என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற்றோர்கள்"
- குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
களங்கமற்ற உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் `குழந்தைகள்'. அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. எல்லா பெற்றோருமே குழந்தைகளுக்கு எல்லா விஷயத்திலும் சிறந்ததையே வழங்க விரும்புகிறார்கள்.
ஆனால் குழந்தைகள் சேட்டை செய்யும்போதோ, சொல் பேச்சை கேட்காமல் இருக்கும்போதோ அதிக கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அப்படி நடந்து கொள்வது நல்லதல்ல.
குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான கண்டிப்புகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் நீண்டகால மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான ஆய்வுக்கு, கண்டிப்புக்கு உள்ளான 7 ஆயிரத்து 500 குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கேம்பிரிட்ஜ் மற்றும் டப்ளின் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் அதிக கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக மனநலம் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் மூன்று, ஐந்து மற்றும் ஒன்பது வயது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். அதில் 10 சதவீதம் குழந்தைகள் மோசமான மனநலம் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் கீழ்ப்படியாதபோது அவர்களை தனிமைப்படுத்துவது, கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.
பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிக்கும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
கடுமையாக தண்டிக்கும் பெற்றோரிடத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில்தான் வாழ்கிறார்கள்.
இதன் காரணமாக குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, இந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக பெற்றோரிடம் இருந்து விலகி செல்ல முடிவு எடுக்கின்றனர்.
வீட்டில் மன இறுக்கமாக இருப்பதால் பொதுவெளியிலும், நண்பர்கள் மத்தியிலும் மன இறுக்கமானவர்களாகவே தங்களை வெளிப்படுத்துகின்றனர். கண்டிப்பான பெற்றோர்களால் சுயமரியாதையை இழந்தவர்களாக உணருகிறார்கள்.
அதிக கடுமையான விதிகள் பெற்றோர்-குழந்தை உறவுகளை சீர்குலைத்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை தடுக்கின்றன.
கல்விக்காக பெற்றோர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும்போது, அது குழந்தைகளின் மன நலனை பாதிக்கிறது. பெற்றோருக்கு பயந்து படிப்பது குழந்தைகளின் கல்வித்திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது.
கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளை சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அது அவர்களின் கனவுகளையும், படைப்பாற்றலையும் பாழ்படுத்திவிடும். இதனால் சின்ன பிரச்சனையை சந்தித்தால் கூட எவ்வாறு முடிவு எடுப்பது, எப்படி தீர்வு கண்டுபிடிப்பது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.
அதற்கு பதிலாக குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கனிவுடன் வழி நடத்தி அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
அவ்வாறு செய்யும்போது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறிவிடுவர். அதிக கட்டுப்பாடுகளுக்குள் உள்ளாகும் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை கையாள இயலாமல் மன விரக்திக்கு உள்ளாகின்றனர்.
குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் பெற்றோருடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் உருவாகின்றன. அதனால் பெற்றோர் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த வேண்டும். அன்பு, அக்கறை, சுதந்திரம் ஆகியவற்றை கொடுத்து வளர்க்க வேண்டும்.
பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். நம் குழந்தைகள் ஒழுக்கமானவர்களாக வளர வேண்டுமெனில், நாமும் அவ்வாறு இருக்க வேண்டும்.
எதிர்மறையான அணுகுமுறையை மாற்றி ஆதரவு, ஊக்கம் மற்றும் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுடன் ஒழுக்கம் நிறைந்த சூழலில் குழந்தைகளை வளர்ப்பது முக்கியம்.
பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நண்பர்களாக மாறுவோம். குழந்தைகளுடன் பாதுகாப்பான உறவை வளர்ப்பது நாம் அவர்களுக்கு வழங்கக்கூடிய மதிப்புமிக்க பரிசாகும்.
- குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது.
- குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.
குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் அன்பும், உணர்ச்சியும் கலந்த வலுவான பந்தத்தை கட்டமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வேலை, தொழில் நிமித்தமாக குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவளிக்க முடிவதில்லை.
