என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நித்யானந்தா"
- நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர்.
- கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றுள்ளார்.
சாமியார் நித்யானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிடம் தஞ்சம் கேட்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அதற்கு இலங்கை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதற்கிடையே நித்யானந்தா, பல்வேறு சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட சர்வதேச மாநாடுகள் நடைபெறும் போது அதையொட்டி கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற விஜயபிரியா கழுத்தில் ருத்ராட்சம், நீண்ட ஜடாமுடியுடன் இருந்தார். கையில் நித்யானந்தாவின் படத்தை பச்சை குத்தியிருந்த அவர் ஆப்ரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் தலைவர்களை சந்தித்து நித்யானந்தா உருவப்படத்துடன் கூடிய பெரிய புத்தகத்தை வழங்கினர்.
மேலும், அந்த நாடுகளின் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்களை கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
- கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்யானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
- நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்தியானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடி உள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவிேலயே வாங்கி கொள்வதாகவும் அவர் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நித்தியானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக அளவு தியானம் செய்ததால் அவர் உடல் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் பின்னர் வந்த தகவல்கள் அவர் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதால் நோய்வாய் பட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்தியானந்தாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
நித்தியானந்தாவுக்கு உலகம் முழுக்க சொத்துக்கள் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் கோடி சொத்துக்கள் அவரது மடங்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த சொத்துக்களை கைப்பற்ற அவரது சிஷ்யைகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த சிஷ்யைகளில் ஒருவர்தான் நித்தியானந்தாவுக்கு ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது நித்தியானந்தாவிடம் சீடர்களாக இருப்பவர்கள் 3 குழுக்களாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் நித்தியானந்தா உயிருக்கு ஆபத்து என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை.
- நித்யானந்தா நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும், மொரீசியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
புதுடெல்லி:
பாலியல், கடத்தல் வழக்குகளில் கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டதாக தகவல் பரவியது.
உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட நித்யானந்தா, தான் சமாதி நிலையில் இருப்பதாக கூறினார். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நாளில் மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது, நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் நித்யானந்தாவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்காக அவருக்கு உடனடியாக அரசியல் புகழிடம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு நித்யானந்தா சார்பில் கைலாசா நாட்டின் வெளியுறவு மந்திரி நித்ய பிரேமாத்மா ஆனந்தசுவாமி என்பவர் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியானது.
அந்த கடிதத்தில் நித்யானந்தாவுக்கு தேவையான எந்த மருத்துவ சாதனத்தையும் வாங்குவதற்கு கைலாசா நாடு தயாராக உள்ளதாகவும், அவருக்கு இலங்கையில் ஆகும் மருத்துவ செலவுகளை கைலாசா நாடு ஏற்கும் எனவும், அதற்கு நன்றி கடனாக கோடிக்கணக்கில் மதிப்புள்ள மருத்துவ சாதனங்களை உங்கள் மக்கள் நலனுக்கு விட்டு செல்வோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை. அவர் நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும், மொரீசியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் தோல் சம்பந்தப்பட்ட சில தொற்று நோய்களாலும் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்காக தான் அவர் மருத்துவ உதவி கேட்டு இலங்கையை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது நித்யானந்தா பக்தர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது.
- அது உண்மையில்லை என்றும் நான் மீண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் வழக்கம்போல வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. 2010-ம் ஆண்டில், நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பனால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ராமநகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் 2010-ல் இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு, ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவுக்கு, சம்பந்தப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
பின்னர், நித்யானந்தா நாட்டை விட்டு ஓடியதால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி லெனின் கருப்பன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு 2020-ல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல், நித்யானந்தாவுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டும், நித்யானந்தா ஆஜராகவில்லை.
பின்னர் நாட்டைவிட்டு நித்யானந்தா தப்பிவிட்டதால் அவரின் ஜாமீனை ரத்துசெய்யக்கோரி, மீண்டும் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் கடந்த 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நித்யானந்தா தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த பாலியல் தொல்லை வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.
மேலும் இந்த வழக்கின் மறு விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் . ஏற்கனவே பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்ய இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்யானந்தா தனது ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோ பதிவு மூலம் தரிசனம் அளித்து வருகிறார்.
