search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்படைப்பு"

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    மதுரை கே.புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கவின்குமார் (வயது16). இவனது நண்பர்கள் குணா (16), சந்தோஷ் (16). இவர்கள் 3 பேரும் 10-ம் வகுப்பு படித்தவர்கள். தற்போது கவின்குமார் பாலிடெக்னிக்கும், சந்தோஷ் ஐ.டி.ஐ., குணா 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    வெவ்வேறு இடங்களில் படித்தாலும் 3 பேரும் ஒன்றாகவே வெளியே சுற்றுவது வழக்கம். நடந்து முடிந்த தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கவின்குமார் வருத்தத்தில் இருந்தார். தனது நண்பருக்காக 3 பேரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.

    நேற்று இரவு மதுரையில் இருந்து இண்டர் சிட்டி ரெயிலில் திண்டுக்கல் வந்தனர். அதன்பிறகு எங்கு செல்வது என தெரியாமல் ரெயில் நிலையத்திலேயே தவித்தனர்.

    ரெயில்வே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மாணவர்கள் நடந்த விபரத்தை கூறினர். இதனையடுத்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

    தென்காசி அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த ஒலி மகன் முகமதுஅபீன் (12). இவன் தஞ்சாவூர் வடகரையில் உள்ள பள்ளியில் தங்கி உருது படித்து வந்தான். நேற்று பள்ளியை விட்டு வெளியேறி தனது ஊருக்கு செல்வதற்காக நாகப்பட்டிணத்தில் இருந்து ரெயில் மூலம் வந்தார். திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்ததும் இறங்கி எங்கே செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தான். ரெயில்வே போலீசார் அவனை விசாரித்து தென்காசியில் உள்ள அவனது அம்மாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

    கவனக்குறைவாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 சீனர்களை இந்திய எல்லைப்படை அதிகாரிகள் பிடித்து நேபாள போலீசில் ஒப்படைத்தனர். #ChineseNationals #ChineseEnterIndia
    பஹ்ரைச்:

    நேபாளத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சீனர்கள் 6 பேர் நேற்று முன்தினம் நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள பாகேஷ்வரி ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆனால், அவர்கள் கவனக்குறைவாக ருபாய்தீகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டனர்.



    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையான எஸ்எஸ்ஏ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர்கள் வழிதவறி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நேபாள விசா இருந்தது. இதையடுத்து 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரையும் எஸ்எஸ்பி வீரர்கள் பிடித்து, நேபாள காவல்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர். #ChineseNationals #ChineseEnterIndia
    சென்னை மடிப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த ஒரிசா வாலிபரை போலீசார் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook
    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #TNPSC #MKStalin
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    வேலை வாய்ப்பு தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “மாநில அரசில் உள்ள பதவிகளுக்கு போட்டித்தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 320 தெளிவாக கட்டளை பிறப்பித்து இருக்கிறது. அந்த அரசியல் சட்ட கடமையை தனியாருக்கு தாரை வார்க்க அரசு பணியாளர் தேர்வாணையம் முயற்சிப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    மாநில, சார்நிலை மற்றும் அமைச்சு பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கு போட்டி தேர்வு, அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி மற்றும் மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை நடத்தும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. இந்த ஆணையம் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளை நம்பித்தான் எண்ணற்ற இளைஞர்கள் குரூப்-1 பதவிகளான சார்பு ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கும், அதே போல் குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய பல்வேறு அரசு பதவிகளுக்கும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு முன் வருகிறார்கள்.

    இரவு பகலாக படித்து அரசு ஊழியராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து சென்னையில் நெருக்கடி மிகுந்த விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காகவே தலைவர் கருணாநிதி உலகப்புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் அவ்வப்போது புகார்கள் வெளிவந்தாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று இன்னமும் லட்சக்கணக்கான கிராமப்புற ஏன் நகர்ப்புற மாணவர்களும் நம்பி, தேர்வுபெற உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதத்தில் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், இமாலய ஊழல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புகாரின் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏனோ மறந்து விட்டு, போட்டி தேர்வுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது “கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.

