search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    • கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது.

    திருவள்ளூர்:

    தமிழக ஆந்திர எல்லையான கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அம்மப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் அம்மப்பள்ளி அணை நிரம்பியதையடுத்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அம்மம்பள்ளி அணையில் இருந்து 8 கி.மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் தற்போது கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காப்பேட்டை, சாமந்தவாடா, நெடியம், மற்றும் விடியங்காடு வழியாக தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த ஆண்டு பெய்த மழையால் சாமந்தவாடா தரைப்பாலம் சேதம் அடைந்து இருந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து இருந்தனர். அந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது.

    இந்தநிலையில் அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. எனவே சாமந்தவாடா தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மழை நின்றும் மின் இணைப்பு வழங்காததால் ஆத்திரம் அடைந்த புது வள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்தநிலையில் மழை நின்ற பின்னரும் மின்சாரம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் காக்களூர் துணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்.
    • பல்வேறு விஷயங்களை அறிக்கை மூலம் வெளியிடுவதாக தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று நேரில் ஆய்வு செய்தார். பகல் 12 மணியளவில் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியில் இருந்து பகுதிகளில் தனது ஆய்வை தொடங்கினார். முட்டளவு வெள்ளம் உள்ளே நடந்து சென்று செல்லும் பகுதிகளில் நடந்து சென்றார்.

    அங்கு வீடுகளில் இருந்த பொதுமக்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகள், ஒவ்வொரு மழை காலமும் இப்படித்தான் மழை தண்ணீர் தேங்குகிறதா? இதற்கான காரணம் என்ன? அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கிறதா? என்பதையெல்லாம் கேட்டறிந்தார். அவர்களுக்கு பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து மேற்கு சைதாப்பேட்டை, விநாயகபுரம், ஆயிரம்விளக்கு, ராயபுரம், சின்னமாத்தூர் ஆகிய பகுதிகளையும் இன்று மாலை வரை நேரில் பார்வையிடுகிறார்.

    அதன் பிறகு பொதுமக்கள் கூறிய கருத்துக்கள், தண்ணீர் தேங்குவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிக்கை மூலம் வெளியிடுவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தென்சென்னை மாவட்ட தலைவர் சாய் சத்யன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.


    • மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
    • விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தீவிர கண்காணிப்பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் வெள்ள பாதிப்பால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.


    கட்சி எல்லைகளைக் கடந்த மக்களின் ஆதரவோடு இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் எவர்மீதும் பழி போடுகிற படலத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 ஆயிரம் மீனவர்களும் 10 நாளாக கடலுக்குள் செல்லவில்லை.
    • மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    திருச்சி:

    புயல் எதிரொலியால் டெல்டாவில் 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 2-ம் தேதி நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயல் உருவானது. இதனால் தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் சீற்றமாக இருக்கும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களும், புயல் காரணமாக அவசர, அவசரமாக கரை திரும்பினர்.

    நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் நேற்று 3-வது நாளாக 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1500 விசைப்படகு, 5000 பைபர் படகுகளில் மீன் பிடி தொழில் செய்யும் ஒரு லட்சம் மீனவர்களும், காரைக்காலில் 500 விசைப்படகு, 300 பைபர் படங்களில், மீன் பிடி தொழில் செய்யும் 5000 மீனவர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 விசைப்படகு, ஆயிரம் பைபர் படகு, 5000 நாட்டு படகுகளில் மீன் பிடி தொழில் செய்யும், 90 ஆயிரம் மீனவர்களும் நேற்றும் கடலுக்குள் செல்லவில்லை.

    இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 நாட்டு படகுகள், 146 விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்யும் 10 ஆயிரம் மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 380 விசைப்படகுகள், 300 பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்யும், 5 ஆயிரம் மீனவர்களும் 10 நாளாக கடலுக்குள் செல்லவில்லை. விசை படகுகளுக்கு வழக்கமாக வழங்க கூடிய அனுமதி டோக்கன்களை, மீன்வளத்துறை வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மிச்சாங் புயல் எதிரொலியால் டெல்டாவில் 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது

    • மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
    • பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாத அவல நிலை நிலவுகிறது. பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி, இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    இது மட்டுமல்லாமல், பல வீடுகளுக்குள் மழைநீர் உட்புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டுள்ள மரச் சாமான்கள், தொலைக் காட்சி பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் என பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் கடுமையாக சேதமடைந்து உள்ளன.

    மொத்தத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித்து தருமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர்.
    • புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5000 மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் துறைமுகங்களில் 8 நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கட்டது.

    இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    முன்னதாக மீன்வளத்துறையினர் தடையை நீக்குவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்குச் செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் தண்ணீர், உணவு பொருட்களை சேகரித்து வந்த நிலையில் நேற்று இரவு கடலுக்குச் செல்ல விதித்த தடையை நீக்கியதால் இன்று அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    • ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    திருப்பதி:

    மிக்ஜம் புயல் காரணமாக ஆந்திராவில் திருப்பதி, பாபட்லா, என்.டி.ஆர், கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் பல ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது.

    இதனால் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி அடுத்த ஏர்பேடு மண்டலத்தில் உள்ள சிந்தேபள்ளி, எஸ் டி காலனியை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (வயது 4). கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சிறுவனின் வீட்டு சுவர் நேற்று இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    • புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.
    • மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    மிச்சாங் புயல் உருவானதை அடுத்து நாளை தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடக்கிறது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.

    இதனால், மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    • சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
    • கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.

    சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், பொது மக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், " மிச்சாங் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்- தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு.
    • தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இதேபோல், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
    • கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 29-ந்தேதி கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து அதிகாரிகள் பம்பரமாக சுழன்று மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை வடிய வைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டனர்.

    இதையடுத்து பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. இருப்பினும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கோடம்பாக்கம், மாதவரம் மஞ்சம்பாக்கத்தை அடுத்த வடபெரும்பாக்கம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமலேய உள்ளது.

    கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் நேற்று மாலை வரையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. ரங்கராஜாபுரம் மெயின் ரோடு, ஆசாத் நகர் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீர் வடிந்துள்ளன.

    மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வடபெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை புழல் ஏரி நீர் தண்ணீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று 4-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்கால்பாக்கம், செங்குன்றம், ஞாயிறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு வடபெரும்பாக்கத்தில் உள்ள பிரதான சாலையைத்தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் மழை நீர் வடிகால் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக் குட்பட்ட இந்த பகுதியில் 4 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆந்திரா நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    வட பெரும்பாக்கம் வி.எஸ்.மணி நகர் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வட பெரும்பாக்கம் பகுதியில் தனியார் ஆம்னி பஸ் நிறுத்தங்கள் 2 இடங்களில் உள்ளன. குறிப்பிடப்பட்ட 2 நிறுவனங்களை சேர்ந்த பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.

     இந்த பஸ்களும் வட பெரும்பாக்கம் சாலையில் செல்ல முடியாமல் புழல் காவாங்கரை, வடகரை வழியாக வட பெரும்பாக்கத்தை சென்றடைந்தன.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் 4-வது நாளாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விளாங்காடுப்பாக்கம் ஊருக்குள்ளும் புதிதாக அங்கு தோன்றியுள்ள மல்லிகா கார்டன் மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு தர்காஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    விளாங்காடுப்பாக்கம் கல்மேடு நியூஸ்டார் சிட்டியில் தொடை அளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் தற்போதுதான் முட்டியளவுக்கு குறைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் நீளமான இந்த கால்வாயை முறையாக தூர்வாரி முன்கூட்டியே கரைகளை பலப்படுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இதுபோன்று சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு மழை பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாங்காடு பாக்கம் வடகரை கிராண்ட்லைன் ஆகிய ஊராட்சிகளில் புதிய கால்வாய் வசதி இல்லாததாலும் ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் தற்போது பெய்து வரும் மழையில் நீர் வடியாமல் குடியிருப்புகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விளாங்காடு பக்கம் ஊராட்சியில் உள்ள தர்காஸ் கண்ணம்பாளையம் சிங்கிலி மேடு நியூ ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதே போல் தீர்த்தங்கரையும் பட்டு ஊராட்சியில் உள்ள குமரன் நகர் சன்சிட்டி கிரானைட் ஊராட்சியில் உள்ள உதயசூரியன் நகர் கிரானைட் வடகரை பகுதியில் உள்ள பாபா நகர் வடகரை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் செல்வதற்கு கால்வாய்கள் இருந்து வந்தன. இந்த கால்வாய்களை தனியார் சிலர் ஆக்கிரமித்தும் வீட்டு மனை விற்பனை செய்ப வர்கள் கால்வாய்களை ஆக்கிரமித்தும் உள்ளதால் மழைநீர் வெளியேறாமல் இருந்து வருகிறது.

    இந்த மழை நீரை வெளி யேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் இருந்து மீட்டு சீரான கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×