search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான்.
    • அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டின் ஒற்றுமைக்காகவும், மக்களை காக்கவும் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். புதுவையில் நான் முதலமைச்சராக இருந்த போது மோடி, அமித்ஷா ஆகியோர் கிரண்பேடியை கவர்னராக நியமித்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.

    பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் மீதும், முதல்வர் மீதும் சி.பி.ஐ.க்கு அனுப்பும் பணிகளை செய்து வந்தார். இதேநிலை தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது

    பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான். பொய் குற்றச் சாட்டுகளை கூறி எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி, அமித்ஷா செய்து வருகின்றனர்.

    எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படும் மோடி, அமித்ஷாவை தூக்கி எறியும் வகையில், பல மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள் குழுவாக வருகிற 23-ந் தேதி சந்திக்கும் கூட்டம் நடக்கிறது.

    புதுவை மாநிலத்தில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் பிரதமராக வர வேண்டும். நாகபாம்பை விட கொடியவர்கள் பா.ஜனதாவினர். பா.ஜனதாவை அழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 9 ஆண்டுகளில் இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டார்.
    • எதிர்க்கட்சிகளால் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் குறிப்பிட முடியவில்லை.

    சிர்சா :

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பா.ஜனதா சார்பில் அரியானாவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்து கொண்டார்.

    அரியானாவின் சிர்சாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி பேசினார்.

    அத்துடன் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    9 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.12 லட்சம் கோடி அளவிலான ஊழல்களை செய்ததை நினைத்துப்பாருங்கள்.

    ஆனால் இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கூட எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் குறிப்பிட முடியவில்லை.

    காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்தபோதும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ மோடி அரசு உறுதியாக நீக்கியது.

    9 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து நமது வீரர்களின் தலையை துண்டித்து செல்வார்கள். அப்போது மன்மோகன் சிங் மற்றும் சோனியா அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது.

    ஆனால் மோடி தலைமையிலான அரசு உரி, புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. 9 ஆண்டுகளில் இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டார்.

    அரியானாவில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 3டி அரசாக இருந்தது. அதாவது தர்பாரிகள் (மன்றத்தினர்), தாமத் (மருமகன்) மற்றும் டீலர்களுக்கான அரசாக இருந்தது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    முன்னதாக பஞ்சாப்பை ஒட்டியுள்ள குர்தாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

    • புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
    • பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.

    கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

    மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

    தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.

    தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.

    புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது.
    • பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

    மேட்டூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணை மதகுகளை திறந்து வைத்து பூக்கள் தூவி டெல்டா குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேட்டூர் அணை கட்டப்பட்டது பற்றிய அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க அரசு, மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். இதுவரை இல்லாத ஒரு சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.5 லட்சம் வேளாண் மின் இணைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறை மூலமாக நிறைவேற்றி வருகிறோம். அதுபோல் 3-வது ஆண்டாக மேட்டூர் அணையை குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் நாள் திறந்து வைக்க நான் வந்து இருக்கிறேன். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது. அது கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டும். அதற்கும் நாம் திட்டமிட்டோம். அதற்காக, கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.62 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    காவிரி நதிநீரை பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு ரூ.61 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல்சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

    இதன் காரணமாக காவிரி நதி நீர் கடைமடை வரைக்கும் சென்று கடந்த 2021-ம் ஆண்டு குறுவை பருவத்தில் 4.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல் கடந்த 2022-ல் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தினால் 19 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது மே.24-ந்தேதி அன்று மேட்டூர் அணையை திறக்க நம்முடைய அரசு ஆணையிட்டது. 19 நாட்களுக்கு முன்னதாகவே அணை திறந்தாலும் அதற்கு முன்கூட்டியே அனைத்து கால்வாய்களும் தூர்வாருவதற்கு நீர்வளத்துறை ரூ.80 கோடி மதிப்பீட்டில் அரசு ஆணையினை உரிய காலத்தில் வெளியிட்டு அந்த பணிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

    அனைத்து தரப்பு உழவர்களும் அப்போது மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்கான பாராட்டும் தெரிவித்தார்கள்.

