என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம்"

    • சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது.
    • பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரத்தில் மேற்கு, கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. முடிச்சூர், பெருங்களத்தூர், பல்லாவரம், வேளச்சேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

    புதுபெருங்களத்தூரில் இருந்து முடிச்சூர் சாலை மற்றும் வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மேம்பாலத்தின் மேல் உள்ள பாதையில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பாதையில் மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து அதில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்தனர்.

    இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் இன்று காலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.

    • பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    • போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்
    • பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    கப்பியறை அருகே இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டிய இடத்தை விஜய்வசந்த் எம்.பி பார்வையிட்டார். ரெயில்வே அமைச்சகம் மற்றும் துறைக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    அவருடன் பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில்உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சுடலை யாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் துறைமுகம் மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக தினசரி ஆயிரக்க ணக்கான லாரிகள் , பஸ்களும், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றது.

    ஆனால் அப்பகுதியில் முறையற்ற வாகன பயணம் மேற்கொள்ளப் படுவதாலும், மழைநீர் தேங்கி சாலைகள் ஒரு அடிக்கு மேலும் மிகப்பெரிய கிடங்குகள் ஏற்பட்டு இருப்பதாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன ர்.

    இதில் குறிப்பாக சமீபத்தில் மட்டும் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதி மட்டுமல்லாமல் துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பழையகாயல் அருகே கோவங்காடு விலக்கு மதிகெட்டான் ஓடை பகுதியில் தொடர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நிழற்குடையை சரி செய்ய வேண்டும்
    • சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டம் பகுதியில் தொடர் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டு மணி வரை 2¾ கிலோமீட்டர் நீளம் மிகப் பிரம்மாண்டமான இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் மேற்பகுதி வழியாக சென்று வருகிறது. இதனை அடுத்து பள்ளி, கல்லூரி நேரங்கள் மற்றும் காலை மாலை நேரங்களில் நெரிசல் வெகுவாக குறைந்தது.

    இதற்காக பாலத்தின் மேற்பகுதியில் பயணி கள் அமர்ந்து செல்ல நாகர்கோவில் - திருவனந்த புரம் வழியாக செல்லும் பயணிகளுக்காக இடது பக்கம் இரும்பிலான நிழல் குடை அமைக்கப்பட்டி ருந்தது, அதன் மேற்பகுதியில் பிளாஸ்டிக் சீட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திடீரென அந்த நிழற் குடை சரிந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. இன்று காலையில் பார்க்கும் பொழுது அந்த நிழல் கூடை வெளிப்பக்கமாக சரிந்துள்ளது.

    இந்த நிழற் குடை பெயர்ந்து கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் நிழல் குடை எவ்வாறு சரிந்தது என தெரியவில்லை, காற்றின் வேகத்தால் சரிந்ததா அல்லது, ஏதேனும் விஷமிகள் பெயர்துள்ள னரா என தெரியவில்லை.

    சம்பந்தப்பட்ட அதி காரிகள் விரைந்து சென்று நிழற்குடையை சரி செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
    • அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னையின் நுழைவாயிலாக தாம்பரம் இருந்து வருகிறது. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் தாம்பரம் வழியாக செல்கிறார்கள்.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அலுவலகம் செல்பவர்கள் தினமும் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

    வார இறுதி நாட்களில் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மேம்பாலம் ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப் பாதையை ஒட்டி இறங்குகிறது. கிழக்கு பகுதியில் ரெயில்வே பஸ் நிறுத்தத்தை ஒட்டி ஏறுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வடக்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் முனையில் ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆம்னி பஸ் மற்றும் மாநகர பஸ்களும் நிற்பதால் சாலையின் இரு புறமும் மக்கள் நிற்கிறார்கள்.

    சாலையின் கிழக்கு பகுதியில் நடை மேம்பாலம் அருகே உணவு பொட்டலங்கள், தண்ணீர், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

    இதனால் ராஜாஜி சாலை, காந்தி சாலை, சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் முதலி சாலை போன்ற முக்கிய சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்தபடியே உள்ளது.

    மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வடக்கு பகுதியில் மேம்பாலத்தை மேலும் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

    இத்திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும். ஜி.எஸ்.டி. சாலையின் இரு புறத்திலும் ஏறும், இறங்கும் மேம்பாலத்தை வள்ளுவர் குருகுலம் வரை நீட்டிக்க மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சண்முகம் சாலை, ராஜாஜி சாலை மற்றும் காந்தி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் இருந்து விடுபட லாம். பஸ்கள் மட்டும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும். பிற வாகனங்கள் தடையின்றி மேம்பாலம் வழியாக செல்லலாம்.

    தாம்பரம் மார்க்கெட்டை பல மாடி வணிக வளாகமாக மாற்றவும், அங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் சிறுவர் பூங்கா, கடைகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் அமைக்கப்படும் என்றும் பல மாடி கட்டிடத்தின் 3-வது தளத்துடன் இணைக்கப்படும். அங்கு லிப்ட், எஸ்கலேட்டர்கள் கூடுதலாக பார்க்கிங் இடம் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாலம் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது.
    • பாலத்தில் செல்வதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்தை தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வழியாக தி.நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கிறார்கள்.

    எனவே ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்புக்கு நடந்து செல்லும் வகையில் ரூ.23 கோடி செலவில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இந்த பாலம் வழியாக பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலையை அடைய முடியும்.

    இந்த பாலம் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக இந்த நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தாமதமானது. தற்போது முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. லிப்ட் அமைக்கும் பணி மட்டும் பாக்கி உள்ளது.

    இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிந்துவிடும். எனவே விரைவில் இந்த பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த பாலத்தில் செல்வதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நடைபால பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார். மீதமுள்ள பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடை மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதை வியாபாரிகள் இதை ஆக்கிரமித்துள்ளார்களா? என்பதை கண்டறியவும் அதிகாரிகள் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 3 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் குழிக்கோடு பகுதியை சேர்ந்த வினு (வயது 34), கப்பியறை பகுதியைசார்ந்த ஆகாஷ் ( 23), குழிக்கோடு ஜனசிலின் ஆகிய 4 பேரும் ஓரு மோட்டார் சைக்கிளில் குழித்துறை தியேட்டரில் இருந்து படம் பார்த்து விட்டு மார்த்தாண்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் வந்த போது அங்கு நிறுத்தி விட்டிருந்த லாறி பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரையும் திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வாகனங்கள் வளைத்து நெளித்து ஓட்டுவதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    பூதலூர்:

    திருக் காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சா–லையில் பூதலூரில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன, இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாக பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதேபோல விண்ணம ங்கலம் அருகே இதே சாலையில் வெண்ணாற்றில் அமைந்துள்ள பாலத்திலும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.

    வழுவிழந்த பாலம் என்று இரண்டு பக்கமும் அறிவிப்பு பலகைகளை வைத்துவிட்டு குண்டும் குழியுமாக வைத்திருப்பதால் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    செங்கிப்பட்டி -திருக்காட்டுபள்ளியை இனணப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிக மாகவேனும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • சேலம்‌ மாவட்டம்‌, கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம்‌ பகுதியில்‌ சேலம்‌- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    • பாலப்‌பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள்‌ முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்‌ கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும்‌ பாலப்பணி ஆமை வேகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.

    பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:

    இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

    இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    • ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்கு டை அமைக்கப்பட்டது.
    • மேலூர் நான்கு வழிச்சாலையில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    மேலூர்

    மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்கு டை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மேலூர் பகுதியில் அதிக சாலை விபத்துகளும், அதன் மூலம் மாதத்தில் 15 உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரூ.100 கோடியில் மதிப்பீட்டில் 7 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.

    மேலூர் அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவு நிறுவப்பட்டு அவசர சிகிச்சைக்காக வருப வர்களை மதுரைக்கு அனுப்பாமல் மேலூர் அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை மாவ ட்டத்தில் 73 பள்ளிகள் தற்போது தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்ப ட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலூர் பள்ளிகளையும் இந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாய், தாலுகா செயலாளர் கண்ணன். மேலூர் தாலுகா குழு உறுப்பினர் மணவாளன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கென்னடியான், கவுன்சிலர் பாண்டி, தி.மு.க. நிர்வாகிகள் மலம்பட்டி ரவி, முருகானந்தம், ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×