என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய்"

    • நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • சூப்பர் குட் சுப்பிரமணி மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

    தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சுப்பிரமணி.

    திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்றுதான் அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

    அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர்.

    இவர், கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நான்காம் கட்ட புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நிதி நெருக்கடியுடனும் போராடி வந்தார்.

    அதனால், நிதி நெருக்கடி காரணமாக அவரது குடும்பத்தினர் திரைத்துறையினரிடமும், தமிழக அரசிடமும் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்துள்ளார்.

    இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றம் அரிசியில் அதிக அளவு ஆர்சனிக் ஏற்பட வழிவகுக்கும், இது 2050 ஆம் ஆண்டுக்குள் ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு வாழ்நாள் புற்றுநோய் மற்றும் உடல்நல அபாயங்களை அதிகரிக்கும் என்று தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரிப்பதும், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதும் மண் வேதியியலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆர்சனிக்கிற்கு சாதகமாக மாறக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

    இந்த ஆர்சனிக், அரிசி தானியத்தில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. நெல் சாகுபடியின் போது மாசுபட்ட மண் மற்றும் பாசன நீர் ஆகியவை அரிசியில் கனிம ஆர்சனிக் அளவை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்து கூடுதல் ஆர்சனிக்கையும் அரிசி உறிஞ்சிவிடும்.

    ஆர்சனிக்கின் அதிகரித்த வெளிப்பாடு நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. 

    இந்தியா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவாக உள்ளதால், இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் வயலில் 10 ஆண்டுகளில் 28 அரிசி வகைகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் விளைவுகளை அளந்தனர்.

    மாதிரிகளைப் பயன்படுத்தி, பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஏழு ஆசிய நாடுகளுக்கான கனிம ஆர்சனிக் அளவுகள் மற்றும் சுகாதார அபாயங்கள் மதிப்பிடப்பட்டன.

    இந்த ஆய்வின் முடிவில், அரிசியில் ஆர்சனிக் செறிவுகளை அதிகரிக்க வெப்பநிலை மற்றும் CO2 ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதையும், அரிசி நுகர்வோருக்கு உணவு ஆர்சனிக் வெளிப்பாடுகளை அதிகரிப்பதையும், 2050 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளின் மக்கள்தொகையில் கோடிக்கணக்கானோருக்குப் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதையும் கண்டறிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    ஆய்வு செய்யப்பட்ட ஏழு நாடுகளில், 2050 ஆம் ஆண்டில் அரிசியில் உள்ள ஆர்சனிக் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள்  ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   

    • சர்வதேச போட்டியில் தாம்சன் ஆடியதில்லை.
    • நடுகள வீரரான தாம்சன் 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஜோ தாம்சன், அங்குள்ள ரோச்டாலே, கார்லிஸ்லே யுனைடெட், சவுத் போர்ட், பரி உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். 36 வயதான் தாம்சன் நடுகள வீரராக 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் ஆடியதில்லை.

    இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாம்சனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரது விருப்பப்படியே அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சுற்றி இருக்க உயிர் பிரிந்தது.

    • என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
    • ன் மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.

    உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குல்தீப் தியாகி (46) தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, பிறகு தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நடக்கும் வீட்டில் இருந்த அவரது 2 மகன்களும் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்,

    பின்னர் அம்மா, அப்பாவை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் ஏற்கனேவே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்த்தை போலீசார் கண்டிபிடித்தனர். அக்கடிதத்தில், "நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன், என் குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரியாது. என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு" என்று குல்தீப் எழுதியுள்ளார்.

    துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
    • ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான நோயாக புற்றுநோய் உள்ளது. ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில வகை உணவுகள், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த உணவுகள் பற்றி...


    கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்:

    கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பிஸ்பெனால் ஏ என்ற வேதிப் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


    கார்பனேற்ற குளிர்பானங்கள்:

    கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


    ஹைட்ரஜனேற்ற எண்ணெய்:

    உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    'மைக்ரோவேவ்' பாப்கார்ன்:

    மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை:

    சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.


    பதப்படுத்திய இறைச்சி:

    பேக்கான், சாசேஜ் போன்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் அவை கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பிரிசர்வேட்டிவ்களுடன், நைட்ரேட்கள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.

