search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வதந்தி"

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Varalakshmi #Rumours
    சிம்பு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாவர் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார்.

    தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர்.சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார். 

    இவரும் விஷாலும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள். தொடக்கத்தில் இதுபற்றி பேசாத வரலட்சுமி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்,



    நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

    விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.


    இந்த நிலையில், வரலட்சுமிக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    இதற்கிடையே விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருக்கும் செய்தி வெளியாகி இருப்பதால், இருவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்ககளும் முடிவுக்கு வந்துள்ளன. #Varalakshmi #Rumours

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், நாம் தனித்தே நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல, நாளை நமதே என பதிவிட்டுள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Congress
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தராமையாவிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் எதற்காக அவர்கள் மும்பை செல்கிறார்கள்?. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுபற்றி அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.

    அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. கூறுகையில், “நான் எங்கும் போகவில்லை. செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்சி தலைவர்கள் பிரச்சினையை தீா்ப்பார்கள்” என்றார். #Siddaramaiah #Congress
    ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் பரவிவந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.



    ரஜினி உடல்நிலை குறித்த இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றார். #Rajinikanth

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் இணைந்து அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத்பந்த் குறித்து பேசிய மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, விலை உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றில் பல்வேறு குற்றங்கள் இருப்பதாகவும், ஆனால் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.



    மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் எதிர்மறையான சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க யாரோ காங்கிரஸ் கட்சியை தூண்டுகிறார்களோ என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் இணையும் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடையும் என்பதால்தான் பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த பாரத்பந்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த 11 சதவிகித பணவீக்கத்தை, மோடியின் திறம் மிக்க ஆட்சியால் 4 சதவிகிதமாக குறைந்துள்ளது, மேலும் இது குறையும் எனவும் கூறியுள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக மத்திய மந்திரி அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #Sasikala #Pugazhendhi
    தருமபுரி:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #Pugazhendhi
    கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக குடியாத்தத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    குடியாத்தம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது, தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் குடியாத்தம் பிச்சனூர் தியாகி குமரன் தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் தீனா என்கிற தீனதயாளன் (23) என்பவர் தனது பேஸ்புக் பக்கத்திலும், வாட்ஸ்-அப்பிலும் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியுள்ளார்.

    இதையறிந்த, குடியாத்தம் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞான பிரகாசம் (27), குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் இருதய ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் தீனதயாளனை கைது செய்தனர்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு தொண்டு நிறுவனங்களின் வதந்தியே காரணம் என்று அதன் தலைமை செயல் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். #Sterlite ##SterlitePlant
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி நடந்த போராட்டம் போர்க்களமாக மாறியது. இதில் 13 அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலை மூலம் தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது. காற்று மாசு அடைந்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. புற்றுநோய் பரவுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இது உண்மைதான் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறினார்கள். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நடவடிக்கைகள் தொடங்கின. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 100-வது நாள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூட்டில் முடிந்தது. இந்த போராட்டத்துக்கும், துப்பாக்கி சூட்டுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களிடமும், மீனவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறோம். அவர்கள் அமைதியாகவே இருந்தனர்.

    வருடம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரைநாள் அந்த பகுதியை சேர்ந்தவர்களை அழைத்து இந்த ஆலையில் என்ன நடக்கிறது என்பதை காண்பித்தோம். எங்கள் ஆலை கதவு திறந்தே இருக்கிறது. இப்போது டாக்டர்கள், வக்கீல்கள், மாணவர்கள், பொதுமக்கள் நேரில் இங்கு வந்து பார்வையிடலாம்.

    ஆலையின் உற்பத்தி திறனை 8 லட்சம் டன்னாக உயர்த்துவதற்காக ஒப்புதல் பெற்று இருந்தோம். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆலைக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்தது.

    விடுமுறைக்காக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டன. மக்களை தூண்டிவிடும் விதமாக பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

    கிராம மக்களும், மீனவர்களும் அதுவரை அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள், மக்களை தூண்டும் வகையில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர்.


    இதனால்தான் போராட்டம் தீவிரம் அடைந்தது. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்து 13 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து மே மாதம் 28-ந்தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    தமிழ்நாட்டில் புற்றுநோயின் தலைநகரம் தூத்துக்குடி என்று வதந்தி பரப்பப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அனைத்து இறப்புகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தவறானது என்று புள்ளி விவரங்கள் நிரூபித்துள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 14-வது இடத்தில் உள்ளனர். பெண்கள் 25-வது இடத்தில்தான் இருக்கிறார்கள். இதைத் தான் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    தூத்துக்குடியில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவை நிலக்கரியை எரிப்பதால் காற்று வெளிமண்டலத்தில் அதிக அளவில் சல்பர்டை ஆக்சைடு கலக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் தூத்துக்குடி பகுதியில் காற்றில் கலக்கும் சல்பர்டை ஆக்சைடில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டது என்பது அப்போது வெளியான புள்ளி விவரங் கள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த பிரச்சனையை பெரிதாக்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sterlite #SterlitePlant
    சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை இன்று டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடக்கிறது.
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வன்முறை அதிகம் நடைபெற்றுவரும் காஷ்மீரில் ஆயுத போரைப்போலவே விஷத்தை கக்கும் வார்த்தைகள், போலியான செய்திகள், புரளிகள் பரவிவருவது மாநில நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. வதந்திகள் பரவுவதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுடன், எந்தவொரு நிகழ்வுக்கும் மதச்சாயம் பூசப்படுகிறது.

