search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    • ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    அப்போது சந்திராயன்-3 விண்கலம் நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 108 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசியக்கொடியும், இஸ்ரோவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பலவண்ண கோலமும் உருவாக்கப்பட்டு, 1,008 மண்விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. மேலும் 108 ஆன்மீகப் பெரியவர்களும், 108 தூய்மைப் பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவிற்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிப்பாடு செய்தனர். இதில் கோவை, திருப்பூர் , சென்னை, ஈரோடு மற்றும் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.

    • சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா-எல் இயங்கும்
    • இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சியாகும்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலகிலேயே முதல்முறையாக, எந்த நாடும் செய்யாத சாதனையாக, நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.

    உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனுக்கு அருகே சென்று ஆராய்ச்சி புரிய, ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

    ஆதித்யா-எல்1 என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த விண்கலன் செப்டம்பர் 2-ம் தேதி அன்று காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா-எல்1 இயங்கும்.

    சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது நாட்டிற்கே ஒரு புது முயற்சியாகும்.

    பூமியிலிருந்து சுமார் 10 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஆதித்யா-எல்1 நிலைநிறுத்தப்பட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். ஆதித்யா-எல்1, கிரகண பாதிப்புகளையும் மீறி சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

    "விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏவுகணை மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்திருக்கும் இஸ்ரோ, தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

    சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக ஆதித்யா-எல்1 அனுப்பப்படுகிறது.

    • கடந்த வாரம் தரையிறங்கிய ரோவர், ஆய்வை மேற்கொண்டு வருகிறது
    • சல்ஃபர், அலுமினியம் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்து இருக்கிறது

    சந்திரயான்-3 விண்கல திட்டம் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகிறது. கடந்த 23-ந்தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து பிரக்யான் ரோவர் சுமார் ஆறு மணி நேரம் கழித்து நிலவில் கால் பதித்தது.

    அதன்பின் மெல்ல மெல்ல ஊர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வருகிறது. ஒரு பெரிய பள்ளத்தை கண்டறிந்து தனது பாதையை மாற்றியது. நேற்று சல்பைடு தாது இருப்பதாக கண்டறிந்தது.

    இந்த நிலையில் இன்று பிரக்யான் ரோவர், ஆய்வு செய்து கொண்டே, விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. நேவிகேசன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆய்வை மேற்கொள்கும்.

    • இறுதிக்கட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 4 ‘ரிமோட் சென்சிங்’ கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 'ஆதித்யா- எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது.

    இதற்கான இறுதிக்கட்டப்பணியான 'கவுண்ட்டவுன்' வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே 'ஆதித்யா- எல்1' விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன?, இது சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்ய இருக்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    'ஆதித்யா- எல்1' விண்கலத்தில் சூரியனின் கொரோனா, 'குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர்' மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் 'கரோனல்' வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும்.

    4 'ரிமோட் சென்சிங்' கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும். இதில் புலப்படும், புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்களும் அடங்கும். சூரிய கொரோனாவை படம் பிடித்து அதன் இயக்கவியலையும் ஆய்வு செய்யும்.

    'சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்', ஒளிக்கோளம் மற்றும் 'குரோமோஸ்பியரை' குறுகிய மற்றும் அகன்ற அலைவரிசையில் உள்ள புற ஊதா அலை நீளங்களில் படம் பிடிக்கும் தன்மை கொண்டது.

    அதேபோல் 'சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்' சூரியனில் இருந்து மென்மையான எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 'ஹை எனர்ஜி எல்-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்' கருவி சூரியனில் இருந்து கடின எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும்.

    அதில் உள்ள 3 இன்-சிட்டு கருவிகள் சூரியக் காற்றின் கலவை, இயக்கவியல் மற்றும் காந்தப்புலத்தை அளவிடும். சூரியக் காற்றின் துகள் பரிசோதனை, சூரியக் காற்றின் கலவை மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு கருவி சூரியக்காற்றின் பிளாஸ்மா பண்புகளை அளவிட இருக்கிறது.

    மேம்பட்ட 'டிரை- ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல்' காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது.

    இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • விண்கலம் திட்டமிட்ட இலக்கை 4 மாத பயணங்களுக்கு பிறகு சென்று சேர்ந்து ஆய்வை தொடங்க இருக்கிறது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடத்தை இஸ்ரோ அமைத்து உள்ளது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

    இந்த விண்கலம் திட்டமிட்ட இலக்கை 4 மாத பயணங்களுக்கு பிறகு சென்று சேர்ந்து ஆய்வை தொடங்க இருக்கிறது. பொதுவாக ராக்கெட் ஏவுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடத்தை இஸ்ரோ அமைத்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிட விரும்புகிறவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.

    • விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
    • பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சல்ஃபர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்து இருக்கிறது. இத்துடன் நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது.

    பிரக்யான் ரோவரில் உள்ள லேசர்-இன்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோ-ஸ்கோப் (Laser-Induced Breakdown Spectroscope) என்ற கருவி நிலவில் தனிமங்கள் இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தி இருக்கிறது.

    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது
    • ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் ராஞ்சியில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    இதற்காக உலகெங்கிலும் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் இன்னமும் தொடர்ந்து குவிந்து வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகரும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளருமான டெஹ்ஸீன் பூனாவாலா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 3 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என கூறி, அவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரை, தான் கூறும் விவரங்களை சரிபார்க்குமாறு சவால் விடும் வகையில் கூறியிருந்தார்.

    இவர் கூறியது உண்மையென நம்பி சில அரசியல் விமர்சகர்களும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும், தொலைக்காட்சி பேட்டியிலும், சமூக வலைதளங்களிலும், மத்திய அரசை கிண்டல் செய்தும், விமர்சித்தும் கருத்துக்களை வெளியிட்டனர்.