    சிவப்பு இறைச்சி:

    'சிவப்பு இறைச்சி' எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது. குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.

    ஊறுகாய்:

    ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


    புகையிட்ட இறைச்சி:

    புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.


    கருவாடு:

    உப்பிட்டு தயாரிக்கப்படும் மீன் கருவாட்டில், நைட்ரோசாமைகள் உள்ளன. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

    மேற்கண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்வது புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • நம்மால் தவிர்க்கக் கூடிய புற்றுநோய் என்றால் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான்.
    • உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    மனித உடலில் நகம், முடி தவிர்த்து எல்லா உறுப்புக்களிலும் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் நம்மால் தவிர்க்கக் கூடிய புற்றுநோய் என்றால் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இதற்கு தடுப்பூசி உள்ளது.

    பெண்கள் பருவ வயதை அடையும் போதும், கருத்தரிக்கும் போதும் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று ஏற்படலாம். ஆரம்ப நிலை புற்றுநோய் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாது. கொஞ்சம் பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம். மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம்.

    பொதுவாக நம்முடைய உடலில் செல்கள் தோன்றி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால், வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பப்பை வாய் பகுதியில் செல்கள் உற்பத்தியாகும். ஆனால் அவை மறைவது இல்லை. இதனால் மிக அதிக அளவில் செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். நாளடைவில் இந்த செல்கள் உருவாக்கம் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்கிறோம்.

    இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். ஆணிடமிருந்து பெண்ணுக்கு வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறியலாம்.

    பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது, பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது, வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, புகைப்பழக்கம், போதை பழக்கம் ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

    கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க முடியும். மகளிர், மகப்பேறு மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 21 வயதைக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பாப்ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும். மிகவும் பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

    • குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில் ஜேம்ஸிற்கு புற்றுநோய் உறுதியானது தம்பதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • கணவர் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போது மனைவிக்கும் புற்றுநோய் எப்படி வந்திருக்க முடியும் என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
    பிரிட்டனில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தம்பதிக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜேப்பர்சன் லவ்டே. இவரது மனைவி பெத்தானி.

    ஜேம்ஸிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜேம்ஸிற்கு ஹோட்கின் லிம்போமா என்கிற வகை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில் ஜேம்ஸிற்கு புற்றுநோய் உறுதியானது தம்பதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஜேம்ஸிற்கு கிமோ தெரப்பி சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதி முடிவு செய்தனர்.

    அதன்படி, பெத்தானி கர்ப்பமானார். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற பெத்தானிக்கு சில மாதங்களில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. பெத்தானி 21 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது உடல்நிலையில் அசாதரணத்தை உணர்ந்துள்ளார். இது அனைத்தும் கர்ப்பம் தொடர்பான அறிகுறிகள் என்று நினைத்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் பெத்தானியை பரிசோதனை செய்ததில் அவருக்கு நான்-ஹோட்கின் லிம்போமா என்கிற வகை புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதனால் தம்பதி அதிர்ச்சியடைந்தனர். கணவர் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போது மனைவிக்கும் புற்றுநோய் எப்படி வந்திருக்க முடியும் என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இருவரும், புற்றுநோய் சிகிச்சையில் இருந்த நிலையில், பெத்தானிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய, ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை, வொர்செஸ்டர்ஷயர் அக்யூட் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தம்பதியை நலம் விசாரித்து வரும் நெட்டிசன்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    • 9 மாதங்கள் கழித்து சிறுவனின் பெற்றோர் டாக்டரை பார்க்க வந்துள்ளனர்.
    • பெற்றோரிடம் மகன் எப்படி இருக்கிறான் என்று டாக்டர் விசாரித்து இருக்கிறார்.