எவ்வளவு பிசியானவராக இருந்தாலும் தூங்கச் செல்வதற்கு முன்பாவது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போது சில விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
வலுவான பந்தம்
பெரும்பாலானவர்களுக்கு இரவில் தூங்க செல்வதற்கு முந்தைய நேரம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏற்புடையதாகவே இருக்கும். அந்த நேரத்தை டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்ற வேறு வகையில் செலவிடாமல் குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் நேர்மறையான விஷயங்களை மட்டுமே குழந்தைகளிடம் பேச வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் தூக்கத்தை பாதித்து, மன ரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எதிர்கால கவலை
தூங்கச் செல்வதற்கு முன்பு பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதிர்கால கவலைகளை பற்றி பேசக்கூடாது. அது அவர்களை கவலையடைய செய்வதுடன் தூக்கத்தையும் பாதிக்கும்.
தண்டனை
தூங்கும் முன்பு குழந்தைகளை தண்டிப்பதையும், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அவர்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர செய்யும் விதமாக நேர்மறையான கருத்துக்களை பேச வேண்டும்.
ஒப்பிடுதல்
தூங்கும் முன்பு குழந்தைகளுடன் பேசும்போது தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. அது தன்னை தானே தாழ்த்திக்கொள்ள வழிவகை செய்துவிடும்.
மற்றவர்களுடன் ஒப்பிடாமல் அவர்களின் தனித்துவமான தனித்திறன்களைப் பற்றி பேச வேண்டும். அதனை மெருகேற்றுவதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். அவர்களின் திறமைகளை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
பொய் வாக்குறுதி
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வேலையை கொடுத்து அதனை நிறைவேற்றிக்கொடுத்தால் பரிசு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. அவர்களை நம்ப வைத்து வேலை வாங்குவதும், அந்த வேலையை செய்து முடித்த பின்பு எதுவும் வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றுவதும் தவறான பழக்கம்.
பெற்றோர் பிள்ளைகளிடத்தில் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளும் அதையே பின்பற்றத் தொடங்கி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
எதிர்மறையான விஷயங்கள்
தூங்கும் முன்பு குழந்தைகளின் மனதில் நேர்மறையான வார்த்தைகளை பதிய வைக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்களை சொல்வது அவர்களை மன வேதனைக்குள்ளாக்கும்.
தங்களை தாங்களே கேள்வி கேட்டு தேவையற்ற மனக்குழப்பத்திற்கு ஆளாவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மறையான கருத்துக்களை வழங்குவதும் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.
- சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
- சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்
பெற்ற பிள்ளைகள் சோறு போடாமல் அடித்து துன்புறுத்தியதால் வயதான தாய்-தந்தை ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஹாசாரிராம் பிஸ்னாய் [70 வயது] மற்றும் அவரது, மனைவி சாவ்லி தேவி [68 வயது]. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.
அதில், 'மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
#WATCH | Rajasthan: Elderly couple found dead at their house in Nagaur.(Visuals from the spot) pic.twitter.com/yfq0JvYZn8
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 11, 2024
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
- குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம்.
ஒவ்வொரு பெற்றோருமே குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவே முனைப்பு காட்டுகிறார்கள். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர கடுமையான சொற்களை பிரயோகித்து அவர்களை வசைபாடக்கூடாது. அது அவர்களை மன ரீதியாக பலவீனமாக்கிவிடும். என்னென்ன வார்த்தைகளை கூறி குழந்தைகளை திட்டக்கூடாது என்று தெரியுமா?
'உன் பிரச்சனையை கேட்க எனக்கு நேரமில்லை'
குழந்தைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அசட்டையாக இருப்பது, அவர்களின் கருத்துக்களை நிராகரிப்பது, தான் குடும்பத்தில் முக்கியமில்லாத நபராக, சுமையாக இருப்பவராக குழந்தைகளை சிந்திக்க வைத்துவிடும். தங்களை ஆதரவற்றவர்களாக எண்ணக்கூடும்.
'நீ புத்திசாலி என்று உன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்குரிய தகுதி உனக்கு இல்லை'
உன்னை அதிபுத்திசாலி. எந்த பிரச்சனையையும் எளிதாக சமாளித்துவிடுவாய். அறிவாளி என்று நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீ இப்படி முட்டாளாக இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை.
உன் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது உணர்ச்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் குழந்தையின் தன்னம்பிக்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
'நீ புத்திசாலி இல்லை'
குழந்தையின் அறிவுத்திறன் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை பாதிக்கக்கூடும்.
'நீ அவரை போன்றவர். எதற்கும் உதவ மாட்டாய்'
குடும்பத்தில் எவருடைய பேச்சையும் கேட்காமல் தன் விருப்பப்படி செயல்படும் நபர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிட்டு, 'நீயும் அவரை போன்றுதான் எதற்கும் உதவ மாட்டாய்.
