search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்"

    கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மது போதையில் இருந்த வாலிபர் மருத்துவ கருவிகளை உடைத்து, செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பில்லீஸ்வில்லா தெருவை சேர்ந்த வடிவேல் (27) என்பவர் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் சோப்பாயிலை குடித்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

    அப்போது அவர் மதுபோதையிலும் இருந்துள்ளார். இதற்கு செவிலியர்கள் சிகிச்சையளிக்க முற்படும்போது வடிவேல் அவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    சற்று நேரத்தில் போதை தலைக்கேறிய அவர் மருத்துவமனையில் இருந்த சிகிச்சையளிக்கும் கருவிகளை அங்கிருந்த சுத்தியலை எடுத்து உடைத்து நொறுக்கியுள்ளார். அதோடு பணியில் இருந்து செவிலியர்களையும் தாக்கினார். இதனால் பதற்றமடைந்த செவிலியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை மருத்துவர் பாலாஜி கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதற்குள் வடிவேல் அங்கிருந்து தப்பி உள்ளார்.

    இதுகுறித்து விசாரணை செய்த கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். #tamilnews
    பிரசவத்தின்போது தாய், குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது விசாரணை நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்துக்காக விஜயமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த நவம்பர் 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காஞ்சனாவை விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.

    அங்கு டாக்டர் விஜயசித்ரா பரிசோதனை செய்தபோது காஞ்சனாவுக்கு லேசான வலி மட்டுமே இருந்தது. எனவே முழுமையான வலி வரும்வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறினார். அதன்படி காஞ்சனா அங்கு இருந்தார். மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது பணி நேரம் முடிந்து டாக்டர் வெளியே சென்றுவிட்டார். செவிலியர் சுகன்யா என்பவர் மட்டுமே பணியில் இருந்தார். அவர் காஞ்சனாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.

    குழந்தையின் தலை பாதி வெளியேவந்த நிலையில் பின்னர் எந்த அசைவும் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால் பிரசவம் சிக்கலானதாக மாறியது. செவிலியர் சுகன்யாவுக்கு உதவிக்கு வேறு யாரும் இல்லை. எனவே அருகில் உள்ள வேறு சுகாதார நிலையங்களுக்கு காஞ்சனாவை கொண்டுசெல்ல முயற்சித்தார்.

    அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காஞ்சனாவை மிக ஆபத்தான நிலையில் செவிலியர் அனுப்பிவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கும் டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே ஆம்புலன்சு மூலம் காஞ்சனா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே காஞ்சனா பரிதாபமாக இறந்தார். பல மணி நேரமாக துடித்துக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியானது. தாயும், குழந்தையும் மரணம் அடைந்த தகவல் காஞ்சனாவின் உறவினர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது.

    விஜயமங்கலம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயசித்ரா, செவிலியர் சுகன்யா ஆகியோர் மீது காஞ்சனாவின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். முதலிலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று இருந்தால்கூட தாயையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்க முடியும். பணியில் அலட்சியமாக இருந்து தாய் மற்றும் குழந்தை பலிக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “இதுதொடர்பாக ஆரம்பசுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது துறைரீதியாக விசாரணை நடந்துவருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அதன்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
    ஒரத்தநாடு அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30) விவசாயி. இவரது மனைவி கனிமொழி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கனிமொழி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த செவிலியர்கள் டாக்டர் தற்போது பணியில் இல்லை. எனவே நாங்கள் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூறி கனிமொழிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

    இதில் கனிமொழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் செவிலியர்கள் மற்றும் கனிமொழி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இறந்த குழந்தையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் அவசர கால சிகிச்சைக்கு வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் இங்கு டாக்டர் பணியில் இருப்பதில்லை. நேற்று இரவு பிரசவ வலியால் துடித்த எனது மனைவியை இங்கு அழைத்துவந்தபோதும் டாக்டர் இல்லை.

