search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • கந்தர்வகோட்டை அருகேபோலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்
    • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது பரிதாபம்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் அறிவுக்கரசு (வயது 42). இவர் மதுரை பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று விடுமுறைக்கு பழைய கந்தர்வகோட்டையையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அறிவுக்கரசுக்கு காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கந்தர்வகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே போலீஸ் அறிவுக்கரசு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் மரணம் அடைந்த காவலர் அறிவுக்கரசுக்கு ஜான்சிராணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.   

    • நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.
    • புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43).

    இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் மண்டேலா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அறக்கட்டளை இரங்கலும் தெரிவித்தது.

    புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து விசாகப்பட்டினம் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
    • தனது வாழ்நாளில் பெண் சிங்கம் பல லட்சம் மக்களுக்கு காட்சி அளித்து பரவசப்படுத்தியுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 18 வயதுடைய மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.

    வயது முதிர்வு காரணமாக பெண் சிங்கத்திற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர் நந்தினி சலாரியா கூறுகையில்:-

    கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் குஜராத்தில் உள்ள சக்கார் பாக் உயிரில் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து விசாகப்பட்டினம் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

    வனப்பகுதியில் வாழும் சிங்கங்கள் 16 முதல் 18 வயது வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. தற்போது இந்த பெண் சிங்கம் தனது 19-வது வயதில் உயிரிழந்தது.

    தனது வாழ்நாளில் பெண் சிங்கம் பல லட்சம் மக்களுக்கு காட்சி அளித்து பரவசப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

    • கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
    • உறவினர்கள் சாலை மறியல்


    துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அபிராமி (28) என்கிற மனைவியும், ஜஸ்வந்த் (5), சாகித்யா (2) என்கிற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்த் இரவு வேலை காரணமாக துறையூருக்கு சென்று வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்லும் பொழுது, அம்மாபட்டி பிரிவு சாலை அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த வர்கள் ஆனந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆனந்தின் தந்தை துரைசாமி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இறந்த ஆனந்தின் உறவினர்கள் சம்பவ நேரத்தில் அங்கு இருந்த அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த நபர்கள் தான் ஆனந்தை கொலை செய்ததாகவும்,போலீசார் உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து, 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி துறையூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த முசிறி போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    • அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர்.
    • விசாரணை நடத்த மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் கிரீஷ்பாபு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி களமசேரி பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்பாபு (வயது 47). சமூக சேவகரான இவர், கேரளாவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர்.

    இந்த நிலையில் நேற்று கிரீஷ்பாபு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் படுக்கையிலேயே பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மகள் வீணா விஜயன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் கேரளாவை சேர்ந்த ஒரு தாதுமணல் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் கிரீஷ்பாபு. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரீஷ்பாபு இறந்துவிட்ட தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வார ங்களுக்கு ஒத்தி வைக்கப்ப ட்டது. முதல்-மந்திரி மகள் உள்பட பலர் மீதான வழக்கு விசார ணைக்கு வந்த நிலையில், வழக்கு தொட ர்ந்தவர் மர்மமாக இறந்தி ருப்பது கேரளாவில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆர்.கே. பேட்டை அடுத்த வங்கனூர் காலனியில் வசித்தவர் தியாகராஜன் (வயது 47). இவர் திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மாணவர் விடுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவரோடு விடுதியின் சமையலர் கோபிநாத் என்பவரும் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. அறையை விட்டு வெளியே வந்து சமையலர் கோபிநாத் பார்த்த போது வராண்டாவில் தியாகராஜன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் விடுதி அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்து போன இரவு காவலர் தியாகராஜனுக்கு பன்னீர் செல்வி என்ற மனைவியும் தனுஸ்ரீ, கோகுல்ராஜ் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.
    • மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 60). இவர் கல்பாக்கம் அருகே உள்ள லத்தூரில் ஆலோபிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி வேலைக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    அதனால் அவரது குடும்பத்தார் சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன தனுஷ், 2 நாட்களாக எங்கே இருந்தார்? குடிபோதையில் விழுந்து இறந்தாரா? விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்து சாலையோரம் கொண்டு வந்து போட்டார்களா? என மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
    • வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா(45). கூலித்தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம்(14), கவிவர்மன்(11), பிரநிஷா(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கம்பி கட்டும் வேலைக்காக ஈராக் சென்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கோகிலாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என நத்தம் தாசில்தார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பூங்கொடி உறுதி அளித்தார். இந்நிலையில் தன்னைபற்றி சிலர் அவதூறு பரப்பியதால் தற்கொலை செய்து கொண்ட வாட்ஸ்அப் மூலம் சின்னையா தகவல் அனுப்பியுள்ளார். இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்தஊருக்கு வந்தது.

