search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள்"

    • போதைபொருட்களின் கலாசாரம் தற்போது மாணவர்களிடையே அதிகரித்து இருப்பது வேதனையாக உள்ளது.
    • 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.

    குடியால்... குடிகெடும் என்பார்கள். கள்ளச்சாராயத்தை ஒழித்தாலும், போதை ஒழியவில்லை.... நகர வாலிபர்களிடம் சோசியல் டீரிங்காக தொடங்கிய போதைபழக்கம், அதுவே காலபோக்கில் போதைக்கு முழுமையாக அடிமையாகிவிடும் சூழ்நிலைக்கு கொண்டுபோய் விடுகிறது. சிலர் விளையாட்டாக அதை பயன்படுத்தி, பின்னர் அதற்கு அடிமையாகி அதில் இருந்து விடுபட முடியாமல் தனது வாழ்க்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது இன்றைய கால உண்மை. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

    போதைப்பொருள், அதை பயன்படுத்தும் நபரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருடைய குடும்பத்தையே பாதிக்கிறது. மதுவில் தொடங்கி, கஞ்சா, அபின், போதை மாத்திரை, போதை ஸ்டாம்பு, போதை சாக்லெட் என்று போதை பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த வகையான போதைபொருட்களின் கலாசாரம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து இருப்பதுதான் வேதனையாக உள்ளது.

    பாதை மாறும் நிலை

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வியாபாரிகள், சில மாணவர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு போதைப்பொருட்களை தாராளமாக சப்ளை செய்து, தங்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவலும் கிடைத்து உள்ளது.

    குறிப்பாக 13 வயது முதல் 19 வயது வரை உள்ள டீன்-ஏஜ் மாணவர்கள், கல்லூரி மாணவிகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதுதான் நம்மை அதிர்ச்சியில் ஆழ வைக்கிறது. எனவே கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து கடிவாளம்போட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    வடமாநில வாலிபர்கள்

    சஞ்சய் (காரமடை):- காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு முன்பு தாராளமாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. குறிப்பாக கடைகளில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை பலர் வாங்கி அங்கேயே குடிப்பதை பார்க்கும் மாணவர்கள், அவற்றை ஜாலியாக வாங்கி குடிக்கும்போது, அதற்கு அடிமையாகி வருகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் வழங்கக்கூடாது என்று அறிவித்தாலும் அதை யாரும் கேட்பது இல்லை.

    ராஜா (அன்னூர்):- அன்னூர் பகுதியில் கிராமங்கள் அதிகம். இங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும்போது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகிறார்கள். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் வடமாநில வாலிபர்களை கண்காணித்து, தடுக்க வேண்டும்.

    சேவியர் (பள்ளி ஆசிரியர்):- சில பள்ளிகளில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர் பயன்படுத்துவதுதான். அவர்கள் பயன்படுத்தி வைத்திருப்பதை, அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து, அதை சக மாணவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சில பள்ளிகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகளில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை விற்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.

    மாணவர்களை கண்காணிக்க வேண்டும்

    சந்தியா (சிங்காநல்லூர்):- மாணவர்கள், வீடுகளில் இருக்கும் நேரத்தைவிட பள்ளி, கல்லூரிகளில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். சில மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தனியே அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா?, சரியாக கல்லூரிக்கு வருகிறார்களா? என்பது ஆசிரியர்களுக்குதான் தெரியும். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் உடனே அவர்கள் அதை கண்காணித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரின் வாழ்க்கை கெட்டுப்போகாமல் தடுக்க முடியும். எனவே அதை ஒவ்வொரு ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.

