search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • ஆற்றை தாண்டி அப்பகுதி பொதுமக்களின் 400 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.
    • பொதுமக்கள் பாலம் கட்ட சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், கட்காம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி ஆறு ஒன்று செல்கிறது.

    ஆற்றை தாண்டி அப்பகுதி பொதுமக்களின் 400 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அவர்கள் ஆற்றைக் கடந்து தான் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றைக் கடக்க முயன்ற 2 விவசாயிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.

    அப்பகுதியில் பொதுமக்கள் பாலம் கட்ட சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி நரேஷ் (வயது 25). விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல சிரமப்படுவதை கண்டு தனது சொந்த செலவில் கயிறு மற்றும் மர கட்டைகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் செலவில் மரப்பாலத்தை கட்டினார்.

    சொந்த செலவில் பாலம் கட்டிய நரேஷுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • தி.மு.க அரசு 75 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு தடுப்பணை கட்டுவதை கைவிட்டு உள்ளனர்.
    • தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும்.

    சேலம் நெடுஞ்சாலை நகரில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது. இங்கு நேற்று எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு விவசாய முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்பட 8 மாவட்ட விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சிப்காட்-க்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே தடுப்பணை அமைக்க அ.தி.மு.க ஆட்சியில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி பணி நடந்தது. தற்போது தி.மு.க அரசு 75 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு தடுப்பணை கட்டுவதை கைவிட்டு உள்ளனர். இந்த தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பசும்பால் லிட்டர் ரூ.50, எருமைப்பாலுக்கு 60 ரூபாய் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
    • தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் கடுமையாக விலை சரிந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டி ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 40 முதல் 45 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

    இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது.

    இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் காரிமங்கலம், கொட்டு மாரண்டஅள்ளி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் முள்ளங்கி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.25 -க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் கடுமையாக விலை சரிந்துள்ளது.

    விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.2 முதல் 3 ரூபாய் வரை விலைக்கே வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை என கொட்டுமாரண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவர் தான் விவசாய நிலத்தில் விளைவித்த முள்ளங்கியை ஆடுகளை விட்டு மேய வைத்து பின்னர் டிராக்டரை வைத்து உழுது விவசாய நிலத்திலேயே முள்ளங்கியை அழித்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, பல ஆண்டுகளாக முள்ளங்கி சாகுபடி செய்து வருகிறேன். வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாய நிலத்திலேயே முள்ளங்கியை விலை பேசி எடுத்து செல்வர்.

    கடந்த மாதம் ஒரு ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்தேன். விதை முதல் நடவு கூலி வரை ஏக்கருக்கு 55 ஆயிரம் ரூபாய் செலவாகியது. திடீரென வியாபாரிகள் முள்ளங்கியை கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய்க்கு விலைக்கு கேட்பதால் அறுவடை கூலி கூட வராததால் ஆடுகளை வைத்து மேய்த்து டிராக்டரை வைத்து ஓட்டி நிலத்திலேயே அழித்துவிட்டேன். இந்த முள்ளங்கியை அழிப்பதற்கு 3000 ரூபாய் செலவு செய்துள்ளேன்.

    தற்பொழுது மாற்று பயிர் வைப்பதற்காக முள்ளங்கியை அழித்து நிலத்தை பதப்படுத்தி வருகிறேன். விவசாயி ஆகிய எங்களிடம் எடுத்து செல்லும் முள்ளங்கியை வியாபாரிகள் மார்க்கெட்டில் கிலோ 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். உழைக்கும் விவசாயிக்கு உழுத கூலியே இல்லை என வேதனை அடைந்தார்.

    • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
    • திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் அறி வியல் மையம் இணைந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களை யுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வு களில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரக ங்களை உருவாக்க முடியும்.

    இதனால் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆண்டுக்கு மூன்று முறை இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்கள் வேளாண் விஞ்ஞானிகளுக்கு எடுத்து ரைக்கப்பட்டது.

    மேலும், குமரி மாவட்ட த்தில் பல்வேறு ரக வாழை இனங்கள் கண்டறியப்பட்டு, வாழை இனங்கள் நடவு செய்யப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளில் பல்வேறு ரகங்களை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்த கண்காட்சியில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ளூர் பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பல்வேறு பயிர்களின் உயர்தர உள்ளூர் ரகங்களின் விளைபொருட்க ளையும், இதர விளைபொருட்களையும் காட்சிப்படுத்தினர்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் காட்சிப் படுத்தப்பட்டது. மேலும் வேளாண் துறையின் மூலம் வேளாண் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான சுரேஷ், லதா, கவிதா, செல்வராணி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.

    இதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அங்கக வேளாண்மை வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் சொர்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா,

    தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண்மை துணை இயக்குனர் ஊமைத்துரை, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தர் டேணியல் பாலஸ், வேளாண்மை உதவி இயக்குனர் (தோவாளை) சுரேஷ், விதைச்சான்று உதவி இயக்குனர் ஷீபா, உதவி செயற்பொறியாளர் வர்கீஸ், வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) பொன்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எந்திர வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் கவலை
    • தோகைமலை கடவூர் யூனியன் பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கி உள்ளன.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான குளித்தலை மற்றும் தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். காவேரி கட்டளை மேட்டு வாய்க்கால் தென்கரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் குளித்தலை, கோட்டைமேடு, பரளி, தண்ணீர் பள்ளி, மேட்டுமருதூர், வலையப்பட்டி, பணிக்கம்பட்டி, இனுங்கூர், நச்சலூர், நெய்தலூர், நங்கவரம், முதலைப்பட்டி, சூரியனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது.

    தோகைமலை கடவூர் யூனியன் பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கி உள்ளன.இந்நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் சுற்று பகுதி மற்றும் கிழக்கு பாசனம் மூலம் பயிரிட்ட விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கும் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்துக்கு ரூ.3000 வாடகை செலுத்த வேண்டி உள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு 2,250 வாடகை பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வாடகை அதிகரித்துள்ளது. தற்போது டீசல் விலை ஏற்றத்தால் வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் விவசாயிகளிடம் தெரிவித்து வருகின்றன. கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதிக வாடகை செலுத்த இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


    • 4-வது மண்டலத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • பொங்கலூர் வழியாகச் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

    பல்லடம் :

    திருமூர்த்தி அணையில் இருந்து பல்லடம், பொங்கலூர், வெள்ளகோவில், காங்கேயம் உள்பட பல்வேறு இடங்களில் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் பாசனம் நடைபெற்று வருகிறது. தற்போது 4-வது மண்டலத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது நான்கு சுற்றுகள் மட்டுமே விடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பி.ஏ.பி பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பொங்கலூர் வழியாகச் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தலைமையில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒன்று திரண்டனர். அங்கிருந்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே செல்லும் பி.ஏ.பி வாய்காலில் இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசும்போது, வழக்கமாக 7 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு 4 சுற்று மட்டுமே வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள தண்ணீரை தனியார் கோழி பண்ணைகளுக்கும், நார் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் நிறுவனங்களுக்கும் திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுக்கு 7 சுற்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பொங்கலூர் பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பிரதிநிதிகள் பல்லடம் தாசில்தார் அலுவலகம் சென்று அங்கு தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ,கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,பிரச்சார குழு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • அயன்கொல்லங் கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இந்த பகுதியிலும் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங் கொண்டானில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று மற்றும் பண்ணைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று, பண்ணைக்கருவிகளை வழங்கினர்.

    இதில் எம்.எல்.ஏ பேசுகையில், விவசாயிகளின் நலன் காக்கும் அரசு நமது தமிழக அரசு. அதனால்தான் முதல்-அமைச்சர் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை நடைமுறை படுத்திவருகிறார்.ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஆட்சியில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது. தற்போது 7 இடங்களில் செயல்படுகிறது.

    அயன்கொல்லங் கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இந்த பகுதியிலும் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் திருமலைச்சாமி, வேளாண்மை துறை அதிகாரி தனலட்சுமி, கிளை செயலாளர் நடராஜன், சிவா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர்.

