search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    • விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மொட்டை அடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானி சாகர் சாலை, நம்பியூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியம்பட்டி டவுன் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேப்போல் புளியம்பட்டி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட கடைகளும், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

    மேலும் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

    இந்த நிலையில் தீவுத்திடல் பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடிவருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்டிரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

    அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும். பிற மூத்த கலைஞர்கள், பல்லவன் முனை, வாலஜா முனை(அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள்(போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும்.

    மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது.
    • வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதுபோல் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலந்ததால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று மழை சற்று குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறைய தொடங்கியது. இன்று காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார் 80 வயது முதியவர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் உடலை சந்திப்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேட்டை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை டவுண் மாதா பூங்கொடி தெருப்பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது.

    நெல்லையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    • புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
    • புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.

    புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

    விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
    • உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஜெய்ஜவான்(41). இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி(31) என்ற மனைவியும், ருத்ரன்(4) என்ற மகனும், பிரியதர்சினி(8) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 22 ஆண்டுகளாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறைமுடிந்து அருணாசலபிரதேசத்திற்கு பணிமாறுதலில் சென்றார். அங்கு உள்ள ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போடி சங்கராபுரத்திற்கு கொணடுவரப்பட்டது. இன்று காலை ஜெய்ஜவான் உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

    • கடந்த மாதம் 15, 16-ந் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.
    • சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் அடுத்த பூமாண்ட கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூரணி (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து உள்ளார்.

    வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நிலையில் பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்து உள்ளனர்.

    மேலும் சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர். இந்நிலையில் பூரணி கர்ப்பமானார். அப்போதும் அவரைப் பார்க்கவிடாமல் மதன்குமார் வீட்டார் தடுத்து விட்டனர்.

    பூர்ணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி திடீரென பூரணிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் பூரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பூரணி பெற்றோர் மகளை பார்க்க சென்றபோதும் மகன் குமார் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி பார்க்க விடாமல் செய்துவிட்டனர்.

    இதனை அடுத்து பூரணி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் பூரணியின் உடல் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரதே பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 15, 16-ந் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு பூரணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென முற்றுகையிற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பூரணி பெற்றோர் கூறும்போது, எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. எனது மகள் சாவில் மதன்குமார் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    கிட்டத்தட்ட மதன்குமார் குடும்பத்தினர் தலைமறைவாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. போலீசார் அவர்களை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எஸ். பி. அலுவலகத்தில் திடீரென கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பூரணி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பூரணி உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

    • முல்லை பெரியாற்று பகுதியை கடக்க முயன்ற போது பிரபு தேவா திடீரென மாயமானார்.
    • பிரபுதேவா உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர் பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 80 வயது மூதாட்டியிடம் சாமாண்டிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விஜயகுமாரை அடையாளம் காட்ட அதேகிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் முகிலன், கிருஷ்ணன், அருண்பாண்டி, பிரபுதேவா (வயது 28) ஆகியோரை கூடலூர் போலீசார் சாமாண்டிபுரத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது முல்லை பெரியாற்று பகுதியை கடக்க முயன்ற போது பிரபு தேவா திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விஜயகுமாரை தேடுவதை விட்டுவிட்டு திரும்பியுள்ளனர். நீண்டநேரமாகியும் பிரபுதேவா வீடு திரும்பாததால் கம்பம் மெயின்ரோடு காந்திசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரபுதேவாவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    முல்லை பெரியாற்றில் நீர் திறப்பை குறைத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பிரபுதேவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை சுருளிபட்டி முல்லை பெரியாற்று பகுதியில் பிரபுதேவா பிணமாக மீட்கப்பட்டார்

    உயிரிழந்த பிரபுதேவாவிற்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பிரபுதேவா உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

    • பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
    • தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பவானி:

    பீகார் மாநிலம் கைத்வா லியா மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற அருன்பாகத் (வயது 32). இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு மனிஷா குமாரி (11) மற்றும் போன்பி குமாரி என்ற ஒன்றை வயது பெண் குழந்தையும் உள்ளது. அருன்பாகத் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவ ட்டம் சித்தோடு அடுத்த பூம்புகார் தெருவில் வசித்து வருகிறார்.

    இவர் கொங்கம்பாளையம்-கங்காபுரம் ரோட்டில் உள்ள ஒரு பிராசசிங் மில்லில் கடந்த 5 வருடமாக லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருண் பாகத் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    மூத்த மகள் பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தினிதேவி மற்றும் அவரது ஒன்றை வயது குழந்தை சோன்பிகுமாரி மட்டும் இருந்தனர். பின்னர் சாந்தினிதேவி வீட்டில் தூங்கி உள்ளார். குழந்தை சோன்பி குமாரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

    திடீரென தூக்கம் கலைந்து எழுந்த சாந்தினிதேவி வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரைத் தேடினார். பின்னர் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தார்.

    அப்போது பாத்திரங்கள் கழுவதற்காக தண்ணீர் ஊற்றி வைத்திருந்த ப்ளூ கலர் தண்ணீர் வாளிக்குள் குழந்தை சோன்பிகுமாரி தலைகீழாக தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    • 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் தமிழக வட மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்தது.

    புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் வெள்ள நீரில் மிதந்து வந்தது.

    காணாமல் போன மகனை கண்டுபிடிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மகனை இழந்த வயதான பெற்றோர், தங்கை, உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.

    • தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தியதில் 14,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டாகின. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவாார்த்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் நிறுத்தம் 7 நாட்கள் நீடித்தது. இதில் 83 இஸ்ரேல் பிணைக் கைதிகள், 24 வெளிநாட்டினரை ஹமாஸ் விடுத்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

    போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கத்தார் நாடு முயற்சித்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தனது போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. தெற்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

    அதே போல காசாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வீச்சால் பல இடங்களில் கடும் புகை எழும்பின. காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் நாள் தாக்குதலில் 180 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, நேற்று காலை இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 180-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 589 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா மக்கள் உயிரை கையில் பிடித்தப்படி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் 126 இஸ்ரேலியர்கள், தாய்லாந்தை சேர்ந்த 8 பேர், நோபளம், தான்சானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 137 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    • குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார்.
    • கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டி பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஹெல்பிங் ஹார்ட் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் கமலபாபு (32).

    இவர் கோவையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார். பிறந்த 16 நாட்களேயான அந்த குழந்தைக்கு கடந்த 25-ந் தேதி இரவு 11.15 மணியளவில் திடீரென மூக்கில் ரத்தம் வந்து உடல் நிலை சரியில்லாமல் போனது.

    உடனடியாக குழந்தையை ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×