search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைகள்"

    • தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
    • குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து தயாராகலாம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் 44 டன் ஆடுதுறை 53 நெல் விதை இருப்பு உள்ளது என்றும், விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை துறை அலுவலர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி நடைபெறும்.

    ஆனால், இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி, பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது விதை மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கு தற்போது கோடை உழவு செய்ய ஏற்ற நேரமாகும்.

    எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி 14, கதிரிலப்பாக்ஸி 1812, பிஎஸ்ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    காங்கயம்:

    காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா். 

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
    • தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் வழங்கல்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் ஜெராக்ஸ் ,ரேசன் ஜெராக்ஸ்,சிட்டா நகல்,அடங்கல்நகல், வங்கிகணக்குபுத்தகம்நகல்,போட்டோ2, ஆகியவற்றை கொண்டு வந்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து விதைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    வெள்ளகோவில்:

    முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முன்வர வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    தமிழக விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் கோ.வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத் திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதைகளை சேமிக்கும் போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.
    • நெல் பயிருக்கு 80 சதவீதம், மக்காச்சோளத்துக்கு 90 சதவீதம், உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்பு திறன் இருக்க வேண்டும்.

    பல்லடம்:

    தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பயிர்கள் நன்றாக வளர்ந்து பலன் தருவதற்கு தரமான விதைகள் பயன்படுத்துவது மிக அவசியம். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.சான்று அட்டை பொருத்தப்படாத விதைகளை வாங்கி பயன்படுத்தும் போது அவை சரியாக முளைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படும். நெல் பயிருக்கு 80 சதவீதம், மக்காச்சோளத்துக்கு 90 சதவீதம், உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்பு திறன் இருக்க வேண்டும்.

    விதைகளை சேமிக்கும் போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் விதைகளின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கூடுதல் மகசூல் பெற விதைகளின் தரத்தை பரிசோதனை செய்த பின் பயன்படுத்த வேண்டும்.எனவே விதைகள் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கொளத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை துறை துணை இயக்குனர் சீனிவாசன் கொளத்தூர் வட்டாரத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பயிர் வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாசிப்பருப்பு 64 ஹெக்டேரிலும், உளுந்து 6 ஹெக்டேரிலும் பயிர் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் கொளத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம் அல்லது உதவி விதை அலுவலர் செந்தில்வேலன் ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி குறுவை சாகுபடிக்கு நேரடி விதைப்பு முறை, எந்திர நடவு முறை மற்றும் வரிசை நடவு முறைகளில் நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தரமான விதைகளின் அவசியம் குறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-

    அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் தற்போது குறுவை மற்றும் ஆடிப்பட்ட சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பலவிதமான இடுபொருட்களைப் பயன்படுத்தினாலும் விதைத் தேர்வு தான் மகசூலை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.எனவே பிற ரகக் கலப்பில்லாத, திறன் வாய்ந்த, தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.தரமான விதைகளின் நிலைகளான வல்லுநர் விதைகள், ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதனால் அதிக முளைப்புத்திறன், சீரான பயிர் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை, பூச்சி, நோய் எதிர்ப்புத்தன்மை, ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

    அறுவடை செய்த தானியங்களை அப்படியே விற்பனை செய்வதற்குப் பதிலாக, விதைப்பண்ணைகள் அமைத்து அதன் மூலம் தரமான சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். தரமான சான்று பெற்ற விதைகளை அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமோ பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். விதைப் பண்ணையாக பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப்பறிக்கை 3 நகல்களுடன் இணையத்தில் பதிவு செய்து, சான்றட்டை, விதை வாங்கிய பட்டியல் மற்றும் வயல் வரைபடத்துடன் திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விதைப்பறிக்கை பதிவுக் கட்டணமாக ரூ.25, வயலாய்வுக் கட்டணமாக நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.100,பயறு வகைப் பயிர்களுக்கு ரூ.80 மற்றும் பகுப்பாய்வுக் கட்டணமாக ரூ.80 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விதைப்பறிக்கை பதிவு செய்த பிறகு பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணைகளை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கான தரமான விதைகளை உற்பத்தி செய்கிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×