search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 12,426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். நிலநடுக்கம் காரணமாக 12 ஆயிரத்து 426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    முன்னதாக கசகஸ்தான் சுகாதார துறை வெளியிட்ட தகவல்களில் பலத்த காயமுற்ற 44 பேர் உதவி கோரியதாக தெரிவித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் மக்கள் அச்சத்தில் அலறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நிலநடுக்கம் காரணமாக சீனாவில் 47 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 78 கட்டடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சி வகுப்பின் இடையே திடீரென சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 20 வயது மாணவர், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்று அடையாளம் காணப்பட்டார்.

    சிசிடிவி காட்சியின்படி, லோதி வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். 

    அப்போது அவர் திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தது சிசிடிவி காட்சி காட்டுகிறது.

    அதிர்ச்சியடைந்த சக மாணவரகள் லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    லோதியின் மரணம் சமீபத்தில் இந்தூரில் நடந்த நான்காவது சம்பவம் ஆகும். இது இளைஞர்கள் மத்தியில் "அமைதியான மாரடைப்பு" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய கவலையைத் தூண்டுகிறது.

    இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட 3.11.2021 அன்று அரசாணை.
    • 2021ல் இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மனித- வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட 3.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    2021 அரசாணைப்படி, மோதல்களில் மனித உயிர் இழப்பு, நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும், மனித, வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்குமாறு அரசுக்கு முறையீடுகள் வந்தன.

    இந்நிலையில், நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

    • மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    • கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

    மேங்கோ ரேஞ்ச் பகுதியில் குழந்தையை தாக்கி தேயிலை தோட்டத்திற்கு சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது.

    பிறகு, படுகாயங்களுடன் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    ஏற்கனவே, 5 பேரை சிறுத்தை தாக்கிய நிலையில், தற்போது வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளது. இதனால், அங்கு பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

    • நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
    • நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தகவல்.

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    இதற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், புதுக்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

    • ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • மின் ஊழியர் உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    தூத்துக்குடி வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆத்திக்கண்ணு என்பவர் நேற்று, கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



     


    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து, பிம்ப்ரி- சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், "2.45 மணியளவில் தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது.

    பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னும் மெழுகுவர்த்திகளை தொழிற்சாலை தயாரித்து வந்துள்ளது.

    பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.

    மேலும், "காயமடைந்தவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக" ஆணையர் தெரிவித்தார்.

    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்ததாக தகவல்.
    • விபத்து காரணமாக திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று காலை கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் புறப்பட்டு சென்றது. இந்த காரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்தனர்.

    இந்த கார் இன்று காலை 7 மணி அளவில் திருச்சி - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியது.

    டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பாலத்தின் தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு 50 அடி கீழே உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் அந்தக் கார் சுக்கு நூறாக உடைந்து அதில் இருந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இது பற்றி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்தனர்.

    பின்னர் ரோப் கிரேன் வாகனத்தின் உதவியுடன் காரையும், இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய காரில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது, திருச்சி விமான நிலைத்திற்கு வந்திறங்கிய, கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான உடைமைகள் என்பது தெரியவந்தது.

    அதில் விமான நிலைய சீல்களும் இருந்தன. ஆகவே விபத்தில் இறந்தவர் ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தனது கணவரை, மனைவி அழைத்து செல்ல வந்த போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

    சென்னை மாநகரில் வெள்ளப்பெருக்கு காரணமாக விமான போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் ஸ்ரீநாத் திருச்சி வந்து சென்னைக்கு செல்ல நினைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்துக் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தினை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

    • 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது.
    • கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனிடையே கிராம பகுதிகளில் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும், பகல் நேரங்களிலும் காட்டெருமைகள் சர்வ சாதராணமாக உலா வருகின்றன.

    சாலைகளின் நடுவிலும், ஒரத்திலும் நடந்து செல்வதால், வாகன ஓட்டிகளும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.

    குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சோல்ராக் செல்லும் சாலையில் நீர்மம்பட்டி என்ற இ்டத்தில் மலைச்சரிவில் 2 காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருந்தது.

    இதில் 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது. இதில் காட்டெருமை காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதனையடுத்து காட்டெருமையின் உடலை அங்கேயே புதைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், காட்டெருமைகளை விரட்ட வனக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து இல்லை.
    • 16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன.

    மிக்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து இல்லை.

    16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.

    உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்தது. அந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மாலி யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே கழித்தது.

    மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால்பரிசாக வழங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது. மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது. அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

    ×