search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைப்பு"

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



    முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ATM #ATMBroken
    சென்னை:

    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இயங்கி வரும் இந்த மையத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    எந்திரத்தை உடைத்து அதில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையர்கள் நீண்ட நேரம் போராடி, முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் கண்ணாடி கதவினை உடைத்து சென்றுள்ளனர்.

    இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஏ.டி.எம். மையத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தற்கான காரணம் என்ன?

    பொதுமக்கள் யாரும் வந்ததால் முயற்சியை கைவிட்டு ஓடினார்களா? குடிபோதையில் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. #ATM #ATMBroken
    ஸ்ரீமுஷ்ணம் அருகே நள்ளிரவில் அய்யனார் கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #CashTheft
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லுமேட்டு பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கலியங்குப்பத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகள், 100 கிலோ எடையுள்ள பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களையும் காணவில்லை. இதுகுறித்து அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், கோவிலில் இருந்த ஒலிபெருக்கி கருவிகள், பித்தளை உள்ளிட்ட பொருட்களையும் திருடி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. 2 உண்டியல்களிலும் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 
    பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 5 நாட்களாக தண்ணீர் வீணாகி ஓடுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து 5 நாட்களாக குடிநீர் வீணாகிறது. இரவு-பகலாக குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.

    பஸ், லாரி உள்பட கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் தண்ணீர் சிதறி நடந்து செல்பவர்களின் மீது பட்டு அவர்களின் ஆடைகள் அசுத்தம் அடைகின்றன. அப்பகுதியிலேயே அரசு ஐ.டி.ஐ., பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. எத்தனையோ அதிகாரிகள் அந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் குழாய் உடைந்து 5 நாட்களாக வீணாகி ஓடும் குடிநீரை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாகும். பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருகிறது என்பதை அறிந்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கும்பகோணத்தில் நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் போராட்டம் பெரிய அளவில் வெடித்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்த போதிலும் போராட்டக் காரர்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக ஒரு அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்றது. அப்போது அந்த பஸ் கும்பகோணம் அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. உடனே பஸ் டிரைவர் இது குறித்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்று பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியில் அரசு விரைவு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் இடதுபுறம் உள்ள கண்ணாடிகள் உடைந்தது.

    இதைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் அருகே உள்ள நரசிங்கபேட்டை பகுதியில் சென்ற அரசுபஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு கற்களை வீசியுள்ளனர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் சேதமானது.

    கும்பகோணம் பகுதியில் நேற்று நள்ளிரவு மட்டுமே 3 அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடந்திருப்பது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்தந்த சரகத்திற்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பஸ்கள் மீது தாக்குதல் நடந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கம் சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 3 இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×