என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு"

    • டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷண நிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மட்டுமல்லாது பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

    ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியாக வெள்ளையனுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படும் ஏராளமான சிறுவர்கள்-சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறியமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர், மாறாந்தை, நாலாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. இதையடுத்து காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனைத்து யூனியன்களின் வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்துள்ளோம்.

    ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தது மூளை காய்ச்சலால் தான். நேற்று கடையம் பகுதியில் இறந்த 8 மாத சிறுவன் சமீபத்தில் 4 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவந்துள்ளான். அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.

    பெரும்பாலும் டெங்குவில் இருந்து மீள ஒவ்வொருவரின் உடலிலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் இருந்தால் போதுமானது. பொதுமக்கள் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்டம் சங்கரநத்தம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானார்.
    • இந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமியின் ஒரே மகன் பாலமுருகன் (வயது15) 10-ம் வகுப்பு படித்தான். இந்த சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

    சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், சரியான சுகாதாரமின்றி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சலால் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது
    • மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்

    கோவை,

    கோவையில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    விழிப்புணர்வு இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்ற ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர்.குடிநீர் தொட்டி

    மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    • 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
    • அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தென் மேற்கு பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.

    தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    200 ஊழியர்கள்

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

    மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.

    429 ரூபாய் ஊதியம்

    இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது.
    • தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக காணப்படும்.

    தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் பயப்படக்கூடிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுகாதார தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சல் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பரவுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள். கடந்த சில வாரங்களில் வரும் குழந்தைகளில் பலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக ரத்த பரிசோதனை முடிவு தெரிவிக்கின்றன என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    காய்ச்சல் வயிற்றுப்போக்குடன் வரும் குழந்தைகள் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தால் பாசிட்டிவ் என வருகிறது.

    மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது. அரசு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் இப்பாதிப்பு பொதுவாக அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டைபாய்டு காய்ச்சல் பாதிக்கப்படும் பெரியவர்களுக்கு பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு புற நோயாளிகளாக வந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    குழந்தைகள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    டைபாய்டு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியதாகும். இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீரில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொற்றை ஏற்படுத்துகிறது.

    குடிக்கும் நீரில் இருந்து வைரஸ் கிருமி பாதிப்பை உண்டாக்குகிறது. சுகாதார மற்ற தண்ணீரை பருகும் போது பாதிப்பு ஏற்படும். அதிகபட்சமாக 104 டிகிரி வரை காய்ச்சல் தாக்கும். தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

    டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமான சுத்திகரிப்பு செய்யாத குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெளியில் சாப்பிடும்போது பழங்கள், பச்சை காய்கறிகள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    வெளியில் சாப்பிடும் உணவுகள் சூடாக உட்கொள்ள வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது. தெருவோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கும் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள கூடாது.

    தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    • சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
    • யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

    கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம் ஆகும்.

    சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.

    யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்.

    நம்முடைய கலைஞர், அவருடைய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் அவருடைய அப்பா முத்துவேல் தாத்தா கலைஞருடைய ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடக் கல்வியுடன் சேர்த்து இசைக் கல்வியும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்கள் என்று எழுதி இருக்கிறார். ஆனால், இசையைப் பள்ளியில் சேர்ந்து கற்றுக் கொள்வதற்கு கலைஞருக்கு ஈடுபாடும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதற்கான காரணத்தையும் அவர் அந்த 'நெஞ்சுக்கு நீதி' நூலில் தெரிவித்திருக்கிறார்.

    என்ன காரணம் என்றால், இசைக் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பயிற்சிக்கு சட்டை போட்டுக் கொண்டு போகக் கூடாது. துண்டை இடுப்பில் தான் கட்டிக்கொண்டு போகவேண்டும். காலில் செருப்பு போடக்கூடாது. இப்படிச் சாதி மத சாஸ்திர சம்பிரதாயம் என்பதன் பெயரால் நடத்தப்படும் கொடுமையை என்னுடைய பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியதுதான், நான் இசைக் கல்வி கற்க தனக்கு ஆர்வம் ஏற்படவில்லை என கலைஞர் தெரிவித்திருக்கிறார்.

