search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்"

    நெல் கொள்முதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உழவர்கள் நலனில் தமிழக பினாமி ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமும் அக்கறையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை விற்கவும் முடியாமல், பாதுகாக்கவும் முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக ஆட்சியாளர்களின் இந்த உழவர் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி முடிவடையும் காலத்தை அடிப்படையாக வைத்து நெல் கொள்முதலை தொடங்குவதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந்தேதி நெல் கொள்முதலுக்கான விலையை தமிழக அரசு அறிவிக்கும். ஆனால், அக்டோபர் மாதம் பிறந்து 6 நாட்களாகியும் இன்று வரை 2018-19-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளிலும் வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் அறுவடையை முடிக்க உழவர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

    அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றுள்ள விவசாயிகள், கடந்த 5 நாட்களாக பல்வேறு காரணங்களைக் கூறி கொள்முதல் செய்யப்படாததால் அங்கேயே காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் தண்ணீர் புகுந்து நெல் முளைக்கத் தொடங்கியுள்ளது.

    நெல்லுக்கான கொள்முதல் விலைகளை தீர்மானிப் பதில் தமிழக அரசுக்கு எந்த சுமையும் இல்லை. நெல் கொள்முதலைப் பொறுத்தவரை தமிழக அரசு மத்திய அரசின் முகவராக மட்டுமே செயல்படுகிறது. நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த ஜூலை 4ஆம் தேதியே அறிவித்துவிட்டது. சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1550 ரூபாயிலிருந்து 1750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை 1590 ரூபாயிலிருந்து 1770 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையுடன் ஊக்கத்தொகையை மட்டும் சேர்த்து தமிழக அரசு அறிவித்தால் போதுமானது. கடந்த பல ஆண்டுகளாகவே சன்ன ரகத்திற்கு ரூ.70, சாதாரண ரகத்திற்கு ரூ.50 மட்டுமே ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

    ஆனால், அதைக்கூட செய்ய முடியாத அளவுக்கு ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறதோ?

    உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கு ஊதியம் வழங்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உழவர்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும். விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் முளைத்து விட்டால், உழவர் குடும்பங்களின் வாழ்க்கை கருகி விடும்.

    எனவே, இனியும் தாமதிக்காமல், மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலையுடன், நியாயமான ஊக்கத்தொகை சேர்த்து புதிய கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; நெல் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss

    திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 960 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டன. தற்போது பொதுவினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக அரவைக்காக நெல் மூட்டைகளை ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதில் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 960 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக திருவாரூர் கிடாரங்கொண்டான் சேமிப்பு கிடங்கில் இருந்து 500 டன், நட்டுவாக்குடியில் இருந்து 200 டன். தண்டலையில் இருந்து 200 டன், நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 60 டன் என மொத்தம் 960 டன் நெல் மூட்டைகள் 80 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்த நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயிலில் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது. 
    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,310 ஆக உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை :

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பின் ஒரு பகுதியாக, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரித்து உத்தரவிட்டு, ஏதோ விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றி, அவர்களுடைய வாழ்வில் என்றும் மாறாத புது வசந்தத்தை உருவாக்கிவிட்டது போல், மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2014-2015-ல் 50 ரூபாயும், 2015-2016-ல் 50 ரூபாயும், 2016-2017-ல் 60 ரூபாயும், 2017-2018-ல் 80 ரூபாயும் என்று ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச விலையை ஏதோ பெயரளவுக்கு உயர்த்தி, 4 வருடங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பல வகையிலும் விபரீத விளையாட்டு நடத்திவிட்டு, இப்போது நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழலில், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, ரூ.200 குவிண்டாலுக்கு அதிகரித்து விட்டதாகவும், 2014-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், முற்றிலும் திசைதிருப்பும் வகையிலான, தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவது வேதனையளிக்கிறது.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.200 வீதம் உயர்த்தியிருந்தால் இன்றைக்கு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,750 கிடைப்பதற்கு பதில், ரூ.2,310 கிடைத்திருக்கும். இந்த 4 ஆண்டு காலம் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் தற்கொலையும், தொடர் கதையாகிவிட்ட அவர்தம் துயரங்களும் ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.



    அதேபோல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தாலும் இந்நேரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப் பாதையில் வளம்பெறத் தொடங்கியிருக்கும். ஆனால், இந்த 4 வருடங்களில் விவசாயிகளின் நலன் பற்றியோ, நெடுங்காலமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளைப் பற்றியோ, துளியும் கவலைப்படாமல், அவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட அக்கறையின்றி இருந்துவிட்டு, டெல்லிக்கே சென்று பல நாட்கள் பல்வேறு வகையிலும் போராடிய விவசாயிகளைக்கூட சந்திக்க மறுத்து, கைது செய்து சிறையில் அடைத்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இப்போது குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி விட்டோம் என்று, தம்பட்டம் அடிப்பதின் அரசியல் சுயநல அடிப்படையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் துல்லியமாகவே மத்திய அரசின் கபட நாடகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    ஆகவே, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்திடுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் அடையாளமும் இல்லாமல், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தும் ஆர்வமும் இல்லாமல், குவிண்டால் நெல்லுக்கு ரூ.200 அதிகரித்துவிட்டோம் என்ற வாய்ச்சவடால், 4 வருடங்களாக விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்துள்ள துரோகத்திற்குத் தீர்வாகாது. 4 வருடம் விவசாயிகளைப் புறக்கணித்ததற்கு உரிய விடை தேடி நியாயம் செய்ய பா.ஜ.க. அரசு உண்மையிலேயே விரும்பினால், உயர்ந்துவரும் இடுபொருள்களின் விலை செய்நேர்த்திச் சிரமங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,310 கிடைக்கும் அளவிற்காவது குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    தி.மு.க.வின் தற்போதைய இலக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 அளிக்க வேண்டும் என்றாலும், மத்திய பா.ஜ.க. அரசு 4 வருடங்களாக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்ததைச் சிறிதளவாவது ஈடுசெய்யும் வகையில், இந்த ஆண்டுக்கு ரூ.2,310 ஆக உயர்த்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    நெல் மற்றும் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Cabinet
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நெல் மற்றும் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதன்படி நெல்லுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு மடங்குக்கு மேல் ஆதார விலையை உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல் தர நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1770 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சாதாரண ரக நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி ரூ.1750 ஆக வழங்கப்படுகிறது.


    இதே போல சோளத்துக்கான ஆதார விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தி ரூ.1700 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய பா.ஜனதா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. #Cabinet
    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், கேழ்வரகு ஆதரவு விலையை ரூ.9 ஆயிரமும் உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், கேழ்வரகு ஆதரவு விலையை ரூ.9 ஆயிரமும் உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அவற்றின் உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியாகவும் இதை பா.ஜனதா அளித்தது.

    அதன்படி, மத்திய மந்திரிசபை கூட்டத்தில், கரீப் (சம்பா) பருவ சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில், கரீப் பருவ சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை டன்னுக்கு ரூ.17 ஆயிரத்து 500 ஆக உயரும்.

    கேழ்வரகுக்கான ஆதரவு விலைதான் அதிகபட்சமாக டன்னுக்கு ரூ.9 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. அதன் விலை டன்னுக்கு ரூ.27 ஆயிரமாக அதிகரிக்கும்.

    இதுபோல், பாசி பயறு உள்பட மொத்தம் 14 தானியங்களின் ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
    ×