    கடந்த ஆண்டும் காவிரி நதி நீரை பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தில் ரூ.61 கோடியே 12 லட்சம் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை பருவத்திற்கு தேவைப்படும் குறைந்த வயதுடைய நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர் கடன் போன்ற இழப்பீடுகளும் டெல்டா மாவட்டத்தினுடைய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டன. இதன் விளைவாக கடந்த ஆண்டு குறுவை சாகுபடி கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சாதனையாக 5.36 லட்சம் ஏக்கரை கடந்து, 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

    நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது. மேலும் சென்ற ஆண்டில் மேட்டூர் அணை நீரை மிகவும் கவனமாக பயன்படுத்தியதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 103.35 அடியாக உள்ளது. எனவே மேட்டூர் அணையினை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி திறப்பதற்கு நம்முடைய அரசு முடிவு எடுத்தது.

    நீர்வளத்துறை கடந்த 2 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் எல்லாம் மேற்கொண்டது. இதற்காக நடப்பாண்டில் 90 கோடி ரூபாய் அரசு அதற்காக அனுமதி அளித்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்.

    இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது என அமித்ஷா பட்டியல் போட்டு இருக்கிறார். நான் சேலத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் இது பற்றி தெளிவாக பேசி இருக்கிறேன். அதாவது பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது எந்த சிறப்பு திட்டங்களும் இந்த 9 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி இருந்த தி.மு.க. அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்ன? என்ன? தனி சிறப்புகள் எல்லாம் திட்டங்களாக வந்தது என பட்டியல் போட்டு நான் காட்டி இருக்கிறேன். அதை ஒரு வேளை அவர் படிக்கவில்லையா? அல்லது அதை படித்து யாராவது அதைப்பற்றி எடுத்துச் சொல்லவில்லையா? என எனக்கு சந்தேகம்.

    பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷா பேசியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. அவர் வெளிப்படையாக சொன்னார் என்றால் அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்ல முடியும்.

    இருந்தாலும் தமிழர் பிரதமராக ஆக்க போகிறேன் என சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதமர் மோடி மேல் என்ன கோபம் என தெரியவில்லை. 2024-ல் பா.ஜ.க.வினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழிசை, முருகன் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூரில் அமித்ஷா பேசியபோது பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.
    • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்தனர். இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

    உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி மாநகர் முழுவதும் மிகப்பெரிய பேனர், கொடி உள்ளிட்டவை வைத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இதில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது, மேடை அருகே இருந்த பெரிய பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. பேனர் அருகே மக்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.
    • காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டது என்றார் அமித்ஷா.

    வேலூர்:

    வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை.

    தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர் மோடி.

    காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.

    திருக்குறளை 23 மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழிசெய்திருக்கிறார் பிரதமர்.

    9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

    6 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது

    தமிழகத்தில் குடிநீர் இணைப்பு இல்லாத ஊர்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள்ளது.

    ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் படிக்கத் தொடங்கி விட்டனர்.

    திமுக 18 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட கொண்டு வரவில்லையே, ஏன்?

    தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு 62 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி சுற்று பகுதி முழுவதும் ராட்சத பலூன்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதற்காக சென்னை பெங்களூரு 6 வழிச்சாலை அருகே உள்ள கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்துள்ளனர்.

    இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று மதியம் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.

    அங்கிருந்து 6 வழிச்சாலை வழியாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்கிறார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் 6 வழிச்சாலை வழியாகவே வேலூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    அமித்ஷா பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுவதையொட்டி வேலூரில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கார் வேன்களில் கந்தனேரி மைதானம் அருகே தொண்டர்கள் வந்து இறங்கினர். மேலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர்.

    விரிவாக்க பணிகளுக்குப்பிறகு அமித்ஷா வருகை தரும் ஹெலிகாப்டர் தான் முதன் முதலாக வேலூர் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. இதனால் சென்னை-வேலூர் விமான நிலையம் வரை ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நேற்று மாலை நடந்தது.

    சென்னையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 45 நிமிடங்களில் வேலூர் வந்தடைந்தது. அப்போது வேலூர் விமான நிலையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஹெலிகாப்டர் தரை இறங்கியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

    அமித்ஷா செல்லும் பாதைகளில் 6 வழிச்சாலையில் வல்லண்டராமம் கிங்கினி அம்மன் கோவில் கந்தனேரி சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.