நீ வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்தான்' என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் கூறக்கூடாது. அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
'நீ எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்'
குழந்தையை தொந்தரவு செய்பவர், எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் போல் சித்தரித்து பேசுவது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். அவர்களின் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தவறான வழிக்கு செல்வதற்கு வழிவகை செய்துவிடும்.
'நீ எதற்கும் தகுதி இல்லாதவன்'
உன்னிடம் எல்லா திறமையும் இருக்கிறது. எதையும் சிறப்பாக செய்துவிடுவாய் என்று எண்ணி இருந்தேன். உன்னால் சின்ன விஷயத்தை கூட எளிதாக கடந்து வர முடியவில்லை.
எதற்கும் தகுதி இல்லாதவன் என்று கூறி திட்டக்கூடாது. அது குழந்தை தன்மீது கொண்டிருக்கும் சுய நம்பிக்கையை கேள்விக்குரியதாக்கிவிடும். தான் எந்த தகுதியும் இல்லாதவன் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
'நீ அந்த குழந்தையை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம். அந்த குழந்தையை பார். எப்படி நன்றாக படிக்கிறது. நல்ல திறமைசாலியாகவும் இருக்கிறது.
அந்த குழந்தையை போல் நீயும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என கூறி மன நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அது அவர்களின் சுய மதிப்பை குறைத்துவிடும். தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு எந்த முயற்சியிலும் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக மாறிவிட நேரிடும்.
'உன்னால் ஏன் உன் சகோதர, சகோதரிகள் போல் இருக்க முடியவில்லை'
உடன் பிறந்தவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுவது போட்டி மனப்பான்மையையும், பொறாமை உணர்வையும் உருவாக்கிவிடக்கூடும். எப்போதும் சண்டையிடும் மனோபாவம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடும்.
'அழுவதை நிறுத்து. அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை'
செய்த தவறுக்கு மனம் வருந்தி குழந்தை அழும்போது கடுமையாக பேசக்கூடாது. அது குழந்தையின் உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளாமல் வசைபாடுவது போலாகிவிடும். தன் உணர்வுக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை என்று வேதனைப்படுவார்கள்.
- பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது.
- பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள்
பெற்றோர்கள் வீட்டில் சீரியல் பார்த்தால் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்? என்று நீயா நானா புகழ் கோபிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய கோபிநாத்,
ஒரு குழந்தையை தந்தை மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது அது சிரித்துக்கொண்டே மேலே சென்று சிரித்துக்கொண்டே கீழே வரும். தந்தை அவ்வாறு செய்யும்போது தாய் கேள்வி கேட்பார் 'ஏங்க விட்டுட மாடீங்களே' என்று, ஆனால் குழந்தை கேட்காது ஏனென்றால் அதற்கு தெரியும் தனது தந்தை போகும் தன்னை விடமாட்டார் என்பது எனவே தான் அது சந்தோசமாக மேலேயும் கீழேயும் சென்று வருகிறது.
மாணவர்களே நீங்கள் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது உங்களின் கேரக்டர்க்தான் முடிவு செய்யும். உங்களது உழைப்பையும் வெற்றியையும் தொடர்புப்படுத்துவது ஒழுக்கம், 2000 த்திலும் அதுதான் 3000 திலும் அதுதான். உலகம் அழியும் வரை அதுதான். டிசிப்ளின் இஸ் த கீ .
மகனோ மகளோ காலை 5 மணிக்கு எழுந்து எக்சர்சைஸ் பண்ண வேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டால் அவரும் அந்நேரம் எழுந்திருக்க வேண்டும். பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது. நீங்கேள சீரியல் பார்த்தால் பிள்ளைகள் போன் தன பார்க்கும். பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் போனில் வெளியில் தான் தொடர்பை தேடிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
அவர்களுக்குப் பேச யாரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கக்கூடாது. அவர்களைத் தூரத்திலிருந்து பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மாணவர்கள் ஆசியர்களுடன் உரையாட வேண்டும். இன்று அதற்கான சூழல் இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல் பிள்ளையின் வளர்ப்பில் தந்தையின் பங்கும் இருக்க வேண்டும். வேலை பார்த்து காசு கொண்டு வருவது மட்டும் அவர்களின் வேலையாக இருக்கக்கூடாது.
பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள், வீட்டுக்குள் உங்களை பார்த்துத்தான் அவர்கள் வளர்கிறார்கள், அவர்கள் உங்களின் பிள்ளைகள் மட்டுமல்ல . இந்த சமூகத்துக்குச் சொந்தமானவர்கள் எனவே அவர்களை வளர்ப்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம்.
- போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
இன்றைய நவீன உலகில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இன் தொடக்கத்தில் இருந்து, மக்களிடையே இன்டர்நெட் அக்சஸ் பயன்பாடு வேகமாக அதிகரித்தது, ஏனெனில் அந்த காலகட்டத்தில் நாம் ஒரு நபரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவோ ஒரே வழி இதுதான். அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மாணவர்கள் பல விஷயங்களைக் கண்டறியவும், அவர்களின் அறிவை மேம்படுத்தவும், தொலைதூரத்திலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும் மிகப்பெரிய தளங்களாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, ஏனெனில் இது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் சமூக தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
சைபர்புல்லிங் என்பது உலகளவில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாகும். இது சமூக ஊடகங்களில் இணையத்தில் மற்றொரு நபரைக் கையாளவும், அவமானப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கவும் நிறைய நடக்கிறது. மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகப்படியான ஈடுபாடு மாணவர்களை அவர்களின் கல்வியிலிருந்து திசை திருப்புகிறது.
சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் 13 வயது நிறைவடைந்தாலும், பெரும்பாலான வெப்சைட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் நன்மை தீமை குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகும்.
பாதுகாப்பான இன்டர்நெட் அக்சஸை பெற்றோர்கள் பயன்படுத்துவதும், அதன் நன்மைகளை குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம் ஆகும். ஏனெனில், குழந்தைகள் அதன் நன்மைகளை புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தூக்க முறை பாதிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களின் முக்கிய எதிர்மறை விளைவுகளில் ஒன்று, மாணவர்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு குறைவதாகும். தூக்கமின்மை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான தூக்கம் கட்டாயமாகும்.
- மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது
- பாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது
உலகத்தை உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவுக்கும் மறக்க முடியாத இழப்புகளை விட்டுச்சென்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்த நிலையில் அனைவரையும் மொத்தமாக குழிதோண்டிப் புதைத்த அவலங்களும் நிகழ்ந்தது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை யாரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மக்கள் சாரை சாரையாக வரிசையில் காத்துக்கிடந்தனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து நின்றன. இறப்புகளை தடுக்க முடியாமல் அரசாங்கங்கள் திணறியது. ஒருவாறாக தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பிய நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலையோ இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. உலகின் வெவ்வேறு அரசாங்கங்கள், சமூக அமைப்புகள் அவர்களுக்கான முன்னெடுப்புகளை செய்து வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொரோனாவில் பெற்றோர்களை இழந்து அனாதைகளான குழந்தைகளுக்கான PM CARES திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51 சதவீத விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு நன்கொடையும் வசூலித்தது. கல்வி உதவித் தொகை, 23 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் நிதி, சுகாதார காப்பீடு மூலம் ஆகியவை இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகும். பி.எம். கேர்ஸ் திட்டம் மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கொரோனா தோற்றால் பெற்றோர் அல்லது கார்டியனை இழந்தோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டிடத்தின் கீழ் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது மீதமுள்ள 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
18 விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளன. நிராகரிப்புக்கு எந் காரணமும் அரசு தரப்பில் தெரிவைக்கப்படவில்லை. முன்னதாகபாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுகுறிப்பிடத்தக்கது.
- மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
- ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்
சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
- அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட நொறுக்கு தீனிகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.
நொறுக்கு தீனிகள் சுவையாக இருந்தாலும், அவை அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்டவை. இவை உடல் நலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நொறுக்கு தீனிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நொறுக்கு தீனிகளில் அதிக அளவு கலோரிகள் இருக்கும். அவை எளிதில் ஜீரணிக்கப்படுவதால், விரைவில் பசி மீண்டும் ஏற்படும். இதனால், அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு அதிகம். இது உடல் பருமனுக்கும், அதன் மூலம் பிற நோய்களுக்கும் வழிவகுக்கும்.
நொறுக்கு தீனிகளில் அதிக அளவு கொழுப்பு, குறிப்பாக டிரான்ஸ் கொழுப்பு இருக்கும். இது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் (LDL) அளவை அதிகரித்து, நல்ல கொழுப்பின் (HDL) அளவை குறைக்கும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
நொறுக்கு தீனிகளில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கு அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
நொறுக்கு தீனிகளில் அதிக அளவு உப்பு இருக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பிற நோய்களுக்கும் வழிவகுக்கும்.