    அப்போது பணியில் இருந்த 2 செவிலியர்கள் எனது மனைவிக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. இதற்கு காரணம் இங்கு டாக்டர் பணியில் இல்லாததே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



    இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு கொண்டு சென்ற பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்ததால் ஓரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கர்நாடக அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி சிவானந்தபட்டீல் கூறினார். #sivanandapatel #KarnatakaGovernmenthospital
    பெங்களூரு:

    சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஏழை மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியாக பொது சுகாதார சேவைக்காக மாநில அரசு சார்பில் ‘கர்நாடக சுகாதார அட்டை’ எனப்படும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் மக்கள் குழப்பம் அடைய தேவை இல்லை. அந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகள் இல்லாவிட்டாலும் தகுதியானவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

    மாநில அரசின் அனைத்து மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் இந்த கர்நாடக சுகாதார திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகளை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் விநியோகம் செய்யப்படும்.

    கர்நாடகத்தில் முதல் கட்டமாக 10 முக்கியமான மருத்துவமனைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த கர்நாடக சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்துடன் இந்த கர்நாடக சுகாதார திட்டத்தை ஒருங்கிணைக்கும் திட்டம் உள்ளது. ஆயுஸ்மான் திட்டத்தில் நோயாளிகள் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.

    அவ்வாறு இரு திட்டங் களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தகுதியான ஏழை நோயாளிகள் ரூ.7 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அரசு ஆஸ்பத்திரிகளில் 380 மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 180 டாக்டர்கள் தங்களின் பணியை தொடங்கிவிட்டனர். கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்களை நியமனம் செய்ய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    விரைவில் அந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை படிப்படியாக நீக்கப்படும். மாநிலத்தில் டெங்கு, மலேரியா நோய் பரவும் பகுதிகளில் அதிக கண்காணிப்பில் ஈடுபடும்படி டாக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.

    இவ்வாறு சிவானந்த பட்டீல் கூறினார். #sivanandapatel #KarnatakaGovernmenthospital
    சிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    மருத்துவர் ஷில்பா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பணியில் சேர்ந்தேன். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அபாயகரமான கட்டத்தில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நோயாளியாகவே ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4-ந் தேதி அன்று நான், இரவு பணிக்கு வந்தேன்.

    நான் பணிக்கு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு இருதயம் செயல் இழந்து போய் அதை செயலுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக ‘எக்மோ’ பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ பொருத்தப்படுவதற்கு முன்பாக அவரது இருதயத்தை கையால் மசாஜ் செய்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்து அது பயன் அளிக்காமல் போனதும் ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

    அதுவும் பயன் அளிக்காமல் போகவே, இருதயத்தை பிளந்து நேரடியாக இருதய பகுதியில் மசாஜ் செய்து உயிரூட்ட முயற்சித்துள்ளனர். அதுவும் பயன் அளிக்காததால் மார்பு எலும்புகள் துண்டிக்கப்பட்டு இருதய பகுதியில் ‘எக்மோ’ பொருத்தப்பட்டதாக தெரிந்துகொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

    செவிலியர் ஹெலனா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன். நான் பணியில் இருந்த நாட்களில் சசிகலா, மருத்துவர் சிவக்குமாரை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகவும் யாரும் பார்க்கவில்லை. டிசம்பர் 2-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

    3-ந் தேதி காலை 11 மணிக்கு வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சீரியஸ் ஆனதால் உடனடியாக வெண்டிலேட்டர் இணைக்கப்பட்டது. இதன்பின்பு, இருதயம் செயல் இழக்கும் வரை ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுத்ததாக கூறுவது தவறு. எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் எதுவும் சாப்பிடவில்லை.

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    ‘டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை ஜெயலலிதா 50 மில்லி காபி குடித்தார். அதன்பின்பு, ஜெயலலிதா எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை’ என்று ஹெலனா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் ரமா, டிசம்பர் 4-ந் தேதி மதியம் ஜெயலலிதா சாப்பாடு சாப்பிட்டதாக கூறி உள்ளார்.

    டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாக செவிலியர்களின் குறிப்பில் உள்ளது. இதுதொடர்பாக செவிலியர் ஹெலனாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், மருத்துவர்களின் குறிப்பில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது சம்பந்தமாக எந்த குறிப்பும் இல்லை. மாறாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை நார்மலாக இருந்ததாக மருத்துவர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ‘நவம்பர் 22-ந் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டார்’ என்று அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவ அறிக்கையில், ‘ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா மற்றும் திராட்சை, மாம்பழம், மலைவாழைப்பழம் போன்றவற்றை ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் சாப்பிடவில்லை என்று செவிலியர் ஹெலனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுபோன்று அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அதேபோன்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
    ×