search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • கலை சங்கரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    • திருட்டுதனமாக மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    மே தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தது.

    போலீசாருக்கு மிரட்டல்

    இதனால் நெல்லை மாநகர பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்றனர். பாளை வண்டிப்பேட்டை பகுதியில் நேற்று இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது தச்சநல்லூரை சேர்ந்த கலைசங்கர் (வயது22) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது. அவரை விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலை சங்கரை கைது செய்து அவரிட மிருந்து 59 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    மேலப்பாளையம்

    இதேபோல மேலப்பாளையம் அருகே விலங்குடையார் சாஸ்தா கோவில் அருகில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது கருங்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் (25) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டி ருந்த போது விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தச்சநல்லூர்

    தச்சநல்லூர் மதுரை ரோடு அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாழையத்தை சேர்ந்த சிவகுமார் (38) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 336 மது பாட்டி ல்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போல பாளை மணிக்கூண்டு பகுதியில் திருட்டுதனமாக மது விற்றதாக கள்ளத்தியான் (50), மேலப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற பாப்பாக்குடியை சேர்ந்த கண்ணன் (54), சீவலப்பேரியை சேர்ந்த கண்ணன் (43), கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த நாராயணன் (44), புதிய பஸ் நிலையம் பகுதியில் மது விற்றதாக தாழையூத்தை சேர்ந்த செல்வம் (29), பாளையை சேர்ந்த குலசேகரன் (38), ராகுல் (24), பேட்டை பகுதியில் திருட்டுதனமாக மது விற்றதாக தங்கபெருமாள் (44) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 177 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 4,850 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகி யவை முக்கிய நிகழ்ச்சி களாகும்.

    இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மதுரை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் போதிய பாது காப்பு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சித்திரை திருவிழா பாதுகாப்பு தொடர்பாக அதிகாரி சங்கர் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதி களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோவிலில் சுவாமி புறப்படும் இடம் ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    கடந்தாண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றுக்குள் 2 பக்தர்கள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நடப்பாண்டு திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக மதுரை மாநகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நீர்-மோர் பந்தல் அமைத்து கமுதியில் பயணிகள் போலீசார் தாகம் தணித்தனர்.
    • இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை அனல்காற்று வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கமுதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாள்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூருக்கு செல்பவர்கள் பஸ் நிலையத்தில் நிற்கும் போது கடுமையான வெயில் தாக்கத்தி னால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் தற்போது நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்து மகிழ்வுடன் செல்கின்றனர். இந்த நீர்மோர் பந்தல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • திருவிழா காலங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது.
    • தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் கண்காணிக்க வலியுறுத்தல்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்களில் உள்ள கோவில்களில் திரு விழாக்கள் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின்போது இருதரப்பினரிடையே ஏதேனும் ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக வெடித்து மோதல் ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின்போது ஏற்படும் தகராறுகளை தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற்போல் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோவில் திருவிழாக்களில் மோதல் ஏற்படும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தில் கோவில் திருவிழா வின்போது மோதல் ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் ராஜ பாளையத்திலும் திருவிழா ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தனிப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கு உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அப்போது தான் விருதுநகர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் மோதல்கள் தடுக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும்,
    • கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழக சிறைத்துறை இயக்குனராக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பின், சிறை துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சிறை காவலர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும், சிறை காவலர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவர்களுக்கு பிறந்தநாள் கேக் மற்றும் சிறைத்துறை இயக்குனரின் வாழ்த்து அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்க ளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும், முதல் நிலை காவலர்கள் சுரேஷ் கண்ணன், லட்சுமணன், 2-ம் நிலை காவலர்கள் திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், சிறப்பு நிலை செவிலியர் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

    • மதுரை மத்திய சிறையில் போலீசாருக்கு மோர், நன்னாரி குடிநீர் வழங்கப்பட்டது.
    • போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் பணி புரியும் போலீசார் மற்றும் வழி காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு மோர் மற்றும் வெட்டிவேர், நன்னாரி கலந்த குளிர்பானம் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கு கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானம், மோர் ஆகியவை இன்று காலை முதல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை காவலர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிராமபுரம் போலீஸ் ஏட்டு சரவணன் மற்றும் தினேஷ் அந்த செல்போன் பறிப்பு ஆசாமியை பிடிக்க தங்கள் வாகனத்தில் துரத்தினர்.
    • காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட இரண்டு காவலர்களையும் வெகுவாக பாராட்டினார்கள்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் நேற்று மாலை சுதீப் முகர்ஜி என்பவரின் செல்போனை மர்ம நபர் பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்றார், அந்த நபர் செல்போன் பறிப்பு ஆசாமியை பிடிக்க திருடன், திருடன் என்று சத்தம் போட்டுக் கொண்டே விரட்டினார். அப்போது அந்த வழியாக சென்ற அபிராமபுரம் போலீஸ் ஏட்டு சரவணன் மற்றும் தினேஷ் அந்த செல்போன் பறிப்பு ஆசாமியை பிடிக்க தங்கள் வாகனத்தில் துரத்தினர்.

