search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • அ.தி.மு.க.வில் மோதல் நீடித்து வந்த நிலையில் டெல்லி பா.ஜனதா தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்துக்கா? என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தது.
    • அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் விவாதம் முடிவுக்கு வந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அங்கீகரிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் 'ஒற்றை தலைமை நாயகன்' என்கிற அடைமொழியுடனேயே போஸ்டர்கள், பேனர்களை அச்சிட்டு வருகிறார்கள். இப்படி கட்சியின் தலைமை பதவியை எட்டிப்பிடித்துள்ள எடப்பாடி பழனிசாமி வசமே அ.தி.மு.க. தலைமை கழகமும் உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை முழுமையாக ஓங்கி இருக்கிறது.

    இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வில் மோதல் நீடித்து வந்த நிலையில் டெல்லி பா.ஜனதா தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்துக்கா? என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தது.

    அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் இந்த விவாதம் முடிவுக்கு வந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கே தங்கள் ஆதரவு என்பதை இந்த சந்திப்பின் மூலம் அமித்ஷா உணர்த்தி இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இப்படி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையை நிலைநாட்டி இருப்பதை தொடர்ந்தும் டெல்லி பா.ஜனதா தலைமையிடத்திலிருந்து அவருக்கே 'கிரீன் சிக்னல்' காட்டப்பட்டிருப்பதையடுத்தும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலர் தங்களது அரசியல் பயணத்தை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவதற்கு அவர்கள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாக மாவட்ட அளவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்தவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள் என்றும் விரைவில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலை எந்தவித பிரச்சினையுமின்றி எதிர் கொள்வதற்கு வசதியாகவே ஒற்றை தலைமை கோஷத்தை முன் கூட்டியே எழுப்பினோம். தற்போது அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதே கட்சிகள் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணத்துக்கும் தயாராகி வருகிறார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று பேசுவதற்கும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை முடிவுக்கு வந்து ஒற்றை தலைமையை ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி உற்சாகத்துடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். நிச்சயம் அவரது வேகமான செயல்பாடுகளால் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் தனது அரசியல் பயணத்தை எப்படி மேற்கொள்ள போகிறார்? என்பதும் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார்.
    • எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு அமைந்து 1½ ஆண்டாகியும், பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு இதுவரை வாரிய தலைவர் பதவிகள் வழங்கவில்லை.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு, ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களுக்கும் வாரிய பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. பா.ஜனதா மேலிட தலைமையில் இருந்தும் வாரிய பதவி வழங்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனாலும் இதுவரை வாரிய பதவி வழங்காதது பா.ஜனதா எம்.எல்.ஏக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிப்பட்டது. சட்டசபையில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தார். தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரசின் மீது குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

    மத்திய அரசு திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதோடு, தங்கள் தொகுதிகளில் கோவில் கமிட்டி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை தங்களிடம் கேட்காமல் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் புகார் கூறினர்.

    அமைச்சரவை கூட்டமும் நடத்துவதில்லை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகூட்டத்தையும் நடத்த முன்வரவில்லை என குற்றம்சாட்டினர். அமைச்சர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினார். மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என கூறினார்.

    ஏற்கனவே 2, 3 முறை புகார் கூறியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ளவில்லை என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனாலும், புதுவைக்கு வரும் மத்திய மந்திரி எல்.முருகனுடன் மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    அதோடு அடுத்த வாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லிக்கு சென்று பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது புதுவை அரசு, அரசியல் குறித்து பேச முடிவெடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது.
    • எந்த ஒரு துறையிலும், நியாயமாக பணி நடைபெறுவதில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

    தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணி அளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம். நானும், வேலுமணி, சி.வி. சண்முகம் அவரை சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

    தமிழகத்தை பொறுத்தவரை 2 பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்-அமைச்சராக இருக்கும்போது பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஒன்று கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்.

    இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் தேவையான நீர் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறை பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்தேன். இதையும் பரிசீலிப்பதாக சொன்னார். தற்போது அதை வேகப்படுத்தி துரிதப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

    2-வது அம்மாவின் அரசு இருந்தபோது பிரதமரிடம் 'நடந்தாய் வாழி காவிரி' என்ற ஒரு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். காவிரி நதியில் கலக்கின்ற மாசுபட்ட நீரை சுத்தம் செய்து காவிரியில் விடுவதற்காக இந்த திட்டம்.

    இந்த திட்டம் இரு அவையின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையில் இடம் பெற்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தையும் வேகமாக, துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

    அதோடு தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

    இதை ஏற்கனவே நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசும்போது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். அறிக்கைகள் கொடுத்தோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எங்கே போதை பொருள் விற்றாலும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி சட்டரீதியாக யார் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களோ, போதைபொருள் விற்பனை செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனால் இந்த அரசு மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால், அலட்சியமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதை தி.மு.க. அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார்கள். இதனால் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது. அதையும் நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    எந்த ஒரு துறையிலும், நியாயமாக பணி நடைபெறுவதில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்து இருக்கின்றோம்.

    கேள்வி:- அரசியல் சம்பந்தமாக ஏதும் பேசினீர்களா?

    பதில்:- அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை.

    கேள்வி:- பிரதமரை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?

    பதில்:- அந்த திட்டம் எதுவும் இப்போது இல்லை.

    கேள்வி:- அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி சொல்ல முடியுமா?

    பதில்:- அது நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து சொல்ல முடியாது.

    கேள்வி:- இடைக்கால பொதுச்செயலாளராக உங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்களே?

    பதில்:- எல்லாமே நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தினால் எந்த கருத்துக்களை சொன்னாலும் அது அந்த நீதிமன்ற வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கூறி உள்ளாரே?

    பதில்:- அந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். உங்களை பொறுத்தவரை நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து விட்டேன். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொண்டிருக்கிறேன்.

    சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தி இருக்கிறார்கள். வீடுகளுக்கு 100 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சராசரியாக 34 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 12 முதல் 52 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வருடத்திற்கு 6 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    கேள்வி:- இந்த கட்டணம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயர்த்தப்பட்டது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    பதில்:- எங்களின் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது போராட்டம் நடத்தினார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனாவால் 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருக்கிறது.

    இந்த நிலையில் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கட்டணத்தை உயர்த்துவது முறையா? அதனால் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலை 6.15 மணிக்கு டெல்லியில் இருந்து கோவைக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.
    • இரவு 9.10 மணிக்கு கோவை சென்றடையும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்படுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த கூட்டணி கட்சி என்ற ரீதியில் பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை.

    கூட்டுத் தலைமை என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக இருக்கிறார். ஒற்றை தலைமை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். எனவே இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட்டனர்.

    பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதை கோர்ட்டும் அங்கீகரித்து உள்ளது.

    அதேபோல் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதையும் சுப்ரீம் கோர்ட்டு சரி என்று அறிவித்துவிட்டது.

    கட்சி உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்று அவரது மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

    அமித்ஷாவை சந்தித்து பேசிய போது இந்த தகவல்களையும், கோர்ட்டு தீர்ப்பு நகல்களையும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.

    மொத்தம் உள்ள 1660 பொதுக்குழு உறுப்பினர்களில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தன்னை ஆதரித்து கையெழுத்து போட்டு கொடுத்த கடித நகல்களையும் அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.

    மேலும் கட்சியில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே பொதுக்குழு நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ளாமல் தலைமை அலுவலகத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டது, கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது ஆகியவற்றை எடுத்துக்கூறி அதற்கான கண்காணிப்பு கேமிரா பதிவு காட்சிகளையும் ஆதாரங்களாக வழங்கினார்.

    மேலும் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதை கட்சியினர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதையும் எடுத்து கூறியிருக்கிறார்.