    குரூப் அமைத்து வாங்கும் மாணவர்கள்

    ராமகிருஷ்ணன் (கல்லூரி பேராசிரியர்):- சில மாணவர்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்றவற்றில் குரூப் அமைத்து கொள்கிறார்கள். அந்த குரூப்பில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள், வியாபாரிகள் இருப்பதால், யாருக்கு எவ்வளவு வேண்டும், எங்கு வந்தால் கிடைக்கும் என்று அந்த குரூப்பில் பதிவிடுகிறார்கள். இதனால் போலீசாருக்கு தெரியாமல் போதைப்பொருட்கள் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. மாணவர்களின் செல்போனை நாங்கள் வாங்கி பார்க்க முடியாது. எனவே இதை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால், செல்போனை வாங்கி வாட்ஸ்-அப், டெலிகிராமில் என்னென்ன குரூப்பில் உள்ளார்கள் என்பதை கவனித்து தகவல் தெரிவித்தால் அதை தடுக்கலாம்.

    போதைக்கு அடிமையானவர்களை கண்டுபிடிப்பது எப்படி?மனநல டாக்டர் பவித்ரா விளக்கம்

    தற்போது மாணவர்களிடையே வலிநிவாரண மாத்திரையை சாப்பிட்டு போதையை ஏற்படுத்துவது, அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ஏற்றுக்கொள்ளும் பழக்கம்தான் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தம், ஆளுமைதன்மை குறைவது, மன குழப்பம், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தனிமையைதான் அதிகம் விரும்புவார்கள். சரியாக தூக்கமின்மை, அதிகமாக கோபப்படுதல், உணவில் நாட்டம் இல்லாதது, பள்ளி, கல்லூரிக்கு சரியாக செல்லாமல் இருத்தல், சம்பந்தம் இல்லாமல் பணம் கேட்டு வாங்கிச்செல்வது போன்றவை இருந்தால் பெற்றோர் மிகக்கவனமாக கண்காணிக்க வேண்டும்.

    அப்படியே விட்டுவிட்டால் உடல் நடுக்கம், பதட்டம் அதிகமாக ஏற்படும். போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்தும்போது கல்லீரல் பாதிக்கும். எனவே அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச்சென்று மருந்து கொடுப்பதுடன், போதிய கவுன்சிலிங் வழங்கும்போது இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர்.
    • வாலிபரிடம் அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடித்து கைப்பற்றினர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர். அவர், அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்த வகை போதைப்பொருள் 1 கிராம் ரூ.3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதை பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து குடியிருப்பில் தங்கி இருந்த மணிகண்டனை(29) போலீசார் கைது செய்தனர். அவரது பெற்றோர் மும்பை பகுதியில் வசித்து வருவதும், தொழில் தொடங்கப் போவதாக கூறி மணிகண்டன் கேளம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

    • போதைப்பொருட்கள் கடத்தலில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம்தான் முதலிடத்தில் உள்ளது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 2013-2022 வரையில் ரூ.33 கோடியே 99 லட்சம் மதிப்புள்ள 952.1 டன் போதைப்பொருட்கள் கைபற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள், இளைஞர்கள் இடையே அதிகமாகிவரும் போதைப்பொருட்கள் பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கலெக்டர்கள், காவல்துறை மாநாட்டில் தெரிவித்தார். இந்த போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாகி வருவதை தடுக்க தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. இதை மத்திய அரசு முழுமையாக செய்ய வேண்டும். குறிப்பாக போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவி இருப்பதற்கு காரணம், மத்திய அரசுதான்.

    அதுவும் பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை. சுட்டிக்காட்டுகிறோம். குஜராத்தில் இருக்கும் துறைமுகம் தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டில் இருந்துதான் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தனியார் துறைமுகம் வழியாகத்தான் இவைகள் வேகமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த போதைப்பொருட்கள் கடத்தலில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம்தான் முதலிடத்தில் உள்ளது.

    பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும், சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும்.

    துறைமுகங்களை தனியார் மயமாக்கியதால், போதைப்பொருட்கள் வளர்ந்து இருக்கிறது. இதை தடைசெய்ய வேண்டும். அனைத்து எதிர்கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தவகையில்தான் தமிழகத்திலும் போதைப்பொருட்கள் வளர்ந்துள்ளன.

