search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், அனைத்து வணிக மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எனவே அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளையும் வருகிற 9-ந் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலமாக வருகிற 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • குழந்தை திருமணம் நடந்தால் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது
    • கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி தலைமையில் போலீசார் சார்பில் காணொலி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரம்பலூர் அரசு மருத்துவமனை டாக்டர் பூபதி கூறுகையில், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் எடை குறைதல், ரத்த சோகை, ரத்த அழுத்தம், குறை பிரசவம், குறை பிரசவத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெண்களுக்கு திருமண வயது வந்தபிறகே பெற்றோர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா கூறுகையில், அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. எனவே பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம், என்று கூறியிருந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கூறுகையில், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால், மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தகவல், புகார் தொிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வேறு கூட்டத்துடன் சேர்ந்து சதி செய்கிறார் என்றே தோன்றுகிறது
    • கொடும்பாவி எரித்து எதிர்ப்பு காட்ட முடிவு

    திருச்சி,

    ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞ–ரணி தலைவர் டி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:- கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவது–டன் தனது கருத்தை நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க அவர் வேறு கூட்டத்துடன் சேர்ந்து சதி செய்கிறார் என்றே தோன்றுகிறது. எது வன்முறை என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையை காட்டுகிறது. மாடு வாய் திறந்து பேசுமா, தன் வலியை சொல்ல முடியுமா என்கிறார். கவிஞருக்கு மாடு பேசாது என்பது இப் போதுதான் தெரிகிறதா. ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள் யாரும் அதிகபட்சமாக 80 கிலோவுக்கு மேல் இருக்க வாய்ப் பில்லை. அப்படியே ஒரு கட்டத்தில் 2 அல்லது 3 பேர் பிடித்தாலும் உடனடியாக அதை தடை செய்து விடுகிறார்கள். ஒருவர்தான் பிடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. டன் கணக்கில் எடையை சுமந்து செல்லும் காளையை 80 கிலோ எடை கொண்ட வீரன் அடக்குவது எந்த விதத்திலும் கொடுமையோ, வன்முறையோ ஆகாது. நீங்கள் பால், மோர், தயிர், டீ, காபி சாப்பிடும் வழக் கம் உள்ளவராகத்தான் இருப்பீர்கள். பால் கறக்கும் போது, பசு வலிக்கிறது என்று எப்போதாவது கூறியிருக்கிறதா, இல்லை அதனிடம் கேட்டுவிட்டுத்தான் பால் கறக்கிறோமா. உங்களின் கருத்து தமிழர் களின் மரபு, வீரம், பாரம்ப–ரியத்துக்கு எதிரானது மட் டுமல்ல. தமிழர்களுக்கு எதிரான கும்பலிடம் நீங்கள் சேர்ந்து சதி செய்கிறீர்களோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருக்கிறது. பல இடங்களில் சிறப்பாக முடிந்துவிட்டது. எனவே தமிழன் அமை–திப்புரட்சி, மெரினா புரட்சி நடத்தி பெற்ற உரிமையை பறிக்க நினைக்கும் உங்க–ளின் கொடும்பாவியை கொளுத்தி எங்களின் எதிர்ப்பை காட்ட முடிவு செய்துள்ளோம். இதோடு உங்கள் விஷமத்தனமாக கருத்தை மூட்டை கட்டி விடுங்கள் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

    • போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முசிறி இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • வியாபாரிகள் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர்.

    முசிறி:

    வியாபாரிகளுடனான போலீசார் கலந்தா லோசனை கூட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்வுக்கான கலந்தாலோசனை நடத்தப்பட்டது. அப்போது, துறையூர் ரோட்டில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்பு போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வணிக நிறுவனத்தை சார்ந்தவர்களை கொண்டு பார்க்கிங் செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் அறிவுறுத்திய தோடு, போக்குவரத்துநெரிசல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து வியாபாரிகள் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர்.

    • குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் 60-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவும், வக்கீல் மூலமாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

    பெரம்பலூர்

    திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ரவுடிகளின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நன்னடத்தை பிணை ஆணை பெற்ற 4 ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தால், அவர்கள் பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் 60-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவும், வக்கீல் மூலமாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். மேலும் பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள், என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • கரூரில் குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை
    • மது போதையில் பிரச்சனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    பொங்கல் பண்டிகை தினத்தில் மது போதையில் பிரச்சனை, அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் பதிவேட்டு குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனையிட்டனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறியதாவது:பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் எவ்வித இடையூறுமின்றி கொண்டாடும் வகையில் பதிவேட்டு குற்றவாளிகளின் வீடுகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் என கண்டறியப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் மற்றும் ஜாதி ரீதியாக பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை தினங்களில் மது போதையில் பிரச்சனை செய்தாலோ, வாகனங்களில் அதிகவேகமாக பயமுறுத்தும் வகையில் சென்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்காத தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்படிப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ்கள் மூலம் தேவகோட்டை வந்து செல்கின்றனர்.