    அம்மா... நான் சீக்கிரமே செத்துவிடுவேன். ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரை நீ வேதனைப்பட கூடாது. உன் கண்ணில் நான் கண்ணீரை பார்க்க கூடாது என்று 6 வயது மகன் தன் வேதனையை தனக்குள் அடக்கி கொண்டும், மகனே உன்னை என் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க என்ன தவம் செய்தேனோ...? எங்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க நீ மனதுக்குள் அழுகிறாயே...! என்று ஒரே வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் எதையும் வெளிக்காட்டாமல் தவித்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

    ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாத 6 வயது மகனை அழைத்து கொண்டு பெற்றோர் சென்றனர். அந்த சிறுவனை பரிசோதித்த டாக்டர் சுதிர் அவனுக்கு வந்திருப்பது உயிர் கொல்லி நோயான புற்றுநோய். அதுவும் 4-வது நிலையில் இருக்கிறது. ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார்.

    பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அறுவை சிகிச்சை அவசியம் என்பதை தெரிவித்துள்ளார். எப்படியாவது மகனை காப்பாற்ற வேண்டும் என்று தவித்த அந்த பெற்றோர் ஆபரேஷனுக்கு சம்மதித்தனர்.

    இதற்கிடையில் தனக்கு வந்திருப்பது புற்றுநோய். நான் நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதை ஐ-பேட் மூலம் தேடுபொறியில் தேடி அறிந்து இருக்கிறான் சிறுவன். மரணம் தன்னை துரத்துகிறது என்பதை அறிந்தும் அந்த பாசக்கார சிறுவனின் இதயம் பெற்றோரை நினைத்து தவித்து இருக்கிறது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நம் மீது எவ்வளவு பாசம்? நாம் செத்துப்போவது தெரிந்தால் அவர்கள் அழுவார்களே... மிகவும் வேதனைப்படுவார்களே...

    அம்மா உங்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் உங்களோடு வாழத்தான் எனக்கு கொடுத்து வைக்கவில்லை என்று மனதுக்குள் வேதனைப்பட்டுள்ளான்.

    ஆஸ்பத்திரிக்கு சென்ற நாளில் இருந்து அடிக்கடி தாயின் முகத்தை ஒருவிதமான ஏக்கத்தோடு பார்த்து இருக்கிறான். அதைப்பார்த்த தாய் 'ஏண்டா அப்படி பார்க்கிறாய்? உனக்கு ஒன்றுமில்லை. சீக்கிரம் குணமாகிவிடும்' என்று ஆறுதல்படுத்தி வந்துள்ளார். ஆறாத் துயரத்தோடு அம்மா நீ என்னை ஆறுதல்படுத்துகிறாய் என்பது எனக்கு தெரியும் என்று அந்த சிறுவனும் பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு மனதுக்குள் தவித்து இருக்கிறான்.

    அதேநேரம் மகனுக்கு ஏதேனும் பயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோரும் கண்ணீரை உள்ளத்தில் அடக்கி உதட்டு சிரிப்போடு மகனிடம் நடந்து கொண்டனர். குறிப்பிட்ட நாள் ஆபரேஷன் முடிந்தது. கீமோதெரபியும் கொடுக்கப்பட்டது. உடல்நிலை சீராகி டிஸ்சார்ஜ் ஆகும்போது சக்கர நாற்காலியில் டாக்டரை பார்க்க அழைத்து சென்றுள்ளார்கள். பெற்றோரும் உடன் சென்று இருக்கிறார்கள்.

    மருத்துவரும் 'சிறுவனிடம், இனி உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை' என்று தைரியம் ஊட்டியிருக்கிறார். டாக்டரிடம் ஆலோசனை கேட்டு திரும்பிய போது அந்த சிறுவன் 'அம்மா நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள். நான் டாக்டரிடம் தனியாக பேச வேண்டும்' என்று கூறியிருக்கிறான். அதை கேட்டதும் பெற்றோர் வெளியே சென்றுவிட்டனர். பின்னர் அந்த சிறுவன் டாக்டரிடம், 'டாக்டர் எனக்கு வந்திருப்பது கேன்சர். நான் வாழப்போவது இன்னும் சில மாதங்கள் தான். எல்லா விபரங்களையும் ஐ-பேட் வழியாக படித்து தெரிந்து கொண்டேன்.