நொறுக்கு தீனிகளில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. இது பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
நொறுக்கு தீனிகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அதிக அளவு நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.
அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட நொறுக்கு தீனிகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.
நொறுக்கு தீனிகள் எளிதில் ஜீரணிக்கப்படுவதால், விரைவில் பசி மீண்டும் ஏற்படும். இதனால், அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு அதிகம். இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
குழந்தை பருவத்தில் நொறுக்கு தீனி பொருட்கள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பல கடைகளில் தந்தூரி சிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சி மீது பல விதமான ரசாயனங்களை தடவி, எண்ணெய்யில் பொறித்து விற்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில், பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில், இந்த கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இது போன்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன,
நொறுக்கு தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. பல முக்கிய காரணங்களில் ஒன்று நொறுக்கு தீனி. அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ள பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களை கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வரும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல், இளவயதில் புற்றுநோய் நோயாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,
தேவைக்கு மீறிய அளவில், பொறித்த துரித உணவுகள், பெரிய சூப்பர்மார்கெட்களில் கழிவு விலையில்(discount) விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை, இலவச பொருட்களுடன் விற்கப்படும் தீனிகள் , சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விளம்பரம் செய்யும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும்
பெற்றோர்களின் உண்ணும் பழக்கம் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதில் இருந்து குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு புரியவைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற பெற்றோர்கள் செய்யும் முதல் முயற்சி ஆகும்.
- கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 4 மாத குழந்தைக்கு கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை நாக்கில் செய்யப்பட்டது.
- மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நடந்துள்ளது என்றும் குழந்தைக்கு நாக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 4 மாத குழந்தைக்கு கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை நாக்கில் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கையில் 6 விரல்கள் உள்ளதால் கூடுதல் விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்க கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தையை அதன் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அறுவை சிகிச்சை அறைக்கு வந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது, குழந்தைக்கு நாக்கு கட்டு (Tounge tie) இருந்ததைப் பார்த்து அதை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் தவறுதலாக குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்தாலும் இது குழந்தைக்கு நன்மையே பயக்கும் என்றும் இதனால் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
ஆனால் குழந்தையின் பெற்றோர்கள், மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நடந்துள்ளது என்றும் குழந்தைக்கு நாக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.
- இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர்.
நெல்லை:
நெல்லை-பாளை ஆகியவை இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளன.
இதில் பாளையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒவ்வொரு புதிய கல்வியாண்டின்போதும் இங்கு மாணவர் சேர்க்கையின்போது கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு இன்று எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மாலை முதலே பள்ளி முன்பு வரத்தொடங்கினர். தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது ஒரு இடம் இந்த பள்ளியில் கிடைத்து விட வேண்டும் என்ற பரிதவிப்பில் அவர்கள் இரவு முழுவதும் பள்ளியின் நுழைவு வாயில் முன்பே காத்திருந்ததை காண முடிந்தது.
நேரம் செல்ல செல்ல ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அவர்கள் தாங்களாகவே ஒரு நோட்டினை தயார் செய்து முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு பெற்றோரின் பெயர்களையும் வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்தனர். இந்த முன்னுரிமைக்காக நோட்டு இருந்தாலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ, உறவினர்களோ யாராவது ஒருவர் வரிசையில் நிற்க வேண்டும் என அவர்களுக்குள் விதிமுறைகள் வைத்துக்கொண்டு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.
ஒரு கட்டத்திற்கு பிறகு இரவில் சில பெற்றோர்கள் போர்வை, தலையணையுடன் பள்ளியின் வாசலில் விரித்து தூங்கினர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர். சுமார் 125-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இரவில் பள்ளி முன்பு காத்திருந்தனர். அந்த பள்ளியை காண்பதற்கு ஒரு சில பெற்றோர்களுடன் பெண் குழந்தைகளும் வந்ததை காண முடிந்தது. எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விடிய, விடிய பள்ளி வாசலில் காத்திருந்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து இன்று காலை அந்த சாலை முழுவதும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பெற்றோர்கள் வரிசையாக நின்றனர். பள்ளி திறந்தவுடன் அவர்கள் விண்ணப்பத்தை வரிசையாக நின்று வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
- யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்