    தற்போது அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்க ப்பட்டன. திருப்பத்தூர் சாலை ராம்நகரில் உள்ள மாணவ- மாணவிகளும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளும் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.

    அந்த மாணவ-மாணவிகளை தனியார் பஸ்களில் ஏற்றாமல் காரைக்குடி பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதித்தனர். இதனால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து பஸ் நிலைய காப்பாளர் சந்தியாகு கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

    மாணவ-மாணவிகளை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினார். இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    • ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்ற ழுத்த தாழ்வு காரண மாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடு த்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன் வளத் துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்ன முட்டம், குளச்சல் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. வள்ளங்கள், விசைப்படகுகள் கரையோ ரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.

    குளச்சல், முட்டம், தேங்காய் பட்டணம் துறை முகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    இதே போல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரைகிராமங்களிலும்பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை.

    கடல் சீற்றம் குறைந்த நிலை யிலும் மீன்வளத்துறை சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடரும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்தின்றி துறை முகங்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    குளச்சல் மீன்பிடி துறை முகத்தில் ஒருசில கட்டு மரம் மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பினர். ஆனாலும் போதிய மீன் வரத்து இல்லை.

    குமரி மாவட்டத்தில் வரத்து குறைவு காரண மாக மீன்கள் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.சாதாரணமாக கிலோ 100-க்கு விலை போகும் சாளை மீன் 230-ரூபாய்க்கும் ரூ.300-க்கு விலை போகும் நண்டு ரூ.500-க்கும், ரூ .150-க்கு விலை போகும் அயலை மீன் ரூ.250க்கும் விற்பனையானது.

    • மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
    • போதை மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை பிடிக்க வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லா குளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வைகை வடகரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரில் ஒருவரை மட்டும் விரட்டி சென்று பிடித்த னர். அவரிடம் விசா ரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.அங்கு விசாரணை நடத்தி யதில் பிடிபட்ட நபர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் தமிழழகன் என்பது தெரிய வந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழழகன் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் முத்துராம லிங்கதேவர் தெருவில் உள்ள மருந்து கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 17,030 போதை மாத்திரைகள், 150 போதை தரக்கூடிய மருந்து பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் காலாவதியானது.

    இதனை தமிழழகன், அவருக்கு உடந்தையாக இருந்த முரளிதாஜ் ஆகியோர் விற்று வந்துள்ளனர். இதை யடுத்து போதை மாத்திரை களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பி.பார்ம் பட்டதாரி தினேஷ் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    போலீசாரின் கெடுபிடி காரணமாக கஞ்சா விற்பனை குறைந்து வருகிறது. ஆனால் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிலர் இதனை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

    மேலும் ஆயிரக்கணக்கில் வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து அதிக விலைக்கு சமூகவிரோத கும்பல் விற்பனை செய்து வரு கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    காலாவதியான மாத்திரைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடி யவை. இது போதை கும்பலுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் அவர்கள் காலாவதியான போதை மாத்திரைகளை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து உள்ளனர்.

    கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செங்கோட்டில் ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.
    • தனியார் நெய் கம்பெனி நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் டீக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன். இங்கு திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    ஆயில் கண்டு பிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு அழிக்கப்பட்டது . ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர் . மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் நெய் கம்பெனி

    நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு

    பிடிக்கப்பட்டது.

    இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுமதி

    பெறுமாறும் இல்லை யென்றால் சீல் வைக்கப்ப டும் எனவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    • கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டது.
    • தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், செலுத்தாத வீடு, கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டது.

    மேலும் நிலுவை தொகைகள் மற்றும் இதர வரிகளை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில் பேரூராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினை செலுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.

    • கள்ளச்சாரயத்தை கொண்டு வந்து விற்பதை தடுக்கவும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
    • விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் 25 போலீஸ் நிலையங்கள் மற்றும் 2 மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையங்கள் உள்ளன. சுமார் 1,200 போலீசார் தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். தினமும் அவர்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை சந்திப்பு, முக்கிய சாலைகள் மற்றும் கிராமங்களில் மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், ஏரியூர் ஆகிய வட்டாரங்களில் 68 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.1 கோடியே 90 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் கர்நாடக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், திருவண்ணாமலையில் இருந்து கள்ளச்சாரயத்தை கொண்டு வந்து விற்பதை தடுக்கவும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தினமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் பதுக்கல்காரர்களிடம் இருந்து மதுபானங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மதுபாட்டில்கள் கடத்தல், சந்து கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் மற்றும் சாராயம் விற்றதாக 4 ஆயிரத்து 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 4 ஆயிரத்து 561 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 194 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சோதனைச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    ×