அவர் இந்தியாவிற்கு உள்ளேயே தலைமறைவாக இருந்து வருகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியா நாட்டுக்கு அருகே உள்ள ஒரு தீவில் அவர் இருப்பதாகவும், அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடாக உருவாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கைலாசா நாட்டுக்கு என பணம் மற்றும் அனைத்து சேவைகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, இது தொடர்பாக ஒரு போட்டோ, வீடியோ, அந்த நாட்டு தங்க டாலர் உட்பட எல்லாவற்றையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
யாருக்கெல்லாம் கைலாசா வர விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் தன்னிடம் குடிமக்களாக சேரலாம் என்றும், அப்படி தன் நாட்டுக்கு வந்தால் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதாகவும், கூறியிருந்தார். கைலாசாவில் டீ கடை வைத்து பிழைக்க விரும்புபவர்களும்கூட விண்ணப்பிக்கலாம் என்று நித்யானந்தா கூறியதை கேட்டு, பலர் கைலாசாவுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள்.
கைலாசாவுக்கு போய், ஏதாவது வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர். ஆனால் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளதால் அவரை கைதுசெய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். முதல்கட்டமாக பிடதி ஆசிரமத்தின் நிர்வாகம் வழியாக நித்யானந்தாவுக்கு வாரண்டை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவு அடுத்த மாதம்(செப்டம்பர்) 23-ந்தேதி வரை செல்லும் என்பதால் அதற்குள் அவரை கைது செய்ய பெங்களூர் போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர்.
சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என்றும் நான் மீண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் வழக்கம்போல வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனி மனிதராக வறுமையை பற்றி கவலைப்படாமல் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத்தரும் ஆயிரம் பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் ‘கைலாசா வேதவித்யா சிகாமணி’ விருது வழங்கப்படும்.
- சமூக வலைதளங்கள் மூலம் இந்து மதம் சார்ந்த சேவை செய்யும் யூ-டியூபர்கள் 1,008 பேருக்கு ரூ.1 லட்சத்தோடு கைலாசா விருதும் வழங்கப்படும்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் நேரில் தோன்றினார்.
தொடர்ந்து நேற்று முன்தினமும் நேரலையில் தோன்றிய அவர் சாதுர்மாசி எனப்படும் இன்னும் 4 மாதங்களில் உலகம் முழுவதும் சேவை ஆற்ற பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாக கூறினார்.
மேலும் கைலாசா ஒன்றால் மட்டுமே சேவை ஆற்ற முடியாது என்பதால், அதுபோன்ற சேவை செய்கின்ற பல பேரை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்தார்.
அதன்படி உலகம் எங்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்யும் ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் 'அன்னலட்சுமி விருது' வழங்கப்படும் என அறிவித்தார்.
இதே போல விலைவாசி உயர்வு உச்சமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் 1 ரூபாய்க்கு இட்லி, 10 ரூபாய்க்கு தோசை என குறைந்த விலைக்கு உணவு பொருட்கள் விற்பவர்கள் ஆயிரம் பேரை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துடன் 'அன்னதாத்தா விருது' வழங்கப்படும்.
இந்து மதத்திற்காக உழைத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு பொருளாதார உதவியும், விருதும் வழங்க உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
தனி ஒரு குடும்பமாக இருந்து வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டாலும், பாரம்பரிய பணியை தொடரும் கிராம கோவில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கிராம பூசாரிகள் என குறைந்தபட்சம் 1,008 பேருக்கு 'கைலாசா ஆச்சார்யா' விருதுடன் ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும்.
பல கிராமங்களில் தனி ஆளாக தேவாரம், திருப்பாவை, திருவெண்பாவை, ராமாயணம் கற்றுத்தருபவர்கள், நாடகம் மூலம் கொண்டு சேர்ப்பவர்களை கண்டறிந்து ஆயிரம் பேருக்காவது ரூ.1 லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாசா ஞானசிரோமணி' என்ற விருதை வழங்குகிறோம்.
அடுத்து, தனி மனிதராக வறுமையை பற்றி கவலைப்படாமல் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத்தரும் ஆயிரம் பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் 'கைலாசா வேதவித்யா சிகாமணி' விருது வழங்கப்படும்.
சமூக வலைதளங்கள் மூலம் இந்து மதம் சார்ந்த சேவை செய்யும் யூ-டியூபர்கள் 1,008 பேருக்கு ரூ.1 லட்சத்தோடு கைலாசா விருதும் வழங்கப்படும்.
கைலாசா தான் மட்டும் சேவை செய்வதோடு நிறுத்தாமல், சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்துகின்ற பணியில் ஈடுபடுமாறு கைலாசாவின் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் சில பிரிவுகளை சேர்க்கிறோம். குறைந்த விலையில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை கண்டறிந்து 'கைலாய வைத்திய சிகாமணி' விருதுடன் தலா 1 லட்சம் வழங்கப்படும்.