    அடுத்த 2 மாதங்களுக்கு அமர்நாத் யாத்திரை நடைபெற இருக்கும் நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் பரவினால் மாநிலம் முழுவதும் மதவன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் போலீசார் டுவிட்டர் வலைத்தள பயன்பாட்டாளர்கள் 5 பேர் மீதும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தவறான தகவல் பரப்பியதற்காக அவர்களுக்கு இணையதள சேவை வழங்கிய நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீரின் இளைஞர்கள் கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலம் வீடுகளில் இருந்தோ, தெருக்களில் இருந்தோ இதுபோன்ற தவறான தகவல்களை சாதாரணமாக பரப்பிவிடுகிறார்கள். அதோடு டெல்லி போன்ற பிற மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ இருக்கும் காஷ்மீர் இளைஞர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    எனவே சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடத்துகிறது. உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயர் அதிகாரிகள், தொலைதொடர்பு துறை அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விதிகளை அமல்படுத்துவது, வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்வது, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து தீங்கை ஏற்படுத்தும் கருத்துகளை உடனுக்குடன் நீக்குவது, விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை குறித்து விவாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பத்தூரில் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாளாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

    இதன் எதிரொலியாக போளூர் அருகே உள்ள களியம் கிராமத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரை மறித்த கிராம மக்கள், குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக, 11 கிராமங்களை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். செய்யாறில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ்-அப்பில் செல்பி வீடியோ வெளியிட்ட சக்தி என்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர்.

    இந்த நிலையில், அதே போன்று திருப்பத்தூரிலும் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ராவுதம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில், 400 வடமாநிலத்தவர்கள் குழந்தை கடத்த ஊடுருவி உள்ளனர்.

    ஒருவன் சிக்கி விட்டான். மீதமுள்ள 399 பேரை எங்கு பார்த்தாலும் அடித்து கொள்ளுங்கள். ஆந்திராவில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். தமிழக போலீசார் எதற்கும் லாயக்கில்லை. குழந்தை கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் விடுவிக்கின்றனர் என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோ குறித்து எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலக நாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார், யாதவமூர்த்தியை தேடி பிடித்து கைது செய்தனர்.

    தவறான தகவல் பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் ஏற்படும் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். #KamalHaasan #Childkidnap
    திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது.

    இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அப்பாவிகள் பலியாகி வருவதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் தீவிர நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கமல் தெரிவித்திருப்பதாவது,



    `வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்'

    இவ்வாறு கூறியிருக்கிறார். #KamalHaasan #Childkidnap 

    செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நேற்று குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.



    இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வதந்தி பரப்புவது குறித்த கண்காணிக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் செய்யாறு பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக்கிலும் வேகமாக பரவியது.

    அதில் பேசிய வாலிபர் எனது பெயர் வீரராகவன் (வயது35). செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் இருந்து பேசுகிறேன்.

    செய்யாறு பக்கத்துல அதிகமா குழந்தைகளை கடத்துறாங்க இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிட்டு போய்ட்டாங்க.

    ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திட்டாங்க. தாங்கல், உத்திரமேரூரில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அதனால உங்க குழந்தைளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

    செய்யாறு பக்கத்துல விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரனுங்க ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூக்கி சென்றனர். பொதுமக்கள் துரத்தியதால் விட்டுட்டு ஓடிடாங்க.

    இதுவரை செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அனைவரும் உஷாராக இருங்கள். வேலை முக்கியமில்லை. குழந்தைதான் முக்கியம்.

    குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க. அனைவரும் உஷாராக இருங்கள். முடிந்த வரை இதனை சேர் செய்து எவ்வாளவு குழந்தைகளை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுங்கள் நன்றி என கூறியபடி இந்த வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.

    வீரராகவின் வீடியோ செய்யாறு பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    சமூக வலைதளங்களை கண்காணித்த அணக்காவூர் போலீசார் இந்த வீடியோவை கண்டு திடுக்கிட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் புரிசை கிராமத்திற்கு சென்று வீரராகவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


    ×