    அந்த வயதில் கலைஞரின் பிஞ்சு மனதில் சனாதனத்திற்கு எதிராக எரிமலை வெடித்துள்ளது. அதனால் தான் தன்னுடைய ஐந்து வயதில் ஆரம்பித்த அந்தப் போராட்டம், 95 வயது வரைக்கும் கலைஞர் சனாதனத்தை எதிர்த்து பெரும் போரை நடத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் மாற்றக் கூடாது என்று எதுவுமே இல்லையென்று எல்லாத்தையும் மாற்றிக் காட்டியவர்தான் கலைஞர்.

    மனிதர்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். வள்ளலார், அன்றைக்குப் பற்ற வைத்த அந்த அடுப்பு இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது.

    வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்பிலிருந்து நெருப்பை எடுத்துத்தான் நம்முடைய முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.

    திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

    பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில்மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
    • டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 35 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் ஒருவருக்கும், அறந்தாங்கி பகுதியில் மேற்பனைக்காடு குளமங்கலம் வடக்கு தெரு,எழில் நகர், பூவை உள்ளிட்ட நகர பகுதிகளில் மேலும் 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் 20 டெங்கு களப்பணியாளர்களும், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 10 களப்பணியாளர்களும், நகராட்சி பகுதிகளில் 30 களப்பணியாளர்களும் டெங்கு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்குதல் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக அனைத்து அரசுமருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 8 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவ ர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்ப ப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு பாதிக்கப்பட்ட வர்களுக்கு பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் டெங்கு சிகிச்சை பெறு பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் சுற்றுப்புறங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை என ஈடுபட்டுள்ளனர்.

    • புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது
    • சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனிக்காசலம் தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்துகளை தெளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் மருந்து அடிக்கப்பட உள்ளது.
    • வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. பனியன் தொழிலாளர்கள் அதிக அளவு வசித்து வருவதால், மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதியாக மாநகராட்சி பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கவும், கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோல் தண்ணீர் தொட்டிகளில் அபாட் மருந்தும் தெளித்து வருகிறார்கள்.

    மேலும் சிரட்டை, டயர்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்கள். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வார்டுக்கு 5 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் என 300 பேர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மருந்துகள் தெளித்து வருகிறார்கள்.

    மேலும் திருப்பூர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அங்கு தனிமையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மதுரையில் தீவிரமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • போதிய மாத்திரைகள், மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உயிரி ழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக அறிகிறோம்.

    மதுரையில் ஒரு நாளில் 3குழந்தைகள் 4சிறுவர்கள் மொத்த 15பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை, தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.

    தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பாதிப்பு அதனால் பாதாளச் சாக்கடை பாதிப்பு குடிநீரில் சாக்கடை கலப்பது போன்ற வைகள் நடைபெறுகிறது.

    மேலும் பாதாள சாக்கடை பதிப்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சாலை ஓர தெருக்களில் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதும் மழை போல் தேங்கும் குப்பைகளால் தொற்று நோய்கள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மதுரையில் முக்கிய கால்வாய்க ளான சிந்தா மணி, கிருது மால், பந்தல்குடி, அனுப்பானடி மற்றும் பனையூர் உள்ளிட்ட முக்கிய கால் வாய்கள் பல ஆண்டு களாக தூர்வாரப்படா மல் உள்ளது.

    இந்த கால்வாய்களில் கழிவு சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் வாய்க்கால் ஆக்கிரமித்து உள்ளது.

    மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகம் வேகமாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

    மதுரை மாநகரில் உள்ள பிரதான கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கால்வாய்கள் குப்பைத் தொட்டிகளாக கழிவு நீர் தேங்கும் குளமாக மாறி வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மூலம் டெங்கு பாதித்த பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை எடுத்து தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தினசரி வருதை உறுதிப் படுத்த வேண்டும். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற வற்றை பொது மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் போதிய மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்டவை தேவை யானதுக்கு மேல் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுரை மாநகரில் மற்றும் புறநகரிலும் திடீர் காய்ச்ச லால் மக்கள் அவதிப்படு வதை மருத்துவ சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்ச்சி பிரசாரம் செய்து பொது மக்களின் அச்சத்தை தவிர்த்திடும் வகையில் சுகாதாரத்துறை ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    ×