    விஜயவாடா துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. முந்த்ரா துறைமுகத்துக்கும், விஜயவாடா துறைமுகத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

    மத்திய அரசு இவைகளையெல்லாம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

    வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து, விற்கிறார்கள். அந்த சூழ்நிலை தமிழகத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    மத்திய அரசு போதைப்பொருட்களை தடை செய்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை. யார், யார்? இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அறிந்து இந்திய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுமானால், தமிழகத்தில் போதைப்பொருட்கள் முழுமையாக இல்லாத நிலையை உருவாக்க முடியும்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 2013-2022 வரையில் ரூ.33 கோடியே 99 லட்சம் மதிப்புள்ள 952.1 டன் போதைப்பொருட்கள் கைபற்றப்பட்டன. குற்றவாளிகளை பிடித்து ரூ.2 கோடியே 88 லட்சம் அபராதம்தான் வசூலிக்கப்பட்டன.

    ஆனால் கடந்த ஓராண்டில் தமிழக அரசின் நடவடிக்கையில், ரூ.9 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 152.94 டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. ரூ.2 கோடி அபராதம் குற்றவாளிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    போதைப்பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா வழியாக போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள் கடத்தி கொண்டுவரப்படுகின்றன. அதனை தடுக்கவும் தமிழக முதல்-அமைச்சர் முயற்சித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாநகரில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தகவல்கள் தெரியவரும்போது அதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    கோவை

    போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து தெரிந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத கல்வி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசாா் எச்சரித்துள்ளனா்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்கள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கல்லூரி, பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த 2 பேர் பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தின் பின்புறம் நின்றுகொண்டு அண்மையில் புகைப் பிடித்துள்ளனா்.

    இது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கும் அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இனி வரும் காலங்களில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தகவல்கள் தெரியவரும்போது அதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    இதனை தலைமை ஆசிரியா் அல்லது பள்ளி, கல்லூரி முதல்வா் ஆகியோா் மறைப்பதன் மூலம் போதைப் பொருள்கள் விற்பனைக்கு உடந்தையாகச் செயல்படுவதாக கருதப்பட்டு அவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்.
    • இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த 11-ந் தேதி முதல் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட மருந்தக உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷ னர் மோகன்ராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் சிக்னல், அரசு மருத்துவமனை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.

    இதில் பங்கேற்றவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பினர்.

    மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட மருந்தக விற்பனை சங்க தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் சரவணன், நிர்வாக செயலாளர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 513 கிலோ எம்.டி. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் போதை பொருள் ஆலை நடத்தியவரை கைது செய்தனர்.

    மும்பை :

    மும்பையில் கடந்த மார்ச் மாதம் மெபட்ரோன் என்ற போதைப்பொருளுடன் சிக்கிய சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் ஒரு கும்பல் வீட்டிலேயே போதைப்பொருள் ஆலை நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி நாலச்சோப்ரா பகுதியில் வீட்டில் உள்ள போதைப்பொருள் ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 700 கிலோ எம்.டி. போதைப்பொருள் சிக்கியது. அதன் மதிப்பு ரூ.1,400 கோடி என போலீசார் கூறினர்.

    இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத் மாநிலத்தில் இருந்து எம்.டி. போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு மும்பையில் உள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்யப்படுவதும் தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி மும்பை போலீசார் குஜராத் மாநிலம் அங்லேஷ்வர் பகுதிக்கு சென்றனர்.

    மேலும் அவர்கள் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்த இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 513 கிலோ எம்.டி. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,026 கோடி ஆகும். மேலும் போலீசார் போதை பொருள் ஆலை நடத்தி வந்த கிரிராஜ் தீக்சித் என்பவரையும் கைது செய்தனர்.

    • போதைப்பொருளை ஒழிக்க முதல்வர் சர்வாதிகாரியாக மாற தேவையில்லை என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.

    மதுரை

    மதுரை கல்லூரி மைதானத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா நடந்தது.

    கிரிக்கெட் போட்டிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு தேசியக்கொடிகளை பரிசாக வழங்கினார். பின்னர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    75-வது சுதந்திர தின விழாவை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தேசபக்தியுடன் தேச ஒற்றுமையை பாதுகாக்க செயல்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது. ஏனென்றால் தமிழக அரசும், முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு சமமானது. தமிழக போலீசை சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மிகவும் திறமை மிக்கவர்கள். அவர்களை சுதந்திரமாக செயல்பட்டால் சட்டம்- ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காப்பார்கள்.