    நேர்மையான தலைவரின் கீழ் உள்ள ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இப்படியொரு விபரீத முடிவை எப்படி எடுக்க முயற்சிக்கிறது என்பதும், தனது அரசியல் சட்ட கடமையில் இருந்து விலகும் பொறுப்பற்ற செயலை ஏன் அமல்படுத்தத் துடிக்கிறது என்பதும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தகுதியில்லாதவர்களை எல்லாம் உறுப்பினர்களாக நியமித்து ஏற்கனவே அரசு பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க.வின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் உள்நோக்கத்துடன் அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த சிலைகளை மீட்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் சென்னை கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சூசன்கிரேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்து சமயஅறநிலையத்துறை சார்பில் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

    ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

    சுமார் 1 மணி நேரம் இந்தக்கூட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7 சிலைகள், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆவணங்களாக இந்தக்கூட்டத்தில் எடுத்து வைத்தார்.

    ஆவணங்களை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிலைகளை திருப்பிக்கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.

    விரைவில் 7 சிலைகளையும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 7 சிலைகள் பற்றிய விவரங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை

    1. குழந்தை வடிவிலான நின்ற நிலையில் இருக்கும் சம்பந்தர் பஞ்சலோகசிலை - சீர்காழி சாயவனம் சிவன் கோவிலில் உள்ள சிலையாகும். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.75 லட்சம் மதிப்புடையது.

    2. நடனமாடும் சம்பந்தர் சிலை - ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.4.59 கோடி மதிப்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே இருக்கும் மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலிருந்து இந்த சிலை திருடப்பட்டது.

    3. துவாரபாலகர் கல்சிலைகள் -2, திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர், மூன்றீஸ்வர உடையார் சிவன்கோவிலில் திருடப்பட்ட சிலைகள் ஆகும். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் மதிப்பு ரூ.4.98 கோடியாகும்.

    4. நந்தி கல்சிலை - 1,100 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டிருந்தது.

    5. ஆறுமுகம் கல்சிலை - தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகில் உள்ள மானம்பாடி கிராமத்தில் இருக்கும் நாகநாத சுவாமி கோவிலில் திருடப்பட்ட சிலையாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.1.32 கோடி மதிப்புடையதாகும்.

    6. பத்ரகாளி சிலை - 900 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டிருந்தது.

    இந்த சிலை கடத்தல் வழக்கில் அமெரிக்கா வாழ் இந்தியர் சுபாஸ் சந்திர கபூர், மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ், ஆதித்த பிரகாஷ், சஞ்சீவி அசோகன், தஞ்சாவூர் கரந்தட்டான்குடியைச் சேர்ந்த ஊமைத்துரை, அண்ணாதுரை, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் மும்பையைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசாமி ஆகியோர் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்.

    சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் இறந்த சென்னை வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதியைச் சேர்ந்த பாஸ்கர்-அனுராதா தம்பதியினர் ஒரு மோட்டார் சைக்கிளில் சத்தியவேடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். சத்தியவேடு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நின்றிருந்த 5 மோட்டார் சைக்கிளில் வந்த 12 வாலிபர்களில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, அனுராதா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் 9 வாலிபர்களை மடக்கிப்பிடித்து, சத்தியவேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ராஜி (வயது 24), பிரசாந்த் (20), அபினேஷ் (21), வினோத்குமார் (21), மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் (21), கோரிமேடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (21), போரூரை சேர்ந்த ஜான்சார்லஸ் (21) மற்றும் 17 வயதுடைய 2 பேர் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையின்போது ராஜி போலீஸ் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

    பிடிபட்ட 8 பேரும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ராஜின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான‌ அந்தோணி செல்வராஜ் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.

    பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்நிலையில் அவர்களது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவை வரும்வரை பிரேத பரிசோதனை செய்யாமல் பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பிரேத பரிசோதனை முடிந்த மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களையும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் மற்றும் தூத்துக்குடி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டது. பின்பு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மணிராஜ், கிளாட்சன், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அண்ணாமலை, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் சங்கர், 2-வது நீதித்துறை நடுவர் தாவூத்தம்மாள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வினோத் சவுத்ரி தலைமையில், தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் ஒவ்வொரு உடலாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் உடலை தவிர மற்ற 5 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அவரது உறவினர்கள் வெளியூரில் இருந்ததால் அவர்கள் நேற்று வரவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் தூத்துக்குடி வந்த‌னர். இதையடுத்து அவர்களிடம் அந்தோணிசெல்வராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தூத்துக்குடியில் கடந்த 15 நாட்களாக நிலவிய பதட்டம் தணிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிகையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    ×