    அதற்கு ஆதாரமாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாராட்டியது, ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியது பற்றியும் எடுத்துக் கூறினார்.

    ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சி விரோத செயல்பாடுகளால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தான் கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் பக்கம் யாரும் செல்லவும் இல்லை என்ற விபரங்களை எடுத்து கூறி இருக்கிறார்.

    எனவே கட்சியின் அதிகாரபூர்வமான பொதுச்செயலாளர் என்ற ரீதியில் கட்சி தொடர்பான அனைத்து தொடர்புகளையும் தங்களோடு மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு முடிந்த பிறகு பிற்பகலில் தேர்தல் ஆணையத்துக்கு செல்கிறார். அங்கும் கட்சியின் பொதுக்குழுவில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருப்பது, தனக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பும் வந்திருப்பது ஆகியவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறார்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

    டெல்லி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலை 6.15 மணிக்கு டெல்லியில் இருந்து கோவை செல்கிறார். இரவு 9.10 மணிக்கு கோவை சென்றடையும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்படுகிறார்.

    சேலத்தில் இருந்து வருகிற 23 அல்லது 24-ந் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மோடியுடன் உறுதியாக நிற்கிறார்கள்.
    • உலக தலைவராக தனது அடையாளத்தை மோடி உருவாக்கி இருக்கிறார்.

    பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:

    இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி உள்ளிட்டவை மூலம் முடியாத பணிகளை கூட பிரதமர் மோடி சாத்தியமாக்கியுள்ளார். நல்ல நிர்வாகம்,வளர்ச்சி, தேசப்பாதுகாப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்தியாவை முதன்மை நிலைக்குக் கொண்டு செல்வது என்ற உறுதிப்பாட்டை பிரதமர் மோடி நிறைவு செய்திருக்கிறார்.

    அவரது தலைமையின் மீது மக்கள் வைத்துள்ள முழு நம்பிக்கை மட்டுமே இதனை சாத்தியமாக்கி உள்ளது. பாதுகாப்பான, வலுவான, தற்சார்புள்ள புதிய இந்தியாவை உருவாக்கியுள்ள மோடியின் வாழ்க்கை, சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு அடையாளமாகவும் விளங்குகிறது.

    சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களிடம் நம்பிக்கை உணர்வை மோடி நிலை நிறுத்தியுள்ளார். இன்று சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மோடியுடன் உறுதியாக நிற்கிறார்கள்.

    மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தால் இன்றைய புதிய இந்தியா, உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. உலக தலைவராக தனது அடையாளத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். இது உலகத்தால் மதிக்கப்படுகிறது. அவரது ஆரோக்கியத்திற்கும் நீண்ட வாழ்வுக்கும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பிரசாரம் நடந்து வருகிறது.
    • நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது.

    சூரத் :

    குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பிரசாரம் நடந்து வருகிறது. இந்தியும், குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும், தமிழும் போட்டியாளர்கள், இந்தியும், மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி நண்பன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தி செழுமை அடையும்போதுதான் மாநில மொழிகளும் செழுமை அடையும். இந்தியையும் ஒன்றாக வைத்துக்கொண்டே மாநில மொழிகளை வலுப்படுத்துவது அவசியம்.

    மொழிகள் இணைந்து இருப்பதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இந்தியை நெகிழ்வுத்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும்.

    மொழிகளின் ஒருங்கிணைப்பை நாம் ஏற்றுக்கொள்ளாதவரை நமது சொந்த மொழியில் நாட்டை வழிநடத்தும் கனவை நனவாக்க முடியாது.