    போதைப் பொருள் தடுப்பு விஷயத்தில் அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என பேசியுள்ளார். போதைப்பொருள் தடுப்பு விஷயத்தில் அதிகாரிகளிடம் சர்வாதிகாரியாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சரியான உத்தரவை, சரியான நேரத்தில் சரியான அதிகாரிகளுக்கு பிறப்பித்தாலே போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், காவலன் செயலி மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
    • பெண்களுக்கு மிகவும் உதவியாக தொடங்கப்பட்டதுதான் காவலன் செயலி. இதை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள கடிய பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், காவலன் செயலி மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    முகாமிற்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்தை யன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் முகாமை தொடங்கி வைத்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்கு மிகவும் உதவியாக தொடங்கப்பட்டதுதான் காவலன் செயலி. இதை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இதனை அனைத்து குற்ற செயல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உடனடியாக அதற்கான தீர்வு கிடைக்க வழிவகை செய்கிறது இந்த செயலி. மேலும் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    இதை மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்த கூடாது. பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். முகாமில் போலீசார், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் போலீஸ் நிலைய நடைமுறைகள், செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொண்ட னர். முன்னதாக போதைப் பொருள் பயன் பாட்டிற்கு எதிரான உறுதி மொழியினை பள்ளி வளாகத்தில் மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    • அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்குபோதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.
    • திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையின் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர் பாலாஜி, கீழ்வேளுர் நாகைமாலி, பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் எடுத்துக்கொண்டனர்.

    முதலமைச்சர் அறிவிப்பின்படி ஒருவார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்க மாக அனைத்து பள்ளி களிலும் மாணவ ர்களுக்குபோதை ப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.

    இதை தொடர்ந்து திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை, அனைவரும் எடுத்து க்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தி னையும் தொடங்கி வைத்தனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா, உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், செயற்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துராமன் வரவேற்றார்,

    புகையிலை, குட்கா, கஞ்சா, மது போதைப்பொருட்களால் இளைஞர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஆயிஷா பேசினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆடிட்டர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைத் தலைவர் (திருவாடானை தொகுதி) முகமது அலி, மாவட்ட துணைத் செயலாளர் திருஞானம், பசுமைத் தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கவின் ராகேஷ், மாவட்ட தலைவர் சத்யா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ராமநாதபுரம் நகரத் தலைவர் ராஜா ரபீக், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் கனகு, மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் ஜாகிர் உசேன்.

    கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், நகர தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க தலைவர் கார்த்திக், ஆர், எஸ், மங்கலம் ஒன்றிய செயலாளர் ஜிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
    • கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் சாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமைதாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கலால் உதவி ஆணையர் லூர்துசாமி, கலால் கோட்ட அலுவலர்கள் மகேஷ், ஜெயசீலன், ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் கடத்தினால் கடும் தண்டனைக்குரியது என்பதனை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    பின்னர் பேரணி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் முடிவடைந்தது. இதில் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, கலால்த்துறை ஆய்வாளர்கள் பாஸ்கர், வனஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மகளிர் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, புனித வளனார் கல்லூரி பேராசிரியர் சந்தானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
    • 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என போட்டிகள் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

    அன்று காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டப்ப ந்தயத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அவரும் கலந்து கொள்கிறார்.

    போட்டிகள் ஆண்கள், மாணவர்கள், பெண்கள் என தனித்தனியாக நடக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என போட்டிகள் நடக்கிறது.

    வெற்றி பெறுப வர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பரிசுகளை வழங்குகிறார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிர மும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், சிறப்பு பரிசாக 5 பேருக்கு தலா ரூ.1,000 வீதமும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக ரூ.300 செலுத்தி https://pmu.edu/dare2022 என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் அன்புராஜ், துணைவேந்தர் வேலுச்சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

    ×