search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    • மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ₹50 லட்சம் வழங்குவதாக ஆந்திரா துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    • 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
    • பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

    தெலுங்கானாவில் மழை வெள்ளம் காரணமாக செகந்திராபாத்-விசாகப்பட்டினம் கோதாவரி எக்ஸ்பிரஸ்; புதுடெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரெயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனப்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டன.

    ரெயில் பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    விஜயவாடா ரெயில் நிலையத்திற்கு 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.

    கோதாவரி எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் சார்மினார் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

    ஒரே நேரத்தில், பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை டானாபூருக்கும், தானாபூரில் இருந்து பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் கொண்டு செல்ல 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    நெக்கொண்டாவில் இருந்து மொத்தம் 74 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 5,600 பயணிகள் காசிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    காசிப்பேட்டையில் இருந்து டானாபூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், காசிபேட்டையில் இருந்து பெங்களூருக்கு மற்றொரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டன. 10,000 பயணிகள் பாதுகாப்பாக அவர்களது செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    • ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
    • கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

    ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.

    அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

    மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

    வீடு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மொட்டை மாடியில் அத்தியாவசிய பொருட்களை மாடியில் வைத்துவிட்டு, ஒருவர் நடந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    • ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
    • ஐதராபாத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அமராவதி:

    குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

    ஆந்திராவில் என்.டி.ஆர்., கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இவை உள்பட 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 294 கிராமங்களில் வசித்து வரும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கிருஷ்ணா நதிநீர் கரைபுரண்டு ஓடுவதால் பபட்லா மாவட்டத்தின் பிரகாசம் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு ஆந்திராவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    அங்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 17 குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் 100 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    கனமழையால் 62,644 ஹெக்டேர் நெல்பயிர்கள், 7,218 ஹெக்டர் பழத்தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக மாநில உள்துறை மந்திரி வெங்கலப்புடி அனிதா தெரிவித்தார்.

    ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.

    அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

    மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் 99 ரெயில்களை ரத்து செய்தும், 4 ரெயில்களை பாதியளவு ரத்து செய்தும் தெற்கு மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. 54 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு உள்ளன.

    மழை வெள்ளத்தால் தெலுங்கானா எதிர்கொண்டு வரும் மோசமான சூழல் குறித்து அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சென்னை, விசாகப்பட்டணம், அசாமில் இருந்து தலா 3 குழுவினர் ஐதராபாத் விரைந்தனர்.

    இந்த மாவட்டத்தில் சுமார் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சில மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் மாயமாகினர்.

    இதனால் ஐதராபாத் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் ஐதராபாத், கம்மம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

    பேச்சுவார்த்தையின்போது, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    • ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
    • 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது.

    திருப்பதி:

    வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு அருகில், விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் கரையைக் கடந்தது.

    இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது. ஆந்திராவில் மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டியது.

    பல மாவட்டங்களில் 15 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதில் விஜயவாடா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் தேங்க வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் உட்பட ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் வழியாக பாயும் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஆறு குளங்கள் ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் கயிறுகளை கட்டி மீட்டனர்.

    விஜய வாடா, மொகல் ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரண மாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரை மட்டமாகியது.

    இதில் வீட்டில் தூங்கிய வர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக்,சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார்.

    பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார்.

    ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ரெயில் தண்டவாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் விஜயவாடா-காசிபேட்டை மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்து மழை பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத் திலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஐதராபாத் உள்ளிட்ட நதரங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, கிராமங்க ளுக்கு இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இன்று தெலுங்கானாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

    • நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலை நம்பி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    மேலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்குறுங்குடி வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.

    இதுபோல நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

    • 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதற்கிடையே மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து உபரிநீர் மீண்டும் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நேற்று இரவு 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து பவர்ஹவுஸ் வழியாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கனமழையால் ஜெய்ஜோன் சோ நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வாடா இந்திய மாநிலங்கள் வெள்ளக்காடாக மிதக்கின்றன.

    பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பருவகாலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருமண நிகழ்விற்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காரில் வந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஜெய்ஜோன் சோ நதியை கடக்கும் போது அவர்கள் வந்த கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை கடக்க வேண்டாம் என்று கார் ஓட்டுநரிடம் உள்ளூர் மக்கள் எச்சரித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றை கடந்துள்ளனர்.

    ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 2 பேரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காரில் பயணித்த தீபக் பாட்டியா என்பவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ளூர் மக்கள் அனுமதித்தனர்.

    இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு.

    ஒகேனக்கல் ஆற்றில், நீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால், ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை வரை 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.

    இதனால், நீர் வரத்து குறைந்ததால் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    25 நாட்களுக்கு பிறகு 2 நாட்களாக பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.
    • முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் கண்டறியும் வகையில் 450 இடங்களில் இ.டபிள்யூ.எஸ். எனும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவிகளை அமைக்கும் பணிகளை பேரிடர் மேலாண்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    நெல்லை மாநகராட்சி மூலமாக கேபாசிட்டிஸ் என்னும் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தாமிரபரணி, ராமநதி மற்றும் கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கினை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.

    தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த கருவிகள் விரைவில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவிகள் தாமிரபரணி, கடனா, ராமநதி வழித்தடங்களான கோபாலசமுத்திரம், கோவில்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆலடியூர், பொட்டல்புதூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், முறப்பநாடு, சேரன்மகாதேவி, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் அமைகிறது.

    இதன் மூலம் ஆறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும்? எப்போது வரும்? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    இந்த தகவல்கள் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, முக்கிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதில் சேரன்மகாதேவி மற்றும் கொக்கிரகுளத்தை தவிர மற்ற இடங்களில் கருவி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இந்த கருவியில் காமிரா, சென்சார் வசதி, சோலார் பேனல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் அமைப்பது குறித்து கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ளத்தில் இருந்து தப்பிவந்த அகில் மற்றும் அனந்தராம் ஆகிய இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி சரிதா. இவர்களது மகன்கள் அமல், அகில். அனில்குமார் கேரள போலீஸ் ஐ.ஜி. ஹர்ஷிதா அத்தலூரின் வாகன டிரைவர் ஆவார். நேற்று அவரது வீட்டுக்கு அவருடைய சகோதரர் சுனில்குமார் மற்றும் சகோதரி ஸ்ரீபரியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.

    மதியம் அனில்குமாரின் வீட்டில் 3 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்பு அவர்கள் மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்கள். அங்கு பயிர்களுக்கு உரமிடும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். வேலை முடிந்ததும் அனைவரும் அங்குள்ள கரமனா ஆற்றில் குளித்தனர்.

    அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனில்குமாரின் சகோதரி ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த்(25) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப்பார்த்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.

    அனில்குமாரின் மற்றொரு மகன் அகில், சுனில்குமாரின் மகன் அனந்தராமன் ஆகியோர் ஆற்றில் நீந்தி கடந்து வெளியே வந்துவிட்டனர். ஆனால் அனில்குமார், அவரது மகன் அமல், ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த், சுனில்குமாரின் மகன் அத்வைத் ஆகிய 4 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து வெள்ளத்தில் இருந்து தப்பிவந்த அகில் மற்றும் அனந்தராம் ஆகிய இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நெடுமங்காடு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மழை காரணமாக பேப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் கரமனா ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்றுள்ளது. இதனை அறியாக அனில்குமாரின் குடும்பத்தினர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டனர்.

    • அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • 16 வது நாளாக குளிக்க தடை

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, ஹாசன், மாண்டியா, உத்தரகான்ட், தட்சண கன்னடா, உடுப்பி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதி தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டன. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாகவும், தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது.

    மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீரானது திறந்து விடப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16 வது நாளாக நீடித்து வருகிறது.

    மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகள் தனியார் விடுதிகளை ஆற்று நீர் வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி வழியாக ஓசூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை கண்டு கொள்ளாமல் ஆபத்தையும் உணராமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தண்ணீர் சூழ்ந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேலும் 2 லட்சத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுக்கும் பட்சத்தில் கரையோர பகுதியில் வாழும் குடியிருப்புகளை சேர்ந்த மக்களை அப்புறப்படுத்தும் சூழல் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×