    மேலும் பொதுக்கூட்டம் முடிந்ததும் அமித்ஷா கார் செல்ல வசதியாக 6 வழிச்சாலையில் இருந்த தடுப்பு சுவர் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கந்தனேரி பொதுக்கூட்ட மைதானத்தில் மேடையை சுற்றிலும் மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தவிர மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள மலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 4 போலீஸ் சூப்பிரண்டுகள் முகாமிட்டுள்ள நிலையில் கூடுதலாக 2 போலீஸ் சூப்பிரண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி சுற்று பகுதி முழுவதும் ராட்சத பலூன்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விமான நிலையம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை அமித்ஷா பயணம் செய்யும் சாலையை ஒட்டி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனடியாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டுமென அந்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறுகளை வழங்கினார்.

    அமித்ஷா வருகையால் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • வி.ஐ.பி. வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் உடனடியாக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
    • 40 நிமிடத்துக்கு பிறகு மாற்று ஏற்பாடு மூலம் பரங்கிமலை பகுதிகளுக்கு மின்சப்ளை கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னைக்கு நேற்றிரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்தபோது அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அவரை வரவேற்க ரோட்டில் இருபுறமும் திரண்டிருந்த பா.ஜ.க.வினர் இதனால் கடும் ஆவேசம் அடைந்தனர். அமித்ஷா அங்கிருந்து சென்றதும் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அரசு திட்டமிட்டு மின்சப்ளையை துண்டித்ததாக கூறி சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

    வி.ஐ.பி. வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் உடனடியாக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. உடனே மின் உற்பத்தி மின்பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்லக்கானி போரூர் துணைமின் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    தாம்பரம்-கடப்பேரி மின்நிலையத்தில் இருந்து போரூர் துணைமின் நிலையத்துக்கு வரும் மின்கம்பி காற்று மழை காரணமாக அறுந்து விழுந்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

    இதனால் 40 நிமிடத்துக்கு பிறகு மாற்று ஏற்பாடு மூலம் பரங்கிமலை பகுதிகளுக்கு மின்சப்ளை கொடுக்கப்பட்டது.

    இதுபற்றி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    சென்னைக்கு போரூர் சப்-ஸ்டேஷன் மூலமாக பூந்தமல்லி, போரூர், கூவத்தூர், பரங்கிமலை ஏரியாவுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது.

    இதில் போரூருக்கு மின் சப்ளை 2 லட்சத்து 30 ஆயிரம் கிலோவாட் கொண்ட ஒரு லைன் கடப்பேரியில் இருந்து வருகிறது. அந்த லைனில் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் இரவு 9.34 மணிக்கு கரண்ட் கட் ஆகி பிரச்சினையானது. இத னால் இரவு 10.12 மணிக்கு வேறு வழியாக கரண்ட் கொடுத்தோம்.

    கே:- உள்துறை மந்திரி அமித்ஷா வரும்போது 'கரண்ட் கட்" ஆகி விட்டதே?

    ப:- இது எதேச்சையாக நடந்தது. மின்சார லைன் தடைபட்டதால் இது நிகழ்ந்துவிட்டது. இதனால் பரங்கிமலை, போரூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மின்சாரம் கட் ஆகிவிட்டது. இரவு 9.34 மணி முதல் இரவு 10.12 மணி வரை மின்தடை ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் இந்த நேரம் பதிவாகி உள்ளது. எங்களுக்கு தகவல் தெரிய வந்ததும் உடனே மாற்றுப்பாதை மூலமாக மின்சப்ளை சரி செய்து கொடுத்தோம்.

    கே:- வி.ஐ.பி. வருகிறபோது சரியான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா?

    ப:- ஆமாம். உள்துறை மந்திரி சென்னை வருகிறார் என்று தெரிந்ததும் 24 மணி நேரமும் மின்சாரத்தை கண்காணிக்கும் வகையில் துணை மின்நிலையங்களில் அதிகாரிகள் இருந்தனர். அப்போதும் எதேச்சையாக அவர் வரும்போது மின்தடை ஏற்பட்டுவிட்டது.

    ப:- காற்று, மழை தான் காரணம். இரவு நேரம் என்பதால் சரிசெய்ய 30 நிமிடம் ஆகிவிட்டது.

    கே:- இதில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ப:- ஆரம்ப கட்ட விசாரணையில் மின்சார லைன் காற்றில் கட் ஆகி இருந்தது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று முழு அளவில் விரிவான விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மந்திரி அமித்ஷாவை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் சந்தித்து பேசினர்.
    • தமிழக பிரபலங்களை மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார்.

