search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    • கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 75). இவர், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

    இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    கணவர் இறந்த துக்கத்தை தாங்காமல் ராமுவின் மனைவி தங்கமணி (65) தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்கான ஒரே வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. மயானத்தில் இருவரது உடல்களும் அருகருகில் அடக்கம் செய்யப்பட்டன.

    • போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி வக்காரி குளக்கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார்.
    • அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் தனகொடி (59). இவர் சேலம் மகுடஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து தூங்க சென்றார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காவேரிபட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த மிட்டஅள்ளி பாரத கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    இவரது மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு சசிகலா, சரண்யா, செவ்வந்தி ஆகிய 3 மகள்களும், மணிகண்டன் (26) என்ற மகனும் உள்ளனர். இதில் 3 பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

    கடைசியாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று மாலை பச்சையப்பனும், பாப்பாத்தியும் அவர்களது பேரன் தட்சன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் மணிகண்டனும், அவரது தங்கை சரண்யாவும் சென்றனர்.

    அப்போது கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான் கொட்டாய் பிரிவு ரோடு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பச்சையப்பன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பச்சையப்பன், பாப்பாத்தி, தட்சன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே 3 பேரும் விபத்தில் காயமடைந்ததை கண்டு மணிகண்டனும், சரண்யாவும் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக பச்சையப்பன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பனும் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப்கார், வின்ச் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் நடந்து சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சேகர்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவில் படிப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.

    ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை கீழே கொண்டுவந்து அடிவாரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    தற்போது கடும் கோடைவெயில் அடித்துவரும் நிலையில் பகல் பொழுதில் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்பவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதனை போக்க பல்வேறு இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    • மரண மண்டலம் என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார்.
    • எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் துணையுடன் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களால் பொதுவாக 'மரண மண்டலம்' என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு திரும்பவில்லை, என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஹிமாலயன் டைம்ஸ் செய்திக்கு வழிகாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், 'சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் போது கென்னிசன் அசாதாரணமாக இருப்பதை கவனித்தோம். அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகள், கடல் மட்டத்தில் இருந்து 8,400மீ உயரத்தில் உள்ள பால்கனி பகுதிக்கு இறங்க உதவினார்கள்' என்றார்.

    எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது. நேபாள சுற்றுலாத் துறையின் தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

    • தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சிவராஜா மகன் சிவசாந்தன்(12). தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவன்(12). இவர்கள் 2 பேரும் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை விளையாட சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவர்களின் உடல்களை சடலமாக மீட்டனர். பின்னர் இருவரது உடல்களும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு இல்லாத குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மொட்டை மாடியில் கொசு வலைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் வல்லவரப்பா (வயது 52). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் கிராமம் சண்முகபுரம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கல்லாமொழியில் நடைபெற்று வரும் அனல் மின்நிலைய பணியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மாலையில் பணி முடித்து சண்முகம் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு மொட்டை மாடியில் அயர்ந்து தூங்கியுள்ளார். மறுநாள் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரை தேடி சக ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மொட்டை மாடியில் கொசு வலைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

    இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வல்லவரப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் மே என்ற பெண் ஒட்டகச்சிவிங்கி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்தது.

    மலேசியாவில் உள்ள நெகெரா உயிரியல் பூங்காவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கடந்த 2013-ம் ஆண்டு 4 மாத குட்டியாக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. தற்போது அதற்கு 10 வயதானது.

    கடந்த 3 மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஒட்டகச்சிவிங்கி இறந்தது. அதனை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர்.

    மரணத்திற்கு காரணம் நாள்பட்ட மெட்ரிடிஸ் மற்றும் நிமோனியா என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, ஒட்டகச்சிவிங்கியின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20-25 ஆண்டுகளாகும். கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விலங்குகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பியர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.
    • பிரெஞ்சு தூதரகத்திற்கு பியரின் மரணம் குறித்து தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதசேம் மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 52ல் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் பெர்னார்ட் நிவானன் (66). நொய்டாவில் உள்ள பேக்கரி ஒன்றில் தலைமை சமையல்காரராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில், பியர் நாள் முழுவதும் ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் இதனை கவனித்துள்ளார். பியர் வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போட்டிருந்த நிலையில் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மாற்று சாவியை கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். பியர் வீட்டின் படுக்கையறையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

    இதையடுத்து, வீட்டு உரிமையாளர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பியர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.

    மேலும், பியரின் மர்ம மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். உள்ளூர் புலனாய்வுப் பிரிவு புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
    • இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    விராலிமலை:

    முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இதில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க பணியாட்களை நியமித்து அவ்வப்போது அந்த காளைகளுடன் பழகியும் வருகிறார்.

    இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலைமோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தன்னுடைய வளர்ப்பு காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த டாக்டர் விஜயபாஸ்கர், காளை காயமடைந்து விழுந்ததை பார்த்ததும் பதறிப்போனார். அதன் மீது தண்ணீர் தெளித் தும் பயனில்லை.

    கேலரியில் இருந்து இறங்கி வந்த அவர் அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த காளையை தடவிக்கொடுத்தார். எப்படியும் காளை எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த காளை உயர் சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தையை போல் பார்த்துக்கொண்ட டாக்டர் விஜயபாஸ்கர் சொந்த ஊரில் இருந்து 2 முறை காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றார். நேற்றும் காளைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதற்கிடையே இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு டாக்டர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    • தமிழ் உள்பட பல மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
    • பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை டைரக்டு செய்துள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    மனோபாலாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோபாலா நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள மரும்பூர். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

    மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மனோபாலா உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கலைப்பிரிவு தலைவர் இயக்குனர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் மனோபாலாவின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

    இதுதவிர திரையுலகினர் சார்பில் மனோபாலா உடலுக்கு நடிகர்கள் விஜய், ஆர்யா, சிவகுமார், மோகன், ராதாரவி, டெல்லிகணேஷ், ரமேஷ் கண்ணா, மோகன் ராமன், ஜெயபிரகாஷ், நடிகை வித்யுலேகா, இயக்குனர்கள் மணிரத்னம், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், சேரன், நாஞ்சில் அன்பழகன், பேரரசு, தயாரிப்பாளர் முரளி ராமசாமி, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர்கள் சார்லி, சரவணன், சம்பத் ராம், மதன் பாப், இசையமைப்பாளர் தினா, தாமு, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ஏ.சி.சண்முகம், மன்சூர்அலிகான், கோவை சரளா, நடிகர் பாக்யராஜ் அவரது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோரும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'பிரபல இயக்குனரும், நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்'' என்று கூறியுள்ளார்.

    கஜினி, அரண்மனை, கலகலப்பு, தலைவா, பிகில், காஞ்சனா, வரலாறு, வாத்தியார், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆதவன், சிங்கம், சிறுத்தை, நண்பன், சகுனி, அரண்மனை உள்ளிட்ட படங்களில் மனோபாலாவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. தமிழ் உள்பட பல மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

    1982-ம் ஆண்டு கார்த்திக் நடித்த ஆகாய கங்கை படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான், மூடுமந்திரம், மல்லுவேட்டி மைனர், வெற்றிப்படிகள், பாரம்பரியம், கருப்பு வெள்ளை, அன்னை உள்பட 24 படங்களை டைரக்டு செய்துள்ளார்.

    1987-ல் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தையும் மனோபாலா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.

    தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, பாபிசிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

    அனைத்து நடிகர், நடிகைகளுடன் நட்புறவோடு பழகினார். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

    மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

    ×