    அனைத்து மொழிகளையும், தாய்மொழியையும் உயிர்ப்புடனும், செழிப்பாகவும் வைத்துக்கொள்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளின் செழிப்பில்தான் இந்தியும் செழிப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
    • அசோக் கெலாட் அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    ஜெய்ப்பூர் :

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் நேற்று, பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இந்திய ஒற்றுமை பயணத்தில் அவர்களுக்கு (பா.ஜனதாவினர்) என்ன பிரச்சினை? அவர்கள் ரூ.2½ லட்சத்துக்கான மூக்கு கண்ணாடியும், ரூ.80 ஆயிரத்தில் மப்ளரும் அணிந்து கொண்டு, ராகுல் காந்தியின் டி-ஷர்ட் குறித்து பேசுகிறார்கள். உள்துறை மந்திரி அணிந்துள்ள மப்ளரின் விலை ரூ.80 ஆயிரம்' என தெரிவித்தார்.

    பா.ஜனதாவினர் டி-ஷர்ட் அரசியல் செய்வதாக சாடிய அசோக் கெலாட், இந்திய ஒற்றுமை பயணத்துக்கு கிடைத்து வரும் சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.

    • நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியால் பாடுபட முடியாது.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் செயல்பட முடியும்.

    ஜோத்பூர்:

    கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    இந்தியா குறித்து பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையை காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    தற்போது பாரதத்தை இணைக்க வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது, (சிலரை) திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே (காங்கிரசால்) செயல்பட முடியும்.

    • அமிர்த பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார்.
    • இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பாதையை வகுக்க வேண்டும்.

    நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, 10 பெண்கள் உட்பட 120 பேர், 75 மோட்டார் சைக்கிள்களில் 75 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். 18,000 கிமீ தூரம் பயணித்து, தேசிய தலைநகருக்குத் அவர்கள் திரும்புகிறார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் தலைமையில், நாடு விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடுகிறது. இதை சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தியதோடு,பல பரிமாணங்களாக மாற்றியது, பிரதமரின் புதிய சிந்தனையை காட்டுகிறது.

    அமிர்தப்பெருவிழாவைவையொட்டி பிரதமர் மோடி மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார். முதலாவதாக, புதிய தலைமுறை, இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை அறிமுகப்படுத்துவதும் ஆகும்.

    அடுத்ததாக 75 ஆண்டுகளில் நமது நாடு செய்த சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வை ஏற்படுத்துவதே இதன் இரண்டாவது குறிக்கோள் ஆகும். மூன்றாவதாக, 2047ல் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது இந்தியாவுக்கான இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும்.

    இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பாதையை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். அமிர்த பெருவிழாவை மக்களிடம் கொண்டு செல்வதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி :

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் நாடு முழுவதும் தொகுதி நிலவரத்தை அலசியபோது 144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாகவும், வெற்றி பெறுவது கடினமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

    இவற்றில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த தொகுதிகளாக இருந்தாலும், வெற்றி பெற்ற தொகுதிகளும் உள்ளன. மேற்கு வங்காளம், மராட்டியம், தெலுங்கானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவை அமைந்துள்ளன.

    அங்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 3 அல்லது 4 தொகுதிகளுக்கு ஒரு மத்திய மந்திரி வீதம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களின் மனநிலையை அறியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களும் தொகுதிகளுக்கு சென்று வந்து விட்டனர்.

    பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்தனர். வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், ஸ்மிரிதி இரானி, பர்ஷோத்தம் ருபாலா, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்பட 25 மத்திய மந்திரிகளுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். கட்சி தலைவர்கள் சிலரும் பங்கேற்றனர்.

    அந்தந்த தொகுதிகளில் தாங்கள் செய்த பணிகள் குறித்து மத்திய மந்திரிகள் எடுத்துரைத்தனர். அவை பற்றி அமித்ஷாவும், நட்டாவும் விவாதித்தனர். வெற்றிவாய்ப்பை அதிகரிக்க யோசனைகளை தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட 144 தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களை அதிகரிக்கவும், மத்திய அரசு திட்டங்களால் பலனடைந்த சமூகத்தினரை குறிவைத்து இழுக்கவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    தொகுதிவாரியாக வாக்காளர்களின் சாதி, மதம், அவர்களின் விருப்பம், அதற்கான காரணங்கள் ஆகிய தகவல்கள் அடிப்படையில் விரிவான அறிக்கையை பா.ஜனதா தயாரித்துள்ளது.

