search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 154407"

    பஸ் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காததாலும் போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதாலும் விமான பயணத்தை ஏராளமான பயணிகள் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்து விட்டதால் பஸ்களை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். இதனால் அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையும் உள்ளது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர். போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதால் விமான பயணத்தை ஏராளமானோர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடிக்கு 5 முறையும் மதுரை-10, திருச்சி-6, கோவை-14, சேலம்-2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    தற்போது இந்த விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த விமானங்களிலும் டிக்கெட்டுகள் இல்லை.

    சில விமானத்தில் மட்டும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் உள்ளன. அவை ரூ.19 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதிலும் சிலர் பயணம் செய்கிறார்கள்.

    எனவே வரும் பண்டிகை காலங்களில் பஸ், ரெயிலில் செல்வதை விட விமான பயணத்தை பெரும்பாலானோர் தேர்வு செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். #Diwali
    சென்னை:

    தீபாவளியையொட்டி தமிழக அரசு 5-ந் தேதியை (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்ததால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பெரும்பாலானோர் 2-ந் தேதி (அதாவது, நேற்று) சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், 5 தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

    அதன்படி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல், தாம்பரம், ஊரப்பாக்கத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதாலும், மற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததாலும் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.



    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக நேற்று ரெயில்களிலும் பலர் பயணம் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான திருச்செந்தூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, அனந்தபுரி, ராமேஸ்வரம், நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று பிற்பகலிலும், இரவிலும் சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    ரெயில்கள் நடைமேடைக்கு வந்ததும் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளை தவிர, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றினார்கள்.

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாமல் இருப்பதற்காக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். #Diwali
    பயணிகளுக்கு பண்டிகை கால பரிசாக 47 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 101 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை குறைத்துள்ளது. #RailwayMinister #PiyushGoyal
    புதுடெல்லி:

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, முக்கியமான ரெயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    44 ராஜதானி ரெயில்களிலும், 52 துரந்தோ ரெயில்களிலும், 46 சதாப்தி ரெயில்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, இந்த ரெயில்களில் ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன், அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதுபோன்று, 50 சதவீதம் வரை கட்டணம் உயரும். ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மற்றும் பொருளாதார வகுப்பு பெட்டிகளில் கட்டணம் மாற்றப்படவில்லை.

    இந்நிலையில், பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 15 பிரீமியம் ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் முழுமையாக ரத்து செய்துள்ளது. 32 ரெயில்களில் பண்டிகை அல்லாத சாதாரண காலங்களில் சிறப்பு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

    மேலும், 101 ரெயில்களில் சிறப்பு கட்டணம், அடிப்படை கட்டணத்தில் 1.5 மடங்கு என்பதில் இருந்து 1.4 மடங்காக குறைக்கப்பட்டு உள்ளது.




    இந்த தகவலை ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், “படுக்கைகள் 50 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பும் 15 ரெயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பெறலாம். படுக்கைகள் முழுமையாக நிரம்பும் என்பதால் ரெயில்வேயும் பலன் அடையும். எனவே, இருதரப்புக்கும் பலன் கிடைக்கும். பயணிகளுக்கு பண்டிகை கால பரிசாக இதை அறிவித்துள்ளோம்” என்றார். #RailwayMinister #PiyushGoyal

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் பஸ், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த பந்த் போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே ஆதரவு தெரிவித்திருந்தன. ஆளும்கட்சியான அ.தி.மு.க. மட்டும பந்தை ஆதரிக்கவில்லை.

    இருப்பினும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததால் தமிழகத்திலும் முழு அடைப்புக்கு பெருமளவு ஆதரவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    சென்னையில் இன்று காலையில் வழக்கம் போல பஸ்-ஆட்டோக்கள் ஓடின. ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. தனியார் பள்ளி வேன்களும், வழக்கம் போல ஓடின. தமிழகம் முழுவதும் இதே நிலையே நீடித்தது.

    சென்னையில் 38 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன.



    கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. இதனால் மார்க்கெட்டில் உள்ள 2400 கடைகளும் இன்று திறக்கப்பட்டு இருந் தன. கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரையில் நள்ளிரவு 2.30 மணியில் இருந்தே பரபரப்பாக செயல்பட தொடங்கி விடும். அதே பரபரப்பு இன்று காணப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் என அனைத்தும் திறந்து இருந்தன.

