search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222654"

    • பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

    தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவில் நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் படை யலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி 21 அக்னி சட்டி, 101 அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மன் வீதி உலாவும், இரவில் அரிச்சந்திரா நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். அப்போது அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பினர். விழாவில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    • 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவி ரிக்கரையில் அமைந்துள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் 131-வது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோயிலிருந்து பக்தர்களுக்கு விரதமிருந்து அலகு காவடி, சக்தி கரகம், சிவப்பு மஞ்சள் உடை உடுத்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க காளிஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தனர்.

    கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

    கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கமேட்டு தெரு நாட்டாமை ஞானசேகரன், பொருளாளர் செல்வம், கோயில் நிர்வாகிகள் லட்சும ணன், வெங்கட்ராமன், மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    • ஏப்ரல் 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழா நடக்கிறது.
    • 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழா நடக்கிறது.

    வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டுதலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதல், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

    இந்த கோவிலில் பக்தர்கள் பாடைகாவடி எடுக்கும் நிகழ்வு முக்கிய நிகழ்ச்சியாகும். அதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து குணமடைய, மகா மாரியம்மனை வேண்டிக்கொள்வர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக பாடை காவடி எடுப்பர்.

    அதன்படி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பாடைகாவடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றிங்கரையில் இருந்து பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்வர்.

    பின்னர் அந்த பாடை காவடியை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்று பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கி வந்து, மகா மாரியம்மன் கோவிலை 3 முறை வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துவார்கள். நேற்று நடந்த இந்த திருவிழாவில் பாடை காவடி, பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை உள்ளூர் மட்டுமின்று, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலையிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

    முன்னதாக கோவில் கருவறை அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் விசலூர் கிராமத்தில் இருந்து செம்மறி ஆடு கரகம் அழைத்து வரப்பட்டு, கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள செடில் மரத்தில் செம்மரியாடு ஏற்றப்பட்டு 3 முறை வலம் வந்ததன் மூலம் திருவிழா நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் மற்றும் செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பக்தர்கள் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.

    கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம் நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன் தலைமையில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடக்கிறது.

    • பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர்.
    • தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    பின்னர் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டது.

    நேற்று முன்தினம் காலையில் இருந்து சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம்பாளையம் புதூர் பகுதியில் வீதி உலா சென்றுவிட்டு இக்கரை நெகமம் காலனி பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து அம்மனின் சப்பரம் புறப்படும்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சப்பரம் வரும் வழியில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் மற்றும் பூசாரி ஆகியோர் ஒவ்வொரு பக்தர்களையும் தாண்டியபடி அம்மனின் சப்பரத்தை தூக்கி சென்றனர்.

    இதையடுத்து பக்தர்கள் பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் இரவு வெள்ளியம்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் அங்கு தங்க வைக்கப்பட்டது.

    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள தமிழர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அழகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

    முன்னதாக ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
    • பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை சரபங்காநதிக்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பல்வேறு பக்தர்கள் அலகுகளை குத்திக்கொண்டும், கார்களை கட்டி இழுத்தும் தாவாந்தெரு காளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.

    முதலில் கோவில் பூசாரி பம்பை மேளங்கள் முழங்க ஓம் சக்தி பரா சக்தி என பக்தர்கள் கரவோசை எழுப்பிய போது பூங்கரகத்துடன் தீ மிதித்தார். பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் ஓந்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் மாசி திருவிழா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பூக்குழி இறங்குதல், கரகம் ஜோடித்து முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரகம் ஜோடித்து, முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் சண்முகமூர்த்தி, செயலாளர்கள் தர்ம லிங்கம், பழனிக்குமார், முருகேசன், ஜெயபாண்டி மற்றும் பிள்ளைமார் சமூக பங்காளிகள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடகனாற்றில் மிதந்து வந்த பெட்டியில் இருந்த தெய்வ சிலையை ஒரு சமூகத்தை சேர்ந்த பங்காளிகள் இணைந்து ஆற்றின் மேற்கே பிரதிஷ்டை செய்து சிறு கோவிலாக கட்டி குலதெய்வ வழிபாடாக மாசி சிவராத்திரியில் பேரூராட்சி தலைவர், காவல் துறை மற்றும் அனைத்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    2015-ம் ஆண்டு கோவிலை சீரமைத்து பெரிய அளவில் கோவில் அமைத்து தற்போது வருடாவருடம் மாசி சிவராத்திரி அன்று பெரிய திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை அன்று பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கி கொண்டாடி வருவதாக தெரிவித்தனர்.