    • மும்பையில் உள்ள லால்பாக்ராஜா மண்டலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
    • தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது.

    மும்பை

    2014 சட்டசபை தேர்தலில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உடைந்தது. 2 கட்சிகளும் தேர்தலை தனித்தனியாக சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா 120 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.

    இருப்பினும் 2017-ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தனித்தனியாக சந்தித்தன. இந்த தேர்தலிலும் பா.ஜனதா 82 இடங்களில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் 2 இடங்களில் (84 இடங்கள்) கூடுதலாக வெற்றி பெற்ற சிவசேனாவுக்கு மாநகராட்சியை விட்டு கொடுத்தது.

    இந்தநிலையில் 2019 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவி போட்டியில் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.

    எதிர்பாராத திருப்பமாக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே, 39 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார்.

    இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று மும்பை வந்தார். அவர் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்ராஜா மண்டலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதேபோல மலபார்ஹில் பகுதியில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு பங்களா, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு பங்களாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் வழிபட்டார். பாந்திரா பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதியையும் தரிசித்தார்.

    பின்னர் அவர் மும்பையை சேர்ந்த பா.ஜனதா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை தலைவர் ஆஷிஸ் செலார், தேசிய நிர்வாகி வினோத் தாவ்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்பை மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் சிவசேனாவிடம் இருந்து தட்டிப்பறிக்க வியூகம் வகுப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்தது.

    கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:-

    நீங்கள் ஒருவரை வேறு இடத்தில் அடித்தால் அவருக்கு வலிக்காது. ஆனால் அவரை அவரது சொந்த இடத்தில் அடிக்கும் போது, அந்த வலி ஆழமாக இருக்கும். எனவே சிவசேனாவின் சொந்த மைதானத்தில் (மும்பை மாநகராட்சி), அந்த கட்சிக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பா.ஜனதா மும்பை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை எனில், நாம் மராட்டியத்தை வெல்ல முடியாது. தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது. எனவே உத்தவ் தாக்கரேக்கு அவருக்கான இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    நீங்கள் (உத்தவ் தாக்கரே) பிரதமர் மோடி மற்றும் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பெயரை சொல்லி ஓட்டு கேட்டீர்கள். ஆனால் உங்களுக்கு பேராசை வந்தவுடன் சரத்பவாருடன் உட்கார்ந்து கொண்டீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் தேசியவாத காங்கிரசை எதிர்த்து வந்தீர்கள். ஆனால் முதல்-மந்திரி பதவிக்காக நீங்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சமரசம் செய்து கொண்டீர்கள்.

    ஒருவர் அநீதியை பொறுத்து கொள்ளலாம். ஆனால் துரோகத்தை பொறுத்துகொள்ள கூடாது. துரோகம், கொள்கையை விட்டு கொடுத்தற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு, அவர்களுக்குரிய இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    • சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் சிறை நிர்வாகமும் ஒரு முக்கிய அங்கம், அதை நாம் புறக்கணிக்க முடியாது. 


    சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை. தண்டனை இல்லை என்றால் பயம் இருக்காது, பயம் இல்லை என்றால் ஒழுக்கம் இருக்காது, ஒழுக்கம் இல்லையென்றால் ஆரோக்கியமான சமுதாயத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.

    கைதிகள் விடுதலைக்கு பிறகு சமூகத்திற்கு அவர்களை சிறந்த மனிதர்களாக தர வேண்டியது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகும். மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தொடரும் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

    மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள், அனைத்து சிறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக மாற்றும் வகையில் மாதிரி சிறைச் சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்ட சிறைகளையும் நீதிமன்றங்களுடன் இணைக்கும் வகையில் காணொலி வசதியை மாநிலங்கள் வழங்க வேண்டும்.

    தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளை தனித்தனியாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் உள்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×