என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 167928"
- மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்.
- தமிழ்நாட்டை பொறுத்தவரை மேகதாது அணைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதே கட்சிகளின் நிலைப்பாடு.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்துக்களுக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
'கர்நாடக துணை முதலமைச்சருக்கு பதில் அளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.'
'தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதில் இருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.'
'கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மான்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு.'
'தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையலில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.
- கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
- காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
"கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."
"தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."
"காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."
"ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."
"கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.
- பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கு.
- புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டார்.
கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.
- திருச்சி மாநாட்டின்போதே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் தெரிவித்தனர்.
- அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
சென்னை:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறினர்.
திருச்சி மாநாட்டின்போதே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் தெரிவித்ததாகவும், உரிய நேரம் வந்ததால் இப்போது சந்தித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
- அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
- பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனுடனான சந்திப்பில் பங்கேற்றார்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்தே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அடுத்தடுத்த நகர்வுகளில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர், பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதனால் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன, அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் கைவசம் சென்றுள்ளது. சட்டப்போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.
- ஓபிஎஸ் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் அபார ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி சிஎஸ்கே தனது 6வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்த நிலையில், இந்த போட்டியை முன்னாள் முதmமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டு ரசித்தார்.
அவர் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார். இந்த புகைப்படத்தை டுவிட்டரில் டேக் செய்தருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.
- தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது.
- ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்து விட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3வது முறை சின்னம்மா தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள். திரும்ப கேட்டார்கள், கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு யார் பதவியை தந்தது? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி நீங்கள்? வரலாறு உங்களை மன்னிக்குமா?
உங்களில் ஒருவராக தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கட்சியின் நிதியை ஒரு பைசாகூட நீங்கள் செலவு செய்யக்கூடாது. அதை எப்படி நீங்கள் கையாள்கிறீர்கள்? என்பது தொடர்பாக உறுதியாக விசாரணை நடத்தப்பட்டு, தவறாக பயன்படுத்தியவர்களுக்கு தண்டனை உறுதியாக வழங்கப்படும்.
அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். ஜனநாயக முறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும். தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது.
- மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
திருச்சி:
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இந்த அதிகாரப்போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையகத்தை கைப்பற்றினார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால் தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன், தொண்டர்களின் ஆதரவு இருப்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர்.
அதன்படி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.
அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் மாநாட்டு நிகழ்வுகளை எளிதில் பார்வையிடுவதற்காக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.
- சென்னையிலும் அடுத்தடுத்து மாநாடு நடத்த முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி:
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அணியின் முப்பெரும் விழா மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.
மாலை 5 மணிக்கு லட்சுமன் ஸ்ருதி இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. மாநாட் டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்று பேசுகிறார்.
மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மாநாட்டு மேடைக்கு மாலை 6 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தருகிறார்.
தொடர்ந்து அவர் இரவு 7.30 மணிக்கு மேல் மாநாட்டு பேருரை ஆற்றுகிறார். இதில் அவர் முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும், இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக வட மாவட்டத்திலும், சென்னையிலும் அடுத்தடுத்து மாநாடு நடத்த முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
+2
- மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது.
- எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்சி:
திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் இன்று மாலை ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ். அணியினர் கட்சி கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி போலீசில் கடந்த சனிக்கிழமை புகார்கள் அளிக்கப்பட்டன.
ஏற்கனவே கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம். எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றனர். அதேபோல் சற்று திருத்தம் செய்யப்பட்ட கொடி திருச்சி மாநாட்டில் முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே திருச்சி மாநாடு உள்பட எந்த இடத்திலும் அ.தி.மு.க.வின் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை திருச்சி போலீசில் புகார்கள் அளித்துள்ளோம்.
அதையும் மீறி இந்த மாநாட்டிற்காக அ.தி.மு.க. பெயர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்சி தலைமையிடம் ஆலோசித்த பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.
- ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர்.
- தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.
சென்னை:
சசிகலா தி.நகரில் உள்ள இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. உட்கட்சி பூசலை தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேர கூடாது என தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
ஓ.பி.எஸ். தீர்மானம் குறித்து பேசுகிறார். உடனடியாக அ.தி.மு.க.வை சார்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர். அதற்கு சபாநாயகர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறினார். அவர் அ.தி.மு.க. அதனால் பேச சொன்னேன் என கூறவில்லை.
தி.மு.க. எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்வார்கள். ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர். தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.
ஆட்சியை மக்கள் கொடுத்த பின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால் தற்போது உள்ள அரசு சட்டபேரவை என்றால் திரையரங்குக்கு வந்து செல்வது போல வந்து செல்கின்றனர்.
இந்த சண்டையை பெரிதாக்கி பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க நினைக்கின்றனர்.
மக்களுக்காக வந்த அரசாக இந்த அரசு தெரியவில்லை. 5 ஆண்டு காலம் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என செய்கின்றனர்.
கொடநாடு வழக்கை தி.மு.க. அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கேட்டால். நிச்சயம் சந்திப்பேன். ஓ.பி.எஸ். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அதன் பின் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் பணி முடியும்.
நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்.
கவர்னர் மோதலை பெரிதாக மாற்றுவதை விட்டு விட்டு எடுத்து கூறி மக்களுக்காக நல்லதை செய்ய வேண்டும். எதிர்கட்சியாக பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்.
இவ்வாறு சசிகலா கூறினார்.
- கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
- ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறியதுடன், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கர்நாடக பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய நிலையில், அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அணியினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கர்நாடகா சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதற்குள், ஓபிஎஸ் அணியினர் முந்திக்கொண்டனர். இதன்மூலம் அதிமுக விவகாரம் கர்நாடக தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்