    ஆனால் அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க முயன்ற அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் எழும்பூரை நோக்கி அதிவேகமாக சென்றான், அவனை இரண்டு காவலர்களும் துரத்தி எழும்பூர் நீதிமன்ற சந்திப்பில் மடக்கி பிடித்தார்கள் அவனை விசாரித்த போது அவன் பெயர் விக்கி என்கிற குள்ள விக்கி என்றும் அவன் சென்னையில் 20க்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்றும் சமீபத்தில் தான் அவன் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளான் என்பதும் தெரிய வந்தது மேலும் அவனை சோதனை செய்து பார்த்தபோது அவனிடம் இரண்டு செல்போன்கள் இருந்துள்ளன அதைப் பற்றி விசாரித்த போது அவன் அப்போதுதான் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணிடமிருந்து இரண்டு செல்போன்களையும் வழிப்பறி செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளான் மேற்படி வழிப்பறி திருடன் விக்கியை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இரண்டு காவலர்களும் ஒப்படைத்தனர், காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட இரண்டு காவலர்களையும் வெகுவாக பாராட்டினார்கள்.

    • சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது.
    • சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இயங்கி வந்த வைஸ்ணவி பில்ட்ர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்தசாரதி, தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கவர்ச்சி கரமான திட்டங்களை வெளியிட்டது. அதன்படி முதலீட்டு தொகைக்கு 100 நாட்கள் முடிந்த பின் பணம் இரட்டிப்பாக கிடைக்கும், இல்லையென்றால் வீட்டுமனையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதை உண்மை என நம்பிய சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39) பார்த்தசாரதியின் நிறுவனத்தில் ரூ.8.80 லட்சம் முதலீடு செய்தார். முதிர்வு தொகையை பெற கடந்த 2018-ல் நிறுவனத்திற்கு சென்றபோது, அலுவலகம் பூட்டி கிடந்தது. மேலும் பலரிடம் இந்நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது. பாஸ்கரன் என்பவர் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமுத சுரபி, வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள், அசல் ஆவணங்களுடன் சேலம் அழகாபுரம் பஞ்சவர்ணம் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • டவுண் பஸ்கள் இன்று காலை 1 மணி நேரம் தாமதமாக இயக்கம்
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் காங்கிரசார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப் -டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி உள்பட தலைவர்கள் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. தேங்காய் பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ் நேற்று இரவு புதுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதுபோல கொல்லங்கோடு அருகே சாத்தான்கோடு பகுதியில் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. மார்த்தாண்டத்தில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அரசு பஸ் நட்டாலம் பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்டது. இதே போல் குழித்துறை, திருவட்டாறு பகுதிகளிலும் அரசு பஸ்கல் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 5 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பஸ்கள் மீது கல் வீசப்பட்டதையடுத்து வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பஸ் நிலையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு வழக்கமாக கிராமப்புறங்களில் நிறுத்தப்படும் பஸ்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது .பெரும்பாலான பஸ்கள் டெப்போக்களுக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக டெப்போக்களில் இருந்து பஸ்கள் அதிகாலை 4:30 மணிக்கு பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 5 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.ஆனால் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது. ராணி தோட்டம் டெப்போவில் இருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக பஸ்கள் கொண்டுவரப்பட்டு காலை 6 மணிக்குபிறகு கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. பஸ்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்ட தால் காலை நேரத்தில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ்நி லையங்களில் பயணிகள் காத்திருந்தனர். சென்னை நெல்லை மதுரை திருவனந்தபுரம் கோவை தஞ்சாவூர் போன்ற வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு சென்றன.மாவட்டத்தில் உள்ள 12 டெப்போகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள்.
    • கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்த மர்மநபர்.

    கன்னியாகுமரி:

    கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்து மர்மநபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபரின் வரைபடத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மர்மநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி, குளச்சல் என்று எழுதப்பட்டிருந்ததால் அந்த நபர் இங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். உளவு பிரிவு போலீசாரும், தனி பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணி களின் உடைமை களை போலீசார் சோதனை மேற்கொண்ட னர். பாட்டில் களையும் அவர்கள் சோதனை செய்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம், குழித் துறை உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை நடந்தது.

    • தேவகோட்டை பஸ் நிலையம் அருகே போலீசார், ெபாதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
    • நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதையொட்டி தேவகோட்டை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேவகோட்டை நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள காவல் உதவி மையத்தில் தேவகோட்டை நகர் காவல் துறையால் நீர்-மோர் வழங்கும் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேவகோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நீர்-மோர் பந்தலை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி உசேன், நமச்சிவாயம், தவமுனி, வைரம், தினகரன், கலா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நீர்பந்தலில் மோர், சர்பத், ரோஸ் மில்க் ஆகிய 3 வகையான குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

    ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் நீர்-மோர் பந்தலுக்கு சென்று குளிர்பானங்களை வாங்கி பருகி சென்றனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையும் வரை நீர் பந்தல் தொடர்ந்து செயல்படும் என போலீசார் தெரிவித்தனர். பொது மக்களின் தாகத்தை தீர்க்க மாவட்டத்திலேயே முதலில் தேவகோட்டை நகரில் தான் காவல்துறை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பாரதிய ஜனதா கட்சியினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    நாகர்கோவில் :

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாரதிய ஜனதா கட்சியினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 40 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×