    சென்னை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று இரவு 9.46 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்தார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.

    அதன் பிறகு மத்திய மந்திரி அமித்ஷாவை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் சந்தித்து பேசினர். அவர்களை மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் சாதனைகளுக்காக அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த வகையில், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், விண் டிவி தேவநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, நவாப் சதா முகமது ஆசிப் அலி,

    அப்பல்லோ ஆஸ்பத்திரிகள் குழும செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, அப்பல்லோ ஆஸ்பத்திரிகள் குழுமத்தைச் சேர்ந்த விஜயகுமார் ரெட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற வீராங்கனை அனிதா பால்துரை, திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் ஆக்கி வீரர் பாஸ்கரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்,

    செட்டிநாடு சிமென்ட் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, டேப்லெட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜெய்கிஷன் ஜாவீர், பி.கே.எம். குழுமத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகரன், தாஜ் குழுமத்தைச் சேர்ந்த பிரமோத்ராஜன், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், அப்பல்லோ பல் மற்றும் டயாலிசிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஜி.எஸ்.கே. வேலு ஆகியோர் சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின்போது மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளாக ஒவ்வொரு துறை ரீதியாக செய்த சாதனைகளை மத்திய மந்திரி அமித்ஷா விளக்கி கூறினார். மேலும், பல்வேறு துறையில் சாதனை படைத்த பிரமுகர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்புகளை அளித்து உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆனால் அவர்களின் சந்திப்பு நடைபெறவில்லை என்றும் அமித்ஷாவை சந்திப்பதற்கு அவர்கள் நேரம் கேட்கவில்லை என்றும் பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்தது.

    • கோடை வெயிலில் இருந்து தப்புவதற்காக ராகுல் பாபா வெளிநாடு செல்கிறார்.
    • பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.

    படான்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசின் செயல்பாடுகளை அங்கு கடுமையாக விமர்சித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு மத்திய பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் உள்துறைமந்திரி அமித்ஷாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவையொட்டி குஜராத்தின் படான் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கோடை வெயிலில் இருந்து தப்புவதற்காக ராகுல் பாபா (ராகுல் காந்தி) வெளிநாடு செல்கிறார். அங்கு இந்தியாவை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தனது முன்னோரிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    எந்தவொரு தேசப்பற்று மிகுந்தவரும் இந்திய அரசியலை இந்தியாவுக்குள்ளேதான் விவாதிக்க வேண்டும். எந்தவொரு தலைவரும் வெளிநாடுகளில் இந்தியாவை விமர்சிப்பதும், இந்திய அரசியலை விவாதிப்பதும் ஏற்க முடியாது. இதை இந்திய மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும்.

    பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான விஷங்களை பேசுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை.

    தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதை நீங்கள் எதிர்த்தீர்கள். இந்த செங்கோல் நேருவால் நிறுவப்பட இருந்தது. ஆனால் அவர் செய்யாததை பிரதமர் மோடி செய்திருக்கிறார். நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

    பாபர் காலத்தில் இருந்தே அயோத்தியில் ராமர் கோவில் இழிவுபடுத்தப்பட்டது. ஆனால் இன்று, அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது திறக்கப்படும்.

    நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தை குஜராத்தில் இருந்து நரேந்திர மோடி தொடங்கினார். 2002 முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத்தில் மின்சாரம், தண்ணீர், தடுப்பணை, பண்ணை மற்றும் பெண் கல்வி என அனைத்து துறைகளின் வளர்ச்சி மோடியை பிரதமராக்க உதவியது. மேலும் 'குஜராத் மாடல்' இந்தியா மாடலாக மாறியது.

    நான் செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் மோடிக்கான ஆதரவை பார்க்கிறேன். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குஜராத் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது.
    • சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நிறைவுப்பெற்றது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

    அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நிறைவுப்பெற்றது.

    கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், சென்னை, கிண்டியில் அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

    அப்போது அவர், "மின் நிறுத்தம் தொடர்பாக அரசியல் செய்ய விரும்பவில்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது.

    அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.

    மேலும், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்றைய பொதுகூட்டத்தில் பதில் தெரிவிக்கப்படும்

    அதேப்போல், நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் " என்றார்.

    ×