search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
    • மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.
    • கல்லூரி மாணவர் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி பயணம் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்களில் தினந்தோறும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் ஆபத்தை உணராமல் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் சாகச பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. மேலும் ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் அவ்வப்போது கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அவர்களை ரெயில்வே போலீசார் எச்சரித்தும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மின்சார ரெயிலில் சாகச பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளார். செங்குன்றம் அடுத்த காவாங்கரை பகுதியில் இலங்கை அகதியாக வசிக்கும் 17 வயது மாணவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கல்லூரிக்கு செல்லாமல் சக நண்பர்களுடன் திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அந்த கல்லூரி மாணவர் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி பயணம் செய்தார். இதனை மற்ற பயணிகள் எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் அதே பாணியில் சாகச பயணம் மேற்கொண்டார்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் நின்று விட்டு மின்சார ரெயில் புறப்பட்டபோது எப்போதும் போல் கல்லூரி மாணவர் சாகச பயணம் செய்ய முயன்றார். இதில் கால் சறுக்கியதில் மாணவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவரின் தலையில் 20-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    பாகூர்:

    கடலூரில் இருந்து கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், ரெட்டி சாவடிக்கான ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

    இந்த ஆட்டோக்கள் பெரும்பாலும் முறையாக அரசு அனுமதி பெறாமல் வாய்மொழி உத்தரவில் சுமார் 100 வண்டிகள் இயக்கப்படுகிறது.

    அதுபோல இன்று காலை கடலூரில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று கிருமாம்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியகோயில் 4 முனை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையை பைக்கில் கடக்க முயன்ற குழந்தையுடன் வந்த பெண் மீது மோதியது.

    மேலும் ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் வந்தவர்களும் சாலையைக் கடந்த பைக்கில் வந்தவர்களும் காயமடைந்தனர். அப்போது சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    விபத்தில் கடலூரைச் சேர்ந்த செவிலியர் சுதா(41), அருள்(42), நாராயணன்(50), மற்றும் குழந்தை கல்லூரி மாணவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்துக்கு ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் முறையாக பராமரிக்கபடாததும், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சந்திப்புக்களில் பணியில் ஈடுபடுவது கிடையாது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    • ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை.
    • 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை. 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.

    பி.சி.சி.ஐ., மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ரா, சமீபத்தில் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் தற்போது பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, விரைவில் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளார்.


    மேலும் முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அரசுப்பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
    • பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    அவிநாசி:

    திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கருவலூா் காளிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பொக்லைன் வாகனம், அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

    • சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.
    • உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55) தொழிலாளி. இருவரும் வேலையை முடித்துவிட்டு விளாத்திகுளத்தில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

    இதேபோன்று கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் மதன்குமார் (21). வேம்பார் அருகே உள்ள கன்னிராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சுடலைமணி (20). இவர்கள் இருவரும் வேம்பாாில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வேம்பாாில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் விளாத்திகுளம்- வேம்பார் சாலையில் செவ்வலூரணி அருகே வரும்பொழுது சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் சண்முகராஜ் மற்றும் சுடலைமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சண்முகம் மற்றும் மதன்குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் சென்று படுகாயமடைந்த சண்முகம், மதன்குமார் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மதன்குமார், சண்முகம் ஆகிய இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

    • முகமது ரியாஸ்தீன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.
    • மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது ரியாஸ்தீன் (வயது57). இவர் மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். மேலும் அருகில் உள்ள பள்ளிவாசலில் பொருளாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹிமா கவுசர். இவர் பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    இந்த நிலையில் முகமது ரியாஸ்தீன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்தபடி மரத்தின் கிளைகளை இழுத்து அவர் மாங்காய் பறித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக முகமது ரியாஸ்தீன் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பழனிவேல் ஓட்டினார். அந்த பஸ்சில் 23 பயணிகள் பயணம் செய்தனர். இதேபோல் திட்டக்குடியில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. 11 பயணிகள் பயணம் செய்த அந்த பஸ்சை டிரைவர் பார்த்தசாரதி ஓட்டி வந்தார். செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் முன்பு வந்தபோது அந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் 2 பஸ்களின் முன் பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. மேலும் பஸ்களில் பயணம் செய்த 5 பயணிகள் காயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பயணிகளில் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன், சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் சாலை வளைவின் ஓரத்தில் கட்டிட வேலைக்காக செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையில் வாகனங்களில் வருபவர்களுக்கு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு உயரமாக அந்த கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விபத்துக்கான காரணம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடகாடு அருகே குரங்கு கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.
    • இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    புதுக்கோட்டை :

    வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சரண்யா, விஜய், லட்சுமி, இந்திரா, சித்ரா, விஜயா உள்பட 7 பேரை கடித்தும், நகங்களால் கீறியும் உள்ளது. இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மற்றும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி சென்றனர். மேலும் இவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறினர்.

    கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்கை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி வனத்துறை மற்றும் கீழாத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த குரங்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அமர்ந்து பயமுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர அச்சம் அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    அம்பையில் இருந்து இன்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை என 4 பேர் வி.கே.புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிள் அம்பை அருகே கோடராங்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த வாகனம் டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று பலியான 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தலை மற்றும் கழுத்து, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே வீயன்னூர் கோழியோட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஐசக் சிங் (வயது 42), பொக்லைன் டிரைவர். நேற்று மாலை இவர் பூவன்கோட்டில் இருந்து கோழியோட்டுவிளை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வீயன்னூர் பகுதியை சேர்ந்த மோகன் (54) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஐசக் சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஐசக் சிங்கின் மனைவி சுஜி (32) திருவட்டார் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேர்க்கிளம்பியை அடுத்த உள்ளுவெட்டி காப்புவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெகன்ராஜ் (37), தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்லும்போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் வளைவில் வைத்து திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் கழுத்து, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கிறிஸ்டோபர் ஜெகன்ராஜின் மனைவி ஜெபிதா அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    மதுராந்தகம்:

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 5.30 மணியளவில் அரசு பஸ் மதுராந்தகம் அருகே உள்ள தபால் மேடு என்ற இடத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லேசாக மழை பெய்தது.

    இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென முன்னாள் சென்று கொண்டு இருந்த திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. திருநெல்வேலியில் இருந்து வந்த பஸ்சின் பின்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் கணேஷ் நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 46) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த திருவண்ணாமலை போகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன், சென்னையைச் சேர்ந்த சதீஷ், சைதாப்பேட்டை கேபி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரவண சங்கர், மாரியப்பன், சென்னை சூளையை சேர்ந்த வினோத் குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

    மேலும் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த 2 பஸ்களையும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதமானதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×