    இப்போது உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் டாக்டர். எனக்கு புற்றுநோய். நான் சீக்கிரம் செத்துவிடுவேன் என்ற விபரத்தை என் பெற்றோரிடம் சொல்லி விடாதீர்கள். அவர்களுக்கு என்மீது ரொம்ப பாசம். உண்மையை அறிந்தால் அவர்களால் தாங்க முடியாது டாக்டர். பிளீஸ் டாக்டர் என்று கெஞ்சி இருக்கிறான்.

    அவனை கைகுலுக்கி அனுப்பிய டாக்டரும் சில நிமிடங்கள் தவித்து போயிருக்கிறார். அந்த சிறுவனின் மனநிலையை அறிந்து டாக்டராலும் தாங்க முடியவில்லை. பெற்றோரை அழைத்து எல்லா விசயங்களையும் அவர்களிடம் தெரிவித்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

    9 மாதங்கள் கழித்து அந்த சிறுவனின் பெற்றோர் டாக்டரை பார்க்க வந்துள்ளனர். அவர்களிடம் மகன் எப்படி இருக்கிறான் என்று விசாரித்து இருக்கிறார்.

    'அவன் இல்லை டாக்டர்! டிஸ்னிலேன்ட் பார்க்க ஆசைப்பட்டான் அங்கும் அழைத்து சென்றோம். 8 மாதங்கள் நன்றாக இருந்தான். அதன்பிறகு திடீரென்று இறந்துவிட்டான் என்று விபரத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

    சில விநாடிகள் நிசப்தத்துக்கு பிறகு அந்த பெற்றோர் டாக்டரிடம் 'உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தோம் டாக்டர். எங்கள் பிள்ளையை கூடுதலாக 8 மாதங்கள் எங்களோடு வாழ வைத்துள்ளீர்கள்' என்று கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்கள்.

    • உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.
    • லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

    நமது உடல் உறுப்பில் சிலவகை செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.

    இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் பண்பு கொண்டது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகள் பெரியவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.

    பெரியவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டாலும், லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒன்று முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இது ரத்த அணுக்களின் உற்பத்தியை தடுத்து, ஹீமோகுளோபின் அளவை பெருமளவில் குறைத்து, உடல் நிலையை சீர்குலைக்கிறது.

    இது தவிர மத்திய நரம்பு மண்டலத்தில் கட்டிகள், நியூரோபிளாஸ்டோமா போன்ற பல்வேறு புற்றுநோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் என்பதே பயமுறுத்தும் காரணியாக இருப்பின், அதுவே குழந்தைகளுக்கு ஏற்படும் போது இரட்டிப்பான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரை பறிக்கும் நோய்களில், புற்றுநோய் 9-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு தீர்வு காணும் நோக்கத்துடன் உலக சுகாதார நிறுவனமானது புற்றுநோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு புற்றுநோய் குறித்த முழுமையான புரிதல் இல்லாத வயதிலேயே, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றால் புற்றுநோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ந் தேதி (இன்று) சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

    குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

    அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.

    • கணைய புற்றுநோய் சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது.
    • இது நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை

    இன்றைய தலைமுறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் கணைய புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பொதுவாக கணைய புற்றுநோய் சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை மற்றும் அறிகுறிகள் வெளிப்பட்டாலும் அது கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகள் தான் என்று அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.

    55 ஆண்களை காட்டிலும், 55 வயதுக்குட்பட்ட பெண்களில் கணையப் புற்றுநோய் 2.4 சதவீதம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களிடையே கணைய புற்றுநோயின் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2001 மற்றும் 2018ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட டேட்டாக்களின்படி, இரு பாலினத்தவர்களிடமும் புற்றுநோய்க்கான விகிதங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தான் முதல் அறிகுறியாக வெளிப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் வந்தால் நோயாளியின் கண்கள் மற்றும் தோலின் நிறம் மஞ்சளாக காட்சியளிக்கும். பித்த நாளத்திற்கு அருகில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது, இந்த புற்றுநோய்கள் குழாயில் அழுத்தி மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.

    • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது நிறுவப்பட்டுள்ள டெலிகோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.2.76 கோடி மதிப்பிலானது.
    • ‘ஈக்வினாக்ஸ்’ என்று அழைக்கப்படும் கருவியானது உலகத்தர தொழில்நுட்பத்திலானது.