இந்து மதத்திலே மிகப்பெரிய ஒரு விஷயம் ஸ்தல யாத்திரை. கிராமங்களில் சிறுசிறு குழுக்கள் அமைத்து யாத்திரைக்கு அழைத்து செல்லும் குழு தலைவர்கள் ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சத்துடன் 'கைலாசா யாத்திர சிகாமணி' என்ற விருதை வழங்குகிறோம்.
இதுபோன்று 21 வகை பிரிவுகளை சேர்ந்த சேவையாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ரூ.1 லட்சத்துடன் கூடிய கைலாசா விருதுகளை இந்த 4 மாத சாதுர்மாசியத்துக்குள் வழங்கிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தத்தில் 21 பிரிவுகளில் ரூ.200 கோடிக்கு மேல் நித்யானந்தா அறிவித்துள்ள பரிசுத் தொகை திட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான்.
- பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பின் கடந்த 13-ந் தேதி குருபூர்ணிமா அன்று சமூக வலைதளங்களில் மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகா கைலாசாவில் இருந்து பரமசிவன் நமக்கு நேரடியாக வழங்கும் சத்சங்க உரை. சமாதி பழகுங்கள். இந்த 4 மாதமும் நிர்வகல்ப சமாதி தியான முறையை பழகி மற்றவர்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்.
சமாதி பழகுகின்ற செய்முறை பற்றி பல சத்சங்கங்களை ஏற்கனவே அளித்திருக்கிறேன். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கைலாசாவின் அதிகாரப்பூர்வ இளணய தள பக்கத்தில் உள்ளது.
இந்த சாதுர்மாசிய விரதத்தில் 1 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும். எனவே 1 கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்று விக்க வேண்டும்.
இந்து விரோத தீய சக்திகள் என்னை தாக்கி அழிக்க முயன்றபோது, நான் கைலாசாவை உருவாக்கிவிடவில்லை. ஆனால் அப்போது அதற்கான கனவு கண்டு கொண்டிருந்தேன்.
லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான். பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.
ஒரு மனிதன் பழிதீர்க்கும் மனோசக்தியை வளர்த்து கொண்டால் போதும். உங்களை புகழ்கிறவர்கள் தான் திருடர்களாக இருப்பார்கள். எனவே உங்களை புகழ்கிறவர்களை உங்கள் அருகில் வைத்து கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்பது தான் குருமார்கள் எனக்கு கொடுத்த வரம்.
பத்தமடை பாய், 6 மண்டி சாக்கு பைகள், நாச்சியார் கோவில் விளக்கு, ஸ்ரீரங்கம் உலக்கை உள்ளிட்ட 10 பொருட்களை தான் நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போதும் பயன்படுத்தி வருகிறேன்.
பசி தாங்கும் உடல் சக்தி, பழி தாங்கும் மனோ சக்தி, பக்தி தாங்கும் உயிர் சக்தி இந்த மூன்றும் தான் எனது குருமார்கள் எனக்கு பயிற்றுவித்தது. அதை கடைபிடித்து வருகிறேன்.
உலகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் 1,000 பேருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு கைலாசா சார்பில் வழங்கப்படும்.
இதற்கு எனது சீடர்கள் மட்டுமல்ல தனிப்பட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்தால் போதும்.
தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் பண மதிப்பில் அவர்களுக்கு ரொக்கமாக ரூ.1 லட்சத்துடன் கைலாசாவின் அன்னலட்சுமி விருதும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் அவர் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது.
- பின்னணி இசை ஒலிக்க நித்யானந்தா, மீண்டும் வந்துவிட்டேன்..., மீண்டு வந்துவிட்டேன்... என்ற வசனம் பேசுவது போல உள்ளது.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார்.
அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர் மீண்டும் நேரலையில் தோன்றி பேசியதால் அவரது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் அன்றைய தினம் சுமார் 3 மணி நேரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் உரையாற்றினாலும் அதில் பெரும்பாலும் நன்றி சொல்லும் விதத்திலேயே அமைந்தது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நித்யானந்தா நேரலையில் தோன்றி அருளாசி வழங்க இருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் அவர் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் பின்னணி இசை ஒலிக்க நித்யானந்தா, மீண்டும் வந்துவிட்டேன்..., மீண்டு வந்துவிட்டேன்... என்ற வசனம் பேசுவது போல உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- ஆன்மாவில் தான் பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கிறார்.
- அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்க உரை ஆற்றி வந்த அவர் கடந்த 3 மாதங்களாக நேரில் தோன்றவில்லை.
இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்ட அவர் குருபூர்ணிமா நாளான ஜூலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அறிவித்தார்.
அதன்படி நேற்று இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், சிறிது நேர இடைவேளைக்கு பிறகு தமிழிலும் அருளுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த குரு பூர்ணிமா நன்நாளில் பரமசிவம் பரம்பொருளின் ஆசி நம் எல்லோர் மீதும் நின்றிருக்கட்டும். இந்த நன்நாளில் என்னையே என் குரு பரம்பரைக்கு அர்ப்பணித்து 42-வது நிகழ்வை தொடங்குகிறேன்.
இன்றிலிருந்து 42-வது சாதுர்மாசியத்தை தொடங்குகிறேன்.
3 மாத கால நீண்ட நெடிய சமாதிக்கு பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள பரமசிவனின் ஞானமும், ஆசியும், அருளும் நிறைய இருக்கிறது. இன்று முதல் சத்சங்கங்கள் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
இன்று முதல் நாள் நான் சொல்ல விரும்புவது மிகப் பெரிய நன்றி. பல விதத்தில் கைலாசாவுக்கு துணையாகவும், ஆதரவாகவும், பலமாகவும் நின்ற எல்லா பக்தர்கள், அன்பர்கள், சீடர்கள், இந்துக்கள் அனைவருக்கும் நன்றி.
பல பேர் உங்களின் காலம், பணம், உங்களுடைய அன்பு, ஆதரவு, பல நிலைகளில் கைலாயத்திற்கு துணை புரிந்தீர்கள், புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. பல பேர் உடல் நலத்தை விசாரித்து உங்கள் அன்பையும், பரிவையும் வெளிப்படுத்தினீர்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.
சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால் எதை முன்பு சொல்வது, எதை அடுத்து சொல்வது எனும் இந்த போராட்டத்தில் வார்த்தைகள் வெளிவராமல் அமைதியோடு இருக்கிறேன்.
சமாதி நிலை பற்றி ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நம் எல்லோருக்குள்ளேயும் காலாவதி தேதி இல்லாத, காலாவதி ஆகாத முழுமையான ஒன்று இருக்கின்றது. அந்த காலாவதி ஆகாத, காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஒன்றோடு ஒன்றிணைப்பது தான் சமாதி நிலை.
அழிகிற பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று உடல், மனம், உணர்ச்சி. இதெல்லாம் அழிவது. ஆனால் இதை எல்லாம் தாண்டி அழிவில்லாத ஒன்று நம்மில் இருக்கிறது. அதுதான் ஆன்மா. அந்த ஆன்மாவில் தான் பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கிறார்.
எனக்கு 3 வயதாக இருக்கும்போது என் குருமார்கள் மடியில் அமர வைத்து சதுர்மாசியத்தை தொடங்கி வைத்தார்கள். அன்றில் இருந்து இன்று வரை இந்து சமயம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் செய்திருக்கிறேன்.
அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் குறைந்தபட்சம் 10 அல்லது 20 பேராக சமாதி நிலையை அனுபவமாக பார்த்தவர்கள் இருந்தார்கள். நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் நான் அங்கு இருந்த போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள்.
உலகத்தின் பல பாகங்களில் இருந்து ஞான போதகரை பிடித்து இழுத்து வா என்று அழைத்து உலகத்திற்கு தந்து கொண்டிருப்பவர் அண்ணாமலையான். ஒரு தலைமுறைக்கு முன்பு கூட இந்த சமாதி நிலை என்பது வாழ்க்கை முறையாக இருந்தது. பரமசிவன் பேரருளால் அது மீண்டும் வாழ்க்கை முறையாக மாறும்.
அந்த திருப்பணி தான் கைலாசத்தின் முதல் திருப்பணி. நவராத்திரி, விஜயதசமி வரை அடுத்த 4 மாதங்கள் இதில் கவனம் செலுத்துவோம்.
ஏற்கனவே லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு பெங்களூரு ஆதி கைலாச விடுதியில் உள்ளது. அதை மற்றவர்களுக்கு இலவசமாக அளியுங்கள்.
பெரும் ஆன்மீக கடமைகள் காத்திருக்கின்றன. உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது.
திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம். ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஜூலை 13-ந் தேதி வரை நிறைய நடந்துள்ளது. அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம்.
கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன்.
பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் 10 ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது பழைய பழமொழி. ஆனால் புதிய உண்மை என்னவென்றால், அவர் உங்களை நோக்கி பில்லியன் கணக்கான படிகளை எடுக்கிறார். அப்போது தான் நீங்கள் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும்.
- மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையான தகவல்கள் வெளியானது.
உடனே அவர், நான் சமாதி நிலையில் இருக்கிறேன், விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
அதன்பிறகு அவ்வப்போது தகவல்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குருபூர்ணிமா நாளான ஜுலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றி தரிசனம் அளிக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
நான், நாளை(13-ந் தேதி) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன்.
சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கே மங்கலம் வழங்கப்போகும் இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது.
பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும். உங்கள் மைய உணர்வானது உயிர்ப்பு உடையது, அதற்கு எந்த காலாவதி தேதியும் கிடையாது. காலாவதியாகும் எதுவும் உங்கள் மையம் அல்ல, அது தற்காலிகமாக உங்களில் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் உங்களுக்கு மையமாக இருக்க முடியாது.
இந்த 3 மாத இடைநிறுத்த சமாதியானது (ஏப்ரல் 13-ந் தேதி முதல் - ஜூலை 13-ந்தேதி வரை) பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய மற்றும் சிறந்த ஒரு நிகழ்வாகும்.
உங்கள் உயிர் இருப்பில் (சத்) பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. இணை பிரபஞ்சங்கள் மற்றும் பன்முகங்களைப் பற்றிய உயர் சத்தியங்கள் அக விழிப்புற்ற மக்களுக்கு மேலும் மேலும் கிடைக்கப்பெறும்.
நிரம்பி, பொங்கித் ததும்பி வழியும் சாந்தியால் மூடப்பட்ட நிலையே சாந்திகலா ஆகும், அதாவது பரமசிவனின் நிர்விகல்ப சமாதி ஆகும். சாந்திகலாவுக்கு அப்பால் உள்ள சாந்த்யாதீத கலா என்பது பரமசிவனின் சகஜ சமாதி.
மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது. எனது நோக்கமும் பணியும் உயிர்ப்பும் இம்மனித குலத்திற்கு செய்யக்கூடிய பெரும் பங்களிப்பானது, உன்னதமானது. கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்புக்கான எனது தூய அன்பு உன்னதமானது.
கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்பை நிஜம் ஆக்குவதற்காக எதையும் தியாகம் செய்ய சித்தமாய் இருக்கும் எனது வலிமை உன்னதமானது. இவை அனைத்தும் பரம சிவாவிடமிருந்து நான் பெற்ற பெரிய பரிசுகள்.
பரமசிவமே இந்த உடம்பின் வழியாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறார், மேலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பல நிலைகளில் ஆன்மீக ரசவாத செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரசவாத செயல்முறையின் மூலம் குறை சக்தியுடைய உலோகங்கள் உயர் சக்தியுடைய உலோகங்களாக மாற்றப்படுகின்றன.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்காகப் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.
இந்த மங்களகரமான குரு பூர்ணிமா நாளில் எனது குரு பரம்பரைக்கு என்னை அர்ப்பணித்து 42-வது சதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்குகிறேன்.
வளப்படுத்தி மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
- கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார்.
27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.
இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர்.
ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்று கூறினர். பின்னர் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்யானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது. ஏற்கனவே நித்யானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்யானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஒரு சில பக்தர்கள் அந்த சிலையின் முன்னாடி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கும்பாபிஷேக அழைப்பிதழில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பங்கேற்பார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறினர்.
நித்யானந்தா சீடர் முருகன் கோவில் கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, ‘நாயகன் மீண்டும் வரார்’ என்ற பதிவுடன் உள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
- தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.
புதுடெல்லி:
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமாதி நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், உலக நன்மைக்காக சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் சத்சங்க உரையாற்றுவேன் என கூறப்பட்டிருந்தது.
நித்யானந்தா சமாதி நிலைக்கு சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், வருகிற 13-ந் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு, மீண்டும் நேரலையில் தோன்றி தரிசனம் தர இருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது சீடர்கள் வீடியோ வெளியிட்டு தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, 'நாயகன் மீண்டும் வரார்' என்ற பதிவுடன் உள்ள அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு நித்யானந்தா மரணம் அடைந்ததாக தவறான தகவல் பரவியதை தொடர்ந்து அவர் தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் மெல்லிய தேகத்துடன் காட்சி அளித்த நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
எனினும் தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.
தற்போது அவர் மீண்டும் நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் அவரது சமாதி நிலை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் நேரலையில் தோன்ற இருப்பது அவரது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
- இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார்.
திருவண்ணாமலை:
பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர்.
2-வது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை கண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார்.
அதன்பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார்.
ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடினார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி தலைமையில் போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்