    ராசிபும்:

    சேலம்-கரூர் அகல ரெயில் பாதை திட்டத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த கீரனூர், நெ.3 குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.10 கோடி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுவரையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், ரெயில்வே துறைக்கு நிலம் எடுத்துக் கொடுத்த தாசில்தார் அலுவலக வாகனங்கள், தளவாடப் பொருட்களை ஜப்தி செய்ய ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். அங்கிருந்த துணை தாசில்தாரிடம் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்திருப்பதை தெரிவித்தனர். ஆனால் தாசில்தார் அங்கு இல்லாததால் கோர்ட் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

    இதேபோல் ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கும் சென்ற கோர்ட் ஊழியர்கள், அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் ஜப்தி செய்ய வந்திருப்பது குறித்து எடுத்து கூறினர். அப்போது அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறினர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

    விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் ஊழியர்கள் தாலுகா ஆபீஸ் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசை வெகுவாக சாடி உள்ளார்.
    • காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஆண்டுதோறும் 7½ சதவீதம் அதிகரித்து வந்தது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி மீதான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசின் மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசை வெகுவாக சாடி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகள் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்கு ஆக்கப்படும் என்று பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு வாக்குறுதி அளித்தார்.

    ஆனால் விவசாயிகளின் வருமானம் குறைந்துதான் உள்ளது. இதற்கு காரணம், மத்திய அரசின் கொள்கைகள்தான்.

    ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தபோது, விவசாயிகளின் வருமானம் ஆண்டுதோறும் 7½ சதவீதம் அதிகரித்து வந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவான அனைத்திந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவும் இதே போன்ற குற்றச்சாட்டை கூறியது நினைவுகூரத்தக்கது.

    அப்போது அவர், " விவசாயிகள் வருமானத்தை இரு மடங்கு ஆக்குவதற்காக விவசாயிகள் வருமான இரட்டிப்பு குழு ஒன்றை 2016-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழு தனது அறிக்கையை 2018-ம் ஆண்டு அளித்தது. ஆனால் அது (நடைமுறைப்படுத்தப்படாமல்) அதிகார வர்க்கத்தின் தாழ்வாரங்களில் இன்னும் தூசிகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

    • கீழக்கரை அருகே 3-வது திருமணம் செய்த விவசாயி கொலை செய்யப்பட்டார்.
    • இதில் 2-வது மனைவி-மகன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தை சேர்ந்தவர் வையக்கிளவன் (வயது 58), விவசாயி. இவர் முதலாவதாக காளிமுத்து என்ற பெண்ணை திரு மணம் செய்துவிட்டு அவர் மதம் மாறி பிரிந்து சென்று விட்டார்.

    பின்பு வையக்கிளவன் 2-வதாக சுமைதாங்கியை சேர்ந்த சுப்புலட்சுமியை (54) திருமணம் செய்து அவர்களுக்கு பாண்டிஸ்வரி என்ற மகளும், வசீந்திரன், கனி என்ற மகன்களும் உள்ள னர். பின்பு இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகன்கள் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் 3-வ தாக வெள்ளாவைச் சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணை வையக்கிளவன் 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று வையக்கிளவன் காலி இடத்தை கழிவறையாக பயன்படுத்தினாராம். இதை 2-வது மனைவி சுப்புலட்சுமி கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு அருகில் கிடந்த பனைமட்டையை எடுத்து வையகிளவன் தாக்கினார். இதில் சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது.

    இதை அறிந்த மகன் வசீந்திரன், வையகிளவன் வீட்டிற்குள் வந்து தகாத வார்த்தையால் பேசி, கம்பால் வலது பக்க மார்பில் குத்தினார். இதை தடுக்க வந்த 3-வது மனைவி ராமலட்சுமியையும் அடித்து காயப்படுத்திவிட்டு தப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

    காயமடைந்த வையக்கிள வனை மைத்துனர் பாலகிருஷ்ணன், அதே ஊரைச் சேர்ந்த ரவி, ஆனந்தராஜ் ஆகியோர் ஆட்டோவில் ஏற்றி கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் விசாரணை நடத்தினார். தாய், மகன் இருவரையும் போலீசார் கைது செய்து மதுரை மற்றும் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

    • விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.

    இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.

    இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.

    உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர். 

    • தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகையில் கரும்பை சேர்த்திருப்பதற்கு வரவேற்கிறோம்.
    • பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்குதல், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குதல் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

    நீலாம்பூர்:

    தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தி அடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சூலூரில் கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகையில் கரும்பை சேர்த்திருப்பதற்கு வரவேற்கிறோம். இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இதே போல ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்குதல், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குதல், கள் இறக்க அனுமதி உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

    அதேபோல பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் வழங்கினால் ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சளை விளைவித்து விலை பெறாமல் தவித்து வரும் விவசாயிகளும் பயன் அடைவார்கள். எனவே அதுகுறித்தும் முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×