    சென்னை:

    புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை அளிப்பதற்கான டெலிகோபால்ட் கருவி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    வழக்கமான கதிர்வீச்சு சிகிச்சைகளைக் காட்டிலும் துல்லியமாக புற்றுநோய் செல்களை இது அழிக்கவல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிசிச்சை என வெவ்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தன்மை மற்றும் வீரியத்தை பொருத்து அவை வேறுபடுகின்றன.

    அதன்படி, மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், தோல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு தேவையின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் அதற்காக தனி துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

    கதிரியக்க சிகிச்சைகளைப் பொறுத்தவரை அதி நவீனமான ஒன்றாகக் கருதப்படுவது 'ட்ரூபீம் ரேடியேஷன்' முறை மற்றும் டெலிகோபால்ட் முறை தான். அந்த வகையான சிகிச்சை மூலம் மிகத் துல்லியமாக புற்றுநோய்க் கட்டிகளை அகற்றலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    பிற கதிரியக்க சிகிச்சைகளில் புற்றுநோய் கட்டிகளுக்கு அருகே உள்ள உறுப்புகளுக்கு சிறிய அளவிலான பாதிப்புகளோ அல்லது எதிர்விளைவுகளோ ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் புறக் கதிர்வீச்சு சிகிச்சைக்காக அதிநவீன டெலிகோபால்ட் கருவி மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் நிறுவப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மருத்துவமனையின் கதிர்வீச்சு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ்.சரவணன் கூறியதாவது:-

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது நிறுவப்பட்டுள்ள டெலிகோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.2.76 கோடி மதிப்பிலானது.

    'ஈக்வினாக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த கருவியானது உலகத்தர தொழில்நுட்பத்திலானது. இந்த சிகிச்சையின் கீழ் காமா கதிர்கள் உருவாக்கப்பட்டு, அதனை புற்றுநோய் பாதித்த உடல் திசுக்களின் மீது மட்டும் செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்.

    இக்கருவியின் மூலம் உயர் ஆற்றல் காமா கதிர்களை செலுத்துவதற்கு முன்பு சி.டி. சிமுலேட்டர் என்ற துணைக்கருவி மற்றும் மென் பொருள் உதவியுடன் சிகிச்சை விவரங்கள் பதிவேற்றப்படுவதால் மிகத் துல்லியமாகவும், துரிதமாகவும் புற்றுநோய் செல்களை அழிக்க இயலும்.

    கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்ற பல்வேறு புற்று நோய்களை முழுமையாக குணப்படுத்த இத்தகைய சிகிச்சை முறைகள் உதவும்.

    புற்று நோய் 4 நிலைகளாக இருக்கும். முதல் மற்றும் 2-ம் நிலைகளில் கண்டு பிடித்து விட்டால் இந்த நவீன கதிர்வீச்சு கருவிகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

    3 மற்றும் 4-ம் நிலை நோயாளிகளுக்கு பலவிதமான சிகிச்சை முறைகள் தேவைப்படும். அதாவது அறுவை சிகிச்சை, ஹீமோ தெரபி, கதிர்வீச்சு தெரபி போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

    தமிழக அரசு புற்று நோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ராயப்பேட்டை மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள 'லீனியர் ஆக்சல ரேட்டர்' கருவியின் விலை மட்டும் ரூ. 22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே இருந்த 'கோபால்ட்' கருவி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டதால் பழமையாகி விட்டது. எனவே இப்போது புதிய கருவி நிறுவப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். நோயாளிகள் காத்திருப்பு நேரமும் குறையும்.

    இந்த கோபால்ட் கருவி தமிழகம் முழுவதும் 15 ஆஸ்பத்திரிகளில் நிறுவ திட்டமிட்டு 7 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் 8 இடங்களில் நிறுவப்படும். அரசின் ஒத்துழைப்பால்தான் இவ்வளவு அதி நவீன சிகிச்சை கிடைக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளில் ராயப்பேட்டை மருத்துவமனையில் மட்டும் கோபால்ட், லீனியர் ஆக்சலரேட்டர் மற்றும் எச்.டி. ஆர். முறையின் கீழ் 12 ஆயிரம் புற்றுநோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய இந்த சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இங்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×