    • 18-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது.
    • இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை.

    திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    ஆனால் தனி லிங்கபெருமாளுக்கு பக்தர்கள் நாடகங்கள் நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது விசேஷம். நாடகங்கள் நடத்துவதற்காகவே கோவில் வளாகத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் நேர்த்திக்காக நடத்தக்கூடிய நாடகங்களை வலையங்குளம் கிராம மக்கள் மட்டுமல்லாது சோளங்குருணி, கொம்பாடி உலகாணி நல்லூர், எலியார்பத்தி, பாரப்பத்தி உள்பட பல கிராம மக்கள் கண்டுரசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 30 முதல் 70 நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நேர்த்திக்கான நாடகங்கள் நடத்த கோவிலில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் இந்த ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நாடகங்கள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பினும் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதால் 32 நாடங்கள் நடத்துவது என்று ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கம்போல வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை. கோவில் வாசல் முன்பு நின்று பெண்பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண் பக்தர்கள் வாசலை தவிர்த்து கோவிலுக்குள் செல்லாதது இந்த கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

    • பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
    • பக்தர் ஒருவர் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தினார்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தானியங்கள், காசு, பண முடிச்சு மற்றும் கன்றுகுட்டிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் சந்தனம், எலுமிச்சம்பழ மாலைகள், பூவண்ண மாலைகள் மற்றும் அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்,

    இதில் நேற்று ஒரு பக்தர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். மேலும் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
    • ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

    இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமியிடம், பக்தர்கள் தங்களுடைய குறைகளை தீர்க்கும்படி வேண்டி கொள்வார்கள். அந்த குறைகள் தீர்ந்ததும், கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர்.

    பொதுவாக காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்கள் இரும்பு தகடுகளால் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஒருசில பக்தர்கள் தங்கத்திலான அரிவாள்களையும் சாமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை, பரம்பரையாக அந்த ஊரில் அரிவாள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.

    இ்தையொட்டி காணிக்கை செலுத்துவதற்கு அரிவாள் செய்யும் பணி கடந்த மார்கழி மாதம் 1-ந்தேதி தொடங்கியது. இதற்காக விரதம் இருந்து தொழிலாளர்கள் அரிவாள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து திருவிழாவில் கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக அரிவாள் செய்தவர்களின் வீட்டில் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்த அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கோவில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரக்கணக்கான அரிவாள்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோட்டை கருப்பணசாமி கோவிலில் அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டன. இதில் குறைந்தபட்சம் 2 அடி முதல் 15 அடி உயரம் கொண்ட அரிவாள்கள் இடம்பெற்றிருந்தன.

    இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது.
    • இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது.

    திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள், மேலும் இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்து கொடுக்கின்றனர்.

    இதுகுறித்து 18 அடி நீள அரிவாள் தயாரித்துள்ள சதீஷ்குமார் நாகேந்திரன் கூறியதாவது:-

    எங்களிடம் மதுரை சர்வேயர்காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 18 அடி நீளத்திற்கு கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டும் என்றனர். அடிக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கூலி பேசி தயார் செய்துள்ளோம். இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது.

    இதில் அரிவாள் 15 அடி உயரத்திலும் கைப்பிடி 3 அடி உயரத்திலும் மொத்த 18 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது. இந்த ராட்சத அரிவாள் மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்க தயார் செய்துள்ளோம். இந்த அரிவாள் பெரிய சரக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×