NagalandAFSPA #AFSPA
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.

    போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது.



    இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டித்துள்ளது.

    சமீபகாலமாக இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ஆகிய குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு துணை புரிவதற்காக வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாகலாந்து மாநிலத்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NagalandAFSPA #AFSPA
    சபரிமலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் 144 தடை உத்தரவு வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஆனால், சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளிலேயே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன்பின்னர் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதன் காரணமாக 144 தடை உத்தரவு வரும் 22ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



    பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

    சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு சில தினங்களே உள்ள நிலையில் சபரிமலையில் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. #Sabarimala #Section144
    சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார். #Sabarimala #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

    சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளில் இருந்தே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.



    அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடியை கைவிட வேண்டும் என்று கோரி கேரள சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அதேபோல பா.ஜனதா சார்பில் கேரள அரசு தலைமை செயலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது. கேரள சட்டசபையிலும் இந்த பிரச்சினையை கிளப்பி எதிர்க்கட்சிகள், ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    மேலும் இந்து அமைப்புகளும் 144 தடை உத்தரவை கைவிடக்கோரி போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று காங்கிரசின் இளைஞர் அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டது.

    அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவியது. ஆனாலும் சபரிமலையில் 144 தடை உத்தரவை அரசு வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில் 6-வது முறையாக வருகிற 16-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

    சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு 2 வாரங்களே உள்ள நிலையிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.

    இதன் காரணமாக சபரிமலை கோவில் உண்டியல் வருமானம், பிரசாதங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை தொடர்ந்து குறைந்து வருகிறது.  #Sabarimala #Section144

    சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaProhibition
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, இலவுங்கல், நிலக்கல், சன்னிதானம்  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்களின் கருத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Sabarimala  #SabarimalaProhibition

    செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Section144 #Sengottai
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது.

    அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது,

    இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கருத்துகேட்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில் மீண்டும் தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் தென்மண்டல போலீஸ் ஜ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.



    இக்காலங்களில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  #Section144 #Sengottai
    தினகரன் சகோதரி சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
    புதுடெல்லி:

    சசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரன் சகோதரியுமான சீதளதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரன், சீதளதேவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சீதளதேவிக்கு 3 ஆண்டுகளும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை உறுதிசெய்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். தண்டனையை நிறுத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சீதளதேவி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய இருவார காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர். 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்து உள்ளார். #Afghanistan #AshrafGhani
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, “வன்முறையானது, மக்களின் இதயங்களையும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.



    இது வரை இல்லாத வகையில் அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலீபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆப்கானிஸ்தான் மக் களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்த சம்பவத்தை தவிர போர் நிறுத்த காலத்தில் அமைதி நிலவியது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்து அதிபர் அஷரப் கனி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலீபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு அதிபர் அஷரப் கனி டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, “தலீபான்களுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. தலீபான்கள் முன் வைத்து உள்ள அனைத்து பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து சமரச பேச்சுவார்த்தையின்போது விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “ரம்ஜான் நிகழ்ச்சியில் தலீபான்களும், அரசு அதிகாரிகளும் ஒன்றாக கலந்து கொண்டது, நாம் அனைவரும் சமாதானத்துக்காகத்தான் உள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது” என்றும் கூறினார்.

    போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பாக டுவிட்டரில் அதிபர் அஷரப் கனி ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

    அதில் அவர், “ஆப்கானிஸ்தான் தலீபான்களும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போர் நிறுத்தத்தின்போது, காயம் அடைந்த தலீபான்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்போம். தேவையான மனித நேய உதவிகளையும் செய்வோம். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், சந்திக்கவும் அனுமதிக்கப் படும்” என கூறி உள்ளார்.

    இரு தரப்பு சமரச முயற்சிகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.

    இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிடுகையில், “ஆப்கானிஸ்தான் போருக்கு முடிவு கட்டுகிற வகையில், இரு தரப்பினரும் சமரச உடன்பாடு, அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Afghanistan #AshrafGhani #Tamilnews
    ‘அந்த்யோதயா’ ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். #ponradhakrishnan
    சென்னை:

    ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    பயணிகள் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் முன்பதிவு இல்லாதவையாக, யார் வேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என்று இயக்கப்படும் ‘அந்த்யோதயா’ ரெயில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தனையின் செயல்பாடு ஆகும்.

    தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த 2009-14-ம் காலத்தில் ஆண்டுதோறும் ரூ.879 கோடி மட்டும் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு தமிழக ரெயில்வே துறைக்கு ரூ.2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கி உள்ளது.

    ரூ.20 ஆயிரத்து 64 கோடியில் 27 ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்காக பிரதமர் நரேந்திரமோடி ரூ.4 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். இதில் பாதி நிதியை மாநில அரசு வழங்க வேண்டும். எனினும் மாநில அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முழுத்தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் தெற்கையும், வடக்கையும் இணைக்கக் கூடிய வகையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. நிச்சயம் இன்னொரு ரெயில் தேவை. எனவே அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை ஏன் நீட்டிக்க கூடாது? என்று ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்னிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன்.

    அவர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, ‘போக்குவரத்து நெரிசலால் (சிக்னல் பிரச்சினை) தற்போது முடியாது என்று தெரிவித்தார். இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்தவுடன் அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.



    சாலை போக்குவரத்தை பொறுத்தமட்டில் 4 வழிச்சாலைகள் அல்ல; 8 வழிச்சாலைகளுக்கும் மேல் அமைக்க வேண்டும். தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வரையில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் பேசும்போது, ‘தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதை, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி, ரெயில்வே கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கிறது. செங்கோட்டை-புனலூர் இடையே ரூ.390 கோடியில் தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. நாளை(இன்று) அது நாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும்.

    பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. ரெயில்களில் வேகத்தை மணிக்கு 25 கி.மீ அதிகரிப்பது குறித்து டெல்லியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது’ என்றார். #ponradhakrishnan 
    ×