என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூதாட்டி"
- மானெட் பெய்லி தனது 102-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பினார்.
- சுமாா் 6,900 அடி உயரத்தில் இருந்து அவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டார்.
லண்டன்:
இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள பென்ஹால் கிரீன் நகரைச் சேர்ந்த மூதாட்டி மானெட் பெய்லி. இவர் தனது 102-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பினார்.
அதன்படி சுமாா் 6,900 அடி உயரத்தில் இருந்து அவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டார். இதன்மூலம் இவர் நாட்டின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்னதாக 2022-ல் தனது 100-வது பிறந்த நாளின்போது மானெட் 230 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியது குறிப்பிடத்தக்கது.
- 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார்.
- பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியில் வசித்து வருபவர் மருதம்மாள் (வயது 75). கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும், தனது 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில் மிகவும் சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த குடிசை வீட்டில் வசித்து வருவதை கண்ட சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, மருதம்மாள் மூதாட்டிக்கு வீட்டை கட்டித்தர முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் முனியப்பன் மூலம் உண்மை நிலையை கண்டறிந்து, உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்ற குழுவினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் ராணுவதுறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ரெயில்வேத்துறை, மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்தனர்.
இந்த வீட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரையை சேர்ந்த முன்னாள் வணிகவரித்துறை இணை ஆணையர் தேவநாதன், அனுகிரகா கல்லூரி முன்னாள் முதல்வர் ஐசக், திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்பதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள் விசுவாசம், மாறவர்மன், சி.ஐ.எஸ்.எப். போலீஸ் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்கள் குமார், சரவணன், தினேஷ், சகாய பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மூதாட்டி மருதம்மாளுக்கு உணவு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமூக ஆர்வலர் பால்தாமஸ் நன்றி தெரிவித்தார்.
- 4 மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகிறார்.
- மூதாட்டி மகன்களிடம் பணம் கேட்பது இல்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரிலோவாவை சேர்ந்தவர் அப்பயம்மா (வயது 72). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
4 மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகிறார். முதுகு வில்லு போல் வளைந்து இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் அவரது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தம் தாராவிற்கு நடந்தே சென்று 2 கடையில் வேலை செய்து வருகிறார்.
வேலை செய்யும் கடைகளில் கிடைக்கும் அட்டைப் பெட்டிகள் மற்றும் இரும்பு கழிவு பொருட்களை சேகரித்து பழைய பொருட்கள் வாங்கும் கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார். இவருக்கு வரும் முதியோர் உதவித்தொகையை அவரது மகன்களே வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும் மூதாட்டி அவர்களிடம் பணத்தை கேட்பது இல்லை.
தள்ளாத வயதிலும் தளராது வேலை செய்து வரும் மூதாட்டியை கண்டு அப்பகுதி மக்கள் வியந்து வருகின்றனர்.
- அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால்.
இவரது மனைவி அனுமக்கா (வயது 82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூதாட்டி அணுமக்கா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் மூதாட்டி கடந்த 27-ந் தேதி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அழுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காது மற்றும் மூக்கு பகுதியில் வெட்டு காயங்கள் இருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை குற்றவாளிகளை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அனுமக்காவை கொலை செய்த, அவரது மகன் வழி பேரன் சிவராஜ் மகன் சிவகுமார் (வயது 31), அதற்கு உடனடியாக இருந்த மருமகள் மலர் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவக்குமார் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. எனது பாட்டி அனுமக்காவிடம் அடிக்கடி சென்று அடிக்கடி பணம் வாங்கி வருவேன். அதன்படி கடந்த 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் போதையில் பாட்டி வீட்டுக்கு சென்றேன்.
அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.
அப்போது அவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, தலையணை வைத்து அமுக்கி பாட்டியை கொலை செய்தேன்.
பின்னர் அவர் கழுத்தில் அணிந்த 1½ நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டேன்.
பாட்டியிடம் எடுத்த நகைகளை எனது தாய் மலரிடம் கொடுத்து, நடந்த விவரத்தை கூறினேன். எனது தாய் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். பின்னர் நாங்கள் ஒன்றும் தெரியாது போல் ஊரிலேயே இருந்தோம். போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார்
- 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சாதனைகளை நிகழ்த்துவதற்கும் பிடித்த விஷயங்களை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்கவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்றார். இந்நிலையில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.
அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் என்னும் அந்த மூதாட்டி மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1940 ஆம் ஆண்டு கின்னி தனது இளங்கலைப் பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். அதைத்தொடர்ந்து தனது முதுகலைப் படிப்பை பயிலத்தொடங்கிய கின்னி ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் அந்த சமயத்தில் கின்னியின் காதலன் ஜார்ஜ் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கின்னியின் படிப்பு பாதியில் தடைபட்டது. எனவே தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி இதுகுறித்து பேசுகையில், அடக் கடவுளே , இதற்காக நான் வெகு காலமாக காத்திருந்தேன். முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.
- தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன்
- ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார்.
- கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் நேற்று சட்டப்பேரவை, பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
பாபட்லா மாவட்டம், கரம் சேடுவில் உள்ள அம்பேத் நகரை சேர்ந்தவர் கர்னெபுடி சிங்கையா. இவரது மனைவி கர்னெபுடி சித்தேம்மா (வயது 60). கர்னெபுடி சிங்கையா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென கர்னெபுடி சிங்கையா உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். தனது கணவர் இறந்து விட்டதால் கர்னெபுடி சித்தேம்மா துக்கத்தில் இருந்தார்.
கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார். கணவர் பிணத்தை வீட்டில் வைத்துவிட்டு கர்னெபுடி சித்தேம்மா வாக்கு சாவடிக்கு சென்றார். கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
- 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
- மூதாட்டி 5 தலைமுறையை கடந்துள்ளார்.
விழுப்புரம், மே. 6-
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள ராம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் . இவர் 100 வயதை எட்டியுள்ளார். இவரது 100-வது பிறந்த நாளை முன்னிட்டு முனியம்மாளின்5 பெண் பிள்ளைகள், மருமகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் இணைந்து மூதாட்டி 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
இராம்பாக்கம் கிராமத்தில் முதல் முறையாக மூதாட்டி ஒருவர்100 வயதை கடந்துள்ளது அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி 5 தலைமுறையை கடந்துள்ளதால் பேரக் குழந்தைகள் மட்டும் 80 பேர் உள்ளனர்.மூதாட்டியிடம் உறவினர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.
- ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து பெண்ணை கன்னத்தில் அறைந்தார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் ஆர்மூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்று ஜீவன் ரெட்டி வாக்கு கேட்டார்.
அப்போது ஒரு பெண்ணிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தேன் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்றார்.
இதனை கேட்டதும் ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் அவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.
இந்த சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
- முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
- வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த ரோஜா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
தேர்தல் பிரசாரத்திற்கு வரும் ரோஜாவுக்கு கிராமங்களில் அமோகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக திரண்டு வந்து தங்களின் வீட்டில் உள்ள தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ரோஜாவை ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
11 திருஷ்டி பூசணிக்காய்களை ஒன்றாக சேர்த்து ரோஜாவை நோக்கி சுத்தியபடி அதனை தரையில் போட்டு உடைத்தனர்.
அங்கு ரோஜா நடந்து சென்று வாக்கு கேட்டபடி இருந்தார். அப்போது வீட்டின் மாடிகளில் நின்று பெண்கள் சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மூதாட்டி ஒருவர் ரோஜாவின் கன்னத்தைக் கிள்ளி நலம் விசாரித்தார். அவரிடம் ரோஜாவும் நலம் விசாரித்து ஆதரவு கேட்டார்.
மேலும் ஒரு பெண் ரோஜாவை கண்டதும் நடன மாடியபடி ஆரத்தி எடுத்தார். அவரை வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ரோஜா பிரசாரத்தால் நகரி தொகுதி தற்போது களை கட்டி வருகிறது.
- சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் ராமுலம்மா தரிசனத்திற்காக வந்தார்.
- சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).
இவர் நேற்று சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் தரிசனத்திற்காக வந்தார். தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார். சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.
அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற போலீஸ்காரர் மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டார்.
இதையடுத்து மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார். போலீஸ்காரர் மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
போலீஸ்காரரின் மனிதாபிமானத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்தனர்.
- காஞ்சன்பென் பாட்ஷா தனது பேரன்களுடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.
- காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார்.
மும்பை:
பாராளுமன்றத் தேர்தல் கடந்த 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சன்பென் பாட்ஷா என்ற 112 வயது மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும் நேரடியாக வந்து ஓட்டு போட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
1912-ம் ஆண்டு பிறந்த காஞ்சன்பென் பாட்ஷாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். தற்போது அவர் இப்போது தனது 2 பேரன்களான பரிந்த் மற்றும் ஜிக்னேஷ் ஆகியோருடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.
மும்பையில் மே 20-ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார். வயதாகிவிட்டாலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். இந்த கால இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.
வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நோடல் அதிகாரி மற்றும் அவரது குழுவினர் காஞ்சன்பென்னைப் பாராட்டி அவரை கவுரவித்தனர்.
சுதந்திர போராட்டம், பிரிவினை, உலகப் போர்கள் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளைக்கண்ட அவர், இப்போது ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க இளைஞர்களை வலியுறுத்துகிறார்.
நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
காஞ்சன்பென் குறித்து அவரது பேரன் பரிந்த் கூறியதாவது:-
இந்த வயதில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்வது மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அவர் நம்புகிறார். வீட்டில் இருந்து வாக்களிப்பது யாருக்கும் பயனளிக்காது என்று கூறி நேரடியாக வாக்குச்சாவடிக்குச் செல்வதையே அவர் விரும்புகிறார். இந்த வயதிலும் வெளியே சென்று வாக்களிக்கும்போது அதை பார்க்கும் மற்றவர்களும் வாக்களிக்க நினைப்பார்கள். அதுதான் வாக்களிக்க வெளியே செல்வதற்கான அவரது முக்கிய நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்