    ஆனால், ஆய்வில் டெஹ்ஸீன் பூனாவாலா கூறியது உண்மையல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.

    உண்மை என்னவென்றால், சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன.

    அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது. பல காரணங்களுக்காக பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

    இதன் காரணமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்களுக்கு

    சம்பளம் தர இயலவில்லை. இதனை இஸ்ரோவுடன் தொடர்புபடுத்தி சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவ ஆரம்பித்தன.

    டெஹ்ஸீன் தவறாக புரிந்து கொண்டு கூறியது போல் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளம் தரப்படவில்லை என நம்ப ஆரம்பித்தனர். உண்மையில் ஒவ்வொரு மாதமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாதத்தின் கடைசி தேதியன்று அம்மாத சம்பளம் எந்தவித தடையும் இன்றி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் செய்திகளிலும் வரும் அனைத்து செய்திகளும் உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1.
    • சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்- 1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

     நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செயவதற்காக சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவில், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது.

    சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.

    அதன்படி, வரும் செப்டம்பர் 2-ந்தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்கிறது.
    • நிலவின் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை பிரக்யான் ரோவர் தவிர்த்தது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், "நிலவின் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை பிரக்யான் ரோவர் சாதுர்யமாக தவிர்த்தது என்றும், 3 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே துல்லியமாக கண்டறிந்ததால் பாதையை மாற்றிக் கொண்டு சமதள பாதையில் நகர்ந்து சென்றது என்றும் இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

    • சூரிய மண்டலத்தில் லக்ரேஞ்சியன் புள்ளி எனப்படும் இடத்தை அடையும்
    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகளுக்கும் ஈடாக இது கருதப்படுகிறது

    இதுவரை நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியில் உலகின் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை. ஆனால், இம்முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று உலக நாடுகளை தன்பக்கம் திரும்பி பார்க்க செய்தது.

    இந்த வெற்றிக்கு பிறகு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இது குறித்து இஸ்ரோ மையத்தின் மூத்த விஞ்ஞானி கூறும் போது, "சூரியனை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பும் முதல் முயற்சியாக ஆதித்யா எல் 1 (Aditya L1) எனும் பெயரில் செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து காலை 11:50 மணிக்கு விண்கலன் அனுப்பப்படும்," என்று தெரிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கப்படி, சூரியனில் உள்ள வாயு மண்டலம், சூரியனின் மத்திய பகுதியான கொரானாவின் வெப்பம், சூரிய வாயுவின் வேகம் மற்றும் தட்பவெப்ப மாறுதல்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். சூரிய மண்டலத்தில் லக்ரேஞ்சியன் புள்ளி என்ற இடத்தை அடைய முயற்சிப்பதே இதன் நோக்கங்களில் ஒன்று. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.400 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். (PSLV-XL) ராக்கெட்டில் இந்த விண்கலன் சூரியனின் சுற்று வட்டப்பாதயை சென்று அடையும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

    சூரியனில் இருந்து அவ்வப்போது வெடி அதிர்வுகள் வெளிப்படும். இந்தியா விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதால் இந்த அதிர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டால், அதன்படி இஸ்ரோவின் ஆராய்ச்சிகளை சுலபமாக திட்டமிடலாம் என்பதால் இது மிகவும் அவசியமான முயற்சி என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவின் இந்த ஆராய்ச்சி, அமெரிக்காவின் நாசா மையத்தின் முயற்சிகளுக்கும், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முயற்சிகளுக்கும் ஈடாக கருதப்படுகிறது.

    ஆதித்யா எல் 1 திட்டத்தில் உலகில் எந்த நாடும் இதுவரை செய்யாத முயற்சியாக சூரியனின் வெளிப்புற மண்டலத்தை இதுவரை இல்லாத, குறைந்த தூரத்தில் கண்டு ஆராயவும், புற ஊதா நிற கதிர்வீச்சிற்கு இடையே ஊடுருவி சூரியனின் புகைப்படங்களை எடுக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும். 

    • பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
    • காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    சந்திரயான்-3 வெற்றித் திட்டத்தில் பங்காற்றிய ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றார்.

    பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டயபடிப்பு படித்தார். அதன் பின் பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.

    பணியில் இருந்தபடியே பி.இ. மற்றும் எம்.இ. பட்டம் முடித்தார். இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி தற்போது பெங்களூருவில் ஜியோ கமாண்டட் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை இந்தியா, வெளிநாடு, பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்துள்ளன.

    சிறிய கிராமத்தில் பிறந்து இஸ்ரோ விஞ்ஞானியாக பணிபுரிந்து சந்திரயான்-3 திட்டத்தில் பங்கேற்றிய ரவிச்சந்திரனுக்கு உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதே போல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் காமேஸ்குரு. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் எம்.எஸ்.பி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி.டி.யில் இருந்து எம்.எஸ். (நான்டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) முடித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். சந்திரயான்-3 பணியில் ஏவுகணை வாகனம், செயற்கைகோள் உந்து விசை அமைப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். செயற்கை கோள் திரவ என்ஜின் தரக்கட்டுப்பட்டில் என்ஜினீயராக உள்ளார்.

    சந்திரயான்-3 வெற்றியில் மட்டுமின்றி சந்திரயான்-2 மற்றும் ஆதித்யா செயற்கைகோள் திட்டங்களிலும் பணிபுரிந்து பெரும் பங்கு வகித்துள்ளார். காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது.
    • நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் ஆய்வு செய்கிறது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியுள்ளது.

    14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்கிறது.

    விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கருவி CHASTE நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை அளவிட்ட, முதல் தகவலை இஸ்ரோ பதிவு செய்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 10 சென்டி மீட்டர் வரை துளைக்கும் திறன் விக்ரம் லேண்டருக்கு உள்ளது. 

    ×