    பந்த் போராட்டத்திற்கு வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கடைகளை மூடி இருந்தனர்.

    விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை மாநகர் முழுவதும் முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை கமி‌ஷனர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியை முடுக்கிவிட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike

    சென்னை எழும்பூர்- மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட உள்ளது. #Train

    சென்னை:

    சென்னை எழும்பூர்- மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

    இந்த மாற்றம் மதுரையில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரசில் 20-ந்தேதியும், எழும்பூர்- மதுரைக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரசில் 23-ந்தேதியும் அமல்படுத்தப்பட உள்ளது.

    எழும்பூர்- திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரசில் 21-ந்தேதியும், திருச்சி- எழும்பூருக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரசில் 23-ந்தேதி பெட்டி மாற்றம் செய்யப்படுகிறது.

    எழும்பூர்- திருச்சிக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை ரெயிலில் 22-ந் தேதியும், திருச்சி- எழும்பூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரசில் 21-ந்தேதியும் அமல்படுத்தப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூரில் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூரில் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடிப்பூர விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தாம்பரம்- நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 1.24 மணிக்கும், எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 3.04 மணிக்கும், எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.29 மணிக்கும், எழும்பூர்- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 11.04 மணிக்கும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

    இதேபோல் மதுரை- எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதிகாலை 2.59 மணிக்கும், செங்கோட்டை - எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.59 மணிக்கும், மேல்மருவத்தூரில் 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை நின்று செல்லும்.

    மதுரை-எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இரவு 12.49 மணிக்கு மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    விபத்தில் உயிர் பலியை தவிர்க்க, ரெயிலில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி ரெயில்வே துறைக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் வக்கீல் கே.சதீஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே ஓடும் புறநகர் ரெயிலில் கடந்த 24-ந் தேதி காலையில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணம் செய்தனர். இந்த ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த தடுப்புச்சுவரில், படியில் பயணம் செய்த பயணிகள் மோதினர். இதில், 5 பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. சென்னையில், மெட்ரோ ரெயிலும் இயக்கப்படுகிறது. இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த ரெயிலில் பயணிகள் ஏறியதும், தானியங்கி கதவும் மூடிவிடுகின்றன. அதன்பின்னரே ரெயில் இயக்கப்படுகிறது.

    அதுபோல, விபத்தில் உயிர் பலியை தவிர்க்க, புறநகர் ரெயில் மட்டுமல்லாமல், அனைத்து ரெயில்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று கடந்த 24-ந் தேதி இந்திய ரெயில்வே துறையின் அமைச்சர், தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளர், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுவை அனுப்பினேன். இதுவரை அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய ரெயில்வே துறை செயலாளர், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஆகஸ்டு 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    சென்னையில் இன்று பஸ்-ரெயில்கள் வழக்கம் போல் ஓடின. பாதுகாப்பு பணிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்தும் அ.தி.மு.க. அரசு பதவி விலகக் கோரியும் அனைத்துக்கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.



    ஆனாலும் இன்று சென்னையில் பஸ்-ரெயில்கள் வழக்கம் போல் ஓடின. மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. கடைகளை பொறுத்தவரை ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    சென்னையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் வேலைக்கு செல்லாததால் ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் பஸ்களை இயக்கினார்கள்.

    இதே போல் தொ.மு.ச. சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றாலும், தொழிற்சங்கத்தை சாராத மற்ற ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்கினார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட் தியாகராயநகர், பாரிமுனை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் தான் அடைக்கப்பட்டிருந்தன.

    ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகைகடைகள், செல்போன் கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் திறந்திருந்தன.

    நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    தலைமை செயலகம், டி.ஜி.பி. அலுவலகம், மெரீனா கடற்கரை, ரெயில் நிலையங்கள், பஸ் டெப்போக்களில் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டிருந்தனர்.

    கடை வீதிகளிலும் அதிகளவு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொது வேலை நிறுத்தத்தால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ரெயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    நாளை அனைத்துக்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #sterliteprotest
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் உயிர் இழந்தனர்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நேற்று நடந்தது.

    இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் இன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

    நாளை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.



    நாளை பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  #sterliteprotest

    ×