    சின்னையாவின் உடலை பார்த்து மனைவி கோகிலா மற்றும் குழந்தைகள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    • பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன்மலை கீழ்நாடு பஞ்சாயத்து மேல்பூண்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு நண்பர்களான அய்யனார், ராமர், ஆண்டி, பிரசாந்த், குமார் ஆகிய 5 பேரும் மாப்பிள்ளை தோழனாக சென்றுள்ளனர்.

    அப்போது 5 பேரும் மது குடித்துள்ளனர். இதனிடையே மாப்பிள்ளை வீட்டார் திருமண செலவுக்காக மாப்பிள்ளை தோழர்களுக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    இந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அய்யனார் என்பவர் மயக்கமடைந்து உள்ளார். இதையடுத்து அய்யனாரை நண்பர்கள் சேர்ந்து அதே பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே வீட்டில் மயங்கி கிடந்த அய்யனாரை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் இதுகுறித்து கரியகோவில் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அய்யனாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மனமுடைந்த பாக்கிய லட்சுமி மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (வயது 43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு சுதர்ஷினி(23), கார்த்திகா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பாக்கியலட்சுமி தனது மகள்களுடன் சேர்ந்து செல்வக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. செல்வக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்வகுமார், பாக்கியலட்சுமி மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதற்கிடையே மூத்தமகள் சுபாஷினிக்கும், அப்பகுதியை சேர்ந்த கந்தவேல் (23) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாக்கிய லட்சுமிக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் செல்வக்குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கிய லட்சுமி மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையறிந்த கந்தவேல், செல்வக்குமாரை கொலை செய்யலாம் என கூறியுள்ளார்.

    அதன்படி சம்பவவத்தன்று இரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை, பாக்கியலட்சுமி, அவரது மகள்கள் சுபாஷினி, கார்த்திகா, கதிர்வேல் ஆகியோர் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் காலையில் செல்வக்குமார் குடிபோதையில் தண்ணீர் இல்லாமல் இறந்து கிடந்ததாக அக்கம் பக்கத்தில் தெரிவித்தனர். ஆனால் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையடுத்து செல்வக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுகாத்தி:

    அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் 10 வயது மகன் நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் வீடியோ கேம் விளையாட அவனது தாய் மொபைல் போன் கொடுக்காததால் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டு முன்பு உள்ள வாசலில் அமர்ந்து இருந்த சின்னப்பராஜ் அவரது மனைவியிடம் படபடப்பாக உள்ளது என்றுள்ளார்.
    • வால்பாறை போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றாவை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 57). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழி விடாமல் அவரது வாகனத்தை நிறுத்தி இருந்தார். இது குறித்து சின்னப்பராஜ் கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர்.

    வீட்டு முன்பு உள்ள வாசலில் அமர்ந்து இருந்த சின்னப்பராஜ் அவரது மனைவியிடம் படபடப்பாக உள்ளது. எனவே குடிக்க சுடுதண்ணீர் வேண்டும் என கேட்டார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சின்னப்பராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வால்பாறை போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தாக்கியதில் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் இது இயற்கை மரணமா அல்லது தாக்குதலா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×