search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர்.
    • மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 64) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பொங்கல் விடுமுறை முடிந்து தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரில் வந்த கார் மோதியது. இதில் நீலமேகம், இவரது மனைவி சுதாலட்சுமி (48), விக்னேஷ் (35), இவரது மனைவி உமாமகேஸ்வரி (33), விக்னேஷ் மகள் சஹானா (6), எதிரே வந்த காரில் இருந்த விஸ்வா, இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (20) சின்னகள்ளி ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் கிருஷ்ணராஜ்(20), அரும்பட்டு சமத்துவபுரம் பழனி மகன் முபின்ராஜ் (21), குமாரசாமி மகன் ஆகாஷ் (20), விழுப்புரம் ஆஸ்பத்திரி சாலை ரவிசங்கர் மகன் பிரசாந்த் (22) மற்றும் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டி ருந்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் கோவிந்தன் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பிரசாந்த் என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் பலியான பிரசாந்த் விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிகழ்ச்சியை காண காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
    • 12 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட எருதாட்டம் நடந்தது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் ராமசாமி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள 12 கிராமங்களின் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி திருவிழா நடந்து வருகிறது.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் எருதுவிடும் விழா நேற்று மாலை 3 மணிக்கு துவங்கியது. இதில் ஏரியின் கீழூர், கோணகவுண்டனூர், கெரகோடஅள்ளி, வெள்ளையன் கொட்டாவூர், கொள்ளுப்பட்டி, முருக்கம்பட்டி, மோட்டுப்பட்டி, காரிம ங்கலம் மேல்வீதி உட்பட 12 கிராமங்களிலிருந்து எருதுகள் அலங்கரிக்க ப்பட்டு ராமசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து எருது விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தாங்கள் அழைத்து வந்த காளைகளை தருமபுரி - மொரப்பூர் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் அழைத்து சென்றனர். இதில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை 12 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட எருதாட்டம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியை காண காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்த செல்ல மாரமபட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) மாடுகொம்பு குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை சிலர் மீட்டு தருமபுரி தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதே போல் மேலும் இருவருக்கும் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.

    எருது விடும் விழா காரணமாக காரிமங்கலம் நகரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவரை மொபட் மீது டிராக்டர் மோதி கணவன் பலி; மனைவி படுகாயமடைந்தனர்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் ( வயது 65) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி (60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மொபட்டில் பொம்மம்பட்டிக்கு சென்றுள்ளனர்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பொம்மம்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். அல்லாளபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே அல்லாளபுரத்தில் இருந்து பொம்மம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர், ஜெயராஜ், சுமதி தம்பதி சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரான வேலகவுண்டம்பட்டி அருகே சிலுவம்பட்டியைச் சேர்ந்த தமிழரசனை(50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் காயம் அடைந்தான்
    • முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்
    முசிறி:


    முசிறி அருகே உள்ள அட்டலாப்பட்டி சேர்ந்த முத்துசாமி மகன் ரித்தீஷ் (வயது 8). இவர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், தனது சகோதரி சுதர்சனா என்பவருடன் முசிறி துறையூர் சாலையில் காளியம்மன் கோவில் அருகே நடந்து வந்தபோது திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்த சிறுவன் ரித்தீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ரித்தீஷ்ன் தந்தை முத்துசாமி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
    • டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    மணப்பாறை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்த அரபாத்(வயது36), அசார்(26), முத்துக்குமார்(26), இப்ராஹிம்(25) உள்ளிட்ட 6 பேர் பந்தல் பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சோழமாதேவியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். முத்தபுடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அரபாத், அசார், முத்துக்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 63). கூலித் தொழிலாளி.

    இவர் தனது வீட்டில் இருந்து செட்டியாம்பாளையம் கருப்பனார் கோவில் வரை தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். வழக்கம்போல் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து ராமதேவம் வக்கீல் சதாசிவம் என்பவர் வீடு அருகே நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • படுகாயமடைந்தவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கயத்தாறு தெற்கு ஆத்திகுளத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 42). இவர் குடும்பத்துடன் நாகர்கோவில் ராமன்புதூர் சற்குண வீதியில் தங்கி இருந்து கடைகளுக்கு பலகாரங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    மகேஷ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ மணக்குடியிலிருந்து மேல மணக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கீழமணக்குடி பாலத்தில் செல்லும்போது எதிரே வடக்கன்குளம் பூஞ்சோலை தெருவை சேர்ந்த அந்தோணி ராஜேந்திரன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மகேஷ்வரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மகேஷ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் மகேஷ்வரனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் போலீசில் புகார்
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெய்யூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சியாம் தம்புஜி (வயது 87). இவர் புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெய்யூர் தெற்கு தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சியாம் தம்புஜியை உரசி தள்ளி விட்டு அருகில் உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த விபத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. மேலும் சியாம் தம்புஜி பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து நெய்யூர் சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ஜெயக்குமார் (73) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • வாகனம் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் படுகாயம் அடைந்தார்
    • உப்பாத்துவாரி அருகே வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள மருதம்பட்டிபுத்துரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுகந்தி (வயது 44)/ இவர் ஆணைக்கல்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொட்டியம் சென்று விட்டு மேக்க நாயக்கன்பட்டியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் எம்.களத்தூர்- மருதம்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது உப்பாத்துவாரி அருகே வரும் பொழுது அவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுகந்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருதம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளரும் சுகந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.


    • அவ்வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.
    • பத்மா, வினித் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பத்மா (வயது 35).இவர்களது மகன் வினித் (10).

    3 பேரும் காரில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். சாமிபள்ளம் என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.

    இதில் பத்மா, வினித் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து ராஜேஷ்சூளகிரி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

    • அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
    • வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயக்கமுற்ற நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • இடுப்பாடுக்குள் சிக்கிய அரசு பஸ் டிரைவரை பொதுமக்கள் போராடி மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி ஒரு தனியார் பஸ் இன்று புறப்பட்டது. அந்த பஸ்ஸில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பஸ் இன்று மதியம் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளச்சி மண்டபம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது தஞ்சையில் இருந்து திருவையாறு மார்க்கமாக ஒரு அரசு பஸ் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. டிரைவர் உள்பட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதில் அரசு பஸ் டிரைவர் இடுப்பாடுக்குள் சிக்கினார். அவரை பொதுமக்கள் போராடி பத்திரமாக வெளியே மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து சிலர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.‌

    ×