search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா"

    • ஒரு வருடத்தில் வடகொரியா கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது.
    • செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று ஜப்பான் அரசிடம் வடகொரியா நோட்டீஸ் மூலம் தெரிவித்தது.

    ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இதுபோன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

    மே 31-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் வடகொரியா தெரிவித்து இருக்கிறது. இது குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா அனுப்பிய நோட்டீசில், ராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இது மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் வடகொரியா நோட்டீசில் தெரிவித்து இருந்தது. ஜப்பான் எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வடகொரிய கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. இந்த சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. எனினும், தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வடகொரியா முடிவு செய்துள்ளது.

    ஐ.நா. தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கை ஜப்பான், தென் கொரிய கடல் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
    • தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    பியாங்யாங்:

    கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் தேதி அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பலை தனது நாட்டின் கடற்பகுதியில் நிறுத்தும் ஒப்பந்தத்தில் தென்கொரியா கையெழுத்திட்டது. இது தென்கொரியாவின் மீது அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் இது குறித்து கூறும்போது, `தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
    • ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    டோக்கியோ:

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

    சமீபத்தில் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏவுகணை ஜப்பான் பகுதிக்குள் விழவில்லை.

    இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளை செயல்படுத்தவும் தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜப்பான் மந்திரி யசுகாசு ஹமாடா, ராணுவத்திடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தினார்.
    • அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன.

    பியாங்யாங்:

    வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

    இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்கிறது.

    தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி நடத்துவதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஏவுகணை சோதனையை நடத்துகிறது.

    இந்த நிலையில் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவ உள்ளது. இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும் திட்டமிட்டபடி அதை ஏவுவதற்கு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை பெறுவது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

    மேலும் உளவு தகவல்களை சேகரிக்கும் திறனை உறுதியாக நிலைநிறுத்த வடகொரியா பல செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும்.

    அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன. விமானம் தாங்கி கப்பல்கள், அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்கள் போன்றவற்றை நிலைநிறுத்துவதன் மூலம் தென்கொரியாவை ஆக்கிரமிப்புக்கான மேம்பட்ட தளமாக அமெரிக்கா மாற்றியுள்ளது என்றார்.

    சமீபத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு போர் பயிற்சியை தொடங்கிய நிலையில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை ஏவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது.
    • தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம்.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது.

    எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அண்மையில் நடத்தின. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை முடுக்கியது.

    இந்தநிலையில் ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் நேற்று அதிகாலை மீண்டும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. இதற்கு தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென் கொரியா வெளியிட்டுள்ளது.
    • உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

    வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

    அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

    • ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷியா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
    • வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷியா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், "வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷியா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷியா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.

    எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின.
    • ஹைசன் நகரில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    பியாங்யாங்:

    வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில் இருந்து திரும்ப தொடங்கினர்.

    அப்போது ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களாகவே மாயமான துப்பாக்கி குண்டுகளை தேடினர். ஆனால் பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதை தொடர்ந்து அவர்கள் இந்த விஷயத்தை தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த விவகாரம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடனடியாக அவர், துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்தார்.

    மேலும் இது தொடர்பான விசாரணைக்கு தீவிரமாக ஒத்துழைக்குமாறு அங்குள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள், சமூகக் குழுக்கள் மற்றும் சுற்றுப்புற கண்காணிப்பு பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து, ஹைசன் நகரில் வீடு, வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 12-ந் தேதி நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்கள் தாங்கிய 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.
    • ஒரு வாரத்தில் மட்டும் வடகொரியா தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனை நடத்தி மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

    சியோல்:

    கொரியா தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த 2 நாடுகளுக்கும் பரம எதிரியாக திகழ்ந்து வரும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த 12-ந் தேதி நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்கள் தாங்கிய 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. இதன் தொடர்ச்சியாக 14-ந்தேதி (செவ்வாய்கிழமை) 2 குறுகிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இதையடுத்து இன்று காலை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கொரியா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏவப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தென்கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒரு வாரத்தில் மட்டும் வடகொரியா தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனை நடத்தி மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஒரு புறம் வடகொரியா ஏவுகணை சோதனை மறுபுறம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா படை நடத்தி வரும் கூட்டு பயிற்சிகள் அங்கு கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியா 7வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு.
    • கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    அண்மையில் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை நகரமான சின்போவில் இருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகள் வீசப்பட்டதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இந்த சோதனையின்போது சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    மேலும் வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தென்கொரியா மற்றும அமெரிக்க அரசுகள் சந்தேகித்து வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வடகொரியா 7வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருகிறது.

    வடகொரியா 7-வது அணுகுண்டு சோதனையை நடத்தினால், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது.
    • தங்களது ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டால் போர் வெடிக்கும் என அமெரிக்காவை வட கொரியா எச்சரித்துள்ளது.

    சியோல்:

    அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா கடந்த மாத இறுதியில் அறிவித்ததில் இருந்து, மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த வாரம் தொடங்கும் இந்த போர் பயிற்சிக்கு முன்னோட்டமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் நேற்று முன்தினம் கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்களை பறக்கவிட்டு பயிற்சியில் ஈடுபட்டன.

    இதனிடையே கூட்டுப்போர் பயிற்சியின்போது வடகொரியா பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தினால் அவற்றை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு வேளை தங்களது ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டால் போர் வெடிக்கும் என அமெரிக்காவை வட கொரியா எச்சரித்துள்ளது.

    இது குறித்து வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகொரியா தனது ஆயுத சோதனைகளுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க ராணுவ நடவடிக்கையையும் போருக்கான அறிவிப்பாக பார்க்கும். பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு சொந்தமானது அல்ல. இருநாடுகளும் தங்களது கூட்டுப்பயிற்சியை விரிவுப்படுத்த நினைத்தால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்க வடகொரியா தயாராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    • வருடாந்திர கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன.
    • கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

    சியோல் :

    கிழக்கு ஆசிய நாடான வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை விரும்பாத அமெரிக்கா, பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வருகிறது.

    ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளை அச்சுறுத்தும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறி தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது.

    அதிலும் அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை அவ்வப்போது சோதித்து அமெரிக்காவை அதிரவைத்து வருகிறது.

    இந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ளப்படும் வருடாந்திர கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன.

    இதனால் கடும் கோபமடைந்த வடகொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கினால் இருநாடுகளும் முன்னொப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடியை சந்திக்கும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

    அதோடு நிறுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவம் கணினி மயமாக்கப்பட்ட கூட்டுப்பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கின. இதற்கு பதிலடி தரும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் 4 தொலைதூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது அதிரவைத்தது.

    இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் வடக்கு பகுதியில் ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரில் இருந்து 'ஹவாசல்-2' ஏவுகணைகள் 4, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலை நோக்கி ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பறந்து, 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கின" என கூறப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "இன்றைய ஏவுகணை சோதனைகள் வடகொரியாவின் அணு ஆயுத படைகளின் போர்த் தயார்நிலையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளன. மேலும் அவை எதிரி படைகளுக்கு எதிரான கொடிய அணுசக்தி எதிர்த் தாக்குதல் திறன்களை வலுப்படுத்துகின்றன" எனவும் அதில் கூறப்பட்டள்ளது.

    வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் குறித்து முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் அமெரிக்காவுடன் இணைந்து இதுப்பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    அதேசமயம் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    ×